இரண்டாவது கட்டம் - புதிய சகாப்தம்
புதிய சகாப்தம்
ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
இஸ்லாமிற்குக் குறைஷிகள்தான் முதல் எதிரி மட்டுமின்றி. அதற்குப் பெரும் தொல்லை தந்து வந்த வம்பர்களாகவும் இருந்தனர். இவர்கள் முஸ்லிம்களுடன் போர் புரிவதிலிருந்து விலகி சமாதானம் மற்றும் அமைதியின் பக்கம் திரும்பி விட்டதால் இஸ்லாமின் மாபெரும் மூன்று எதிரிக் கூட்டங்களின் வலிமை வாய்ந்த ஒரு பகுதி ஒடிந்து விட்டது.
அதாவது குறைஷிகள், கத்ஃபான் கிளையினர், யூதர்கள் ஆகிய இம்மூன்று கூட்டத்தினர் அரேபிய தீபகற்பத்தில் சிலை வழிபாட்டுக்கும், அதில் ஈடுபடுபவர்களுக்கும் தலைவர்களாகவும் அவர்களை வழி நடத்துபவர்களாகவும் இருந்தனர். எனவே, குறைஷிகள் பணிந்து விட்டதால் அரேபிய தீபகற்பத்திலுள்ள சிலை வணங்குபவர்களின் உணர்ச்சிகளும் எதிர்ப்புகளும் பெருமளவு மழுங்கி விட்டன. ஆகவேதான், இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கத்ஃபான் கிளையினர் பெரிய அளவிற்கு சண்டையில் ஈடுபடவில்லை. யூதர்களின் தூண்டுதலினால்தான் அவர்கள் சிலர் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டார்களே தவிர தாங்களாகவே அதில் ஈடுபட்டதில்லை.
மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் யூத விஷமிகள் தங்களின் சதித்திட்டங்களைத் தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் கைபரைக் கேந்திரமாக ஆக்கிக் கொண்டு தங்களின் நாசவேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். மதீனாவைச் சுற்றி பல இடங்களில் பரவியிருந்த கிராம அரபிகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்காக அல்லது அவர்களுக்குச் சேதம் உண்டாக்குவதற்காக பல இரகசிய சதித்திட்டங்களைத் தீட்டினர். இதனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எடுத்த முதல் கட்ட நடவடிக்கை, இந்த யூதக் கேந்திரங்களின் மீது தீர்க்கமான போரைத் தொடுப்பதாகும்.
இந்தச் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின் தொடங்கிய இக்காலகட்டத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், அதை மக்கள் முன் வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவில் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும் முயற்சி செய்து போருக்குக் காட்டிய ஆர்வத்தை விட பல மடங்கு ஆர்வத்தை இப்பணியில் ஆர்வம் காட்டினர். ஆகவே, இக்காலக் கட்டத்தை நாம் இரண்டு வகையாக பிரிக்கின்றோம்.
1) அழைப்புப் பணியில் ஆர்வம் காட்டுதல் - அரசர்கள், கவர்னர்களுக்கு கடிதங்கள் எழுதுதல்.
2) போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
அரசர்கள், கவர்னர்களுடன் நபியவர்கள் கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றி முதலில் கூற விரும்புகிறோம். ஏனெனில், இஸ்லாமிய அழைப்புப் பணிதான் அனைத்திலும் முக்கியமான அடிப்படை நோக்கமாகும். முஸ்லிம்கள் இதுநாள் வரை அனுபவித்தத் துன்பங்கள், சோதனைகள், சந்தித்த போர்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒன்று மட்டுமே அடிப்படை நோக்கமாக இருந்தது.
அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்
நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.
நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ''முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் 'முஹம்மது ரஸூலுல்லாஹ்'என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வரியிலும், ரஸூல் என்று அடுத்த வரியிலும், அல்லாஹ் என்று அதற்கடுத்த வரியிலும் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூ (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:
1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்
இந்த நஜ்ஜாஷியின் பெயர் 'அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்' ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா ழம் (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை எழுதி அனுப்பினார்கள். இமாம் தப்ரீ அக்கடிதத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பற்றி கூறியிருக்கிறார்கள். அந்த வாசகங்களை ஆழமாக நாம் ஆராய்ந்து பார்க்கும் போது அக்கடிதம் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) எழுதிய கடிதமாக இருக்காது. மாறாக, மக்காவிலிருக்கும் போது, ஜஅஃபரும் மற்ற தோழர்களும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்தபோது அவர்களுடன் கொடுத்தனுப்பிய கடிதமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், அக்கடிதத்தின் இறுதியில் வரும் வாசகத்தில் ''நான் உங்களிடம் எனது தந்தையின் சகோதரன் மகன் ஜஅஃபரை அனுப்பி இருக்கிறேன். அவருடன் முஸ்லிம்களில் ஒரு குழுவும் வருகிறது. அவர் உங்களிடம் வந்தால் அவரையும் அக்குழுவையும் விருந்தாளியாக கவனித்துக் கொள்ளுங்கள். அநியாயம் செய்வதை விட்டுவிடுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கடிதம் மக்காவில் இருக்கும் போது எழுதப்பட்டது என்று விளங்க முடிகிறது.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) வாயிலாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் 'அஸ்ஹம்' என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது. நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை யாருமில்லை. அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாமை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.
''வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் 'முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்து விடுங்கள்.''(அல்குர்ஆன் 3:64)
நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும். (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)
மாபெரும் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ்விற்கு சில காலத்திற்கு முன் ஒரு கடிதம் கிடைத்தது. அக்கடிதம் இமாம் இப்னு கய்யூம் (ரஹ்) குறிப்பிட்டிருக்கும் கடிதத்திற்கு முற்றிலும் ஒப்பாக இருக்கிறது. ஆனால். ஒரே ஒரு வார்த்தைதான் வித்தியாசமாக இருந்தது. மேலும், டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் அக்கடித்தை ஆராய்ச்சி செய்வதில் தனது பெரும் முயற்சியை செலவழித்ததுடன், அதிலுள்ள விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கு பல அதிநவீன கருவிகளையும் பயன்படுத்தினார். அக்கடிதத்தைப் பற்றி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன்தான் அரசன். அவன் மிகத் தூய்மையானவன். ஈடேற்றம் வழங்குபவன். பாதுகாவலன். கண்காணிப்பவன். நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரும், அவனது வார்த்தையுமாக இருக்கிறார். அவன்தான் அவ்வார்த்தையைப் பரிசுத்தமான பத்தினி மர்யமுக்கு அனுப்பினான். அவர் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரிலிருந்தும், அவனுடைய ஊதுதலில் இருந்தும் உண்டான ஈஸாவை தனது கர்ப்பத்தில் சுமந்தார். எவ்வாறு அல்லாஹ் ஆதமை தனது கையினால் விஷேசமாக படைத்தானோ அவ்வாறே ஈஸாவையும் படைத்தான்.
தனித்தவனான துணையற்ற அல்லாஹ்வின் பக்கம் உன்னை அழைக்கிறேன். அவனுக்கு வழிப்படுவதிலும் வணங்குவதிலும் நீ எனக்கு இசைந்து என்னை நீ பின்பற்ற வேண்டும் என்று நான் உன்னை அழைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். மேலும், உம்மையும் உமது படையினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நான் நிச்சயமாக எடுத்துரைத்து விட்டேன். உனக்கு உபதேசம் செய்து விட்டேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொள். நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.''
(ஜாதுல் மஆது, ''ரஸூலே அக்ரம் கீ ஸியாஸி ஜிந்தகி - டாக்டர் ஹமீதுல்லாஹ்'')
இக்கடிதத்தை டாக்டர் அவர்கள் குறிப்பிட்டதற்குப் பின் இதுதான் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நஜ்ஜாஷி மன்னருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய வாசகம் என்று உறுதியுடன் கூறுகிறார்கள். ஆனால், நாம் கூறுவது என்னவெனில், ஆதாரங்களை ஆராய்ந்த பின் இது நபி (ஸல்) அவர்களின் கடிதம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்புதான் எழுதப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மாறாக, இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி அறிவிக்கும் கடிதமே ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நபி (ஸல்) கிறிஸ்தவ அரசர்களுக்கும், கவர்னர்களுக்கும் எழுதியனுப்பிய கடிதங்களுக்கு ஒப்பாக இருக்கிறது. ஏனெனில், பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு நபி (ஸல்) எழுதும் கடிதத்தில் ''வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக!... (அல்குர்ஆன் 3:64)
என்ற வசனத்தை குறிப்பிடுவார்கள். அந்த வசனம் இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் கடிதத்தில்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், அக்கடிதத்தில் நஜ்ஜாஷி மன்னன் பெயர் 'அஸ்ஹமா' என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹமீதுல்லாஹ் குறிப்பிட்ட கடிதத்தைப் பற்றி ஆராயும்போது, அஸ்ஹமாவின் மரணத்திற்குப் பின் அவருடைய பிரதிநிதியாக பதவியேற்றவருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய கடிதமாக இருக்கலாம் என்பது எனது கருத்து. எனவேதான், நபியவர்கள் இக்கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லை.
இவ்வாறு நான் விமர்சிப்பதற்கு வெளிப்படையான, உறுதியான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. என்றாலும் இக்கடிதங்களையும் அதன் கருத்துகளையும் ஆராயும் போது நான் கூறும் இவ்விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில், டாக்டர் ஹமீதுல்லாஹ் ''இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கடிதத்தை நபியவர்கள் நஜ்ஜாஷி மன்னர் அஸ்ஹமா மரணித்த பின் அவரது பிரதிநிதிக்கு எழுதினார்கள்'' என்று கூறுகிறார். ஆனால், இக்கடிதத்தில் அஸ்ஹமாவின் பெயர் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவரிடமுள்ள கடிதத்திலோ அப்பெயர் கூறப்படவில்லை. அல்லாஹ்தான் உண்மையாக நன்கறிந்தவன்.
நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.
அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர், உண்மைப்படுத்தப்பட்டவர், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன். நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.''
ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா ழம்யுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)
தபூக் போர் நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த தினத்திலேயே அவரின் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அவருக்குப் பின் மற்றொரு அரசர் அவரது அரியணையில் அமர்ந்தார். அவருக்கும் நபி (ஸல்) மற்றொரு கடிதம் எழுதினார்கள். ஆனால், அவர் இஸ்லாமைத் தழுவினாரா? இல்லையா? என்பது சரிவரத் தெரியவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)
2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்
மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தரிய்யா (அலெக்ஸாண்டிரியா)வின் மன்னரான 'முகவ்கிஸ்' என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
அக்கடிதத்தில்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.
நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.
(''வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.)(அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)
இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு செய்தார்கள். ஹாதிப் (ரழி) அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ''நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான். அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும், பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர் உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!''
இதைக் கேட்ட முகவ்கிஸ் ''நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள் அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு விடுவோம்'' என்று கூறினார். அப்போது ஹாதிப் (ரழி) அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:
நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின் தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும். நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன் நட்பு கொண்டனர்.
சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி நபி மூஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள் தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும் போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள். எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்) ஈஸாவின் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும் உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.''
இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், ''இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்'' என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார். பின்பு, நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம் கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும், நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன். நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.''
இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் 'மாயா', மற்றொருவர் 'சீரீன்'. கோவேறு கழுதையின் பெயர் 'துல்துல்' ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா (ரழி) அவர்களின் காலம் வரை துல்துல் உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது)
மாயாவை நபி (ஸல்) தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு 'இப்றாஹீம்' என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி (ஸல்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) என்ற அன்சாரி தோழருக்கு வழங்கினார்கள்.
3) பாரசீக மன்னருக்குக் கடிதம்
நபி (ஸல்) அவர்கள் பாரசீக மன்னர் 'கிஸ்ரா'விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை யாருமில்லை. அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறை நிராகரிப்பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.''
இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு 'அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி' என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் ''எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?'' என்று கூறினான்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது ''அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்'' என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் ''ஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்'' என்று குறிப்பிட்டான். இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் ''இக்கடிதம் கிடைத்தவுடன் நபியவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தான்.
வந்த இருவரில் ஒருவன் பெயர் கஹ்ர்மானா பானவய். இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.
