மூன்றாம் கட்டம்
இது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வின் கடைசிக் கட்டம். இஸ்லாமிய அழைப்புப் பணி ஏறக் குறைய இருபதாண்டு காலமாகச் சந்தித்த சிரமங்கள், இன்னல்கள், துன்பங்கள், மோதல்கள், போர்கள் ஆகிய அனைத்திற்குப் பின் ஏற்பட்ட அழகிய பின்விளைவுகள்தான் இக்காலக் கட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகமே முற்றிலும் மாற்றம் கண்டது. அரபிய தீபகற்பத்தின் எதிர்காலமே தெளிவான வெளிச்சத்தை நோக்கி வெற்றி நடைபோட்டது. 'மக்கா வெற்றிக்கு முன்', 'மக்கா வெற்றிக்குப் பின்' என்று 'மக்கா வெற்றி' ஒரு வரலாற்று அடித்தளமாக மாறியது. குறைஷிகள்தான் அரபு மக்களுக்கு மார்க்க வழிகாட்டிகளாக விளங்கினர். சிலைகளைப் புறந்தள்ளி விட்டு, இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது அரபியத் தீபகற்பத்தில் சிலை வணக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிந்தது என்பதற்கு மாபெரும் சான்றாகும்.
இக்காலக் கட்டத்தை நாம் இரண்டாகப் பிரிக்கலாம்
1) தியாகங்களும், போர்களும்.
2) பல குடும்பத்தினர், கிளையினர் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைதல்.
இவ்விரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாக இருந்தாலும் இவற்றை வேறுபடுத்திக் காட்ட முதன் முதலாக போர்களைப் பற்றி பேச இருக்கிறோம். ஏனெனில், இதற்கு முன்னால் போரைப் பற்றியே நாம் அதிகம் அலசியிருக்கிறோம். அதனால், தொடர்ந்து போரைப் பற்றி பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஹுனைன் யுத்தம்
மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.
இவர்களில் ஹவாஜின், ஸகீஃப் கோத்திரத்தினர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் கைஸ், அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர், ஜுஷம், ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும் ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர். முஸ்லிம்களின் வெற்றியை ஏற்பது இந்தக் கோஷ்டிகளுக்கு மானப் பிரச்சனையாகவும், கண்ணியக் குறைவாகவும் தென்படவே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்க மாலிக் இப்னு அவ்ஸ் என்பவனின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.
அவ்தாஸில் எதிரிகள்
முஸ்லிம்களிடம் சண்டையிடுவதற்குப் படை வீரர்களை மாலிக் இப்னு அவ்ஸ் ஒன்று திரட்டினார். அவரின் படை வீரர்கள் அனைவரும் பொருட்கள், செல்வங்கள், மனைவி மக்கள் அனைத்துடனும் போர்க்களத்திற்கு வந்து வீரதீரமாகப் போரிட வேண்டும் என ஆணையிட்டார். அவ்வாறே அனைவரும் அவ்தாஸுக்கு வந்தனர். 'அவ்தாஸ்' என்பது ஹுனைன் அருகில் ஹவாஜின் கிளையார் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு பள்ளத்தாக்காகும். ஹுனைன் என்பது 'தில் மஜாஸ்' என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது. எனவே, ஹுனைன் வேறு, அவ்தாஸ் வேறு.(ஃபத்ஹுல் பாரி)
போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு
மக்கள் அவ்தாஸை அடைந்தவுடன் தங்கள் தளபதியிடம் ஒன்று கூடினர். அவர்களில் துரைத் என்ற பெயருடைய போரில் நல்ல அனுபவமுள்ள ஒருவன் இருந்தான். அவன் வாலிபத்தில் வலிமை மிக்க போர் வீரனாக விளங்கியவன். தற்போது போர் பற்றிய ஆலோசனை வழங்குவதற்காக படையுடன் வந்திருந்தான். அவனுக்கு கண் பார்வை குன்றியிருந்தது. அவன் மக்களிடம் ''தற்போது எந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்திருக்கிறோம்'' என்று வினவினான். ''அவ்தாஸ் வந்துள்ளோம்'' என மக்கள் கூறினர். ''இது குதிரைகள் பறந்து போட ஏதுவான இடம். கரடு முரடான உயர்ந்த மலைப் பகுதியுமல்ல மிகவும் மிருதுவான தாழ்ந்த தரைப்பகுதியுமல்ல ஆகவே, இது பொருத்தமான இடமே. ஆயினும், நான் குழந்தைகளின் அழுகுரலையும், ஆடு, மாடு கழுதை போன்றவற்றின் சப்தங்களையும் கேட்கிறேன். அவை இங்கு ஏன் வந்தன?'' எனக் கேட்டான். ''தளபதி மாலிக் இப்னு அவ்ஃப்தான் போர் வீரர்கள் அனைவரும் தங்களது மனைவி, மக்கள், கால்நடைகள், செல்வங்கள் அனைத்துடன் போர்க்களம் வரும்படி கட்டளையிட்டிருந்தார்'' என மக்கள் தெரிவித்தனர்.
துரைத் மாலிக்கை வரவழைத்து, ''ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று விளக்கம் கேட்க ''ஒவ்வொரு படை வீரன் பின்னணியிலும் இவர்கள் இருந்தால்தான் குடும்பத்தையும் பொருளையும் பாதுகாக்க தீவிரமாகப் போர் செய்வார்கள்'' என்றான் தளபதி மாலிக். அதற்குத் துரைத், ''ஆட்டு இடையனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருவன் தோற்று புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தால் எதுதான் அவனைத் தடுத்து, திரும்ப போர்க்களத்திற்கு கொண்டு வரும்? சரி! இப்போரில் உனக்கு வெற்றி கிடைத்தால் அதில் ஒரு வீரனின் ஈட்டி மற்றும் வாளால்தான் கிடைக்க முடியும். உனக்குத் தோல்வி ஏற்பட்டால் அதில் உன் குடும்பத்தினர் முன்னே இழிவடைவதாகும். உனது செல்வங்களையெல்லாம் இழந்து நிர்க்கதியாகி விடுவாய்'' என எச்சரித்து விட்டு சில குடும்பத்தினரையும் தலைவர்களையும் குறிப்பாக விசாரித்தார்.
அதன் பின் மாலிக்கிடம் ''ஹவாஜின் கிளையினரின் குழந்தைகளைப் போர் மைதானத்தில் நேரடியாக பங்கு கொள்ள வைப்பது முறையான செயலல்ல பயன்தரத் தக்கதுமல்ல. குடும்பங்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களில் இருக்க வை. அதன்பின் குதிரை மீது அமர்ந்து மதம் மாறிய இந்த எதிரிகளிடம் போரிடு. உனக்கு வெற்றி கிட்டினால் குடும்பத்தினர் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். நீ தோல்வியைத் தழுவினால் அது உன்னோடு முடிந்துவிடும். உனது குடும்பமும் பொருளும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்படும்'' என்றார்.
