இறைத்தூதராகுதல் மற்றும் அழைப்புப் பணி
மக்கா வாழ்க்கை
நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தூதர் எனும் கௌரவம் அருளப்பட்டதற்குப் பிறகுள்ள வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். அவை ஒன்றுக்கொன்று தன்மையால் மாறுபடுகிறது.
1. மக்காவில் வாழ்ந்த காலம். இது ஏறத்தாழ 13 ஆண்டுகள்.
2. மதீனாவில் வாழ்ந்த காலம். இது முழுமையாக 10 ஆண்டுகள்.
இவ்விரு வாழ்க்கையும் மாறுபட்ட பல நிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பல தனித்தன்மைகள் உண்டு. நபி (ஸல்) அழைப்புப் பணியில் கடந்து வந்த பாதைகளை ஆழ்ந்து கவனிக்கும்போது இதனை நாம் அறிகிறோம்.
மக்கா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1) மறைமுக அழைப்பு: இது மூன்று ஆண்டுகள் வரை நீடித்தது.
2) மக்காவாசிகளுக்கு பகிரங்க அழைப்பு: இது நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரத்' வரை தொடர்ந்தது.
3) மக்காவுக்கு வெளியே அழைப்புப் பணி: இது பத்தாம் ஆண்டின் இறுதியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.
இவற்றைச் சுருக்கமாக பார்த்துவிட்டு மதீனா வாழ்க்கை நிலைகளை பின்னர் காண்போம்.
நபித்துவ நிழலில்
ஹிரா குகையில்
நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது. அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த இணைவைக்கும் இழிவான கொள்கையையும், பலவீனமான அதன் கற்பனைகளையும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.
தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்; வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில், மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும். உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நேரிய பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை நபி (ஸல்) அவர்கள் தனிமையில் கழித்து வந்தார்கள். தனிமையை விசாலமான மனஅமைதியுடன் கழித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைபொருளுடன் தொடர்பு கொள்ள இதோ நேரம் நெருங்கிவிட்டது. (இது குறித்து மேல் விவரங்களை ஸஹீஹுல் புகாரி, தாரீக் இப்னு ஹிஷாம் மற்றும் வரலாற்று நூல்களில் காணலாம். முதன்முதலாக அப்துல் முத்தலிப் ஹிரா குகையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ரமழானில் அங்கு சென்று தங்குவார். ஏழை எளியோருக்கு உணவளிப்பார். (இப்னு கஸீர்)
ஜிப்ரீல் வருகை
பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது (பல நபிமார்களுக்கு நாற்பதாவது வயதில்தான் நபித்துவம் (நுபுவ்வத்) அருளப்பட்டது என்று சொல்லப்படுகிறது), நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.
அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது. உண்மையான கனவுகளைக் கண்டார்கள். அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும். இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன. நபித்துவ பணியாற்றியதோ 23 ஆண்டுகள், உண்மைக் கனவுகள் நபித்துவத்தின் 46 பங்குகளில் ஒரு பங்காகும்.
அது ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமழான் மாதம். அல்லாஹ் அகிலத்தாருக்கு தனது கருணையைப் பொழிய நாடினான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவத்தை வழங்கி சிறப்பிப்பதற்காக மேன்மைமிகு குர்ஆனின் சில வசனங்களுடன் வானவர் ஜிப்ரீலை அவர்களிடம் அனுப்பி வைக்கிறான்.
தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.
இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:
''நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, ''ஓதுவீராக!'' என்றார். அதற்கவர்கள் ''நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ''ஓதுவீராக!'' என்றார். (அப்போதும்) ''நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு ''ஓதுவீராக!'' என்றார். (அப்போதும்) ''நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,
(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி!(அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.
பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து ''என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்'' என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) ''அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்'' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான 'நவ்ஃபல்' என்பவர் மகன் 'வரகா'விடம் அழைத்துச் சென்றார்கள்.
வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர். இன்ஜீல் வேதத்தைக் கற்றவர். வயது முதிர்ந்தவர். கண்பார்வையற்றவர். அவரிடம் கதீஜா (ரழி) ''என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!'' என்றார். ''என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!'' என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா ''இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்'' என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் ''மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ''ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்'' என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார். இத்துடன் வஹி சிறிது காலம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இறைச் செய்தி தாமதம்!
இது குறித்த பல கருத்துகள் நிலவினாலும் அந்த இடைவெளிக் காலம் சில நாட்கள் என்பதே உறுதியான கருத்தாகும். இதையே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இப்னு ஸஅது (ரஹ்) அறிவிக்கிறார்கள். வஹியின் இடைவெளிக்காலம் மூன்று அல்லது இரண்டரை ஆண்டு என்று கூறுவது சரியானதல்ல.
அறிஞர்களின் பல்வேறு கருத்துகளை ஆய்வு செய்ததில் எனக்கு ஒன்று புலப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் மட்டுமே ஹிராவில் தனித்திருந்துவிட்டு ஷவ்வால் முதல் பிறையின் காலையில் வெளியேறி வீட்டுக்கு வருவார்கள். இவ்வாறு நபித்துவத்துக்கு முன் மூன்று ஆண்டுகள் தங்கினார்கள். அந்த மூன்றாவது ஆண்டின் ரமழானில் நபித்துவம் அருளப்பட்டது. புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸின்படி நபி (ஸல்) அவர்கள் ஹிராவில் தங்கி ரமழானை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டாவது வஹி அருளப்பட்டது. இதில் என் கருத்து என்னவென்றால், நபித்துவம் கிடைக்கப் பெற்ற ரமழான் முடிந்த பிறகு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையில்தான் இரண்டாவது வஹி இறங்கியது. அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிராவுக்கு செல்லவில்லை. உறுதியான சான்றுகளின்படி ரமழான் பிறை 21 திங்கள் இரவில் முதல் வஹி அருளப்பட்டது. இரண்டாவது வஹி ஷவ்வாலின் முதல் பிறை வியாழன் காலை அருளப்பட்டது. ஆகவே, இக்கருத்தின்படி வஹியின் இடைவெளிக்காலம் 10 நாட்கள் மட்டுமே! இதுவே ரமழானின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பதற்கும் ஷவ்வால் முதல் பிறை பெருநாளாக இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். (அல்லாஹ்வே நன்கறிந்தவன்!)
வஹியின் இடைவெளிக் காலத்தில் நபி (ஸல்) அவர்கள் திடுக்கமும் கவலையும் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இதுபற்றிஸஹீஹுல் புகாரியில் வருவதாவது:
இரண்டாவது வஹி வருவதற்கு சிறிது காலதாமதமானது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) தோன்றி ''முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர்தான்'' என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் துணிவார்கள். அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.
மீண்டும் ஜிப்ரீல்
இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களுக்கு அச்சம் நீங்கி வஹியின் மீது ஆர்வம் ஏற்படுத்துவதற்காகவே வஹியின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. அவ்வாறே அச்சம் நீங்கி ஆர்வம் ஏற்பட்டதும் வஹியை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அல்லாஹ் இரண்டாவது முறையாக வஹியை இறக்கி அவர்களைச் சிறப்பித்தான். (ஃபத்ஹுல் பாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று ''என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்'' என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.
(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்.(அல்குர்ஆன் 74 : 1-5)
இந்த நிகழ்ச்சி தொழுகை கடமையாவதற்கு முன் நடந்தது. இதைத் தொடர்ந்து வஹி வருவது அதிகரித்தது. (ஸஹீஹுல் புகாரி)
இவ்வசனங்கள்தான் நபித்துவத்தின் தொடக்கமாகும். இவற்றில் இருவகையான சட்டங்கள் உள்ளன.
முதலாவது வகை:
''நீங்கள் எழுந்து சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்''
என்ற வசனத்தின் மூலம் இறைத்தூதை எடுத்தியம்ப வேண்டும். ஏற்காதவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வசனத்தின் பொருள்: வழிகேடு, அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவது, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது ஆகிய குற்றச் செயல்களிலிருந்து இம்மக்கள் விலகவில்லையெனில் அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதனை உண்டென நபியே! நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்.
