Wednesday, 9 December 2015

முஹம்மது நபி வரலாறு [அர்ரஹீக்குல் மக்தூம் 022]

பனூ குரைளா போர்


பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.


அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து ''என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்:

''யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவினரிடம் சென்றுதான் தொழ வேண்டும்'' (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைளாவினரின் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக ஏசினர்.

நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினரின் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து இறங்கினார்கள். அக்கிணற்றுக்கு 'அன்னா கிணறு' என்று கூறப்படும்.

மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: ''அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா'' என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின. மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ரிப் நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.

நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்து கொள்ளவில்லை. இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினரின் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினரின் தலைவன் கஅப் இப்னு அஸது தனது மக்களிடம் மூன்று கருத்துகளை முன் வைத்தான்.

1) அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது. அப்படி சேர்ந்தால் நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதும், அவரைப் பற்றி தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.

2) நமது பிள்ளைகளையும் பெண்களையும் நாமே நமது கரத்தால் கொன்றுவிடவேண்டும். பிறகு வாளை உருவி முஹம்மதுடன் போர் புரிவோம். நாம் அவர்களை வெற்றி கொள்வோம் அல்லது நாம் அனைவரும் மரணமாகும் வரை அவருடன் போர் புரிவோம்.

3) சனிக்கிழமை வருவதை எதிர்பார்ப்போம். அன்று நாம் போர் புரியமாட்டோம் என்று முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் அவர்களைத் திடீரெனத் தாக்குவோம்.

இவ்வாறு மூன்று கருத்துகளை கஅப் முன்வைத்தும் அதில் எந்த ஒன்றையும் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கஅப் கடும் கோபமடைந்து, ''உங்களில் ஒருவர் கூட வாழ்நாளில் ஒரு நாளும் உறுதியுடன் வாழ்ந்ததில்லை'' என்று கடுகடுத்தார். குரைளாவினர் இவ்வாறு தங்களது தலைவர் கஅபுடைய எந்த ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.

இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் ''அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?'' என்றனர். அப்போது அபூலுபாபா ''தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!'' என்று சூசகமாகக் கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார், வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார். நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினரின் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவரின் செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் ''அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது'' என்றார்கள்.

அபூலுபாபா தெளிவாகக் கூறிய பின்பும் வேறு வழியின்றி நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு யூதர்கள் வந்தனர். யூதர்கள் பெருமளவு உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர். கிணறுகளும் பலமிக்க கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின் கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில் கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறையால் கடுமையானப் பசிக்கு ஆளாகி, துன்பத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான களைப்புற்றிருந்தனர். ஆக, இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும் சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் நிலைகுலைந்தனர். அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று வீரமூட்டினர். அலீ (ரழி) முஸ்லிம்களைப் பார்த்து ''அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட படைகளே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹம்ஜாவுக்கு ஏற்பட்டதை நானும் அனுபவிப்பேன் அல்லது அவர்களது கோட்டையை வெற்றி கொள்வேன்'' என்று சபதமிட்டார்கள்.

முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள் புரிந்துகொண்டனர். இனியும் காலத்தாமதம் செய்வது உசிதமல்ல என்பதை உணர்ந்தனர். ஆகையால் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தீவிரம் காட்டினர். தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர். நபியவர்கள் ஆண்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் தலைமையின் கீழ் ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர். பெண்களும் சிறுவர்களும் ஆண்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டனர். அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து ''அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள் சகோதரர்களாகிய கஸ்ரஜ் இனத்தவரின் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள் (அவ்ஸ்களாகிய) எங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்'' என்றார்கள். அதற்கு நபியவர்கள் ''உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளித்தால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம்'' என்றனர். நபியவர்கள் ''இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை ஸஅது இப்னு முஆதிடம் ஒப்படைக்கிறேன்'' என்றவுடன் அவ்ஸ் கூட்டத்தினர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போரில் காலில் அம்பு தைத்துவிட்டதின் காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில் தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். அவர் வந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி ''ஸஅதே! உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய தீர்ப்பைக் கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி அழைத்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். ஆனால், ஸஅது (ரழி) அவர்களின் எந்த பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை. குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக அதிகமாகத் தொந்தரவு செய்தவுடன் ஸஅது (ரழி) ''இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பை பொருட்படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது'' என்றார். ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின் விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி) இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி) தங்களது தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.

ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தபோது நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ''உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் ''ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்'' என்றார்கள். அப்போது ஸஅது (ரழி) ''எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் ''ஆம்! செல்லுபடியாகும்'' என்றனர். பிறகு ஸஅது (ரழி) ''முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''ஆம்!'' என்றனர். அப்போது ''இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?'' என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் ''ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்'' என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:

''ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு'' என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் ''ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

உண்மையில் ஸஅது (ரழி) கூறிய தீர்ப்பு மிக நீதமானதே! முற்றிலும் நேர்மையானதே! ஏனெனில், குரைளா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காக 1500 வாட்களையும், 2000 ஈட்டிகளையும், 300 கவச ஆடைகளையும், 500 இரும்புக் கேடயங்களையும், ஒரு தோலினாலான கேடயத்தையும் சேகரித்து வைத்திருந்தனர். இவற்றை முஸ்லிம்கள் அவர்களுடைய இல்லங்களை வெற்றி கொண்ட பின் கைப்பற்றினர்.

இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ் என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப் பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது. பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது. பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக அழைத்துச் செல்லப்படும்போது அடைபட்டிருந்த சிலர் தங்களது தலைவன் கஅபிடம் ''தலைவரே! எங்களை அழைத்துச் சென்று இவர்கள் என்ன செய்கின்றார்கள்!'' என்றனர். அதற்கு கஅப் ''என்ன! உங்களுக்கு எந்நேரத்திலும் எதுவும் விளங்காதா? அழைப்பவர் வந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார். அழைத்துச் செல்லப்பட்டவர் திரும்பி வருவதில்லை. இப்போது கூட புரியவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கொலைதான் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?'' என்றார். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

இவ்வாறு மோசடி மற்றும் வஞ்சக குணமுள்ள விஷப் பாம்புகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன. இவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தங்களை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிப்பதற்காக குவிந்த ராணுவங்களுக்கும் உதவியும் செய்தனர். அந்நேரம் முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆகவே, யூதர்கள் இந்த செயல்பாடுகளின் காரணமாக மாபெரும் குற்றவாளிகளாவர். எனவே, அவர்களை முற்றிலும் கொன்று விடுவதுதான் சரியான தீர்ப்பாக இருந்தது.

இந்த குரைளா யூதர்களுடன் நளீர் யூதர்களைச் சேர்ந்த கொடிய ஷைத்தான் ஹய் இப்னு அக்தப் என்பவனும் கொலை செய்யப்பட்டான். இவன் நமது அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்களின் தந்தையாவான். இவன்தான் இப்போரின் போது முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி கஅப் இப்னு அஸ்அதைத் தூண்டினான். இதன் விவரத்தை முன்பே நாம் கூறியிருக்கிறோம். குறைஷி மற்றும் கத்ஃபான் இனத்தவர்கள் போரிலிருந்து திரும்பிச் சென்ற பின் ஹய் இப்னு அக்தப், தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக குரைளா யூதர்களின் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். மற்றவர்களுடன் இவனும் கைது செய்யப்பட்டு, கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டான். தன்னை கொன்றதற்குப் பின் தனது ஆடைகளை முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அனைத்து பக்கங்களிலும் விரல்களின் நுனி அளவிற்கு கிழித்து ஓட்டையிட்டுக் கொண்டான். நபியவர்களுக்கு அருகில் இவனை அழைத்து வந்தபோது அவன் நபியவர்களைப் பார்த்து ''உன்னைப் பகைத்துப் கொண்டதற்காக நான் என்னை இகழவில்லை. இருப்பினும் அல்லாஹ்வுடன் மோதியவன் தோற்றுவிடுவான் என்பது எனக்குத் தெரியும்'' என்று கூறிவிட்டு ''மக்களே! அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற சோதனைகளையும் போர்களையும் அல்லாஹ் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) மீது விதித்து விட்டான்'' என்று கூறினான். பிறகு அவனது தலை வெட்டப்பட்டது.

கல்லாத் இப்னு சுவைத் (ரழி) என்ற நபித்தோழரை ஒரு யூதப் பெண் மாவாட்டும் திருகையால் கொன்று விட்டாள். எனவே, அப்பெண்ணையும் பழிக்குப் பழி கொல்லப்பட்டது.

முடி முளைத்த அனைவரையும் கொன்று, முடி முளைக்காதவர்களை விட்டு விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். முடி முளைக்காதவர்களில் 'அத்தியா' என்ற ஒரு சிறுவர் இருந்தார். பிற்காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராக மாறினார். (முடி முளைத்தவர்கள் என்பது (மேஜர்) பருவமடைந்தவர்களையும் முடி முளைக்காதவர் என்பது (மைனர்) பருவமடையாதவர்களையும் குறிக்கும்).