ஆனால், துரைதுடைய இந்த ஆலோசனையைத் தளபதியான மாலிக் நிராகரித்து விட்டான். மேலும் ''நீ சொல்வது போல் அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருபோதும் செய்ய முடியாது. நீயும் கிழடாகி விட்டாய். உனது அறிவுக்கும் வயசாகி விட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த ஹவாஜின் கிளையினர் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் இந்தக் கூர்மையான வாளின் மீது வீழ்வேன் அது என் முதுகிலிருந்து வெளியேறட்டும்'' என்றான். இப்போல் துரைதுக்கு பேரும் புகழும் கிடைத்து விடுவதை வெறுத்ததன் காரணமாகவே அவன் இவ்வாறு சொன்னான். இதனைக் கேட்ட ஹவாஜின் சமூகத்தார் ''நாம் உனக்கு கட்டுப்படுகிறோம் கீழ்ப்படிகிறோம்'' என்றனர். துரைத் கவலையுடன் ''இந்த நாளைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இதில் நான் கலந்து கொள்ளவுமில்லை, விலகிப் போகவுமில்லை'' என்றான்.
மாலிக் முஸ்லிம்களின் பலத்தை அறிய ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அவர்களோ முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க, முகம் இருள் கவ்வ திரும்பி வந்தனர். மாலிக் பதறிப்போய், ''உங்களுக்கு என்ன கேடு! உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?'' என்றான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! கருப்பும் வெண்மையும் கலந்த குதிரைகள் மீது வெண்மை நிற வீரர்களைக் கண்டோம். அதனைக் கண்ட எங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை'' என்றனர்.
நபியவர்களின் உளவாளி
எதிரிகள் புறப்பட்டு விட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அபூ ஹத்ரத் அஸ்லமி (ரழி) என்பவரிடம் ''நீ எதிரிகளுடன் கலந்து அங்குள்ள நிலைமைகளை முழுவதுமாக அறிந்து வந்து என்னிடம் தெரிவிக்கவும்'' என்று நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவ்வாறே அவரும் சென்று வந்தார்.
மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி
ஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், சனிக்கிழமை பிறை 6, நபி (ஸல்) அவர்கள் பன்னிரெண்டாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார்கள். இதில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவாசிகள். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். மேலும், ஸஃப்வான் இப்னு உமய்யாவிடமிருந்து நூறு கவச ஆடைகளை இரவலாக நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைத் (ரழி) என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள். அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து ''நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்'' என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர்கள் ''இன்ஷா அல்லாஹ்! நாளை அவை முஸ்லிம்களின் கனீமா பொருளாகிவிடும்'' என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார். (ஸுனன் அபூதாவூது)
ஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை 'தாத் அன்வாத்' என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் ''அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக்குகளுக்கு 'தாத் அன்வாத்' இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு 'தாத் அன்வாத்' ஏற்படுத்தித் தாருங்கள்'' என்றனர். நபி (ஸல்) ''அல்லாஹு அக்பர்! முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! 'அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்' என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள்! நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்'' என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி)
மற்றும் படையிலுள்ள சிலர் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து ''இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது'' என்று கூறினர். சிலரின் இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்
ஷவ்வால் மாதம், பிறை 10, செவ்வாய் மாலை புதன் இரவு இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.
மேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அதிகாலை நேரத்தில் நபி (ஸல்) தங்களது படையைத் தயார் செய்து அவற்றுக்குரிய சிறிய பெரிய கொடிகளை வீரர்களுக்கு வழங்கினார்கள். அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைய ஆரம்பித்தார்கள். ஹுனைன் பள்ளத்தாக்கில் எதிரிகள் மறைந்திருப்பதை முஸ்லிம்கள் அறவே அறிந்திருக்கவில்லை. திடீரென எதிரிகள் அவர்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். பின்பு எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத முஸ்லிம்கள் சமாளிக்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இக்காட்சியைப் பார்த்து ''இவர்கள் செங்கடல் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள் போல் தெரிகிறதே!'' என்றார். மேலும், ஜபலா இப்னு ஹன்பல் அல்லது கலதா இப்னு ஹன்பல் என்பவன் ''பாருங்கள்! இன்று சூனியம் பொய்யாகி விட்டது'' என்று ஓலமிட்டான்.
நபி (ஸல்) பள்ளத்தாக்கின் வலப்புறமாக ஒதுங்கிக் கொண்டு ''மக்களே! என் பக்கம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர். நான்தான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்'' என்று அழைத்தார்கள். இந்த இக்கட்டான நிலையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் வெகு குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இவர்கள் ஒன்பது நபர்கள் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். இமாம் நவவீ (ரஹ்) பன்னிரெண்டு நபர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், கீழ்க்காணும் அஹ்மது மற்றும் முஸ்தத்ரக் ஹாகிமில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களின் அறிவிப்பில் வந்திருக்கும் எண்ணிக்கையே சரியானது:
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: ஹுனைன் போரிலே நானும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்களை விட்டு மக்கள் ஓடிவிட்ட நிலையில், முஹாஜிர் மற்றும் அன்சாரிகளைச் சேர்ந்த எண்பது நபர்கள் மட்டும் நபியவர்களுடன் உறுதியாக நின்றனர். புறமுதுகுக் காட்டி ஓடவில்லை. (முஸ்தத்தரகுல் ஹாகிம், முஸ்னது அஹ்மது)
மேலும், இப்னு உமர் (ரழி) கூறுகிறார்கள். ஹுனைன் சண்டையின் போது மக்களெல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடிவிட்டனர். அன்றைய தினத்தில் ஏறக்குறைய நாங்கள் நூறு நபர்களுக்குக் குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (ஜாமிவுத் திர்மிதி)
அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. ''நானே நபியாவேன் அதில் எந்தப் பொய்யுமில்லை நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்.'' என்று கூறிக் கொண்டே தங்களது கோவேறுக் கழுதையை எதிரிகள் நோக்கி ஓட்டினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் விரைந்து முன்னேறி விடாமலிருக்க அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரழி) கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். அப்பாஸ் (ரழி) அதன் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் கோவேறுக் கழுதையிலிருந்து கீழே இறங்கி, ''அல்லாஹ்வே! உனது உதவியை இறக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்
மக்களை சப்தமிட்டு அழைக்கும்படி நபி (ஸல்) அவர்கள் அப்பாஸை பணித்தார்கள். அவர் உரத்த குரலுடையவராக இருந்தார். இதைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நான் மிக உயர்ந்த சப்தத்தில் 'அய்ன அஸ்ஹாபுஸ் ஸமுரா' (ஸமுரா' மரத் தோழர்கள் எங்கே?) என்று அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டவுடன் மாடு தனது கன்றை நோக்கி ஓடி வருவது போல் தோழர்கள் ஓடி வந்தனர். எனது அழைப்புக்கு 'யா லப்பைக், யா லப்பைக்' (ஆஜராகி விட்டோம்) என்று பதிலளித்தனர்.(ஸஹீஹ் முஸ்லிம்)
சிலர், வேகமாக ஓடிக் கொண்டிருந்த தனது ஒட்டகத்தைத் திருப்ப முயன்று அது முடியாமல் ஆனபோது அதிலிருந்த தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கீழே குதித்து சப்தம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். இவ்வாறு புதிதாக நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்தவுடன் எதிரியை நோக்கி முன்னேறிச் சண்டையிட்டனர்.
