பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்
பிறப்பு
அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் 'அனூ ஷேர்வான்' என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு. இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
(நபி (ஸல்) அவர்கள் பிறந்தபோது அவர்களது நுபுவ்வத்துக்கு முன்னோடியாக ஆமினாவின் உடலிலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது அதன் பிரகாசத்தில் ஷாமின் கோட்டைகள் ஒளிர்ந்தன. நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட நிலையிலேயே பிறந்தார்கள். கிஸ்ரா உடைய மாளிகையில் பதிநான்கு மாடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன. பல்லாண்டு காலமாக மஜூஸிகள் வணங்கி வந்த பிரம்மாண்டமான நெருப்புக் குண்டம் அணைந்துவிட்டது. 'ஸாவா' என்ற நீர் தடாகத்தைச் சுற்றியுள்ள கிருஸ்துவ ஆலயங்கள் இடிந்து வீழ்ந்தன என்று கூறப்படும் இத்தகைய கூற்றுகளுக்கு உறுதியான சான்றுகள் ஏதும் இல்லை. அந்த சமுதாயத்தவரும் தங்களது வரலாற்று நிகழ்வுகளில் இதைப்பற்றி குறிப்பிடவில்லை.)
குழந்தையைப் பெற்றெடுத்ததும் ஆமினா அந்த நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியுடன் தனது பேரரை கஅபாவுக்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவருக்காக பிரார்த்தித்தார். மேலும் அக்குழந்தைக்கு ''முஹம்மது'' எனப் பெயரிட்டார். இப்பெயர் எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை. அரபியர்களின் வழக்கப்படி ஏழாம் நாள் நபி (ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது.(தல்கீஹ், இப்னு ஹிஷாம்)
ஆமினாவிற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய முதல் பெண் அபூலஹப் உடைய அடிமைப் பெண் ஸுவைபிய்யா ஆவார். (இத்ஹாஃபுல் வரா) அப்போது ஸுவைபிய்யாவுக்கு 'மஸ்ரூஹ்' எனும் ஆண் குழந்தை பிறந்திருந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு முன் ஹம்ஜா அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூ ஸலமா இப்னு அப்துல் அஸதுக்கும் அவர் பாலூட்டியுள்ளார். (ஸஹீஹுல் புகாரி)
ஸஅது கிளையாரிடம்
அக்காலத்தில் நகர்ப்புற அரபியர்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகக் கிராமப்புற செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு நகரத்திலுள்ள நோய் தொற்றிவிடாமலிருக்கவும், உடல் உறுதி பெற்று நரம்புகள் வலிமை அடையவும், தூய அரபி மொழியை திறம்படக் கற்றுக் கொள்ளவும் இந்த நடைமுறையைக் கையாண்டு வந்தனர். தனது பேரருக்குரிய செவிலித் தாயை அப்துல் முத்தலிப் தேடினார். இறுதியாக ஸஅத் இப்னு பக்ர் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த 'ஹலீமா பின்த் அபூ துவைப் அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்' என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார். அவரது கணவர் ஹாரிஸ் இப்னு அப்துல் உஜ்ஜா என்பவராவார். இவருக்கு 'அபூ கபிஷா' என்ற புனைப்பெயரும் உண்டு.
ஹாரிஸின் பிள்ளைகளான அப்துல்லாஹ், அனீஸா, ஷைமா என்ற புனைப் பெயர் கொண்ட ஹுதாபா, ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதர சகோதரிகள் ஆவர். இதில் ஷைமா என்பவர் நபி (ஸல்) அவர்களை தூக்கி வளர்த்தவர் ஆவார். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான ஹாரிஸின் மகன் அபூ ஸுஃப்யானும் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதரர் ஆவார்.