ஸாபித் இப்னு கைஸ் (ரழி) என்ற நபித்தோழர் ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதரையும் அவரது குடும்பத்தார்கள் மற்றும் பொருட்களையும் தனக்கு தந்துவிடுமாறு நபியவர்களிடம் கோரினார். நபியவர்களும் அவர் கேட்டவாறே கொடுத்து விட்டார்கள். நபித்தோழர் ஸாபித்துக்கு இதற்கு முன் இந்த யூதர் உதவி புரிந்திருந்தார். ஸாபித் அவரிடம் ''உன்னையும் உமது பொருளையும், உமது குடும்பத்தார்களையும் நபியவர்கள் எனக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். நான் அவற்றைத் திரும்ப உனக்கே கொடுத்து விடுகிறேன்'' என்றார். ஆனால், அந்த ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதன் ''ஸாபித்தே நான் உனக்கு செய்த உதவியின் பொருட்டால் கேட்கிறேன். என்னைக் கொன்று என்னுடைய சகோதரர்களுடன் சேர்த்துவிடு'' என்றான். ஸாபித் அவனது கழுத்தைச் சீவி அவனது நண்பர்களுடனேயே சேர்த்து விட்டு, அவனது மகன் அப்துர் ரஹ்மான் இப்னு ஜுபைரை உயிரோடு விட்டுவிட்டார். இவர் பிறகு இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராகி விட்டார்.

உம்முல் முன்திர் ஸல்மா பின்த் கைஸ் (ரழி) என்ற ஸஹாபிப் பெண்மணி 'ஃபாஆ இப்னு ஸம்வால்' என்ற யூதரைத் தனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும்படி நபியவர்களிடம் கேட்டார். நபியவர்கள் கொடுத்துவிடவே அப்பெண்மணி அவரை உயிரோடு விட்டுவிட்டார். அந்த யூதர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராகி விட்டார்.

அன்றிரவு கோட்டையிலிருந்து கீழே இறங்குவதற்கு முன் சிலர் இஸ்லாமை ஏற்றனர். எனவே, அவர்களைக் கைது செய்யவில்லை. அவர்களது பொருட்களும் குடும்பங்களும் பாதுகாக்கப்பட்டன.

அம்ர் இப்னு ஸஅதி என்ற ஒரு யூதர் இருந்தார். நபியவர்களுக்குத் தனது இனத்தவர் செய்த மோசடியில் அவர் கூட்டு சேரவில்லை. அன்றிரவு அவர் கோட்டையில் இருந்து வெளியேறியதை பாதுகாப்புப் படையின் தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமா பார்த்தார். அவரைப் பற்றி முஹம்மது இப்னு மஸ்லமாவிற்கு தெரிய வரவே அவர் தப்பித்துச் செல்வதற்கு வழிவிட்டார். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற விவரம் வரலாற்றில் அறியப்படவில்லை.

குரைளாவினரின் பொருட்களில் ஐந்தில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் ஒதுக்கிவிட்டு மீதத்தை தங்களின் தோழர்களுக்குப் பங்கிட்டார்கள். அதாவது, குதிரை வீரர்களுக்கு மூன்று பங்கும் (ஒரு பங்கு அவருக்கும் மற்ற இரு பங்கு குதிரைக்கும்) காலாட்படையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பங்கும் என நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஸஅது இப்னு ஜைது (ரழி) என்ற அன்சாரி தோழரின் தலைமையில் கைதிகளை விற்று வர ஒரு குழுவை நபியவர்கள் நஜ்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்று கைதிகளை விற்று குதிரைகளையும் ஆயுதங்களையும் வாங்கி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைதியாக இருந்த பெண்களில் தனக்கென ரைஹானா பின்த் அம்ர் இப்னு குனாஃபா என்பவரை எடுத்துக் கொண்டார்கள். இவர் நபியவர்களின் வாழ்நாள் வரை அவர்களுடன் இருந்தார் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (இப்னு ஹிஷாம்)

ஆனால், வேறு சிலர் கூறுவதாவது: நபி (ஸல்) இவரை விடுதலை செய்து, பின்பு ஹிஜ்ரி 6ல் திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது இவர் இறந்துவிட்டார். நபியவர்கள் இவரை பகீஃ மண்ணறையில் அடக்கம் செய்தார்கள். (தல்கீஹ்)