பின்பு அன்சாரிகளை 'ஏ... அன்சாரிகளே! ஏ... அன்சாரிகளே!' என்று கூவி அழைக்கப்பட்டது. குறிப்பாக, ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கிளையினரைக் கூவி அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களை அழைக்க, எல்லோரும் மைதானத்தில் ஒன்று சேர்ந்து விட்டனர். இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நபி (ஸல்) 'இப்போதுதான் போர் சூடுபிடித்திருக்கிறது' என்று கூறி, பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து 'முகங்களெல்லாம் நாசமாகட்டும்' என்று கூறி எதிரிகளை நோக்கி வீசி எறிந்தார்கள். அங்கிருந்த எதிரிகள் அனைவரின் கண்களிலும் அல்லாஹ் இந்த மண்ணைப் பரப்பி விட்டான். எதிரிகளின் வேகம் தணிந்து போரில் பின்வாங்க ஆரம்பித்தனர்.
எதிரிகள் தோல்வி அடைகின்றனர்
நபி (ஸல்) கைப்பிடி மண்ணை வீசிய சில நிமிடங்களிலேயே எதிரிகள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தனர். முஸ்லிம்களின் எதிர் தாக்குதலால் ஸகீஃப் கிளையினரில் மட்டும் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் தாங்கள் கொண்டு வந்த உடமைகளையெல்லாம் விட்டுவிட்டு போர் மைதானத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், பொருட்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் ஒன்று சேர்த்தனர். முஸ்லிம்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பற்றித்தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:
பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும். (அல்குர்ஆன் 9:25, 26)
எதிரிகளை விரட்டுதல்
போரில் தோல்வி கண்ட எதிரிகள் பல பக்கங்களிலும் சிதறி ஓடினர். ஒரு பிரிவினர் 'தாயிஃபை' நோக்கி ஓடினர். வேறொரு பிரிவினர் 'நக்லா' என்ற ஊரை நோக்கி ஓடினர். மற்றும் ஒரு பிரிவினர் 'அவ்தாஸை' நோக்கி ஓடினர். இதைத் தொடர்ந்து நபி (ஸல்) எதிரிகளை விரட்டிப் பிடிப்பதற்கு முதலில் 'அவ்தாஸை' நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அதற்கு அபூ ஆமிர் அஷ்அரி (ரழி) தலைமை ஏற்றார். அங்கு இரு தரப்பினருக்குமிடையில் சிறு மோதல் ஏற்பட்டது. அதிலும் எதிரிகள் தோல்வியடைந்து ஓடிவிட்டனர். இந்த மோதலில் தலைவராயிருந்த அபூ ஆமிர் அஷ்அரி (ரழி) கொல்லப்பட்டார்.
முஸ்லிம்களின் குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் நக்லாவை நோக்கி ஓடிய முஷ்ரிக்குகளை விரட்டிச் சென்றனர். அவர்களுக்கிடையிலும் சிறு மோதல் ஏற்பட்டது. இச்சண்டையில் துரைத் இப்னு ஸிம்மாவை ரபிஆ இப்னு ருஃபை (ரழி) கொன்றார்.
இப்போரில் தோற்ற பெரும்பாலான முஷ்ரிக்குகள் தாயிஃபை நோக்கித்தான் ஓடினர். எனவே, கனீமத்துப் பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒன்று சேர்த்து வைத்துவிட்டு தாயிஃபை நோக்கி நபி (ஸல்) படையுடன் பயணமானார்கள்.
கனீமா பொருட்கள்
இப்போரில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத்துப் பொருட்கள் கிடைத்தன. ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகங்கள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் 'ஊக்கியா' வெள்ளிகள் ஆகியவை கனீமத்தாக (வெற்றிப் பொருளாகக்) கிடைத்தன. நபி (ஸல்) இவற்றை ஒன்று சேர்த்து 'ஜிஃரானா' என்ற இடத்தில் வைத்து அதற்கு 'மஸ்வூது இப்னு அம்ர் கிஃபாரியை' பாதுகாவலராக நியமித்தார்கள். தாயிஃப் சென்று திரும்பிய பிறகுதான் இவற்றை நபி (ஸல்) பங்கிட்டார்கள்.
சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் 'ஷீமா பின்த் ஹாரிஸ் அல் ஸஃதியா' என்ற பெண்ணும் இருந்தார். இவர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதரியாவார். இவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டது. அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நபி (ஸல்) ஓர் அடையாளத்தைக் கொண்டு அப்பெண்மணி இன்னார்தான் என்பதை அறிந்து கொண்டார்கள். அவரை சங்கை செய்து, தனது போர்வையை விரித்து அமர வைத்தார்கள். அவருக்கு உதவி செய்து அவரது கூட்டத்தார்களிடமே அனுப்பி வைத்தார்கள்.
தாயிஃப் போர்
இப்போர், உண்மையில் ஹுனைன் போரின் ஒரு தொடராகும். 'ஹவாஜின், ஸகீப்' கிளையினரில் தோல்வியடைந்த அதிகமானவர்கள் தங்களின் தளபதி 'மாலிக் இப்னு அவ்ஸ்யுடன் தாயிஃபில் அடைக்கலம் புகுந்தனர். முதலில் ஆயிரம் வீரர்களுடன் காலித் இப்னு வலீதை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். பின்பு நக்லா அல்யமானியா, கர்னுல் மனாஜில், லிய்யா வழியாக தாயிஃபிற்குப் பயணமானார்கள். 'லிய்யா' என்ற இடத்தில் மாலிக் இப்னு அவ்ஃபிற்குச் சொந்தமான பெரும் கோட்டை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அதை உடைக்கும்படி கட்டளையிட்டார்கள். தாயிஃபின் கோட்டையில் எதிரிகள் அடைக்கலம் புகுந்திருந்தனர். நபி (ஸல்) அக்கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள்.
இம்முற்றுகை பல நாட்கள் அதாவது, நாற்பது நாட்களாக நீடித்தது என்று ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஓர் அறிவிப்பிலிருந்து தெரிய வருகிறது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் இதற்கு மாற்றமாக கூறுகின்றனர். சிலர் இருபது நாட்கள் என்றும், சிலர் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் என்றும், சிலர் பதினெட்டு நாட்கள் என்றும், சிலர் பதினைந்து நாட்கள் என்றும் கூறுகின்றனர். (ஃபத்ஹுல் பாரி)
இக்காலக் கட்டத்தில் இருதரப்பிலிருந்தும் அம்பு, ஈட்டி, கற்கள் ஆகியவற்றால் தாக்குதல்கள் நடந்தன. முதலில் எதிரிகளிடமிருந்து அம்புகளால் கடுமையான தாக்குதல் நடந்தது. முஸ்லிம்களில் பலருக்கு இதில் பலத்த காயமேற்பட்டது. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால் முஸ்லிம்கள் தங்களது முகாம்களை மாற்றி உயரமான இடத்திற்குச் சென்று விட்டனர். அதாவது, இன்று தாயிஃபின் பெரிய பள்ளிவாசல் இருக்குமிடத்தில் தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர்.
நபி (ஸல்) மின்ஜனீக் கருவிகள் மூலமாகக் கற்களை எறிந்து கோட்டைச் சுவரில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிம்கள் மரப் பலகைகளால் செய்யப்பட்ட பீரங்கி போன்ற குழாய்களில் புகுந்து கொண்டு கோட்டைச் சுவரை நோக்கி நெருங்கினர். எதிரிகள் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கொக்கிகளைக் கொண்டு மேலிருந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இதனால் மரக் குழாய்களிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறினர். அப்போது எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். அதில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து எதிரிகளைப் பணிய வைப்பதற்காக போர்த் தந்திரம் என்ற முறையில் மற்றொரு வழியையும் நபி (ஸல்) கையாண்டார்கள். அங்கிருந்த திராட்சைக் கொடிகளையெல்லாம் வெட்டி வீழ்த்துமாறு கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். இதைப் பார்த்த ஸகீஃப் கிளையினர் தூதனுப்பி அல்லாஹ்வுக்காகவும், உறவுக்காகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டினர். நபியவர்களும் அதை விட்டுவிட்டார்கள்.