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஜா அவர்களும் ஸஅத் குடும்பத்தாரிடம் பாலூட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தார். ஹம்ஜாவின் பால்குடி தாய் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டினார். இதனால் ஹம்ஜா அவர்களும் நபி (ஸல்) அவர்களும் ஸஅத் குடும்பத்தைச் சேர்ந்த செவிலித்தாய் மற்றும் ஸுவைபிய்யா ஆகிய இருவர் மூலம் பால்குடிச் சகோதரர்களாக இருந்தார்கள். (ஜாதுல் மஆது)
பால் குடிக்காலங்களில் ஹலீமா நபி (ஸல்) அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக் கண்டார். அதை அவரே சொல்லக் கேட்போம். ''நான் எனது கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம். நான் எனது வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை. எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்கான விடிவையும் அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண் கழுதை மிகுந்த பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும் சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத் தவிர என்னுடன் வந்த அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது நான் எனது கணவரிடம் ''அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அனாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்'' என்று கூறியதற்கு அவர் ''தாராளமாகச் செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்'' என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான் அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன்.
நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன் எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன் சகோதரராகிய (எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை. எனது கணவர் எங்களது கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம். காலையில் எனது கணவர்: 'ஹலீமாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்' என்றார். அதற்கு நான் 'அப்படித்தான் நானும் நம்புகிறேன்' என்றேன்.
பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும் அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை என்னுடன் வந்த குழுவினர் அனைவரின் கழுதைகளையும் முந்திக் கொண்டு சென்றது. அப்பெண்கள் என்னை நோக்கி ''அபூ துவைபின் மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களுடன் மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து வந்த கழுதைதானா இது?'' என்றனர். ''நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அதுதான் இது'' என்றேன். அவர்கள் ''நிச்சயமாக என்னவோ நேர்ந்துவிட்டது'' என்றனர்.
எங்களது ஊருக்குத் திரும்பினோம். அல்லாஹ்வின் பூமியில் எங்களது பகுதியைப் போன்றதொரு வறண்ட பூமியை நான் கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து திரும்பும். அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப் பால் கூட கறக்க முடியாது. அவர்களது ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள் சமூகத்தில் அனைவரும் தங்களது இடையர்களிடம் 'உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும் பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்!' என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப் போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன.
இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள் வரை அல்லாஹ்விடமிருந்து பல நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய குழந்தைகளைவிட மிக உறுதியாகவும் வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது. அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம் அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம் 'இந்த அருமைக் குழந்தை இன்னும் திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய் அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன்' என்று கூறினேன். எனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே ஒப்படைத்து விட்டார்.'' (இப்னு ஹிஷாம்)
நெஞ்சு திறக்கப்படுதல்
இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஸஅத் கிளையாரிடம் அழைத்து வரப்பட்டார்கள். சில மாதங்களுக்குப் பின் அவர்களது நெஞ்சு திறக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றதென இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (மற்ற வரலாற்றாசியர்கள் நபி (ஸல்) அவர்களின் நான்காவது வயதில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பர்.)
அந்த நிகழ்ச்சி குறித்து அனஸ் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகைத் தந்து நபி (ஸல்) அவர்களை மயக்குமுறச் செய்து, நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு 'இது உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும்' என்று கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்து விட்டார். இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம் ஓடோடி வந்து ''முஹம்மது கொலை செய்யப்பட்டார்'' என்றனர். நபி (ஸல்) அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம் மாறிக் காட்சியளித்தார்.
அனஸ் (ரழி) கூறினார்கள்: ''நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
பாசமிகு தாயாரிடம்
இந்நிகழ்ச்சியால் அதிர்ந்துபோன ஹலீமா நபி (ஸல்) அவர்களை அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள்.