இவ்விருவரும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவரில் ஒருவன் நபியவர்களிடம் ''அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்'' என்று கூறியதுடன் நபியவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி (ஸல்) அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.
இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசரின் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வை தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள்.(ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)
மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் ''நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?'' என்று கூறினர். அதற்கு நபியவர்கள் ''ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.'' என்றும் ''எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்'' என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.
அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வையின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: ''நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே'' என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)
4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்
நபியவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) 'ஹிர்கலுக்கு' எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி (ரஹ்) ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ஹிர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய். இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான். நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.
வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.(அல்குர்ஆன் 3:64)
இக்கடிதத்தை எடுத்துச் செல்ல திஹ்யா இப்னு கலீஃபா அல்கல்பி என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். அவரிடம் ''நீங்கள் இதை புஸ்ராவின் கவர்னரிடம் கொடுங்கள், கவர்னர் அக்கடிதத்தை மன்னர் கைஸரிடம் கொடுக்கட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இது தொடர்பாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:
அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)
அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.
மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?
அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.
மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.
(தனது மொழிபெயர்ப்பாளரிடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.
அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.
மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?
அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?''.
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?
அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.
மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)
மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?
அபூஸுஃப்யான்: ஆம்!
மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?
அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார். சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.
மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.
அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளரிடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:
உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ''அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'' என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார். அடுத்து, உன்னிடம் ''இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'' எனக் கேட்டேன், ''இல்லை'' என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.
அடுத்து உன்னிடம் ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோரின் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். அடுத்து உன்னிடம் ''(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா''? என்று உன்னிடம் கேட்டேன் ''அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'' என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.
அடுத்து உன்னிடம் ''அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'' என்று கேட்டேன். ''அதிகரிக்கின்றனர்'' என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து உன்னிடம் ''அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'' என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள். அடுத்து உன்னிடம் ''அவர் மோசடி செய்ததுண்டா''? என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.
அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ''அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'' என்று கூறினாய். ''நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'' என்றார். பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். முன்னாள் நாம் கண்ட அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.
அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ''எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின்' பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.
அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.
மேலும், நபி (ஸல்) அவர்களின் தூதுவர் திஹ்யாவிற்கு மன்னர் கைஸர் பெரும் செல்வத்தையும் உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து கௌரவித்தார். அந்தளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதம் அவரிடம் மாறுதலை ஏற்படுத்தியது. திஹ்யா (ரழி) திரும்ப மதீனா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் 'ஹிஸ்மா' என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் அவரின் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்து கொண்டனர். பின்பு மதீனா வந்து சேர்ந்த திஹ்யா (தனது இல்லம் செல்வதற்கு முன்) நேராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். உடனே நபியவர்கள் 500 வீரர்களை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் ஹிஸ்மாவை நோக்கி அனுப்பினார்கள். இந்த 'ஹிஸ்மா' என்பது வாதில் குர்ராவை அடுத்துள்ள ஊராகும். அங்கு சென்ற ஜைது (ரழி) அவர்கள் ஜுதாம் கிளையினரைத் தாக்கி அதிகமானவர்களைக் கொன்றார்கள். பின்பு அக்கிளையினரின் கால்நடைகளையும் பெண்களையும் அழைத்துக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தார்கள். அதில் 1000 ஒட்டகங்களும், 5000 ஆடுகளும், கைதிகளில் பெண்கள் சிறுவர்களென 100 பேர்களும் இருந்தனர்.
ஏற்கனவே ஜுதாம் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனவே, இக்கிளையினரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஜைது இப்னு ஃபாஆ நபி (ஸல்) அவர்களிடம் இவ்வழக்கைக் கொண்டு வந்தார். இவரும், இவரின் கிளையைச் சேர்ந்த மற்றும் சிலரும் இதற்கு முன்பே இஸ்லாமைத் தழுவியிருந்தனர். இவர்கள் தங்களது ஜுதாம் கிளையினர் திஹ்யாவை வழிப்பறி செய்த போது தங்களால் முடிந்தளவு திஹ்யாவைப் பாதுகாத்தனர். எனவே, நபியவர்கள் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜைது இப்னு ஹாரிஸா கொண்டு வந்திருந்த பொருட்களையும் கைதிகளையும் திரும்பக் கொடுத்து விட்டார்கள்.
போர்களைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியை ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அது தவறாகும். ஏனெனில், நபியவர்கள் கைஸர் மன்னருக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் கடிதம் அனுப்பினார்கள். எனவே, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் இச்சம்பவம் நடந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இப்னுல் கய்யூம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்
பஹ்ரைன் நாட்டு ஆளுநர் 'அல்முன்திர் இப்னு ஸாவி' என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி (ஸல்) கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ''அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாமால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எனது நாட்டில் மஜுஸிகளும் யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நடக்க வேண்டும்? என எனக்குக் கட்டளை பிறப்பியுங்கள்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நபி (ஸல்) அவர்களும் பின்வரும் பதில் எழுதியனுப்பினார்கள்.
''அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, முன்திர் இப்னு ஸாவிக்கு எழுதிக் கொள்வது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! உங்களுக்கு முன் நான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாயிருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பின் உங்களுக்கு நான் அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன். யாரொருவர் நன்மையை நாடுகிறாரோ அந்த நன்மையின் கூலி அவரையே சாரும். யார் நான் அனுப்பும் தூதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் கூறும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தவராவார். யார் அவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர் எனக்கு நன்மை செய்தவராவார். நான் அனுப்பிய தூதர்கள் உங்களைப் பற்றி நல்லதையே கூறினார்கள். நீங்கள் உங்களது கூட்டத்தினருக்குச் செய்த பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மாறும்போது அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அப்படியே கொடுத்து விடுங்கள். அவர்களில் குற்றமிழைத்திருந்தவர்களை நான் மன்னித்து விட்டேன். எனவே, நீங்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் நாம் உங்களை உங்களது பதவியிலிருந்து அகற்ற மாட்டோம். யார் தனது யூத அல்லது மஜூஸி மதத்தில் நிலையாக இருந்து விடுகிறாரோ அவர் ஜிஸ்யா (வரி) செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அதில் குறிப்பிட்டார்கள்.
6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்
இவர் பெயர் 'ஹவ்தா இப்னு அலீ' ஆகும். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.''
இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி (ஸல்) ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸலீத் (ரழி) இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர் ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் (ரழி) அவருக்கு அக்கடிதத்தைப் படித்துக் காட்டினார். அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில் ஒன்றை எழுதினார். அதில், ''நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது - பொதுவாக அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால் நான் உம்மைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறினார்.
இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து 'ஹஜர்' என்ற இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.
இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ''அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும் நாசமாகி விட்டது'' என்றார்கள். நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது 'ஹவ்தா' இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். அப்போது நபி (ஸல்), ''நிச்சயமாக யமாமாவில் தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்'' என்றார்கள். ஒருவர் ''அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''நீரும் உமது தோழர்களும்'' என்றார்கள். பின்னாளில் நபி (ஸல்) கூறியவாறே நடந்தது.
7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்
இவர் பெயர் 'ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி' ஆகும். நபி (ஸல்) இவருக்கு எழுதிய கடிதமாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு ''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபியவர்கள் மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப் பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும் கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.
8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்
நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் 'ஜைஃபர்' மற்றும் அவரது சகோதரர் 'அப்து'க்குக் கடிதம் அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:
''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''
இக்கடிதத்தை அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கொண்டு சென்றார். இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை குறித்து அம்ர் (ரழி) கூறுவதைக் கேட்போம்.
''நான் ஓமன் சென்று முதலில் அப்தை சந்தித்தேன். ஏனெனில், அப்துதான் இருவரில் சாந்த குணமும் புத்திசாலித்தனமும் உடையவர். நான் அவரிடம் சென்று, நான் அல்லாஹ்வின் தூதரால் உமக்கும் உமது சகோதரருக்கும் அனுப்பப்பட்ட தூதுவனாவேன்'' என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதற்கவர் ''எனது சகோதரர்தான் வயதிலும் ஆட்சியிலும் என்னைவிட முந்தியவர். எனவே, நான் உன்னை அவரிடம் அனுப்பி வைக்கிறேன். முதலில் அவர் உன் கடிதத்தை படிக்கட்டும் என்று கூறிவிட்டு ''நீ எதன் பக்கம் அழைக்கிறாய்?'' என்றார்.
அம்ர்: நான் உன்னை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் யாருமில்லை. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் விட்டு நீர் விலகிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை, அவனது தூதர் என்று நீர் சாட்சி கூறவேண்டும்.
அப்து: அம்ரே! நிச்சயமாக நீர் உனது கூட்டத்தினரின் தலைவருடைய மகன். உனது தந்தை என்ன செய்தார்? அவர் நாங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்தான்.
அம்ர்: முஹம்மதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மரணித்து விட்டார். அவர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியிருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். (ஆனால் நடக்கவில்லை) நானும் எனது தந்தையின் கொள்கையில்தான் இருந்தேன். இறுதியாக அல்லாஹ் எனக்கு இஸ்லாமிய நேர்வழியைக் காட்டினான்.
அப்து: நீர் எப்போது அவரைப் பின்பற்ற ஆரம்பித்தாய்?
அம்ர்: சமீபத்தில் தான்.
அப்து: நீர் எங்கிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டாய்?
அம்ர்: நான் நஜ்ஜாஷியிடமிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு விட்டார்.
அப்து: அப்போது அவரது கூட்டத்தினர் அவரின் ஆட்சிக்கு என்ன செய்தனர்?
அம்ர்: அவரது ஆட்சியை ஏற்று அவரைப் பின்பற்றியே நடந்தனர்.
அப்து: அவைத் தலைவர்களும் பாதிகளுமா அவரைப் பின்பற்றினார்கள்?
அம்ர்: ஆம்!
அப்து: அம்ரே! நீர் சொல்வதை நன்கு யோசித்துச் சொல். ஏனெனில் பொய்யை விட ஒருவனை கேவலப்படுத்தக் கூடிய குணம் எதுவும் இருக்க முடியாது.
அம்ர்: நான் பொய் கூறவுமில்லை. அதை எங்களின் மார்க்கம் ஆகுமானதாக கருதவுமில்லை.
அப்து: அநேகமாக ஹிர்கலுக்கு நஜ்ஜாஷி இஸ்லாமானது தெரிந்திருக்காது.
அம்ர்: இல்லை. ஹிர்கலுக்குத் தெரியும்.
அப்து: அது ஹிர்கலுக்கு தெரியுமென்பதை நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?
அம்ர்: அதாவது, நஜ்ஜாஷி இதற்கு முன் ஹிர்கலுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஆனால், அவர் எப்போது இஸ்லாமை ஏற்று முஹம்மதை உண்மைப்படுத்தினாரோ அப்போது ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிர்கல் என்னிடம் ஒரு திர்ஹமைக் கேட்டாலும் நான் அதைக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார். இவ்வார்த்தை ஹிர்கலுக்கு எட்டியபோது அவருடன் இருந்த அவரது சகோதரர் 'யன்னாக்' என்பவன் ''உமது அடிமை உமக்குக் கப்பம் கட்டாமல் உமது மார்க்கத்தை விட்டு விட்டு வேறொருவரின் புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு நீ விட்டு விடுகிறாயா?'' என்று கேட்டான். அதற்கு ஹிர்கல் ''ஒருவர் ஒரு மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும்போது அவரை நான் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது ஆட்சியின் மீது எனக்குப் பிரியமில்லையெனில் அவர் செய்தது போன்றுதான் நானும் செய்திருப்பேன்'' என்றார்.
அப்து: அம்ரே! நீர் என்ன சொல்கிறாய் என்பதை நன்கு யோசித்துக் கொள்!
அம்ர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் உண்மைதான் சொல்கிறேன்.
அப்து: அவர் எதை செய்யும்படி ஏவுகிறார்? எதை செய்வதிலிருந்து தடுக்கிறார்?
அம்ர்: அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். (பெற்றோருக்கு) உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்துமீறுவது, விபசாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்.