''யார் கோட்டையிலிருந்து வெளியேறி எங்களிடம் வந்து சேர்ந்து விடுவாரோ அவர் அடிமைப்படுத்தப் படமாட்டார்'' என்று அறிவிக்கும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டு எதிரிகளில் இருபத்து மூன்று வீரர்கள் சரணடைந்தனர். (ஸஹீஹுல் புகாரி)
அதில் பிரசித்திப் பெற்ற 'அபூபக்ரா'வும் ஒருவர். இவர் நீர் இரைக்கும் கப்பியின் மூலமாக கயிற்றில் கீழே இறங்கி வந்தார். இதற்கு அரபியில் 'பக்கரா' என்று சொல்லப்படும். இதனால் நபி (ஸல்) அவருக்கு 'அபூபக்ரா' என்று புனைப் பெரியட்டார்கள். வந்தவர்கள் அனைவரையும் உரிமை விட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் முஸ்லிம்களில் ஒருவர் பொறுப்பேற்கும்படி செய்தார்கள். இச்சம்பவங்களைக் கண்ட எதிரிகள் மனச் சங்கடத்திற்கு உள்ளானார்கள்.
இவ்வாறு முற்றுகையின் காலம் நீண்டு கொண்டே சென்றது. கோட்டையை வெல்வதும் மிகச் சிரமமாக இருந்தது, எதிரிகளின் அம்பு மற்றும் இரும்புக் கொக்கிகளுடைய தாக்குதலால் முஸ்லிம்களுக்குப் பெருத்தச் சேதமும் ஏற்பட்டது. ஓர் ஆண்டுக்கு முற்றுகையை தாக்குப் பிடிக்குமளவிற்கு கோட்டை வாசிகள் முழு தயாரிப்புகளுடன் இருந்தனர். இதனால் நபி (ஸல்) நவ்ஃபல் இப்னு முஆவியாவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் கூறிய கருத்தாவது:
இவர்கள் பொந்திலுள்ள நரியைப் போன்றவர்கள். நீங்கள் அதைப் பிடிக்க வேண்டுமென்று நிலையாக நின்றால் பிடித்து விடலாம். அதை விட்டுச் செல்வதால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காது.
நவ்ஃபலின் இந்த ஆலோசனையைக் கேட்ட நபி (ஸல்) திரும்பி சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள். உமரை அழைத்து ''இன்ஷா அல்லாஹ்! நாளை நாம் திரும்ப இருக்கிறோம்'' என்று மக்களுக்கு அறிவிக்கும்படி கூறினார்கள். ''கோட்டையை வெற்றி கொள்ளாமல் நாம் எப்படி திரும்புவது?'' என்று முஸ்லிம்கள் கேட்டனர். இப்பேச்சு நபி (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டியவுடன் ''சரி! நாளைக்கும் போரிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் மறுநாள் போருக்குச் சென்றபோது கடினமான காயம் அவர்களுக்கு ஏற்பட்டது. அன்று மாலையில் ''நாளை நாம் திரும்பிச் சென்று விடலாம்'' என அறிவிப்புச் செய்தார்கள். மக்கள் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து புறப்படுவதற்குத் தயாரானார்கள். இதைப் பார்த்து நபி (ஸல்) சிரித்தார்கள்.
மக்கள் பயணமானவுடன் பின்வரும் துஆவை ஓதும்படி நபி (ஸல்) கூறினார்கள். ''திரும்புகிறோம் பாவமீட்சி கோருகிறோம் இறைவணக்கம் செய்கிறோம் எங்கள் இறைவனையே புகழ்கிறோம்.''
சிலர் ''அல்லாஹ்வின் தூதரே! இந்த ஸகீஃப் கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) ''அல்லாஹ்வே! ஸகீஃப் கிளையினருக்கு நேர்வழி காட்டுவாயாக! அவர்களை என்னிடம் வரச் செய்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.
ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்
தாயிஃபில் முற்றுகையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) ஜிஃரானா திரும்பி அங்கு பத்து நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்கள். ஆனால், கனீமத்தைப் பங்கிடவில்லை. இவ்வாறு நபி (ஸல்) தாமதப்படுத்தியதற்குக் காரணம், 'ஹவாஜின் கிளையினர் மன்னிப்புக்கோரி தங்களிடம் வந்தால் அவர்களது பொருட்களை திரும்பக் கொடுத்து விடலாம்' என்பதற்கே! பத்து நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் திரும்ப வராததால் கனீமா பொருட்களை நபி (ஸல்) பங்கிட்டார்கள். கோத்திரங்களின் தலைவர்களும், மக்காவின் முக்கியப் பிரமுகர்களும் தங்களின் பங்கை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த இவர்களுக்கு கனீமா முதலாவதாகவும் அதிகமாகவும் கொடுக்கப்பட்டது.
அபூ ஸுஃப்யானுக்கு நாற்பது ஊக்கியா வெள்ளியும், நூறு ஒட்டகைகளும் நபி (ஸல்) வழங்கினார்கள். அவர் ''எனது மகன் எஜீதுக்கு?'' என்று கேட்டார். நபி (ஸல்) எஜீதுக்கும் அதே அளவு வழங்கினார்கள். பின்பு ''எனது மகன் முஆவியாவுக்கு?'' என்று கேட்டார். அவருக்கும் அதே அளவு வழங்கினார்கள். ஹக்கீம் இப்னு ஸாமுக்கு 100 ஒட்டங்கள் வழங்கினார்கள். பின்பு ஸஃப்வான் இப்னு உமைய்யாவுக்கு மூன்று தடவை நூறு நூறாக முன்னூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். இவ்வாறே பல குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய கோத்திரத்தாரின் தலைவர்களுக்கும் நூறு நூறு ஒட்டகங்கள் நபி (ஸல்) வழங்கினார்கள்.(அஷ்ஷிஃபா)
மற்றவர்களுக்குகெல்லாம் ஐம்பது, நாற்பது என வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தக் கொடைத் தன்மையை கண்ட மக்கள், முஹம்மது வறுமையைக் கண்டு அஞ்சாமல் வாரி வழங்குகிறார் என்று பேசினார்கள். கிராம அரபிகளும் இந்தச் செய்தியை கேட்டு பொருட்களைப் பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபியவர்களை நிர்ப்பந்தமாக தள்ளிச் சென்று, ஒரு மரத்தில் சாய்த்தனர். அவர்களை போர்வையால் இறுக்கி ''அதில் எங்களுக்கும் கொடுங்கள்'' என்று விடாப்பிடியாக கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ''மக்களே! எனது போர்வையை என்னிடம் கொடுத்து விடுங்கள். 'திஹாமா' மாநிலத்துடைய மரங்களின் எண்ணிக்கை அளவு கால்நடைகள் இருந்தால் அதையும் உங்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து விடுவேன். பின்பு நான் கஞ்சனாகவோ, கோழையாகவோ, பொய்யனாகவோ இல்லையென்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.''