ஆமினா, மதீனாவில் மரணமடைந்த தனது அன்புக் கணவன் கப்ரைக் கண்டுவர விரும்பினார். தனது குழந்தை முஹம்மது, ஊழியப் பெண் உம்மு அய்மன் மற்றும் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோருடன் மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு தங்கிவிட்டு மக்காவுக்கே மீண்டும் பயணமானார். வழியில் ஆமினா நோய் வாய்ப்பட்டார். பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே 'அப்வா' என்ற இடத்தில் மரணமடைந்தார். (இப்னு ஹிஷாம்)
பரிவுமிக்க பாட்டனாரிடம்
நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப் மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர் அனாதையான தன் பேரர் மீது அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன் தந்தையை இழந்த சோகம் ஒரு புறம் வருத்திக்கொண்டிருக்க, தற்போது தாயையும் இழந்து அந்த சோகம் இரட்டிப்பாகி விட்டது. தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை தனிமையில் விட்டுவிடாமல் எல்லா நிலையிலும் தன்னுடன் வைத்து தனது பிள்ளைகள் அனைவரையும்விட அவருக்கு முன்னுரிமை அளித்து வந்தார்.
புனித கஅபாவின் நிழலில் அப்துல் முத்தலிபுக்கென ஓர் விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள். சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றிவிட முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப் பார்த்துவிட்டால் ''எனது அருமைப் பேரரை விட்டுவிடுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கென ஒரு தனித் தன்மை இருக்கிறது'' என்று கூறி, தன்னுடன் விரிப்பில் அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார். அவரது செயல்களையும் அசைவுகளையும் கண்டு களிப்படைவார். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களுக்கு 8 ஆண்டு இரண்டு மாதங்கள் பத்து நாள்கள் ஆனபோது பாட்டனார் அப்துல் முத்தலிப் மக்காவில் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை அவரது தந்தை அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த சகோதரர் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென விரும்பினார்.(இப்னு ஹிஷாம்)
பிரியமான பெரிய தந்தையிடம்
சகோதரன் மகனைப் பராமரிக்கும் பொறுப்பை அபூதாலிப் மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றினார். தனது பிள்ளைகளில் ஒருவராக அவரை ஆக்கிக் கொண்டார். அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும் கண்ணியமும் அளித்து வந்தார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பாதுகாத்து அரவணைத்தார். நபி (ஸல்) அவர்களுக்காகவே பிறரின் நட்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். இதன் விவரங்களை உரிய இடங்களில் காண்போம்.
மாநபிக்காக மழைபொழிதல்
ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில் நான் மக்கா சென்றேன். ''கணவாய்கள் வரண்டுவிட்டன. பிள்ளைக்குட்டிகள் வாடுகின்றனர். வாருங்கள்! மழை வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள்' என்று குறைஷியர்கள் அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர் அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கி அவரின் முதுகை சேர்த்துவைத்து பிரார்த்தித்தார். அபூதாலிபின் தோள் புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார். மேகமற்றுக் கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்து மேகங்கள் ஒன்று திரண்டன. பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கூறினார்.
அவர் அழகரல்லவோ
அவரை முன்னிறுத்தி நாங்கள் மழை வேண்டுவோம்;
அவர் அநாதைகளின் அரணல்லவோ
கைம்பெண்களின் காவலரல்லவோ. (மஜ்மவுஜ்ஜவாயித்)
துறவி பஹீரா
நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக 'ஷாம்' தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு 'பஹீரா' என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் 'ஜர்ஜீஸ்' என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ''இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்'' என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ''இது எப்படி உமக்குத் தெரியும்?'' என வினவினர். அவர் ''நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கிணங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ)
ஃபிஜார் போர்
நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் கினானாவும் கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு 'ஹர்புல் ஃபிஜார்' என்று சொல்லப்படும். அதன் காரணமாவது: கினானாவைச் சேர்ந்த 'பர்ராழ்' என்பவன் கைஸ் அய்லானைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டான். இந்தச் செய்தி உக்காள் சந்தையில் பரவியது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் சண்டையிட்டனர். குறைஷ் மற்றும் பனூ கினானாவுக்கு 'ஹர்ப் இப்னு உமய்யா' தலைமை தாங்கினார். போரின் ஆரம்பத்தில் கைஸ் தரப்பினருக்கு வெற்றி கிட்டியது. ஆனால், நடுப் பகலுக்குப்பின் நிலைமை கைஸுக்கு எதிராகத் திரும்பியது. இந்நிலையில் சில குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பினர். எந்தத் தரப்பில் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதோ அந்த அதிக எண்ணிக்கைக்கு மட்டும் நஷ்டஈடு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து சமாதானமாயினர். இந்தப் போர் புனித மாதத்தில் ஏற்பட்டு அதன் கண்ணியத்தைக் குலைத்து விட்டதால் அதற்கு 'பாவப்போர்' எனப் பெயரிட்டனர். நபி (ஸல்) அவர்கள் இதில் கலந்துகொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பெடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)