அப்து: ஆஹா! அவர் அழைக்கும் விஷயம் எவ்வளவு நல்லதாக இருக்கிறது. எனது சகோதரர் இவர் விஷயத்தில் எனது பேச்சை ஏற்றுக் கொண்டால் நாங்கள் இருவரும் நேரடியாக முஹம்மதிடம் வந்து அவரை நம்பிக்கை கொண்டு அவரை உண்மைப்படுத்துவோம். ஆனால், எனது சகோதரர் தனது பதவி மீது ஆசை கொண்டவர். அதை அவர் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட்டு அவருக்கு (கட்டுப்பட்டு) வாலாக இருப்பதை விரும்ப மாட்டார்.
அம்ர்: நிச்சயமாக உமது சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்ப கொடுத்து விடுவார்கள்.
அப்து: இது மிக அழகிய பண்பாடாயிற்றே. தர்மம் என்றால் என்ன?
அம்ர்: நபியவர்கள் பொருட்களில் இன்னின்னவற்றில் ஏழைவரி கொடுக்க வேண்டுமென கடமையாக்கி இருக்கிறார்கள். அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகங்களிலும்.
அப்து: அம்ரே! இலைதழைகளைத் தின்று தண்ணீரைக் குடித்து வாழும் எங்களது கால்நடைகளிலுமா (தர்மம்) ஏழைவரி வசூலிக்கப்படும்?
அம்ர்: ஆம்! அவ்வாறுதான்.
அப்து: எனது கூட்டத்தினர் உங்களை விட்டும் தூரமாக இருக்கிறார்கள். அவர்களிடம் படைபலமும் அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்று நான் எண்ணவில்லை.
அம்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் அப்துடைய வீட்டில் இவ்வாறு பல நாட்கள் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் தனது சகோதரரிடம் சென்று என்னிடம் கேட்ட செய்தியைக் கூறுவார். பின்பு ஒரு நாள் அப்தின் சகோதரர் என்னை அழைக்க நான் அவரிடம் சென்றேன். அவரது பணியாட்கள் எனது புஜத்தைப் பிடித்தவர்களாக நின்றனர். ''அவரை விட்டு விடுங்கள்'' என்று அவர் கூற, அவர்கள் என்னை விட்டு விட்டனர். அங்கிருந்த இருக்கையில் அமரச் சென்றபோது அந்தப் பணியாட்கள் என்னை உட்கார விடாமல் தடுத்தனர். சரி என, நான் அப்தை நோக்கினேன். அவர் என்னிடம் ''உமது தேவை என்னவென்று சொல்'' என்றார்.
நான் அப்தின் சகோதரரிடம் முத்திரையிடப்பட்ட கடிதத்தைக் கொடுத்தேன். அதை வாங்கி முத்திரையைப் பிரித்து இறுதி வரை படித்தார். பின்பு தனது சகோதரரிடம் கொடுக்கவே அவரும் அவ்வாறே படித்துப் பார்த்தார். ஆனால், அவரை விட அவன் சகோதரர் அப்துதான் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தார்.
பின்பு அப்தின் சகோதரர் என்னிடம் ''குறைஷிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று என்னிடம் சொல்ல மாட்டாயா?'' என்றார். அதற்கு நான் ''குறைஷிகள் அவரைப் பின்பற்றி விட்டனர். மார்க்கத்தில் ஆசையுடன் சிலர் அவரை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் வாளினால் அடக்கப்பட்டனர்'' என்றேன். அதற்கவர் ''அவருடன் யார் இருக்கிறார்கள்?'' என்றார். அப்போது நான் மக்களெல்லாம் இஸ்லாமை விரும்பியே ஏற்றிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த நேர்வழியாலும், பகுத்தறிவாலுமே இதுவரை தாங்கள் வழிகேட்டில்தான் இருந்து வந்ததை அறிந்து கொண்டனர்.
''இப்போதுள்ள இந்தச் சிரமமான நிலையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீர் இன்று இஸ்லாமை ஏற்று அவரைப் பின்பற்றவில்லை என்றால் நபி (ஸல்) அவர்களின் வீரர்கள் நாளை ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவார்கள். உமது ஆட்சியெல்லாம் அழியத்தான் போகிறது. எனவே, நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் அடைவாய்! நபி (ஸல்) உனது கூட்டத்தினருக்கு உன்னையே ஆளுநராக நியமிப்பார்கள். குதிரைகளும் வீரர்களும் உம்மிடம் வரமாட்டார்கள்'' என்று கூறினேன். அப்போது அவர் ''என்னை இன்று விட்டுவிடு நாளை என்னிடம் திரும்ப வா'' என்றார்.
இதற்குப் பின் நான் அப்திடம் சென்றேன். அவர் ''அம்ரே! எனது சகோதரருக்கு ஆட்சி மோகம் இல்லையென்றால் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார். மறுநாள் நான் அப்தின் சகோதரரிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டார். எனவே, நான் திரும்ப அப்திடம் வந்து ''என்னால் உனது சகோதரரிடம் செல்ல முடியவில்லை'' என்றேன். அவர் என்னை அவரின் சகோதரரிடம் நேரடியாக அனுப்பி வைத்தார்.
அவர் என்னிடம் ''நீ எனக்குக் கொடுத்த அழைப்பு விஷயமாக யோசித்துப் பார்த்தேன். எனது கையிலுள்ள ஆட்சியை வேறு எவருக்கேனும் நான் கொடுத்து விட்டால் அரபிகளில் மிக பலவீனனாக கருதப்படுவேன். மேலும், அவரது வீரர்கள் இங்கு வரை வந்து சேரவும் முடியாது. அப்படி வந்தாலும் இதுவரை அவர்கள் சந்தித்திராத போரைச் சந்திக்க நேரிடும்'' என்று கூறினான். இதனைக் கேட்டு ''சரி! நாளை நான் இங்கிருந்து புறப்படுகிறேன்'' என்றேன். நான் நாளை நிச்சயமாக புறப்பட்டு விடுவேன் என்பதை தெரிந்து கொண்டவுடன், அப்து தனது சகோதரரிடம் சென்று ''நம்மால் அவரை வெல்ல முடியாது. அவர் யாருக்கெல்லாம் தூதனுப்பினாரோ அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நாமும் அவரை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது'' என்று கூறினார்.
மறுநாள் விடிந்தபோது அப்தின் சகோதரர் என்னை வரவழைத்து அவரும் அவரது சகோதரரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொண்டார்கள். அங்கு ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். என்னை எதிர்த்தவர்களை அடக்க எனக்கு உதவியும் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முன் பின் தொடர்களை நாம் ஆராயும் போது இதுதான் இறுதியாக நபி (ஸல்) அனுப்பிய கடிதமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அநேகமாக மக்காவை வெற்றிக் கொண்ட பிறகு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்கு இக்கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை எடுத்து வைத்தார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர், சிலர் மறுத்து விட்டனர். என்றாலும் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் மார்க்கமும் அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது.
ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த போர் நடவடிக்கைகள்
தூகரத் (அ) காபா போர்
நபி (ஸல்) அவர்களின் சினையுள்ள ஒட்டகங்களை ஃபஸாரா கிளையினர் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை விரட்டிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) புறப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைபிய்யா ஒப்பந்தம், மேலும் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு நடந்த கைபர் போர் ஆகிய இரண்டிற்குமிடையில் நடந்த சம்பவம்தான் இந்த 'தூகரத்' என்பது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இப்போரைப் பற்றிக் குறிப்பிடும் போது ''கைபர் போருக்கு மூன்று மாதங்களுக்கு முன் இது நடைபெற்றது'' என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் முஸ்லிமும் (ரஹ்) 'ஸலமா இப்னு அக்வா'வின் மூலம் அறிவிக்கும் ஹதீஸின் ஆதாரத்துடன் இவ்வாறே குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதிகமான வரலாற்றாசிரியர்கள், ''இந்தப் போர் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்தது'' என்று குறிப்பிடுகிறார்கள். அது சரியல்ல! மாறாக, இமாம் புகாரியும் இமாம் முஸ்லிமும் கூறியிருப்பதுதான் மிகவும் ஆதாரப்பூர்வமானது.
இப்போரின் முக்கிய வீரரான ஸலமா இப்னு அக்வா (ரழி) அவர்கள் இப்போரைப் பற்றி கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குச் சொந்தமான சினை ஒட்டகங்களை மேய்ப்பதற்காக அதன் மேய்ப்பாளருடன் தனது அடிமை ரபாஹாவையும் அனுப்பி வைத்தார்கள். அபூ தல்ஹாவின் குதிரையில் நானும் ரபாஹாவுடன் சென்றேன். மறுநாள் காலையில் ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவன் அனைத்து ஒட்டகங்களையும் கொள்ளையடித்துக் கொண்டதுடன், அதனை மேய்த்துக் கொண்டிருந்தவரையும் கொன்று விட்டான்.
இதைப் பார்த்த நான் உடனே, ''இந்தக் குதிரையை அபூ தல்ஹாவிடம் கொடுத்து விட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவித்து விடு'' என்று ரபாஹாவிற்கு கூறினேன். பிறகு அங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறி, மதீனாவை நோக்கி 'யா ஸபாஹா'' என்று மூன்று முறை சப்தமிட்டேன். அதற்குப் பின் அங்கிருந்து கொள்ளையர்களை அம்பால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன்.
''இந்தா வாங்கிக்கொள்! நான் அக்வயின் மைந்தன்.
இன்று தாய்ப்பால் குடித்தோர் நாள்
அல்லது அற்பர்கள் ஓடும் நாள்.''
என்ற பாடியவாறே அவர்களை நான் தாக்கினேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அம்பெறிந்து கொண்டே அவர்களை தப்பித்து முன்னேறுவதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு வீரன் என்னை நோக்கி திரும்பி வந்ததால் நான் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு அம்பெய்து அவனைக் காயப்படுத்துவேன். இதே நிலையில் அவர்கள் மலைகளுக்கிடையில் உள்ள ஒரு நெருக்கமான பாதையில் சென்றார்கள். நான் மலையின் மீது ஏறி அவர்களைக் கற்களால் எறிந்தேன். ஒட்டகங்களை ஒவ்வொன்றாக அனைத்தையும் அவர்கள் விட்டுவிட்டார்கள். மேலும், நான் அவர்களைக் கற்களால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன். தங்களது சுமைகளின் பலுவை குறைப்பதற்காக முப்பதிற்கும் அதிகமான போர்வைகளையும் ஈட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடினார்கள்.
நான் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்த்து அவற்றின் மீது சில கற்களை வைத்தேன். பிறகு, நபியவர்களும் நபித்தோழர்களும் தெரிந்து கொள்வதற்காக அதில் அடையாளமிட்டு விட்டு, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒரு மலைக் கணவாயின் குறுகலான இடத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர். நான் ஒரு மலை உச்சியில் ஏறி நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் என்னைப் பார்த்து விட்டார்கள்.
அவர்களிலிருந்து நான்கு நபர்கள் என்னைப் பிடிக்க மலை மீதேறி வந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து ''உங்களுக்கு நான் யாரென்று தெரியுமா? நான்தான் ஸலமா இப்னு அக்வா. நான் உங்களில் ஒருவரைக் கொல்ல நாடினால் நிச்சயம் கொன்றே தீருவேன். ஆனால், உங்களில் எவராலும் என்னைக் கொல்ல முடியாது'' என்று கர்ஜித்தவுடன் அவர்கள் என்னருகே வர துணிவின்றி திரும்பி விட்டனர். இந்நிலையில் உதவிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்து நபி (ஸல்) அவர்களின் குதிரை வீரர்கள் தோட்டங்களுக்கிடையே பாய்ந்து வருவதை நான் மலையில் இருந்து பார்த்தேன். அவர்களில் முதலாவதாக அக்ரம், அவரைத் தொடர்ந்து அபூ கதாதா, அவரைத் தொடர்ந்து மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஆகியோர் வந்து சேர்ந்தனர்.
முதலில் வந்த அக்ரமுக்கும், எதிரி அப்துர் ரஹ்மானுக்கும் சண்டை மூண்டது. அப்துர் ரஹ்மான் அக்ரமை ஈட்டியால் குத்திக் கொன்று விட்டான். அதிவிரைவில் அங்கு வந்து சேர்ந்த அபூ கதாதா (ரழி), அப்துர் ரஹ்மானை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்.