பிறகு தனது ஒட்டகத்திற்கு அருகில் சென்று அதன் திமிலில் இருந்து சில முடிகளைப் பிடுங்கி மக்களை நோக்கி உயர்த்திக் காண்பித்து ''மக்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுடைய கனீமா பொருட்களிலிருந்து ஐந்தில் ஒன்றைத் தவிர அதிகமாக இந்த முடியின் அளவு கூட நான் எனக்காக வைத்துக் கொள்ளவில்லை. நான் பெற்றுக் கொண்ட ஐந்தில் ஒன்றும் உங்களுக்கே திருப்பி வழங்கப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள்.
மற்ற கனீமா பொருட்கள் அனைத்தையும் கொண்டு வரும்படி ஜைது இப்னு ஸாபித்துக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். மக்கள் அனைவரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். மீதமிருந்த பொருட்களை எல்லாம் நபி (ஸல்) மக்களுக்கு பங்கிட்டார்கள். காலாட்படை வீரர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் அல்லது நாற்பது ஆடுகள் வழங்கப்பட்டன. குதிரை வீரருக்கு 12 ஒட்டகங்கள் அல்லது 120 ஆடுகள் வழங்கப்பட்டன.
நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்
புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய குறைஷிகளுக்கும் நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கினார்கள். ஆனால், இஸ்லாமுக்காக நீண்ட காலம் தியாகம் செய்து வந்த தனது உற்ற தோழர்களுக்கு அந்தளவு வழங்கவில்லை. ஒரு பெரிய அரசியல் காரணத்தை முன்னிட்டு நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பொதுவாக மக்கள் அந்த நுட்பத்தை விளங்கிக் கொள்ளாமல் பலவாறு பேசினார்கள். இதைப் பற்றி அபூஸயீது அல்குத்ரீ (ரழி) வாயிலாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அறிவிப்பதை பார்ப்போம்.
அபூஸயீது அல்குத்ரீ (ரழி) கூறுகிறார்கள்: குறைஷிகளுக்கும் ஏனைய அரபு கோத்திரங்களுக்கும் நபி (ஸல்) கனீமத்தை வாரி வழங்கினார்கள். ஆனால், அன்சாரிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அன்சாரிகளில் ஒரு குறிப்பிட்ட கிளையினர் மன வருத்தமடைந்து பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) தனது கூட்டத்தினருக்கே வாரி வழங்குகின்றார்கள்'' என்று பேசினார்கள். ஸஅது இப்னு உபாதா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! அன்சாரிகளில் இந்தக் கூட்டத்தினர் உங்கள் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்குக் கிடைக்கப்பட்ட இந்த கனீமா பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும் ஏனைய கோத்திரங்களுக்கும் வாரி வழங்கினீர்கள். ஆனால் அன்சாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் அவர்களின் வருத்தத்திற்குக் காரணம்'' என்றார். ''ஸஅதே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''நான் எனது கூட்டத்தாரில் ஒருவன்தானே!'' என்று கூறினார். நபி (ஸல்) ''சரி! உங்கள் கூட்டத்தார்களை இந்தத் தடாகத்திற்கு அருகில் ஒன்று சேருங்கள்'' என்று கூறினார்கள்.
ஸஅது (ரழி), நபியவர்களிடமிருந்து வெளியேறி தனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களை அந்தத் தடாகத்திற்கருகில் ஒன்று சேர்த்தார். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கு ஸஅது (ரழி) அனுமதி வழங்கவே அவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் சில முஹாஜிர்கள் அங்கே வந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன் ஸஅது (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று ''அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். வாருங்கள்!'' என நபியவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அங்கு வந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பேசினார்கள். ''அன்சாரி கூட்டத்தினரே! உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன? என்மீது நீங்கள் கோபமடைந்துள்ளீர்களா? நீங்கள் வழிகேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் உங்களுக்கு (நான் வந்த பின்) நேர்வழி காட்டினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை செல்வந்தர்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்தான்.'' இவ்வாறு நபி (ஸல்) கூறி முடித்தார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஆம்! நீங்கள் கூறியது உண்மைதான். அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்கள் மீது பெரும் கருணையுடைவர்கள், பேருபகாரம் உள்ளவர்கள்'' என்று அன்சாரிகள் கூறினார்கள்.
''அன்சாரிகளே! நீங்கள் எனக்குப் பதிலளிக்க மாட்டீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களிடம் என்ன கூறுவது? அனைத்து உபகாரமும் கிருபையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது'' என்று அன்சாரிகள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) கூறியதாவது: ''அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்பிக்கப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள் நாங்கள் உங்களை உண்மைப்படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்டவர்களாக எங்களிடம் வந்தீர்கள் நாங்கள்தான் உங்களுக்கு உதவி செய்தோம். மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் சிரமத்துடன் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்தோம் என்று நீங்கள் பதில் கூறலாம்.
அப்படி நீங்கள் கூறினால் அது உண்மைதான். நாமும் அதை உண்மை என்றே ஏற்றுக் கொள்கிறோம். அன்சாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள்? மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே! மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும்போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா? முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே! அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக!'' என்று கூறி தங்களது உரையை முடித்தார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த அன்சாரிகளெல்லாம் தாடி நனையுமளவிற்கு அழுதார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கைத் திருப்தி கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைப் பொருந்திக் கொண்டோம்'' என்று கூறியவர்களாகக் கலைந்து சென்றனர்.(ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
ஹவாஜின் குழுவினரின் வருகை
இந்நிகழ்ச்சிக்குப் பின் ஜுஹைர் இப்னு ஸுர்தின் தலைமையில் பதிநான்கு நபர்கள் கொண்ட ஹவாஜின் குழுவினர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அதில் நபி (ஸல்) அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார். நபியவர்களிடம் அவர்கள் பைஅத் செய்த பின் ''அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக இருப்பவர்களில் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுவது சமுதாயத்திற்கு கேவலமாகும்.'' என்று கூறிய பின்,
''இறைத்தூதரே! தயாளத்தன்மையுடன் உதவி புரியுங்கள்
உங்களை நாம் ஆதரவு வைத்திருக்கின்றோம்
உதவியை எதிர்பார்க்கிறோம்
நீங்கள் பால் குடித்த தாய்மார்களுக்கு உதவுங்கள்
கலப்பற்ற முத்தான பாலால் உங்கள் வாய் நிரம்பியுள்ளது!''
என்ற கவிகளைப் பாடினர். இதைக் கேட்ட நபி (ஸல்) ''என்னுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். பேச்சுகளில் எனக்கு மிகப் பிடித்தமானது உண்மையான பேச்சுதான். உங்களது பெண்களும், பிள்ளைகளும் உங்களுக்குப் பிரியமானவர்களா? அல்லது உங்களது செல்வங்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் எங்களுக்கு வேண்டாம் எங்களது குடும்பங்களே எங்களுக்கு வேண்டும் எங்கள் குடும்பக் கௌரவத்திற்கு நிகராக எதையும் நாங்கள் மதிப்பதில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் என்னிடம் வந்து சபையில் எழுந்து நின்று, ''நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வுடைய தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகிறோம்'' என்று கூறுங்கள்.