சிறப்புமிகு ஒப்பந்தம்
மேற்கூறப்பட்ட போருக்குப்பின் சங்கைமிக்க மாதமான துல் கஃதாவில் 'ஹில்ஃபுல் ஃபுழூல்' எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சேர்ந்த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வயது முதிர்ந்தவராகவும் மதிப்புமிக்கவராகவும் இருந்ததால் அவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள். இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன். (இப்னு ஹிஷாம்)
இந்த உடன்படிக்கையின் அடிப்படைத் தத்துவம் அறியாமைக் காலத்தில் இனவெறியினால் ஏற்பட்ட அநீதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இவ்வுடன்படிக்கை ஏற்படக் காரணம்: ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் ''இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்'' என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர். (தபகாத் இப்னு ஸஅது)
உழைக்கும் காலம்
நபி (ஸல்) அவர்கள் வாலிபத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட தொழில் எதையும் செய்து வரவில்லை. எனினும், ஸஅது கிளையாரின் ஆட்டு மந்தையை மேய்த்ததாக பல அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது. அவ்வாறே மக்காவாசிகளின் ஆடுகளையும் மேய்த்து கூலியாக தானியங்களைப் பெற்று வந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். 'என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!'' எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள். (ஸுனன் அபூதாவூது, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மது)
நபி (ஸல்) அவர்கள் 25 வது வயதில் கதீஜா அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் சென்றார்கள்.
இதுபற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: கதீஜா பின்த் குவைலித் சிறப்பும் வளமும் மிக்க வியாபாரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். தனது வியாபாரத்திற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதில் கிடைக்கும் இலாபத்தின் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருவார். நபி (ஸல்) அவர்களின் வாய்மை, நம்பகத்தன்மை போன்ற நற்பண்புகளைப் பற்றி அன்னார் கேள்விப்பட்டபோது அவர்களை வரவழைத்து ''எனது அடிமை மய்ஸராவுடன் வணிகப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஷாமில் வணிகம் செய்து வரவேண்டும். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை உங்களுக்குத் தருகிறேன்'' என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
கதீஜாவை மணம் புரிதல்
நபி (ஸல்) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெரும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள். கதீஜா தங்களது பொருளில் இதற்குமுன் கண்டிராத பெரும் வளர்ச்சியைக் கண்டார். மேலும் மய்ஸராவும், தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை கதீஜாவிடம் விவரித்தார். கணவரை இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மணமுடிக்க விரும்பியபோது அதனை மறுத்து வந்த கதீஜா தனக்கு ஏற்ற கணவர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் என முடிவெடுத்தார். தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார். நஃபீஸா நபி (ஸல்) அவர்களிடம் கதீஜாவின் விருப்பத்தைக் கூற நபி (ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தனது தந்தையின் சகோதரர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். அவர்கள் கதீஜாவின் தந்தையுடைய சகோதரரிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தார்கள். ஷாமிலிருந்து திரும்பிய மூன்றாம் மாதத்தில் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஹாஷிம் கிளையாரும் முழர் கோத்திரத்தின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள். அப்போது கதீஜா (ரழி) அவர்களுக்கு வயது 40, நபி (ஸல்) அவர்களின் வயதோ 25! அவர் அறிவாலும் செல்வத்தாலும் குடும்பத்தாலும் மிகச்சிறந்த பெண்மணியாக விளங்கினார். நபி (ஸல்) அவர்களுக்கு இவரே முதல் மனைவி. இவர் மரணித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்ணை மணமுடித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே! முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு 'அபுல் காஸிம்' என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது. பிறகு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், ஃபாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். இந்த அப்துல்லாஹ்வுக்கு தய்யிப், தார் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர். பெண் மக்கள் அனைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள். ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா மரணமடைந்தார். (இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)
கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்
நபி (ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால் கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். அதனை ஹலாலான (தூய்மையான) வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும்; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இந்நிலையில் பழைய கட்டடத்தை எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர். வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து ''அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச் செய்கிறேன்'' என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை இடித்தார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம் தெளிந்து, அவருடன் இணைந்து இடித்தனர்.