சில வினாடிகளில் நடந்து முடிந்த இக்காட்சியைப் பார்த்து பயந்துபோன எதிரிகள் புறமுதுகுக் காட்டி ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடலானேன். இறுதியில் சூரியன் மறைவதற்கு சற்று முன் 'தூகரத்' என்ற தண்ணீருள்ள பள்ளத்தாக்கை நோக்கி தண்ணீர் குடிக்கச் சென்றனர். அவர்கள் மிக தாகித்தவர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க விடாமல் நான் அங்கிருந்தும் அவர்களை விரட்டினேன்.
இந்நிலையில் நபியவர்களும், அவர்களது படையும் இஷா நேரத்தில் என்னை வந்தடைந்தனர். நான் ''அல்லாஹ்வின் தூதரே! இக்கூட்டத்தினர் மிகுந்த தாகித்தவர்களாக இருக்கின்றனர். என்னுடன் 100 வீரர்களை அனுப்புங்கள். நான் அவர்களிடம் இருக்கும் குதிரைகள் அனைத்தையும் அவற்றின் கடிவாளங்களுடன் பறித்துக் கொண்டு, அவர்களையும் கழுத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்களிடம் நிறுத்துகிறேன்'' என்றேன். அதற்கு நபி (ஸல்), ''அக்வாவின் மகனே! நீ நமது உடைமைகளைப் பெற்றுக் கொண்டாய். எனவே, சற்று கருணைக் காட்டு'' என்று கூறிவிட்டு ''இப்போது அக்கூட்டத்தினர் கத்ஃபான் கிளையினரிடம் விருந்து சாப்பிடுகின்றனர்'' என்று கூறினார்கள்.
நபியவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றி விமர்சிக்கும் போது ''இன்றைய நமது குதிரை வீரர்களில் மிகச் சிறந்தவர் அபூ கதாதா, நமது காலாட்படைகளில் மிகச் சிறந்தவர் ஸலாமா'' என்று கூறினார்கள்.
நபியவர்கள் அக்கூட்டத்தனரிடமிருந்து கிடைத்ததைப் பங்கிடும்போது அதிலிருந்து காலாட்படையைச் சேர்ந்தவருக்குக் கொடுக்கும் பங்கு, குதிரைப் படையைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் பங்கு என இரண்டு பங்குகளை எனக்குக் கொடுத்தார்கள். நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும் போது தனது ஒட்டகை அழ்பா மீது தன்னுடன் என்னையும் அமரவைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்படும் முன், அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரின் கொடியை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள்.
கைபர் போர் (ஹிஜ்ரி 7, முஹர்ரம்)
'கைபர்' என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 80 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால், இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும், நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது.
போருக்கான காரணம்
மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே, மற்ற இரண்டு எதிரிகளின் கணக்கைத் தீர்க்க நாடினார்கள். அப்போதுதான் அப்பகுதியில் அமைதியும், சாந்தியும், சமாதானமும் முழுமையாக நிலவ முடியும். அத்துடன் இரத்தம் சிந்தும் போர்களிலிருந்து முஸ்லிம்கள் ஓய்வு பெற்று இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்க முடியும்.
சதித்திட்டங்கள் தீட்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கும் கைபர் நகரம் ஒரு மையமாக விளங்கியதால், நபி (ஸல்) அவர்கள் தங்களது கவனத்தை முதலாவதாக இதன் பக்கம் செலுத்தினார்கள்.
இந்நகரவாசிகள் மேற்கூறிய தன்மையுடையவர்கள் என்பதற்கு சில சான்றுகள்: (1) இவர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராகக் குறைஷிகளையும் மற்ற அரபிகளையும் ஒன்று திரட்டி அகழ் போர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். (2) முஸ்லிம்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும்படி குரைளா யூதர்களை தூண்டி விட்டவர்கள். (3) இஸ்லாமியச் சமூகத்திற்குள் தன்னை மறைத்து வாழும் புல்லுருவிகளான நயவஞ்சகர்களுடன் தொடர்பு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள். (4) முஸ்லிம்களின் மூன்றாவது எதிரியான கத்ஃபான் மற்றும் கிராம அரபிகளுடன் தொடர்பு கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விடுபவர்கள். (5) அவர்களும் முஸ்லிம்களுடன் போர் புரிவதற்கான பல தயாரிப்புகள் செய்து வந்தனர். (இவ்வாறு பல வழிகளில் முஸ்லிம்களைத் தொடர் சிரமங்களுக்கு ஆளாக்கியதுடன்) (6)நபியைக் கொலை செய்வதற்கு ஒரு திட்டத்தையும் தீட்டினர்.
ஆக, இவற்றைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் பல படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்கள்.
மேலும், இந்தச் சதிகாரர்களுக்கு தலையாக விளங்கும் ஸலாம் இப்னு அபுல் ஹுகைக், உஸைர் இப்னு ஜாம் ஆகியோரைக் கொல்வதும் நிர்பந்தமான ஒன்றாயிற்று.
ஆனால், இவை அனைத்தையும் விட பெரிய அளவில் யூதர்களைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. எனினும், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் யூதர்களை விட பலமும் பிடிவாதமும், வம்பும் விஷமமும் கொண்ட குறைஷிகள் முஸ்லிம்களை எதிர்த்து வந்தனர். தற்போது சமாதான உடன்படிக்கையால் குறைஷிகளின் எதிர்ப்பும், தாக்குதலும் முடிவுக்கு வந்துவிடவே, யூதர்களின் கணக்கைப் பார்ப்பதற்கான சரியான நேரம் முஸ்லிம்களுக்கு அமைந்தது.
கைபரை நோக்கி...
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: ''நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடித்துத் திரும்பியபின், மதீனாவில் துல்ஹஜ் மாதம் முழுதும், முஹர்ரம் மாதத்தில் சில நாட்களும் தங்கி விட்டு கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள்.''
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்: ''பின்வரும் இறைவசனத்தின் மூலம் அல்லாஹ் வாக்களித்த ஒன்றுதான் கைபர் போர்.
ஏராளமான பொருட்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். இதனை உங்களுக்கு அதி சீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (அல்குர்ஆன் 48:20)
இதில் கூறப்பட்டுள்ள 'இதனை' என்பது ஹுதைபிய்யா ஒப்பந்தத்தையும் 'ஏராளமான பொருட்களை' என்பது கைபரையும் குறிக்கிறது.
இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை
நயவஞ்சகர்களும் உறுதி குலைந்த நம்பிக்கையாளர்களும் ஹுதைபிய்யாவில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விட்டதால் அவர்கள் விஷயமாக அல்லாஹ் நபிக்கு பின்வருமாறு கட்டளை பிறப்பித்தான்.
(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில் (உங்களை நோக்கி) ''நாங்களும் உங்களைப் பின்பற்றி வர எங்களை (அனுமதித்து) விடுங்கள்'' என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி ''நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்'' என்றும் கூறுங்கள்! அதற்கவர்கள், (அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை') நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 48:15)
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் கைபருக்குப் புறப்பட்டபோது ''போர் புரிய ஆசையுள்ளவர்கள் மட்டும் புறப்பட வேண்டும்'' என அறிவித்தார்கள். ஆகவே, ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்த 1400 தோழர்கள் மட்டும் இப்போருக்காகப் புறப்பட்டனர்.
நபி (ஸல்) மதீனாவில் 'சிபா இப்னு உருஃபுதா அல்கிஃபாரி (ரழி) என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஆனால், ''நுமைலா இப்னு அப்துல்லாஹ் அல்லைஸி (ரழி) என்பவரை நபி (ஸல்) பிரதிநிதியாக நியமித்தார்கள்'' என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். எனினும் ஆய்வாளர்கள், முந்திய கூற்றையே மிகச் சரியானது என்கின்றனர்.
நபியவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்ட பின் அபூஹுரைரா (ரழி) இஸ்லாமை ஏற்று மதீனா வந்தார். சிபா உடன் ஸுப்ஹ் தொழுதுவிட்டு (இருவரும் நிலைமைகளை பரிமாறிக் கொண்டவுடன்) போருக்குச் செல்வதற்கான சாதனங்களை அபூ ஹுரைராவுக்கு சிபா (ரழி) தயார் செய்து கொடுத்தார்கள். அதற்குப் பின் அபூஹுரைரா (ரழி) அங்கிருந்து புறப்பட்டு நபியவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது கைபர் போர் முடிவுற்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் ஆலோசித்து அபூஹுரைராவிற்கும் அவருடன் வந்த தோழர்களுக்கும் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள்.
நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
மதீனாவிலிருந்த நயவஞ்சகர்கள் யூதர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டனர். நயவஞ்சகர்களின் தலைவன் இப்னு உபை கைபரில் உள்ள யூதர்களுக்குப் பின்வரும் செய்தியை அனுப்பினான். ''முஹம்மது உங்களை நோக்கி வருகிறார். உங்களைத் தற்காத்துக் கொள்ள தயாராக இருங்கள். முஹம்மதைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களது எண்ணிக்கையும் ஆயுதங்களும் அதிகமாக இருக்கின்றன. முஹம்மதின் கூட்டத்தினரோ மிக சொற்பமாக இருக்கின்றனர். அவர்களிடம் குறைவாகவே ஆயுதங்கள் உள்ளன.''
இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்ட கைபர்வாசிகள் கினானா இப்னு அபுல் ஹுகைக், ஹவ்தா இப்னு கைஸ் ஆகிய இருவரையும் கத்ஃபான் கிளையினரிடம் உதவி கேட்டு அனுப்பினர். இந்த கத்ஃபான் கிளையினர் கைபரிலுள்ள யூதர்களின் ஒப்பந்தத் தோழர்களாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருந்தனர். மேலும் ''நாங்கள் முஸ்லிம்களை வெற்றி கொண்டால் கைபரின் விளைச்சல்களில் சரிபாதியைத் தருகிறோம்'' என்று யூதர்கள் கத்ஃபானியர்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.
கைபரின் வழியில்...
நபியவர்கள் 'இஸ்ர்' என்ற மலை வழியாக 'சஹ்பா' சென்று அங்கிருந்து 'ரஜீஈ' பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்து கத்ஃபான் கிளையினர் வசிக்குமிடம் ஒருநாள் பயண தூரத்திலிருந்தது. அப்போது கத்ஃபான் கிளையினர் யூதர்களுக்கு உதவிட ஆயத்தமாகி சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் போய்க் கொண்டிருக்கும் போது தங்களது ஊரில் பெரும் ஆரவாரத்தை உணர்ந்தனர். முஸ்லிம்கள்தான் தங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று எண்ணி தங்களது ஊருக்குத் திரும்பி விட்டனர். அதற்குப் பிறகு அவர்கள் கைபருக்கு வரவில்லை.
படைக்கு வழிகாட்டிச் சென்று கொண்டிருந்த இரு வழிகாட்டிகளையும் அழைத்து வடக்குப் பக்கமாக கைபருக்குள் நுழைவதற்கு மிகப் பொருத்தமானப் பாதையைக் காட்டுமாறு நபி (ஸல்) கூறினார்கள். அப்போதுதான் ஷாம் தேசத்திற்குத் தப்பித்துச் செல்லாமல் யூதர்களைத் தடுக்க முடியும், கத்ஃபான் கிளையினர் யூதர்களுக்கு உதவிட வருவதையும் தடுக்க முடியும்.
வழிகாட்டிகளில் ஹுஸைல் என்ற பெயருடையவர் ''அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அந்தச் சரியான வழியைக் காட்டுகிறேன்'' என்றுக் கூறி நபியவர்களை அழைத்துச் சென்றார். இறுதியாக பல பாதைகள் பிரியும் ஓரிடத்தை அடைந்தவுடன் ''அல்லாஹ்வின் தூதரே! இந்த எல்லா வழிகளின் மூலமாகவும் நாம் கைபருக்குச் சென்றடையலாம். எந்த வழியில் நான் உங்களை அழைத்துச் செல்ல'' என்று கேட்டார். நபியவர்கள் ''ஒவ்வொரு பாதையின் பெயரையும் எனக்குக் கூறு'' என்றார்கள்.