இரண்டாவது வகை: அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாகப் பேணிப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும். அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்பவர்களுக்கு நீங்கள் அழகிய முன்மாதியாகத் திகழ முடியும் என்று கட்டளையிடப்படுகிறது.
''உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்''
அதாவது அல்லாஹ்வை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்! அதில் எவரையும் இணையாக்காதீர்கள்.
''உங்களது ஆடைகளை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்''
அல்லாஹ்வை மகிமைப்படுத்தி அவன் முன் நிற்பவர் அருவருப்பான தோற்றமின்றி அசுத்தமின்றி உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆடையில் தூய்மையை இவ்வளவு வலியுறுத்தும்போது கெட்ட செயல், தீய சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தூய்மை பெற்றிருக்க வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.
''அசுத்தங்களை வெறுத்திடுங்கள்''
அதாவது, அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு மாறுசெய்வதைத் தவிர்த்து அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாகிவிடுங்கள்.
''நீங்கள் பிரதிபலன் தேடியவராக எவருக்கும் உதவி ஒத்தாசை புரியாதீர்கள்''
அதாவது, பிறருக்கு உதவி செய்யும்போது அதற்குச் சமமான அல்லது அதைவிட அதிகமான பலனை எதிர்பார்க்காதீர்கள்.
''உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்''
நபி (ஸல்) அவர்கள் தங்களது கூட்டத்தாரை அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது தண்டனைகளைக் கூறி எச்சரிக்கை செய்கையில் அவர்களால் துன்பங்கள் நிகழலாம், அவற்றை அல்லாஹ்வுக்காக சகித்துக்கொள்ள வேண்டும் என்று இந்த இறுதி வசனத்தில் உணர்த்தப்படுகிறது.
ஆரம்பமாக அல்லாஹ்வின் அழைப்பு நபி (ஸல்) அவர்களை ஓய்வு உறக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி, உடலை வருத்திக்கொள்ளவும், அனல் பறக்கும் போருக்கு ஆயத்தமாகவும், எதிர்காலத்தில் சமுதாயப் புரட்சிக்கு ஈடுகொடுக்கவும், எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என ஒரு ராணுவ உத்வேகத்திற்கு நபி (ஸல்) அவர்களை தூண்டுகிறது. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுக! அச்சமூட்டி எச்சரிக்கை செய்க! என அழைப்பது எங்ஙனம் உள்ளது என்றால்... ஓ!... தனக்காக வாழும் ஒரு சுயநலவாதிதானே சாய்வு கட்டிலில் ஓய்வு தேடுவார். தாங்கள் அப்படிப்பட்டவரல்லவே! தாங்கள் உயர்ந்த ஒரு பணிக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளதே! எதிர்காலத்தில் பெரும் சமுதாயச் சுமையை தாங்கள் சுமக்க நேரிடுமே! இந்தப் போர்வை சுகத்திற்காகவா புவியில் பிறந்தீர்கள்? தங்களின் உறக்கம் உசிதமானதா? மன நிம்மதியை உள்ளம் விரும்பலாமா? சுகம் தேடலாமா? கூடாது! கூடாது! கூடவே கூடாது! உங்களை மகத்தான பொறுப்பு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. உம்! எழுங்கள்! உங்களுடைய பாரத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராகுங்கள். சிரமத்தையும் தியாகத்தையும் ஏற்றுக்கொள்ள எழுந்து வாருங்கள்! ஓய்வெடுக்க வேண்டிய காலம் ஓடிவிட்டது. இனி கண் துஞ்சாது விழித்து போராடவேண்டும். நீங்கள் அர்ப்பணிப்புக்கு ஆயத்தமாகுங்கள்! தயாராகுங்கள்!
உண்மையில் அல்லாஹ்வின் இந்த வசனம் மிக அச்சுறுத்தலானது. இது நபி (ஸல்) அவர்களை இல்லத்தில் நிம்மதியாக படுத்துறங்குவதிலிருந்து வெளியேற்றி முழு வாழ்க்கையிலும் அழைப்புப் பணியின் சிரமங்களைச் சந்திக்கத் தயார்படுத்தியது.