இறுதியாக, இப்றாஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது. பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் 'பாகூம்' என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்' இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், ''இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் ''இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.
குறைஷியரிடம் ஹலாலான (தூய்மையான) செல்வம் குறைவாக இருந்ததால் வடபுறத்தில் ஆறு முழங்கள் அளவு விட்டுவிட்டு கஅபாவை கட்டி விட்டார்கள். அந்த இடத்துக்கு 'ஹதீம்' என்றும் 'ஹஜர்' என்றும் கூறப்படுகிறது. தாங்கள் விரும்பாத எவரும் கஅபாவினுள் நுழையக் கூடாது என்பதற்காக கஅபாவின் வாயிலை உயரத்தில் அமைத்தார்கள். கஅபாவை 15 முழம் வரை உயர்த்தியவுடன் ஆறு தூண்களை நிறுவி அதற்கு முகடு அமைத்தார்கள்.
இவ்வமைப்பின்படி கஅபா ஏறக்குறைய சதுரமாக அமையப் பெற்றது. அதன் உயரம் 15 மீட்டர் ஆகும். ஹஜ்ருல் அஸ்வத் உள்ள பகுதி மற்றும் அதன் எதிர்ப்புற பகுதியின் அகலம் 10 மீட்டர் ஆகும். தவாஃப் செய்யும் இடத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் 1.5 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கஅபாவின் வாசலுள்ள பகுதியும் அதன் பின்பகுதியும் 12 மீட்டர் அகலமாகும். கஅபாவின் வாசல் தரையிலிருந்து 2 மீட்டர் உயரத்திலிருக்கிறது. கஅபாவின் அஸ்திவாரத்தைச் சுற்றி சிறிய முட்டுச்சுவர் கட்டப்பட்டது. அதன் உயரம் 25. செ.மீ. (கால் மீட்டர்) அதன் அகலம் 30 செ.மீ. இதற்கு 'ஷாதர்வான்' என்று சொல்லப்படும். இதுவும் கஅபாவைச் சேர்ந்த பகுதிதான். எனினும், குறைஷியர்கள் அதைத் தவிர்த்து உள்ளடக்கிக் கட்டி விட்டனர். (தபரீ, இப்னு ஹிஷாம்)
நபித்துவத்திற்கு முன் - ஒரு பார்வை
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே எல்லா மக்களிடமுள்ள நற்பண்புகள் அனைத்தையும் தனக்குள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தார்கள். நேரிய சிந்தனை, ஆழ்ந்த பார்வை, நுண்ணறிவு அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார்கள். நீண்ட மௌனத்தால் ஆழ்ந்து சிந்தித்து உண்மையை அறிவார்கள். தங்களது முதிர்ச்சியான அறிவாலும் தூய இயற்கை குணத்தாலும் மனித வாழ்வின் பகுதிகளையும் மக்களின் செயல்களையும் சமூகத்தின் நிலைகளையும் தெளிவாக ஆராய்ந்து, மக்களிடம் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களை வெறுத்து ஒதுக்கினார்கள். மக்களுடன் மதி நுட்பத்துடன் பழகுவார்கள். அவர்கள் நன்மையானவற்றில் ஈடுபடும்போது தானும் கலந்து கொள்வார்கள். தீமையானவற்றில் ஈடுபட்டால் அவர்களை விட்டும் தனித்து விடுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதில்லை. சிலைகளுக்குப் பலியிடப்பட்டதை உண்டதில்லை. சிலைகளுக்கான விழாக்களில் கலந்து கொண்டதில்லை. சிலைகளை முற்றிலுமாக வெறுத்தார்கள். லாத், உஜ்ஜாவைக் கொண்டு சத்தியம் செய்வதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