அதற்கவர் ஒரு பாதையைக் குறிப்பிட்டு அதன் பெயர் 'ஹஜன்' (சிரமமானது) என்றார். நபியவர்கள் ''அது வேண்டாம்'' என்று மறுத்து விட்டார்கள். அடுத்த பாதையை சுட்டிக்காட்டி அதன் பெயர் 'ஷாஸ்' (பிரிந்தது) என்றார். அதையும் வேண்டாமென்று மறுத்து விட்டார்கள். மூன்றாவதாக, ஒரு பாதையைக் காண்பித்து, அதன் பெயர் 'ஹாதிப்' (விறகு பொறுக்குபவர்) என்றார். அதையும் நபி (ஸல்) புறக்கணித்து விட்டார்கள். நான்காவதாக, ''அல்லாஹ்வின் தூதரே! இப்போது நாம் செல்வதற்கு ஒரு வழிதான் மீதம் இருக்கிறது'' என்று ஹுஸைல் கூறினார். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் ''அந்த வழியின் பெயரென்ன'' என்று வினவ, அவர் 'மர்ஹப்' (சந்தோஷமானது, வரவேற்கத்தக்கது) என்றார். உடனே நபியவர்கள் அப்பாதையில் அழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.
வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்
1) ஸலமா இப்னு அக்வா (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தோம். ஓர் இரவில் எனது சகோதரர் ஆமிரிடம் ''எங்களுக்கு உமது கவிதைகளை பாடிக் காட்டலாமே'' என்று ஒருவர் கேட்டார். ஆமிர் நல்ல திறமையான கவிஞராக இருந்தார். உடனே அவர் தனது வாகனத்திலிருந்து கீழிறங்கி கூட்டத்தினரின் வாகனங்களை,
''அல்லாஹ்வே! நீ இன்றி நாம் நேர்வழி பெறோம்.
தர்மம் செய்திலோம் தொழுதிறோம்.
எங்கள் மீது மன அமைதி இறக்குவாயாக!
எதிரிகளை எதிர்கொள்ளும் போது பாதங்களை நிலைநிறுத்துவாயாக!
இவர்கள் எமக்கு அநீதமிழைக்கின்றார்கள்.
அவர்கள் குழப்ப நினைத்தால் அதற்கு நாம்
அனுமதியோம் அனுமதியோம்''
நபி (ஸல்) ''வாகனங்களை அழைத்துச் செல்லும் இவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு ''ஆமிர் இப்னு அக்வா'' என்று மக்கள் கூறினர். ''அல்லாஹ் அவருக்குக் கருணை காட்டட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ஒருவர் ''அல்லாஹ்வின் தூதரே! உங்களின் பிரார்த்தனையால் அவருக்கு வீரமரணம் (ஷஹாதத்) கடமையாகி விட்டதே. அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்தால் எங்களுக்குப் பலனாக இருக்குமே!'' என்று கூறினார். அதாவது நபியவர்கள் போரின்போது யாருக்காவது குறிப்பிட்டு பிரார்த்தனை செய்தால் அவர் அப்போரில் கொல்லப்படுவார் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அவ்வாறே கைபர் போரிலும் நடந்தது.
2) கைபருக்கு அருகிலுள்ள 'ஸஹ்பா' என்ற இடத்தில் அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுத பிறகு, மக்களிடம் அவர்கள் வைத்திருக்கும் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். மக்களிடம் சத்துமாவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தச் சத்துமாவை விரிப்பில் பரப்பி வைத்து நபியவர்களும் தோழர்களும் சாப்பிட்டனர். பின்பு மஃரிப் தொழுகைக்காக நபி (ஸல்) தயாரானார்கள். புதிதாக ஒழுச் செய்யாமல் வாய் மட்டும் கொப்பளித்து விட்டு நபி (ஸல்) அவர்களும் மக்களும் மஃரிப் தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு அந்த இடத்திலேயே இஷா தொழுகையையும் நிறைவேற்றினார்கள்.
3) கைபருக்கு அருகில் சென்றவுடன் தங்களது படையை நிறுத்தி நபி (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்:
''அல்லாஹ்வே! ஏழு வானங்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ளவற்றின் இறைவனே! ஏழு பூமிகள் மற்றும் அவற்றுக்கு மேலுள்ளவற்றின் இறைவனே! ஷைத்தான்கள் மற்றும் அவை வழி கெடுத்தவற்றின் இறைவனே! காற்றுகள் மற்றும் அவை வீசி எறிந்தவற்றின் இறைவனே! நிச்சயமாக நாங்கள் இந்த ஊரிலுள்ள நன்மையையும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள நன்மையையும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள நன்மையையும் உன்னிடம் கேட்கிறோம். நிச்சயமாக இந்த ஊரிலுள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம். பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) இந்த ஊருக்குள் நுழைகிறோம்'' என்று கூறினார்கள்.
கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை
போருக்கு முந்திய இரவு கைபருக்கு மிக அருகாமையிலேயே முஸ்லிம்கள் இரவைக் கழித்தார்கள். எனினும், யூதர்களால் முஸ்லிம்களின் வருகையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாக, நபியவர்கள் படையை அழைத்துச் செல்வது இரவு நேரமாக இருந்தால் காலை வரை காத்திருந்து அதிகாலையில் அக்கூட்டத்தினரைத் தாக்குவார்கள். அன்றிரவு ஸுப்ஹு தொழுகையை அதன் நேரம் வந்தவுடன் நல்ல இருட்டாக இருக்கும் போதே நிறைவேற்றிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள். கைபர்வாசிகள் விவசாயச் சாதனங்களை எடுத்துக் கொண்டு தங்களின் வயல்களுக்குப் புறப்பட்டனர். இஸ்லாமியப் படைகள் வருவது அவர்களுக்குத் தெரியாது. கொஞ்ச தூரம் வந்தவுடன் இஸ்லாமியப் படையை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ''ஆ! முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் அவரது படையும் வந்துவிட்டது'' என்று கூறிக்கொண்டே ஊருக்குள் ஓடினர்.
நபியவர்கள் ''அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகி விட்டது. அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகிவிட்டது. நாம் ஒரு கூட்டத்தினரின் ஊருக்குச் சென்றால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அக்கூட்டத்தினரின் அந்தப் பொழுது மிகக் கெட்டதாகவே அமையும்'' என்று கூறினார்கள்.
கைபரின் கோட்டைகள்
கைபர் இரண்டு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதியில் ஐந்து கோட்டைகள் இருந்தன. மற்றொரு பகுதியில் மூன்று கோட்டைகள் இருந்தன. முதல் ஐந்து கோட்டைகளாவன. 1) நாயிம், 2) ஸஅப் இப்னு முஆது, 3) ஜுபைர், 4)உபை, 5) நிஸார். இந்த ஐந்தில் முதல் மூன்று கோட்டைகள் 'நிதா' என்ற இடத்தில் இருக்கின்றன. மற்ற இரண்டு கோட்டைகள் 'ஷக்' என்ற இடத்தில் இருக்கின்றன. கைபரின் மற்றொரு பகுதிக்கு 'கதீபா' என்று கூறப்படும். அதில் மற்ற மூன்று கோட்டைகளும் இருந்தன. அவை: 1)கமூஸ், 2) வத்தீஹ், 3) சுலாளிம். மேலும் கைபரில் இவையல்லாத பல கோட்டைகளும் இருந்தன. ஆனால், அவைகள் மிகச் சிறியவையே. மேற்கூறப்பட்ட எட்டு கோட்டைகளைப் போன்று அவை மிக பலம் வாய்ந்ததுமில்லை, உறுதிமிக்கதுமில்லை.
கைபரின் இரண்டு பகுதிகளில் முந்திய பகுதியில்தான் மிகக் கடுமையான போர் நடந்தது. மூன்று கோட்டைகளைக் கொண்ட இரண்டாவது பகுதியில் போர் வீரர்கள் அதிகமாக இருந்தும் சண்டையின்றியே அவை முஸ்லிம்கள் வசம் வந்தன.
இஸ்லாமியப் படை முகாமிடுதல்
நபி (ஸல்) அவர்கள் படைக்கு முன் சென்று அப்படை முகாமிடுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்தார்கள். ஆனால் 'ஹுபாப் இப்னு அல்முன்திர்' (ரழி) என்ற தோழர், ''அல்லாஹ்வின் தூதரே! இந்த இடம் அல்லாஹ் உங்களைத் தங்க வைத்த இடமா? அல்லது உங்கள் யோசனைக்கிணங்க தங்கியுள்ளீர்களா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ''இல்லை! இது எனது யோசனையே'' என்றார்கள்.
அவர் ''அல்லாஹ்வின் தூதரே! நாம் தங்கியிருக்கும் இந்த இடம் 'நத்தா' என்ற கோட்டைக்கு மிக அருகில் உள்ளது. கைபரின் போர் வீரர்கள் அனைவரும் அதில்தான் இருக்கின்றனர். அவர்கள் நமது செயல் திட்டங்களைத் தெரிந்து கொள்வார்கள். நம்மால் அவர்களது நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது. போரின்போது அவர்களது அம்புகள் நாம் இருக்கும் இடம் வரை வரும். ஆனால், நமது அம்புகள் அவர்களைச் சென்றடையாது. இரவிலும் அவர்கள் நம்மைத் தாக்கக்கூடும். மேலும், இந்த இடம் பேரீச்சம் மரங்களின் மத்தியிலும், தாழ்வாகவும், சதுப்பு நிலமாகவும் உள்ளது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாத நல்ல இடத்தை நாம் முகாமிடுவதற்கு தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ''நீங்கள் நல்ல ஆலோசனை கூறினீர்கள்'' என்று கூறிவிட்டு வேறோர் இடத்திற்கு தங்கள் முகாமை மாற்றிக் கொண்டார்கள்.
போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்
கைபருக்குள் நுழையுமுன் அன்றிரவு தங்கிய இடத்தில் ''நிச்சயமாக நான் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிக்கும் ஒருவரிடம் நாளை கொடியைக் கொடுப்பேன். அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகிறார்கள். அல்லாஹ் அவரது கையால் வெற்றியளிப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களெல்லாம் காலை விடிந்தவுடன் நபியவர்களிடம் ஒன்று கூடினர். ஒவ்வொருவரும் அந்தக் கொடி தனக்கே கொடுக்கப்பட வேண்டுமென விரும்பினர். ஆனால் நபியவர்கள், ''அலீ இப்னு அபீதாலிப்'' எங்கே என்று கேட்டார்கள்.
மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலியாக இருக்கிறது'' என்றனர். நபி (ஸல்) ''அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்றார்கள். அலீ (ரழி) அழைத்து வரப்பட்டபோது அவரின் கண்ணில் தனது உமிழ் நீரைத் தடவி அவருக்காக அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் அவர் குணமடைந்து விட்டார். அவரிடம் கொடியைக் கொடுத்தபோது அவர் ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களும் நம்மைப் போன்று ஆகும் வரை நான் போர் புரியட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''நீ நிதானத்துடன் சென்று அவர்களது முற்றத்தில் இறங்கு. பின்பு அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கொடு. அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைப் பற்றி எடுத்துச் சொல். அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மேலானதாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
யூதர்கள் முஸ்லிம்களின் படையைப் பார்த்து விட்டு தங்களது நகரத்துக்குள் ஓடி, கோட்டைக்குள் ஒளிந்து கொண்டனர். எதிரிகளைக் கண்டவுடன் தடுப்பு நடவடிக்கையிலும், போருக்கான ஆயத்தங்களிலும் ஈடுபடுவது இயற்கையே. முஸ்லிம்கள் தாக்குதல் நடத்திய முதல் கோட்டை 'நாயிம்' என்ற கோட்டையாகும். இது 'மர்ஹப்' என்ற வீரமிக்க யூத மன்னனின் கோட்டை. ''மர்ஹப் 1000 நபர்களுக்குச் சமமானவன்'' என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இக்கோட்டையில் ராணுவத்தினர் அதிகமாக இருந்தனர். இது இஸ்லாமியப் படையை எதிர்ப்பதற்கு வசதியானதாக, உறுதியானதாக இருந்தது. எனவே, பல வகையிலும் ஏற்றமானதாக விளங்கிய இவ்விடத்தில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்த யூதர்கள் முதலில் திட்டமிட்டனர்.