ஹவாஜின் கிளையினர் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் வந்து நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ''எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கி விடுகிறேன். மேலும், உங்களுக்காக மக்களிடமும் கேட்கிறேன்'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட முஹாஜிர்களும், அன்சாரிகளும் ''அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கு சொந்தமானதுதான்'' என்று கூறினார்கள். ஆனால், அக்ரா இப்னு ஹாபிஸ் ''நானும் தமீம் கிளையினரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். உயய்னா இப்னு ஹிஸ்ன் ''நானும் ஃபஸாரா கிளையினரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். இவ்வாறே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவரும் எழுந்து ''நானும் ஸுலைம் கோத்திரத்தாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறினார். ஆனால், ஸுலைம் கூட்டத்தார் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குரியதை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்'' என்று கூறி தங்கள் தலைவன் பேச்சை மறத்து விட்டனர். அதற்கு அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரழி) ''என்னை இவ்வாறு பலவீனப்படுத்தி விட்டீர்களே!'' என்று வருந்தினார்.
அதைத் தொடர்ந்து நபி (ஸல்) ''இந்தக் கூட்டத்தினர் இஸ்லாமை ஏற்று நம்மிடம் வந்திருக்கிறார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துதான் கனீமா பங்கீடு செய்வதில் தாமதம் காட்டினேன். நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? கைதிகள் வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள் ''எங்களின் குடும்பம்தான் வேண்டும்'' என்று கூறிவிட்டனர். அதற்கு ஈடாக அவர்கள் எதையும் மதிக்கவில்லை. எனவே, ''யாரிடம் கைதிகள் இருக்கிறார்களோ அவர்களை எந்தவிதப் பகரமும் எதிர்பார்க்காமல் விட்டுவிடவும் அல்லது விரும்பினால் அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய ஒரு பங்கிற்குப் பகரமாக ஆறு பங்குகள் கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எந்தப் பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை உரிமை விட்டுவிடுகிறோம்'' என்று கூறினர். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உங்களில் முழுமையான திருப்தியுடன் இதைச் செய்பவர் யார்? அல்லது திருப்தியின்றி செய்பவர் யார்? என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் சென்று ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்!'' என்று கூறினார்கள். இறுதியில் மக்கள் தங்களிடமிருந்த கைதிகள் அனைவரையும் நபி (ஸல்) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் மட்டும் தனக்குக் கிடைத்த வயதான மூதாட்டியைத் திரும்பத்தர அந்நேரத்தில் மறுத்து விட்டார்கள். பிறகு சிறிது நாட்கள் கழித்து திரும்பக் கொடுத்து விட்டார்கள். கைதிகளுக்கு நபி (ஸல்) கிப்தி ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)
உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்
இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) ஜிஃரானாவில் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றினார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைப் (ரழி) என்ற தோழரை ஆளுநராக நியமித்துவிட்டு மதீனா நோக்கிப் பயணமானார்கள். ஹிஜ்ரி 8, துல்கஅதா மாதம் முடிய ஆறு நாட்கள் இருக்கும் போது மதீனா வந்தடைந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, தாரீக் இப்னு கல்தூன்)
மக்கா வெற்றிக்குப் பின் அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளும் குழுக்களும்
இந்த நீண்ட வெற்றிமிக்க பயணத்திலிருந்து நபி (ஸல்) மதீனா திரும்பிய பின், பல பாகங்களிலிருந்து மக்கள் கூட்டங்களும், குழுக்களும் வந்தன. மேலும், நபி (ஸல்) தங்களது தோழர்களை பல இடங்களுக்கு ஆளுநர்களாக அனுப்பினார்கள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும் பல அழைப்பாளர்களை பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இவை ஒரு புறமிருக்க, இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அரபுலகம் கண் கூடாகப் பார்த்துக் கொண்ட உண்மைக்கு அடிபணியாமல் அகம்பாவம் பிடித்து, வம்புத்தனம் செய்து வந்த கோத்திரங்களை அடக்குவதற்குண்டான நடவடிக்கைகளையும் நபி (ஸல்) எடுத்தார்கள். இது தொடர்பான சிறு விளக்கங்களைப் பார்ப்போம்:
ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்
ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் நபி (ஸல்) மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள் என்பதை இதற்கு முன் நாம் அறிந்தோம். ஆக, சில நாட்களிலேயே ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதம் இஸ்லாமியப் புத்தாண்டு தொடங்கிற்று. சென்ற ஆண்டிற்கான ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) தங்களது தோழர்களை பல கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதன் விவரமாவது:
ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனுப்பப்பட்ட கோத்திரத்தாரின் பெயர்கள்:
1. உயைனா இப்னு ஹிஸ்ன் (ரழி) - பனூ தமீம்
2. யஜீது இப்னு அல் ஹுஸைன் (ரழி) - அஸ்லம், கிஃபார்
3. அப்பாது இப்னு பஷீர் அஷ்ஹலி (ரழி) - சுலைம், முஜைனா
4. ராஃபி இப்னு மக்கீஸ் (ரழி) - ஜுஹைனா
5. அம்ரு இப்னு ஆஸ் (ரழி) - பனூ ஃபஜாரா
6. ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கிளாப்
7. பஷீர் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கஅப்
8. இப்னு லுத்பிய்யா அஜ்தி (ரழி) - பனூ துப்யான்
9. முஹாஜிர் இப்னு அபூ உமைய்யா (ரழி) - ஸன்ஆ நகரம் (இவர்கள் ஸன்ஆவிற்கு அனுப்பப்பட்ட காலத்தில் தான் தன்னை நபி என்று வாதிட்ட அஸ்வது அனஸி அங்குத் தோன்றினான்)
10. ஜியாது இப்னு லபீது (ரழி) - ஹழர மவுத் (யமன் நாட்டிலுள்ள ஓர் ஊர்)
11. அதீ இப்னு ஹாத்தம் (ரழி) - தை மற்றும் பனூ அஸத்
12. மாலிக் இப்னு நுவைரா (ரழி) - பனூ ஹன்ளலா
13. ஜிப்கான் இப்னு பத்ர் (ரழி) - பனூ ஸஅதின் ஒரு பிரிவினருக்கு
14. கைஸ் இப்னு ஆஸிம் (ரழி) - பனூ ஸஅதின் மற்றொரு பிரிவினருக்கு
15. அலா இப்னு ஹழ்ரமி (ரழி) - பஹ்ரைன் தீவு
16. அலீ இப்னு அபூதாலிப் (ரழி) - நஜ்ரான் பிரதேசம் (ஜகாத் மற்றும் ஜிஸ்யா வசூலிப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள்.)
நபி (ஸல்) அந்த ஆண்டு முஹர்ரம் மாதத்திலேயே மேற்கூறப்பட்ட அனைத்து குழுக்களையும் அனுப்பிவிடவில்லை. அவர்களில் சில கோத்திரத்தார்கள் தாமதமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால், அற்குப் பிறகே நபி (ஸல்) தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபி (ஸல்) தங்களது தோழர்களை அனுப்பி வைத்தது ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில்தான் ஆரம்பமானது. இதிலிருந்து ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமிய அழைப்புப் பணி எந்தளவு வெற்றி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அவ்வாறே, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர்.
படைப் பிரிவுகள்
ஜகாத் வசூல் செய்வதற்குப் பல கோத்திரத்தாரிடம் தங்களது தோழர்களை அனுப்பியவாறே சில படைகளையும் பல பகுதிகளுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். அரேபியத் தீபகற்பம் முழுவதிலும் முழு அமைதியை நிலை நாட்டுவதே அதன் நோக்கமாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளின் விவரம் வருமாறு:
1) உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு: தமீம் கிளையினர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய கிளையினரைத் தூண்டி வந்ததுடன், முஸ்லிம்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஸ்யா வரியையும் கொடுக்க விடாமல் தடுத்து வந்தனர். எனவே, உயைனா இப்னு ஹிஸ்ன் அல்பஸாயின் தலைமையில் ஐம்பது குதிரை வீரர்களை ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில் பனூ தமீம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் எவரும் இருக்கவில்லை. அனுப்பப்பட்ட அனைவரும் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களே.