இறைவனின் பாதுகாப்பு அவர்களைச் சூழ்ந்திருந்தது. உலக இன்பங்களின் மீது ஆசை தோன்றும்போதும் தவறான அறியாமைக்கால பழக்க வழக்கங்களின்மீது ஆவல் ஏற்படும்போதும் அவற்றிலிருந்து அல்லாஹ்வின் அருளால் தடுக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அறியாமைக்கால செயலை செய்ய வேண்டுமென நான் இருமுறை மட்டுமே விரும்பினேன். அந்த இருமுறையும் அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான். பிறகு அல்லாஹ் தூதுத்துவத்தை எனக்கு அருளும் வரை அந்த எண்ணம் ஏற்பட்டதே இல்லை. ஓர் இரவு மக்காவின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவரிடம் என் ஆடுகளை நீ பார்த்துக் கொள். மக்காவில் வாலிபர்கள் இராக்கதை பேசுவது போன்று நானும் பேசி வருகிறேன் என்று நான் கூறினேன். அவர் ஒப்புக் கொண்டார். நான் வெளியேறி மக்காவினுள் நுழைந்து அதில் முதல் வீட்டைக் கடந்தேன். அங்கு இசை சப்தத்தைக் கேட்டு அது என்னவென்று விசாரித்தேன். அதற்கு மக்கள் இன்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இன்று முதலிரவு என்று கூறினார்கள். நான் அதைக்கேட்க அமர்ந்தவுடன் நான் செவியேற்காத வகையில் அல்லாஹ் என்னைத் தடுத்து தூங்கச் செய்துவிட்டான். இறுதியில் சூரிய வெப்பம்தான் என்னை எழுப்பியது. எனது தோழரிடம் நான் சென்றபோது அவர் என்ன நடந்ததென விசாரிக்க நடந்ததைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் எந்தவொரு தீய செயலையும் செய்ய எண்ணியதேயில்லை.''(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிப்பதாவது: கஅபாவை புதுப்பிக்கும் பணியின்போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸும் கல்லை எடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள். அப்போது அப்பாஸ் நபி (ஸல்) அவர்களிடம் உங்களது கீழாடையைக் கழற்றி புஜத்தில் வைத்துக் கொண்டால் கற்கள் அழுத்தாமலிருக்கும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தனது ஆடையைக் கழற்றி (புஜத்தில் வைத்தவுடன்) கண்கள் மேலே சொருக மயக்கமடைந்து விட்டார்கள். பிறகு அவர்கள் தெளிவடைந்து எனது கீழாடை! எனது கீழாடை! என்று கூற, நபி (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் ஆடையை உடுத்தி விட்டார்கள். அதற்குப்பின் அவர்களது மறைவிடத்தை எவரும் பார்த்ததில்லை. (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரிலேயே மிக இனிய குணம், உயர் பண்பு, சிறந்த ஒழுக்கம், மனிதாபிமானம் உடையவர்களாகவும், மேலும், மென்மையானவராகவும், நன்மை செய்யக்கூடியவராகவும், அமானிதம் பேணி வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள். இந்த உயர் பண்புகளைக் கண்ட அவர்களது சமூகத்தார்கள் அவர்களை 'அல் அமீன்' நம்பிக்கையாளர் என்று அழைத்தனர். அவர்கள் பிறர் சிரமங்களை தானே தாங்கிக் கொள்வார்கள்; இல்லாதோருக்கும் எளியோருக்கும் கொடுப்பார்கள்; விருந்தினரை உபசரிப்பார்கள் சிரமத்தில் தவிப்பவர்களுக்கு உதவுவார்கள். இவ்வாறுதான் அன்னை கதீஜா (ரழி), நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)
No comments:
Post a Comment