குரைளாவின் பிரச்சனை முடிந்தவுடன் ஸஅது இப்னு முஆத் (ரழி) தன் விஷயத்தில் செய்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகரித்தான். ஸஅதின் வேண்டுதல் என்ன என்று இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இவருக்கென பள்ளிவாசலில் ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்கள். நபியவர்கள் அவரை அங்கு தங்க வைத்து அடிக்கடி நலம் விசாரித்து வந்தார்கள். சில நாட்களில் அவரது காயம் வீங்கி உடைந்தது. அதிலிருந்து வழிந்த இரத்தம் கிஃபார் கிளையினருக்காக பள்ளியில் கட்டப்பட்டிருந்த கூடாரத்தில் பரவியது. அதைப் பார்த்து அக்கூடாரத்தில் இருந்தவர்கள் ''இது என்ன! உங்கள் கூடாரத்திலிருந்து வருகிறதே!'' என்று கேட்டனர். அங்கு சென்று பார்க்கையில் ஸஅது (ரழி) அவர்களின் காயம் உடைந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இறுதியில் அவர்கள் அக்காயத்தினாலேயே இறந்து விட்டார்கள்.(ஸஹீஹுல் புகாரி)

ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களின் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷே' குலுங்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஅது இப்னு முஆதின் ஜனாஸாவை (பிரேதத்தைச்) சுமந்து சென்றபோது அது மிக இலேசாக இருந்தது. நயவஞ்சகர்கள் ''என்ன இவரது ஜனாஸா இவ்வளவு இலேசாக உள்ளதே?'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நிச்சயமாக வானவர்கள் அதைச் சுமந்து செல்கிறார்கள்'' என்றார்கள். (ஸுனனுத் திர்மிதி)

குரைளாவினரை முற்றுகையிட்டிருந்த போது கல்லாத் இப்னு ஸுவைத் (ரழி) என்ற நபித்தோழர் யூதப் பெண் ஒருத்தியால் கொல்லப்பட்டார். மேலும், உக்காஷாவின் சகோதரர் அபூ ஸினான் இப்னு மிஹ்ஸன் (ரழி) என்பவரும் முற்றுகையின் காலத்தில் இறந்தார்கள்.

அபூ லுபாபா ஆறு இரவுகள் தூணிலேயே தன்னைக் கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் அவரது மனைவி அவரை அவிழ்த்து விடுவார். அவர் தொழுது முடித்தவுடன் மீண்டும் தன்னைத் தூணில் கட்டிக் கொள்வார். நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில் இருந்தபோது அதிகாலை ஸஹர் நேரத்தில் அபூலுபாபாவின் பாவமன்னிப்பு தொடர்பான வசனம் இறங்கியது.

உம்மு ஸலமா (ரழி) தனது அறையின் வாசலில் நின்றவராக ''அபூ லுபாபாவே! நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்'' என்று கூறினார். இச்செய்தியைக் கேட்ட மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள் சுபுஹு தொழுகைக்கு வந்தபோது அவரை அவிழ்த்து விட்டார்கள்.

இந்தப் போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது. முற்றுகை மொத்தம் இருபத்தைந்து இரவுகள் நீடித்தது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அல்லாஹுத் தஆலா அகழ் போர் தொடர்பாகவும், குரைளா போர் தொடர்பாகவும் 'அஹ்ஸாப்' எனும் அத்தியாத்தில் பல வசனங்களை இறக்கினான். அவ்வசனங்களில் இச்சம்பவங்கள் தொடர்பான சில முக்கிய நிகழ்வுகளை அல்லாஹ் குறிப்பிட்டு கூறியிருக்கிறான். மேலும், இறைநம்பிக்கையாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் நிலைமைகளையும், முஸ்லிம்களை எதிர்க்க வந்த இராணுவங்கள் தோற்றுப்போனதையும், மோசடி செய்யும் யூதர்களின் நிலைமை என்னவானது என்பதையும் அதில் தெளிவாக அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை

ஸல்லாம் இப்னு அபுல்ஹுகைக். (ஹிஜ் 5, துல்கஅதா)

இவனது புனைப் பெயர் 'அபூராஃபி' எனப்படும். யூத இனத்தைச் சேர்ந்த இவன் மிகப் பெரிய கொடியவனாக இருந்தான். முஸ்லிம்களுக்கு எதிராக அகழ் போரில் படைகளை ஒன்று திரட்டியவர்களில் இவனும் ஒருவன். இவன் போரின் போது முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பெருமளவில் பொருளுதவி செய்தான். (ஃபத்ஹுல் பாரி)