உயைனா தனது படையுடன் இரவில் பயணிப்பதும் பகலில் மறைவதுமாக தமீமினரை நோக்கிச் சென்றார். ஒரு பாலைவனத்தில் ஒன்று கூடியிருந்த அந்த தமீம் கிளையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். முஸ்லிம்களின் படையைச் சமாளிக்க முடியாமல் அக்கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடினர். பதினொரு ஆண்கள், இருபத்தொரு பெண்கள், முப்பது சிறுவர்களைக் கைதிகளாக்கி உயைனா மதீனா அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் ரம்லா பின்த் அல்ஹாரிஸின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தமீமினரின் தலைவர்களில் பத்து முக்கிய நபர்கள் தங்களின் கைதிகளை விடுவிப்பதற்காக மதீனா வந்தனர். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களின் இல்லம் வந்து ''முஹம்மதே! எங்களிடம் வாருங்கள்'' என்று கூவி அழைத்தனர். நபி (ஸல்) வந்தவுடன் அவர்கள் நபியவர்களை பற்றிக் கொண்டனர். நபி (ஸல்) சிறிது நேரம் பேசிவிட்டு ளுஹ்ர் தொழுகைக்காகச் சென்று விட்டார்கள். தொழுகை முடித்து பள்ளியின் முற்றத்தில் அமர்ந்தபோது அக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''வாருங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பெருமையைப் பற்றி விவாதிப்போம்'' என்று கூறினர்.
அவர்களில் புகழ்பெற்ற பேச்சாளரான உத்தாத் இப்னு ஹாரிஸ் என்பவரை அவர்கள் முன்னிறுத்தினர். அவர் உரையாற்றியவுடன் இஸ்லாமியப் பேச்சாளரான கைஸ் இப்னு ஷம்மாஸுக்கு நபி (ஸல்) கட்டளையிட, அவர் எழுந்து உத்தாதிற்கு பதிலளித்தார். பின்பு தங்களின் புகழ்பெற்ற கவிஞர் ஜுப்ருகான் இப்னு பத்ரை அவர்கள் நிறுத்தினர். அவர் தங்களின் பெருமையைக் கவிதையாகப் பாடினார். நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்திடம் பதில் கூறும்படி கூறினார்கள். ஹஸ்ஸான் உடனடியாக வாயடைக்கும் பதிலைத் தனது கவிதையில் வழங்கினார்.
இப்போட்டி முடிந்தவுடன் தமீம் குழுவில் இடம் பெற்றிருந்த நடுவர் அக்ரா இப்னு ஹாபிஸ் கூறி தீர்ப்பாவது: நபி (ஸல்) அவர்களின் பேச்சாளர் நமது பேச்சாளரை விட மிகத் திறமையானவர் நபி (ஸல்) அவர்களின் கவிஞர் நமது கவிஞரைவிட மிகத் திறமையானவர் அவர்களுடைய குரல் நமது குரலைவிட மிக உயர்ந்தது அவர்களது சொற்கள் நமது சொற்களை விட மிக உயர்ந்தது. அவரின் இத்தீர்ப்புக்குப் பின் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். நபி (ஸல்) அவர்களுக்கு வெகுமதிகளை அளித்ததுடன் கைதிகளையும் அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.
2) குத்பா இப்னு ஆமிர் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் 'துரபா' என்ற நகருக்கருகிலுள்ள 'தபாலா' என்ற பகுதியில் வசிக்கும் கஸ்அம் கபீலாவைச் சேர்ந்த ஒரு கிளையினரிடம் குத்பா இப்னு ஆமிர் என்பவரை இருபது வீரர்களுடன் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் பத்து ஒட்டகங்களில் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பயணம் செய்தனர். அங்குச் சென்று எதிரிகளுடன் கடுமையான சண்டை செய்தனர். இரு தரப்பிலும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டன. இதில் தளபதியாக இருந்த குத்பாவும் கொல்லப்பட்டார். ஆனால், இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே கிடைத்தது. எதிரிகளின் கால்நடைகளையும் பெண்களையும் முஸ்லிம்கள் மதீனாவுக்குக் கொண்டு வந்தனர்.
3) ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் 'ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் கிலாபி' என்பவரின் தலைமையில் கிளாப் கிளையினரை இஸ்லாமின் பக்கம் அழைப்பதற்காக நபி (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்துப் போருக்குத் தயாரானார்கள். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எதிரிகளில் ஒருவன் மட்டும் கொல்லப்பட்டான்.
4) அல்கமா படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் ஆகிர் மாதம் 'ஜுத்தா' கடற்கரையை நோக்கி 'அல்கமா இப்னு முஜஸ்ஸிர்' என்பவரின் தலைமையின் கீழ் 300 வீரர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இதற்குக் காரணம், ஹபஷாவைச் சேர்ந்த சிலர் மக்காவில் கொள்ளையடிப்பதற்காக ஜுத்தா கடற்கரையில் ஒன்று கூடியிருக்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அல்கமா தனது படையுடன் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றினார். அங்குள்ள ஒரு தீவு வரை சென்று தேடினார். முஸ்லிம்கள் வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்த ஹபஷிகள் தப்பி ஓடிவிட்டதால் சண்டை ஏதும் நடக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)
5) அலீ படைப் பிரிவு: தை கூட்டத்தினருக்கென்று பிரசித்திப்பெற்ற சிலை ஒன்றிருந்தது. அதை அம்மக்கள் 'ஃபுல்ஸ்' என்றழைத்தனர். அதை இடிப்பதற்ககாக அலீ இப்னு அபூ தாலிபை 150 வீரர்களுடன் ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் நூறு ஒட்டகைகள், ஐம்பது குதிரைகளில் பயணம் செய்தனர். இவர்களிடம் கருப்பு நிறத்தில் பெரிய கொடி ஒன்றும், வெள்ளை நிறத்தில் சிறிய கொடி ஒன்றும் இருந்தது. வந்து சேர வேண்டிய இடத்தை அடைந்தவுடன், ஃபுல்ஸ் சிலையைத் தகர்த்தெறிந்து விட்டு அங்கிருந்த கஜானாவையும் கைப்பற்றினர். அதில் மூன்று வாட்களும், மூன்று கவச ஆடைகளும் இருந்தன.
அங்கு வசித்த 'ஹாத்திம்' குடும்பத்தனரிடம் சண்டையிட்டு நிறைய கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு தைம் கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை (சிரியா) நோக்கி ஓட்டம் பிடித்தார். கைதியாக்கப்பட்டவர்களில் இவரின் சகோதரியும் இருந்தார். மதீனா வரும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்காக வெற்றிப் பொருளில் ஐந்தில் ஒரு பகுதியை ஒதுக்கி விட்டு மீதியை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால், கைதிகளில் ஹாத்திம் குடும்பத்தாரை மட்டும் பங்கிடாமல் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதீயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் தன் மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதவி செய்பவரும் ஓடிவிட்டார், தந்தையும் இறந்துவிட்டார் நானோ வயதான மூதாட்டி. எனக்குப் பணிவிடை செய்வதற்கும் யாருமில்லை. எனக்கு உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்'' என்று அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) ''உமக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்க, ''அதீ இப்னு ஹாத்திம்'' என்று பதிலளித்தார். ''அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் விரண்டோடிய அவரா?'' என்று கேட்டுவிட்டு வேறெதுவும் பேசாமல் சென்று விட்டார்கள்.