அல்லாஹ்வின் இக்கட்டளையை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்! அன்று எழுந்தவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக ஓய்வு பெறவேயில்லை. தனக்காகவோ தமது குடும்பத்தினருக்காகவோ இல்லாமல் அல்லாஹ்வினால் ஒப்படைக்கப்பட்ட மாபெரும் பொறுப்பின் சுமையை தனது தோளில் சுமந்து இறையழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அவர்கள் சுமந்தது ஏகத்துவப் போராட்டத்தின் சுமையாகும். அல்லாஹ்வினால் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை செவியேற்றதிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு உறக்கமின்றி மாபெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
அவர்களுக்கு நம் சார்பாகவும் மனித குலத்தின் சார்பாகவும் சிறந்த நற்கூலியை அல்லாஹ் நல்குவானாக!
நபி (ஸல்) அவர்களின் நீண்ட தியாக வாழ்க்கையின் சில பகுதியைத்தான் நாம் பின்வரும் பக்கங்களில் காண இருக்கிறோம்.
வஹியின் வகைகள்
நபி (ஸல்) அவர்களின் நுபுவத்திற்குப் பிந்திய வாழ்வைப்பற்றி பேசுமுன் வஹியின் (இறைச்செய்தியின்) வகைகளைப் பற்றி காண்பது சிறந்தது. வஹியின் வகைகள் பற்றி இப்னுல் கய்'' (ரஹ்) 'ஜாதுல் மஆது' என்ற தனது நூலில் கூறுவதாவது:
1) உண்மையான கனவு. இதுதான் வஹியின் தொடக்கமாக இருந்தது.
2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண்முன் தோன்றாமல் உள்ளத்தில் இறை செய்தியைப் போட்டுவிடுவது. எ.கா. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரூஹுல் குத்ஸ் (ஜிப்ரீல்) எனது உள்ளத்தில் ஊதினார். அதாவது, தனது உணவை முழுமையாக முடித்துக் கொள்ளும்வரை எவரும் மரணிக்க மாட்டார். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உணவைத் தேடுவதில் அழகிய வழியை தேர்ந்தெடுங்கள். உணவு தாமதமாகுவதால் நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து அதைத் தேட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்விடம் உள்ளதை அவனுக்கு வழிப்படுவதன் மூலமே தவிர வேறு வகையில் அடைய முடியாது.''
3) வானவர் ஓர் ஆடவன் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் நிறுத்திக் கொள்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் வானவரை சில நபித்தோழர்கள் கண்டிருக்கிறார்கள்.
4) வானவர் மணியோசையைப் போன்று வருவார். இந்த வகையே நபி (ஸல்) அவர்களுக்கு சுமையாக இருக்கும். நபி (ஸல்) அவர்களை வானவர் தன்னுடன் இணைத்துக் கொள்வார். கடுங்குளிரிலும் நபி (ஸல்) அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹியின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்ந்துவிடும். ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்களின் கால்மீது இருந்த நிலையில் வஹி வந்தது. அதன் சுமை அவர்களது காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது.
5) வானவர், அல்லாஹ் படைத்த அதே உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றுவார். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் செய்திகளை அறிவிப்பார். இவ்வாறு இரண்டு முறை நடந்துள்ளது. இதைப்பற்றி குர்ஆனில் 'அந்நஜ்ம்' என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. நபி (ஸல்) அவர்களுக்கு மிஃராஜில்' தொழுகை கடமையாக்கப்பட்டது போன்று!
7) வானவரின்றி நேரடியாக அல்லாஹ் பேசுவது. மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் பேசியது போல! மூஸா நபிக்கு இந்த சிறப்பு கிடைத்தது பற்றி குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும் இந்த சிறப்பு கிடைத்தது என மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களின் மூலம் தெளிவாகிறது. (ஜாதுல் மஆது)
No comments:
Post a Comment