இக்கோட்டைக்கருகில் அலீ (ரழி) முஸ்லிம்களுடன் சென்று யூதர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், முஸ்லிம்களின் அழைப்பை யூதர்கள் நிராகரித்துவிட்டு, தங்களது மன்னர் மர்ஹபுடன் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்க்கப் புறப்பட்டனர். அவன் போர் மைதானத்திற்கு வந்தவுடன் ''தன்னுடன் தனியாக சண்டையிட யாராவது தயாரா?'' என்று கொக்கரித்தான்.
ஸலமா இப்னு அக்வா (ரழி) கூறுகிறார்கள்: ''நாங்கள் கைபர் வந்த போது யூதர்களின் அரசன் தனது வாளை ஏந்தியவனாக
நானே மர்ஹப். இது கைபருக்குத் தெரியும்.
போர் உக்கிரமானால் நான் ஆயுதம் ஏந்திய வீர தீரன்.
என்று பாடிக்கொண்டு படைக்கு முன் வந்தான். அப்போது அவனை எதிர்த்துப் போரிட எனது தந்தையின் சகோதரர் ஆமிர் (ரழி),
நான் ஆமிர். கைபருக்குத் தெரியும்!
நான் ஆயுதம் ஏந்திய அஞ்சாநெஞ்சன்.
என்று பாடிக்கொண்டு முன்வந்தார். இருவரும் சண்டையிட்டதில் மர்ஹபின் வாள் ஆமிரின் கேடயத்தில் ஆழப்பதிந்து விட்டது. அப்போது ஆமிர் (ரழி) கேடயத்திற்குக் கீழிருந்து அவனை வெட்டுவதற்காக முயன்றபோது அவரது வாள் குட்டையாக இருந்ததால் மர்ஹபின் காலில் வெட்டுவதற்குப் பதிலாக இவரது காலில் வெட்டிவிட்டது. பின்பு அதே காயத்திலேயே அவர் மரணித்து விட்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) ''தனது இரு விரல்களையும் ஒன்று சேர்த்தவர்களாக இவருக்கு இரு கூலிகள் உண்டு. நிச்சயமாக இவர் உயிரைப் பொருட்படுத்தாத வீரமிக்க தியாகியாவார். இவரைப் போன்ற வீரமிக்கவர் அரபியர்களில் மிகக் குறைவானவரே'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதற்குப் பின் மர்ஹப் மீண்டும் தன்னுடன் சண்டையிட தனது கவியைப் பாடிக்கொண்டே முஸ்லிம்களை அழைத்தான். அப்போது அவனுடன் சண்டையிட,
''என் அன்னை எனக்கு சிங்கமென பெயர் சூட்டினாள்!
காண அஞ்சும் கானகத்தில் சீறும் சிங்கத்தைப் போன்றவன் நான்!
இன்று மரக்காலுக்குப் பதிலாக ஈட்டியால்
அவர்களுக்கு அளந்து கொடுப்பேன்!''
என்ற பாடியவராக அலீ (ரழி) முன் வந்தார்கள். மர்ஹப் அலீயுடன் மோத, அலீ (ரழி) அவனது தலையைத் துண்டாக்கி விட்டார்கள். பின்பு அவரின் மூலமாகவே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
அலீ (ரழி) அவர்கள் யூதர்களின் கோட்டைக்கு மிக அருகில் சென்றுவிட்டபோது கோட்டையின் மேலிருந்து ஒருவன் ''நீ யார்?'' என்றான். அதற்கு ''நான் அலீ இப்னு அபீதாலிப்'' என்று பதில் கூறினார்கள். அப்போது அந்த யஹுதி ''மூஸாவிற்கு இறக்கப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! நீங்கள் வெற்றி கொள்வீர்கள்'' என்றான்.
இதற்குப் பின் மர்ஹபின் சகோதரன் யாசிர் ''என்னுடன் சண்டை செய்பவன் யார்?'' என்று கொக்கரித்தவனாக படைக்கு முன் வந்தான். ஜுபைர் (ரழி) அவனை எதிர்க்கத் தயாரானார். அதைப் பார்த்த அன்னாரின் தாயார் ஸஃபியா (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது மகனைக் கொன்று விடுவானே'' என்று கலங்கினார். அதற்கு நபி (ஸல்) ''இல்லை உமது மகன் தான் அவனைக் கொல்வார்'' என்று கூறினார்கள். அவ்வாறே ஜுபைர் (ரழி) அவனைக் கொன்றார்கள். இவ்வாறு அன்று முழுவதும் நாயிம் கோட்டையைச் சுற்றிக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. யூதர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் அவர்களின் வீரம் குறைந்து துவண்டு விட்டனர். எனினும், போர் மிகக் கடுமையாக பல நாட்கள் நீடித்தது. இறுதியில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொண்ட யூதர்கள் அந்தக் கோட்டையிலிருந்து இரகசியமாக வெளியேறி 'ஸஅப்' என்ற கோட்டையில் நுழைந்து கொண்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் நாயிம் கோட்டையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.
ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நாயிம் கோட்டைக்கு அடுத்து இக்கோட்டை மிகவும் பலமுள்ளதாக, வலிமை மிக்கதாக இருந்தது. அல் ஹுபாப் இப்னு அல் முன்திர் அல் அன்ஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் இக்கோட்டையை முஸ்லிம்கள் மூன்று நாட்கள் முற்றுகையிட்டனர். மூன்றாவது நாள் இக்கோட்டையை வெற்றி கொள்வதற்காக நபி (ஸல்) தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்தார்கள்.
இதைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) விவரிக்கிறார்:
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஸஹ்ம் கிளையினர் நபியவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மிகச் சிரமத்திற்குள்ளாகி விட்டோம். எங்களது கையில் ஒன்றுமே இல்லை'' என்று முறையிட்டார்கள். அதாவது, தங்களது இயலாமையையும், பசியையும் இவ்வாறு நபியவர்களிடம் வெளிப்படுத்தினார்கள். இந்த கிளையினர்தான் கோட்டையை வெற்றி கொள்வதற்காக அனுப்பப்பட்ட படைகளில் முக்கியப் பங்காற்றினார்கள். அவர்களின் இந்த கோரிக்கைக்கிணங்க ''அல்லாஹ்வே! நிச்சயமாக இவர்களின் நிலைமையை நீ நன்கு அறிந்திருக்கிறாய். அவர்களிடம் எவ்வித ஆற்றலும் இல்லையென்பதையும், அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்பதையும் நீ நன்கறிந்திருக்கிறாய். எனவே, கைபரின் கோட்டைகளில் அதிக செல்வமும் உணவுப் பொருட்களும் நிறைந்த கோட்டையை வெற்றி கொள்ள இவர்களுக்கு உதவுவாயாக'' என நபி (ஸல்) பிரார்த்தனை புரிந்தார்கள். நபியவர்களின் இப்பிரார்த்தனைக்குப் பின்பு முஸ்லிம்கள் அக்கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். கைபரிலுள்ள கோட்டைகளில் 'ஸஅப்' கோட்டையில்தான் அதிகச் செல்வங்களும் உணவுகளும் இருந்தன.
நபி (ஸல்) இக்கோட்டையின் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி அழைத்துச் சென்றார்கள். இதில் அஸ்லம் கிளையினர், படைக்கு முதல் வரிசையில் இருந்தனர். கோட்டைக்கு வெளியில் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடுமையான தாக்குதல் மாலை வரை நீடித்தது. இறுதியாக, சூரியன் மறைவதற்கு சற்று முன் அக்கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். அக்கோட்டையில் இருந்த மின்ஜசனீக்' கருவிகளையும், இக்கால பீரங்கி போன்ற கருவிகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினர். இப்போரில் ஏற்பட்ட கடுமையான பசியின் காரணமாக படையில் இருந்த சில வீரர்கள் கழுதையை அறுத்து சமைப்பதற்கு அடுப்பை மூட்டினர். இதை அறிந்த நபி (ஸல்) ''நாட்டுக் கழுதைகளை அறுக்க வேண்டாம்'' என தடை விதித்தார்கள்.
ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நாயிம், ஸஅப் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டதற்குப் பின் நதா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேறி ஜுபைர் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். இக்கோட்டை ஒரு மலை உச்சியில் அமைந்திருந்ததுடன், மிக வலிமை மிக்கதாகவும் இருந்தது. அம்மலை மீது குதிரை வீரர்களோ காலாட் படையினரோ ஏறிச் செல்வது சிரமமாக இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அக்கோட்டையை முற்றுகையிடுவதில் ஈடுபட்டார்கள். இந்த முற்றுகை மூன்று நாட்கள் நீடித்தது.
அப்போது யூதர்களில் ஒருவன் நபியவர்களிடம் வந்து ''ஓ அபுல் காசிமே! நீங்கள் இவ்வாறு ஒரு மாத காலம் இவர்களை முற்றுகையிட்டாலும் இவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில், இப்பூமிக்கு கீழ் அவர்கள் குடிப்பதற்குத் தேவையான நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அவர்கள் இரவில் கோட்டையிலிருந்து வெளியேறி தேவையான நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் கோட்டைக்குள் சென்று விடுகின்றனர். எனவே, இவர்கள் தண்ணீர் பிடிக்க வருவதை தடுத்தால் தான் மைதானத்தில் உங்களுடன் போர் செய்ய இறங்குவார்கள்'' என்று ஆலோசனைக் கூறினார். அவன் யோசனைக்கிணங்க நபியவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைத் தடுத்து விட்டார்கள். இதனால் யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி, முஸ்லிம்களுடன் கடுமையான யுத்தம் புரிந்தார்கள். போரில் சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் பத்து யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் கோட்டையை வெற்றி கொண்டனர்.
உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்
ஜுபைர் கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்டபின் அங்கிருந்து யூதர்கள் வெளியேறி உபை கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக ''தன்னிடம் சண்டை செய்பவர்கள் யார்?'' என்று மைதானத்தில் இறங்கினர். அவ்விருவரையும் முஸ்லிம் வீரர்கள் வெட்டிச் சாய்த்தனர். அதில் இரண்டாவதாக வந்த யஹுதியைச் சிவப்பு தலைப்பாகை உடைய அபூதுஜானா ஸிமாக் இப்னு கரஷா (ரழி) என்ற வீரத்தில் பிரசித்தி பெற்ற நபித்தோழர் வெட்டி வீழ்த்தினார். இரண்டாவது வீரனை வெட்டிய பின் அபூதுஜானா (ரழி) கோட்டைக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் முஸ்லிம் வீரர்களும் அதற்காக முயற்சித்தனர். அந்நேரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. பின்பு அங்கிருந்து யூதர்கள் தப்பித்து 'நஜார்' கோட்டைக்குச் சென்றனர். பிறகு இந்த உபை கோட்டையும் முஸ்லிம்கள் வசமானது.
நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நத்தா பகுதியிலிருந்த கோட்டைகளில் மிக வலிமையானது இக்கோட்டையே ஆகும். எவ்வளவு முயற்சி செய்தாலும், உயிர் தியாகம் செய்தாலும் முஸ்லிம்களால் இக்கோட்டையை வெற்றி கொள்ள முடியாது என்று யூதர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவேதான் இக்கோட்டையில் தங்களது மனைவி மக்களை தங்க வைத்திருந்தனர். மேற்கூறிய நான்கு கோட்டைகள் எதிலும் தங்களது மனைவி மக்களைத் தங்க வைக்கவில்லை.
இக்கோட்டையைச் சுற்றி முஸ்லிம்கள் முற்றுகையிட்டு யூதர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இக்கோட்டை உயரமான மலை மீது இருந்ததால் முஸ்லிம்களால் அதற்குள் நுழைய முடியவில்லை. யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவு இல்லாமல் கோட்டையை விட்டு வெளியே வராமலிருந்தனர். கோட்டைக்குள் இருந்தவாறே முஸ்லிம்கள் மீது அம்புகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இக்கோட்டையை வெற்றி கொள்வது முஸ்லிம்களுக்குச் சிரமமாகி விடவே, மின்ஜனிக் கருவிகளைப் பயன்படுத்தி கற்களை எறிந்து, கோட்டை மதில்களைத் தகர்க்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். முஸ்லிம் படையினரும் அவ்வாறே செய்தனர். கோட்டை மதில்களில் ஓட்டைகள் ஏற்பட்டதும் முஸ்லிம்கள் அதன் வழியாக கோட்டைக்குள் நுழைந்து யூதர்களுடன் கடும் போர் புரிந்தார்கள். இதில் யூதர்கள் பெரும் தோல்வியைத் தழுவினார்கள். மற்ற கோட்டைகளிலிருந்து தப்பித்துச் சென்றது போன்று இக்கோட்டையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. தங்களது மனைவி மக்களை விட்டுவிட்டு கோட்டையை விட்டு வெருண்டோடினர். இக்கோட்டையும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கைபரின் முதல் பகுதியிலுள்ள அனைத்து பெரிய கோட்டைகளும் இத்துடன் முழுமையாக முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மற்ற சிறிய கோட்டைகளுக்குள் இருந்த யூதர்களும் அவற்றைக் காலி செய்துவிட்டு ஊரின் இரண்டாவது பகுதிக்கு வெருண்டோடினர்.
இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்
நபியவர்கள் 'நத்தா' பகுதியிலுள்ள கோட்டைகளை முழுமையாக வெற்றி கொண்டபின் இரண்டாவது பகுதியான 'கத்தீபா'விற்கு தங்களது படையுடன் வந்தார்கள். அங்கு யூதர்களின் கமூஸ், அபூ ஹுகைக் குடும்பத்தினர் கோட்டை, வத்தீஹ் சுலாலிம் ஆகிய மூன்று கோட்டைகள் இருந்தன. நத்தா பகுதியில் தோல்வியுற்று ஓடிய யூதர்களெல்லாம் இக்கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் செய்த போர்களைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள் இம்மூன்று கோட்டைகளை வெற்றி கொள்வதில் சண்டை ஏதும் நடந்ததா? இல்லையா? என்பதில் பல கருத்துகள் கூறுகிறார்கள். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதிலிருந்து 'கமூஸ்' கோட்டையை மட்டும் பேச்சுவார்த்தையின்றி முழுமையாக சண்டையைக் கொண்டே வெற்றி கொள்ளப்பட்டது என்று தெரியவருகிறது.
'அல்வாகிதி' (ரஹ்) என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவதாவது: இம்மூன்று கோட்டைகளும் பேச்சுவார்த்தைக்குப் பின்தான் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. 'கமூஸ்' கோட்டையைத் தவிர மற்ற இரண்டு கோட்டைகளும் எவ்வித சண்டையுமின்றி பேச்சுவார்த்தையைக் கொண்டே முஸ்லிம்களிடம் சரணடைந்தன. கமூஸ் கோட்டைக்கு மட்டும் முதலில் சண்டை நடந்தது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடந்து கைவசமாகி இருக்கலாம்.
ஆக, கருத்து எதுவாக இருப்பினும் நபி (ஸல்) இப்பகுதியை சுற்றி மட்டும் பதினான்கு நாட்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறவில்லை. இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் மின்ஜனிக் கருவிகளை நிறுவி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள். இதையறிந்த யூதர்கள் நிச்சயமாக நாம் அழிந்தே தீருவோம் என்பதை அறிந்துகொண்ட பின்புதான் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார்கள்.
பேச்சுவார்த்தை
இப்னு அபூஹுகைக் என்ற யூதர் ''நீங்கள் வாருங்கள் நான் உங்களிடம் பேசுகிறேன்'' என்று நபியவர்களிடம் தூதனுப்பவே, அவர்களும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
''கோட்டைக்குள் உள்ள வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது குடும்பத்தார்களை அவர்களுடன் விட்டுவிட வேண்டும், அந்த வீரர்கள் தங்களின் மனைவி மக்களுடன் கைபர் பூமியிலிருந்து வெளியேறி விடுவார்கள், கைபர் பூமியும் அதிலுள்ள செல்வங்களும், பொருட்களும், தங்கங்களும், வெள்ளிகளும், ஆயுதங்களும், கால்நடைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாகும், தேவையான துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனைத்து அம்சங்களையும் ஒப்புக் கொண்டார்கள்.
''ஒப்பந்தம் செய்து கொடுத்த பின் நீங்கள் ஏதாவதொரு பொருளை மறைத்தால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கொடுத்த இந்தப் பொறுப்பு நீங்கிவிடும்'' என்று கூறினார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கோட்டைகள் முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.
அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்
மேற்படி ஒப்பந்தத்திற்குப் பிறகும் அபுல் ஹுகைகின் இரண்டு மகன்களும் அதிகமான செல்வங்களை மறைத்து விட்டனர். ஒரு தோல் பையில் நிறைய பொருட்களையும், ஹையிப் இப்னு அக்தப்பிற்கு சொந்தமான நகைகளையும் மறைத்து வைத்திருந்தனர். இந்த 'ஹை' என்பவர் நளீர் வமிச யூதர்களின் தலைவராவார். நபி (ஸல்) இவரை மதீனாவிலிருந்து நாடு கடத்தியபோது அந்த நகைகளுடன் இங்கு வந்து தங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுவதாவது: நபியவர்களிடம் 'கினானா அர்ரபீ' என்பவன் அழைத்து வரப்பட்டான். அவனிடம்தான் நளீர் வமிச யூதர்களுக்குச் சொந்தமான பொக்கிஷங்கள் இருந்தன. நபி (ஸல்) அவனிடம் அதைப் பற்றி விசாரிக்கவே, அவன் ''அந்தப் பொக்கிஷம் உள்ள இடம் எனக்குத் தெரியாது'' என்று பொய்யுரைத்தான். அப்போது மற்றொரு யூதன் நபியவர்களிடம் வந்து ''கினானா ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்து போவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கினானாவிடம் ''அவர் கூறுவது போன்று அப்பொருள் உம்மிடம் இருந்தால் நான் உன்னை கொன்று விடட்டுமா?'' என்று கேட்க அவன் ''சரி!'' என்றான். நபியவர்களின் கட்டளைக்கிணங்க அந்த பாழடைந்த வீடு தோண்டப்பட்டு அதில் பொக்கிஷங்களின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. நபி (ஸல்) ''மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே?'' என்று கேட்க, அவன் அதைக் கொடுப்பதற்கு மறுத்து விட்டான். அவனை நபியவர்கள் ஜுபைரிடம் கொடுத்து ''இவனிடமுள்ள அனைத்தையும் வாங்கும் வரை இவனை வேதனை செய்யுங்கள்'' என்று கூறினார்கள். ஜுபைர் (ரழி) அம்பின் கூரிய பகுதியால் அவனது நெஞ்சில் குத்தினார்கள். அவனது உயிர் போகும் தருவாயில் அவனை முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஜுபைர் கொடுத்து விட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் சகோதரர் மஹ்மூத், நாயிம் கோட்டையின் சுவரில் நிழலுக்காக அமர்ந்திருந்தபோது கோட்டையின் மேலிருந்து திருகைக் கல்லை தள்ளிவிட்டு யூதர்களால் கொல்லப்பட்டார். எனவே, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) இவனைக் கொலை செய்தார்.
அபுல் ஹுகைகின் இரண்டு மகன்களும் பொருட்களை மறைத்து வைத்திருந்ததால் அவர்களை கொல்லும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
புதுமணப் பெண்ணாக இருந்த ஹையின் மகள் ஸஃபிய்யாவை நபியவர்கள் சிறை பிடித்தார்கள். இவரைக் 'கினானா இப்னு அபூ ஹுகைக்' மணந்திருந்தான்.
கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்
நபி (ஸல்) யூதர்களைக் கைபரிலிருந்து வெளியேற்றி நாடு கடத்தத் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள், ''முஹம்மதே எங்களை இப்பூமியில் தங்கவிடுங்கள் நாங்கள் இப்பூமியை சீர்படுத்துகிறோம், உங்களைவிட இந்த பூமியைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.'' என்று கூறினார்கள். நபியவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் இப்பூமியைச் சீர்செய்வதற்கு அடிமைகள் யாரும் இல்லை. சீர் செய்வதற்கு ஓய்வோ அவகாசமோ இவர்களுக்கும் இல்லை. எனவே, விவசாயத்திலும் தோட்டங்களிலும் மகசூலில் ஒரு பகுதியைத் தர வேண்டும் என்ற நிபந்தனையிலும், நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே இங்கு தங்கவேண்டும் என்ற நிபந்தனையிலும் கைபர் பூமியை நபி (ஸல்) யூதர்களிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) கைபருடைய விளைச்சல்களின் கண்காணிப்பாளராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கைபர் பூமியை 36 பங்காகப் பிரித்தார்கள். பின்பு ஒவ்வொரு பங்கையும் 100 பங்காகப் பிரித்தார்கள். ஆக மொத்தம் 3600 பங்குகளாயின. அதிலிருந்து சமப்பாதி பங்கு நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும். அதாவது 1800 பங்குகளில் மற்ற முஸ்லிம்களுக்குக் கிடைப்பதைப் போன்றே நபியவர்களுக்கும் ஒரு பங்கு என்று முடிவானது. மீதமுண்டான 1800 பங்குகளைப் பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் நபி (ஸல்) தனியாக ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) இதை 1800 பங்குகளாக ஆக்கியிருந்ததற்குக் காரணம்: இந்த கைபரின் வெற்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்களுக்காக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இங்கு இருப்பினும் சரி, இல்லை என்றாலும் சரி. ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 1400 நபர்களாவர். இவர்களில் 200 பேர் குதிரை வீரர்கள். ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பங்குகள், குதிரை வீரருக்கு ஒரு பங்கு என மொத்தம் மூன்று பங்குகள் கொடுக்கப்பட்டன. அதாவது 600 பங்குகள் 200 குதிரை வீரர்களுக்கும், 1200 பங்குகள் 1200 காலாட்படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டன. (ஜாதுல் மஆது)
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள இப்னு உமரின் அறிவிப்பின் மூலம் கைபரில் அதிகம் கனீமத்து பொருட்கள் கிடைக்கப் பெற்றன என்று தெரிய வருகிறது.
இப்னு உமர் (ரழி) கூறினார்கள்: ''கைபரை வெற்றி கொள்ளும்வரை நாங்கள் வயிறாற உண்டதில்லை. கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகுதான் நாங்கள் வயிறாற பேரீத்தம் பழம் சாப்பிடுகிறோம்.''(ஸஹீஹுல் புகாரி)
முஹாஜிர்களுக்குக் கைபரில் பேரீத்த மரங்களும், சொத்துகளும் கிடைத்துவிட்டதால் மதீனா திரும்பியவுடன் அன்சாரிகள், முஹாஜிர்களுக்குக் கொடுத்திருந்த பேரீத்த மரங்களையெல்லாம் அவர்களிடமே நபியவர்கள் திரும்பக் கொடுத்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை
இப்போர் முடிந்த பின்னர் ஜஅஃபர் (ரழி) அவர்களும், அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) அவர்களும் தங்கள் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
இதைப் பற்றி அபூமூஸா (ரழி) கூறுகிறார்கள்: ''நாங்கள் யமனில் வசித்து வந்தோம். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த செய்தியை நாங்கள் அறிந்தோம். நானும் எனது சகோதரர்களும், 50க்கும் மேற்பட்ட எங்களது கூட்டத்தினரும் நபியவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். ஆனால், எங்களது கப்பல் திசைமாறி 'ஹபஷா' சென்று விட்டது. அங்கு நஜ்ஜாஷியிடம் ஜஅஃபர் (ரழி) அவர்களும் அவரது தோழர்களும் இருக்கக் கண்டோம். அவர் எங்களை இங்கு தங்குமாறு ''நபி (ஸல்) அனுப்பி இருக்கிறார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் தங்குங்கள்'' என்று கூறினார். நாங்களும் அவருடன் தங்கியிருந்தோம்.
பிறகு அவர் நபியவர்களை சந்திக்கப் புறப்பட்டபோது நாங்களும் அவருடன் புறப்பட்டோம். நாங்கள் நபியவர்களை சந்திக்க மதீனா வந்தபோது அவர்கள் மதீனாவிலிருந்து கைபருக்கு புறப்பட்டு விட்டார்கள். நாங்களும் கைபர் சென்றோம். கைபர் போரில் கலந்து கொள்ளாத எவருக்கும் கைபரில் கிடைத்த கனீமத்தில் பங்கு கொடுக்கவில்லை. ஆனால், எங்களுக்கும் ஜஅஃபர் மற்றும் அவரது தோழர்களுக்கும் நபி (ஸல்) கைபரின் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஜஅஃபர் (ரழி) வந்தபோது அவரை வரவேற்று அவரது இரு கண்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். பின்பு ''எனது அதிக மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? கைபரின் வெற்றியா? ஜஅஃபரின் வருகையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அறியேன்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி, ஜாதுல் மஆது)
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு உமைய்யா ழம் (ரழி) அவர்களை நஜ்ஜாஷியிடம் அனுப்பி ஜஅஃபரையும் அவரது தோழர்களையும் அழைத்து வருமாறு கூறினார்கள். நஜ்ஜாஷி அவர்களை நபியவர்களிடம் அனுப்பி வைத்தார். அந்நேரத்தில் அவர்கள் மொத்தம் 16 நபர்கள் இருந்தனர். மற்றவர்களெல்லாம் இதற்கு முன்னதாகவே மதீனா வந்து விட்டனர். இந்த சமயத்தில் தான் அபூ மூஸாவும் ஜஅஃபருடன் வந்தார்.