மறுநாளும் இதுபோன்றே நபி (ஸல்) அவர்களிடம் அப்பெண்மணி உரையாடினார். முந்தைய நாள் கூறியது போன்றே கூறிவிட்டு சென்று விட்டார்கள். மூன்றாம் நாளும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முன்பு கூறியது போன்றே கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர் மீது இரக்கம் காட்டி அவரை விடுதலை செய்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒருவர் இருந்தார். அநேகமாக அவர் அலீயாக இருக்குமென்று அப்பெண் கூறுகிறார். அவர் ''வாகனிப்பதற்காக வாகனத்தையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்!'' என்று யோசனைக் கூறினார். அப்பெண்மணியும் நபி (ஸல்) அவர்களிடம் வாகனம் கேட்கவே நபி (ஸல்) அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய அப்பெண்மணி தனது சகோதரரைத் தேடி ஷாம் நாட்டிற்குப் பயணமானார். அங்கு தனது சகோதரரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை குறித்து விவரித்துவிட்டு ''உமது தந்தை செய்திராத நற்செயல்களை எல்லாம் அவர் செய்கிறார். எனவே, விரும்பியோ விரும்பாமலோ நீ அவரைச் சந்தித்தே ஆக வேண்டும்'' என்று அறிவுரைக் கூறினார். தனது சகோதரியின் இந்த யோசனைக்குப் பின் தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றாலும் துணிவுடன் நபியவர்களை சந்திக்க அவர் பயணமானார்.
நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து அவர்களுக்கருகில் அமர்ந்தவுடன், அவர் யார் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் நபி (ஸல்) பேசினார்கள். அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பின் ''நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன? 'லாஇலாஹஇல்லல்லாஹ்' என்று கூறுவதற்கு பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை தவிர வேறொர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?'' என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் ''அப்படி ஒன்றுமில்லை'' என்றார். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு ''அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்குப் பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை விட மிகப்பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் ''அவ்வாறு இல்லை'' என்று பதிலளித்தார்.
யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள், கிறிஸ்தவர்கள் வழிதவறியவர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். இதனைக் கேட்ட அதிய் ''நான் இணைவைப்பிலிருந்து முற்றிலும் விலகிய முஸ்லிமாக இருக்கிறேன்'' என்று கூறினார். அவரின் இப்பேச்சைக் கேட்ட நபி (ஸல்) முகம் மலர்ந்தவர்களாக அன்சாரி ஒருவரின் வீட்டில் விருந்தாளியாக, அவரைத் தங்க வைத்தார்கள். அவர் அங்கு தங்கி ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து வந்தார். (ஜாதுல் மஆது)
தான் முஸ்லிமானதைப் பற்றி அதிய் கூறியதை இப்னு இஸ்ஹாக் (ரஹ்)அறிவிக்கிறார்: ''என்னை நபி (ஸல்) தங்கள் இல்லத்தில் அவர்களுக்கு முன்பாக அமர வைத்தார்கள். நபி (ஸல்) என்னிடம் ''ஹாத்திமின் மகன் அதியே! நீ 'ரகூஸி'யாக இருந்தாய் அல்லவா?'' (ரகூஸி' என்பது கிறிஸ்துவம் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்.)
அதிய்: ஆம்! அப்படித்தான்.
நபி (ஸல்): உமது கூட்டத்தினருக்குச் சொந்தமான கனீமா பொருட்களின் 1-4 பங்கை அனுபவித்து வந்தாயல்லவா?
அதிய்: ஆம்! அவ்வாறுதான் செய்தேன்.
நபி (ஸல்): அது உமது மார்க்கத்தில் ஆகுமான செயலாக இல்லையே?
அதிய்: ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொல்வது சரிதான்.
மக்களுக்கு தெரியாதவை அவருக்குத் தெரிகிறது. எனவே, நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று அறிந்து கொண்டேன்.) (இப்னு ஹிஷாம்)
அதிய் தொடர்பாக முஸ்னது அஹ்மதில் மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது.
நபி (ஸல்): அதிய்யே! நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றமடைவாய்!
அதிய்: நானும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவன்தானே?
நபி (ஸல்): நான் உம்மைவிட உமது மார்க்கத்தை நன்கறிவேன்.
அதிய்: அது எப்படி என் மார்க்கத்தை என்னைவிட நீங்கள் நன்கறிவீர்கள்?
நபி (ஸல்): நீர் ரகூஸியா கூட்டத்தை சேர்ந்தவர்தானே? உமது கூட்டத்தில் கனீமத்தில் 1-4 பங்கை அனுபவித்து வந்தீரே?
அதிய்: நீங்கள் கூறுவது உண்மைதான்.
நபி (ஸல்): நிச்சயமாக உமது இந்தச் செயல் உமது மார்க்கத்தில் ஆகுமானதல்லவே.
அதிய் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களின் இந்தப் பேச்சுக்கு முன் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். (முஸ்னது அஹ்மது)
ஸஹீஹ் புகாரியில் அதிய்யின் மூலமாக மற்றும் ஒரு நிகழ்ச்சி பதிவாகியுள்ளது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது வறுமையை முறையிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொருவர் தனது பொருட்களை எல்லாம் கொள்ளையர்கள் வழியில் கொள்ளையடித்து விட்டதாக முறையிட்டார். நபி (ஸல்) என்னைப் பார்த்து ''அதிய்யே! ஹீரா தேசம் எங்கிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் ஒரு பெண் தனியாக ஹீராவிலிருந்து புறப்பட்டு கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்வாள். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த பயமும் இருக்காது என்பதை நீ பார்க்கத்தான் போகிறாய். மேலும், உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் கிஸ்ராவின் பொக்கிஷங்களை நீ வெற்றி கொள்வாய். மேலும், உனக்கு வயது நீளமாக இருந்தால் ஒருவர் கை நிறைய தங்கம் அல்லது வெள்ளியை அள்ளிக்கொண்டு தர்மம் செய்ய வெளியேறி அதைப் பெறுவோர் யாரும் உண்டா? என்று தேடி அலைவார். ஆனால், அதைப் பெறுவதற்கு யாரும் அவருக்குக் கிடைக்க மாட்டார்கள்.
சற்று நீளமாக வரும் ஹதீஸின் இறுதியில்: ''ஹீராவிலிருந்து பயணம் செய்து கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்து திரும்பும் பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த அச்சமுமில்லை. மேலும், கிஸ்ரா இப்னு ஹுர்முஜின் கஜானாக்களை வெற்றி கொண்டவர்களில் நானும் இருந்தேன். உங்களுக்கு வாழ்க்கை நீளமாக இருந்தால் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான கை நிறைய தங்கம், வெள்ளியை எடுத்துக் கொண்டு தர்மம் செய்ய அலைபவர்களையும் நீங்கள் பார்ப்பீர்கள்'' என்று அதிய் கூறுகின்றார். (ஸஹீஹுல் புகாரி)
No comments:
Post a Comment