ஸஃபிய்யாவுடன் திருமணம்
இவரின் கணவர் கினானா இப்னு அபூ ஹுகைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார். ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!'' என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார்.
அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்ல'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ''அவரை ஸஃபிய்யாவுடன் அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே நபி (ஸல்) ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் ''கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்குப் பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக' ஆக்கினார்கள்.
நபி (ஸல்) மதீனா திரும்பும் வழியில் 'ஸத்துஸ்ஸஹ்பா' என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரழி) துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸுலைம் (ரழி) ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா' விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களுடன் நபி (ஸல்) தங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து ''இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது'' என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
நஞ்சு கலந்த உணவு
கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதி அடைந்தார்கள். அப்போது ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி 'ஜைனப் பின்த் ஹாரிஸ்' என்பவள், நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்தாள். விருந்தில் ஓர் ஆட்டை விஷத்துடன் சமைத்தாள். குறிப்பாக, நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும் பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலே அதிக விஷத்தை ஏற்றினாள்.
நபியவர்கள் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கடித்தார்கள். ஆனால் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள். ''இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரிக்கவே அவள் உண்மையை ஒப்புக் கொண்டாள். ''இவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன?'' என்று நபி (ஸல்) விசாரித்தார்கள். அதற்கு அவள், ''நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் தூதராக இருந்தால் உண்மை உங்களுக்கு தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்'' என்று கூறினாள். நபியவர்கள் அவளை மன்னித்து விட்டு விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் பிஷ்ர் இப்னு பரா (ரழி) என்ற தோழரும் சாப்பிட்டார். அவர் அந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் அந்த விஷம் அவரது உடலில் கலந்து மரணித்து விட்டார்.
அப்பெண் முற்றிலும் மன்னிக்கப்பட்டாளா? அல்லது கொல்லப்பட்டாளா? என்பதைப் பற்றி பல மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளன.
இதைப் பற்றி அறிஞர்கள் கூறுவதாவது: நபியவர்கள் ஆரம்பத்தில் அப்பெண்ணை மன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி) இறந்துவிடவே அவளைக் கொல்லும்படி கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
இப்போரில் முஸ்லிம்களில் பதினாறு நபர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் நான்கு நபர்கள் குறைஷிகள். ஒருவர் அஷ்ஜாஃ கிளையைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர், மற்றொருவர் கைபரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 9 பேர்கள் அன்சாரிகளாவர். சிலர் முஸ்லிம்களில் கொல்லப்பட்டவர்கள் பதினேழு பேர்கள் என்றும் கூறுகின்றனர்.
அறிஞர் மன்சூர்ஃபூ (ரஹ்) கூறுவதாவது: ''ஷஹீதானவர்கள் மொத்தம் பத்தொன்பது நபர்களே. நான் பல மூல நூல்களை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது இப்போரில் கொல்லப்பட்டவர்களின் 23 பெயர்களைப் பார்த்தேன். அதாவது, அந்த 23 பெயர்களில் ஒரு பெயர் 'தப்ரி'யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு பெயர் 'வாகிதி'யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றொருவர் சமைக்கப்பட்ட ஆட்டை சாப்பிட்டு மரணித்தவராவார். மற்றொருவர் பத்ரில் கொல்லப்பட்டாரா? அல்லது கைபரில் கொல்லப்பட்டாரா? என்பது பற்றி இரு கருத்துகள் உள்ளன. ஆனால், அதில் சரியானது அவர் பத்ரில் கொல்லப்பட்டார் என்பதுதான். ஆகவே, முஸ்லிம்களில் 19 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதுவே ஏற்றமானது. யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.''(ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
ஃபதக்
நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது முஹய்ம்ஸா இப்னு மஸ்ஊது (ரழி) என்பவரை 'ஃபதக்' என்ற இடத்திலுள்ள யூதர்களிடம் அனுப்பி, இஸ்லாமை ஏற்குமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினர். நபியவர்களின் கைபர் வெற்றியைப் பார்த்த இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். இதனால் 'ஃபதக்' யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம் செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். அதாவது ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபதக் சண்டையின்றி வெற்றி கொள்ளப்பட்டதால் அதன் விளைச்சல் அனைத்தும் நபியவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று.(இப்னு ஹிஷாம்)
வாதில் குரா
நபி (ஸல்) அவர்கள் கைபர் போரை முடித்து அங்கிருந்து 'வாதில் குரா' என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு யூதர்களின் ஒரு கூட்டமும், அரபுகளின் ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டனர். நபியவர்கள் முஸ்லிம்களுடன் அங்கு சென்றபோது அங்கிருந்த யூதர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் நபியவர்களின் 'மித்அம்' என்ற அடிமை கொல்லப்பட்டார். அவருக்கு சொர்க்கம் உண்டென மக்கள் நற்செய்தி கூறினர். ஆனால் நபி (ஸல்) ''ஒருக்காலும் அவ்வாறு இல்லை. எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! கைபர் போரின் கனீமத்து பொருட்களை பங்கு வைப்பதற்கு முன் அவர் எடுத்துக்கொண்ட போர்வை இப்போது அவர் மீது நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கிறது'' என்று கூறினார்கள். நபியவர்களின் இந்த எச்சரிக்கையை கேள்விப்பட்ட மக்கள், தாங்கள் அற்பமாக நினைத்து எடுத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தனர். ஒருவர் செருப்பிற்குரிய ஒன்று (அல்லது) இரண்டு வார்களை நபியவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு நபியவர்கள் ''இது நரக நெருப்பின் ஒரு வாராக இருக்கும் அல்லது இரண்டு வாராக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
யூதர்களின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நபியவர்கள் உடனடியாக தங்களது தோழர்களைப் போருக்கு தயார்படுத்தி அணிவகுப்பை நடத்தினார்கள். மேலும், முழு படைக்குள்ள பெரிய கொடியை ஸஅது இப்னு உபாதாவிடம் கொடுத்தார்கள். அதற்குப் பின் மற்ற சிறிய கொடிகளில் ஒன்றை ஹுபாப் இப்னு முன்திரிடமும், மற்றொரு கொடியை ஸஹ்ல் இப்னு ஹுனைஃபிடமும், மற்றொரு கொடியை அப்பாத் இப்னு பிஷ்ர் இடமும் கொடுத்தார்கள்.
இதையெடுத்து இஸ்லாமை ஏற்க நபி (ஸல்) யூதர்களை அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அவர்களிலிருந்து ஒருவன் வெளியேறி சண்டைக்கு வந்தான். அவனை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் சண்டையிட வந்தான். அவனையும் ஜுபைர் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் வந்தான். அவனை அலீ இப்னு அபீதாலிப் (ரழி) கொன்றார். இவ்வாறு அவர்களில் பதினொரு நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவர் கொல்லப்பட்ட பின்பும் நபியவர்கள் மீதமுள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள்.
இந்நிலையில் தொழுகையுடைய நேரம் வரும்போதெல்லாம் தங்களது தோழர்களுடன் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் யூதர்களிடம் வந்து அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். இவ்வாறு மாலை வரை சண்டை தொடர்ந்தது. மறுநாள் காலை நபியவர்கள், அவர்களிடம் சென்றபோது சூரியன் உதயமாகி சற்று நேரத்திற்குள்ளாகவே யூதர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தார்கள். நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏராளமான பொருட்களை அல்லாஹ் வழங்கினான்.
இங்கு நபி (ஸல்) நான்கு நாட்கள் தங்கியிருந்து கிடைத்த பொருட்களை தோழர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், மற்ற நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது)
தைமா
கைபர், ஃபதக், வாதில் குரா ஆகிய இடங்களிலிருந்த யூதர்களெல்லாம் பணிந்து விட்டனர் என்ற செய்தி தைமாவிலுள்ள யூதர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மாறாக, அவர்களே முன் வந்து சமாதானம் செய்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் தூது அனுப்பினார்கள். நபியவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது சொத்துகளை அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) ஓர் உடன்படிக்கை பத்திரத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:
''அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பனூ ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தம். இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்களுக்கு வரி விதிக்கப்படும். இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது. இவர்களை நாடு கடத்தப்பட மாட்டாது. இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்.''
இதை காலித் இப்னு ஸஈது (ரழி) எழுதினார். (இப்னு ஸஅத்)
மதீனாவிற்குத் திரும்புதல்
இதற்குப் பின் நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். திரும்பும் வழியில் ஒரு பள்ளத்தாக்கை கடந்து சென்றபோது மக்கள் சப்தமிட்டு ''அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹஇல்லல்லாஹ்'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) ''நீங்கள் நிதானத்தைக் கையாளுங்கள். நீங்கள் செவிடனையோ அல்லது மறைவாக இருப்பவனையோ அழைக்கவில்லை. நீங்கள் நன்கு கேட்கும் ஆற்றல் உள்ளவனையும், சமீபத்தில் இருப்பவனையுமே அழைக்கின்றீர்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
மதீனா திரும்பும் வழியில் ஓர் இரவு முற்பகுதியில் பயணித்து விட்டு பிற்பகுதியில் ஓய்வெடுத்தார்கள். ஓய்வெடுப்பதற்கு முன் பிலாலிடம் ''இன்றிரவு தூங்காமல் எங்களுக்கு பாதுகாப்பாய் இருங்கள்'' என்று கூறினார்கள். ஆனால், வாகனத்தில் சாய்ந்தவராக அமர்ந்திருந்த பிலாலுக்குத் தூக்கம் மிகைத்து விட்டது. சூரியன் உதயமாகும் வரை யாரும் விழிக்கவில்லை. முதன்முதலாக நபியவர்களே விழித்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு வேறோர் இடத்திற்கு வந்து ஃபஜ்ர் தொழுதார்கள். சிலர் இச்சம்பவம் வேறொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது)
கைபர் போரின் பல நிகழ்வுகளைக் கவனித்துப் பார்க்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபீஉல் அவ்வல் ஆரம்பத்தில் மதீனாவை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும் என்றே தெரிய வருகிறது.
அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு
சங்கைமிக்க மாதங்கள் முடிந்ததற்குப் பின், வீரர்கள் யாருமின்றி மதீனாவைக் காலியாக வைப்பது முறையல்ல என்பதை ஒரு ராணுவத் தலைவர் அறிந்து வைத்திருப்பதை விட நபி (ஸல்) நன்றாகவே அறிந்திருந்தார்கள். ஏனெனில், மதீனாவைச் சுற்றியிருந்த கிராம அரபிகள், முஸ்லிம்கள் எப்பொழுது அயர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். எனவேதான் கைபருக்கு போய்க் கொண்டிருக்கும் வழியிலேயே அபான் இப்னு ஸஈதின் தலைமையின் கீழ் நஜ்தில் உள்ள கிராம அரபிகளை அச்சுறுத்துவதற்காக ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி விட்டார்கள். நபியவர்கள் கொடுத்த கடமையை நிறைவேற்றிவிட்டு கைபர் நோக்கி அபான் இப்னு ஸஈத் (ரழி) திரும்பினார். அதற்குள் நபியவர்கள் கைபரை வெற்றி கொண்டு விட்டார்கள்.
அநேகமாக இப்படையை ஹிஜ்ரி 7, ஸஃபர் மாதத்தில் அனுப்பியிருக்க வேண்டும். இப்போரைப் பற்றிய சில குறிப்புகள் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் (ரஹ்) ''இப்போரைப் பற்றிய சரியான தகவல் தனக்குத் தெரியவில்லை'' என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)
No comments:
Post a Comment