இவன் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் நோவினை தந்து வந்தான். குரைளா யூதர்களின் பிரச்சனையை முடித்த பின் அவனைக் கொலை செய்துவிட கஸ்ரஜ் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரினர். இதற்கு முன் இவனைப் போன்ற கொடியவன் கஅபு இப்னு அஷ்ரஃபை அவ்ஸ் கிளையினர் கொன்றதால் அதுபோன்ற ஒரு சிறப்பைத் தாங்களும் அடைய வேண்டும் என கஸ்ரஜ் கிளையினர் விரும்பினர். எனவே, நபியவர்களிடம் அதற்கு அனுமதி கோருவதில் தீவிரம் காட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், அவனைத் தவிர அங்குள்ள சிறுவர்களை அல்லது பெண்களை கொல்லக் கூடாது என தடை விதித்தார்கள். நபியவர்களிடம் அனுமதி பெற்று ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழு இதற்காக புறப்பட்டுச் சென்றது. இவர்கள் அனைவரும் கஸ்ரஜ் கிளையினரில் ஸலமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் தளபதியாக அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) இருந்தார். இக்குழு அபூராஃபியின் கோட்டை இருந்த கைபர் நகரத்தை நோக்கி புறப்பட்டது. இவர்கள் கோட்டையை அடையும்போது சூரியன் மறைந்து இருட்டிவிட்டது. மக்கள் தங்களின் கால்நடைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பி விட்டனர்.

அப்போது அப்துல்லாஹ் இப்னு அதீக் தனது தோழர்களிடம் ''நீங்கள் இங்கு இருங்கள். நான் சென்று வாயில் காவலரிடம் நளினமாகப் பேசிப் பார்க்கிறேன். முடிந்தால் நான் கோட்டைக்குள் நுழைந்து விடுகிறேன் என்று கூறி புறப்பட்டார். கோட்டை கதவுக்கருகில் சென்றபோது தன்னை ஆடையால் மறைத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது போல் அமர்ந்து கொண்டார். கோட்டைக்குள் செல்ல வேண்டிய மக்கள் சென்று விட்டனர். அப்போது வாயில் காவலரிடம் ''அல்லாஹ்வின் அடியானே! உள்ளே செல்வதாக இருந்தால் இப்போதே சென்றுவிடு. நான் கதவை மூடப் போகிறேன்'' என்றான்.

அப்துல்லாஹ் இப்னு அதீக் (ரழி) கூறுகிறார்கள்: நான் கோட்டைக்குள் சென்று ஒரு மறைவிடத்தில் மறைந்து கொண்டேன். அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து விட்டனர் என்று தெரிந்தவுடன் வாயில் காவலாளி கதவை மூடினான். பின்பு சாவிகளை ஓர் ஆணியில் தொங்க விட்டான். நான் அந்த சாவிகளை எடுத்து வைத்துக் கொண்டேன். அபூ ராஃபி, சில நண்பர்களுடன் அவனது அறையில் இராக்கதைகள் பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தவர்கள் சென்றபின் நான் அவனது அறையை நோக்கி மேலே ஏறினேன். ஒவ்வொரு கதவாக திறந்து உள்ளே சென்றவுடன் அக்கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டேன். அதாவது இங்கு உள்ளவர்களுக்கு நான் இருப்பது தெரிந்து, என்னை நோக்கி பிடிப்பதற்கு வந்தாலும் அவர்கள் என்னை பிடிப்பதற்குள் நான் அவனைக் கொன்று விடலாம் என்பதற்காக இவ்வாறு செய்தேன். இறுதியாக அவன் இருந்த இடம் வரை சென்று விட்டேன். ஒரு இருட்டறையில் தனது குடும்பத்தார்களுடன் இருந்தான். ஆயினும், அறையில் எப்பகுதியில் இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

நான் ''அபூ ராஃபி! என்று சப்தமிட்டு அழைத்தேன். அவன் ''யாரது?'' என்று வியந்து கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையை நோக்கிப் பயந்தவனாகவே எனது வாளை வீசினேன். ஆனால், எனது முயற்சி பலனளிக்கவில்லை. அவன் கூச்சலிடவே நான் உடனடியாக அறையிலிருந்து வெளியேறி ஒளிந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து திரும்ப அறைக்குள் சென்று ''அபூ ராஃபியே! சற்று நேரத்திற்கு முன் இங்கு என்ன சப்தம்?'' என்றேன். அதற்கவன் ''உனது தாய்க்கு நாசம் உண்டாகட்டும். சற்று நேரத்திற்கு முன் ஒருவன் என்னைக் கொல்ல வந்தான்'' என்றான். உடனே நான் மற்றொரு முறை அவனை வாளால் வெட்டிக் காயப்படுத்தினேன். ஆனால், அவனைக் கொல்ல முடியவில்லை. பின்பு வாளால் அவனது வயிற்றில் குத்தினேன். அதன் நுனி முதுகுப்புறமாக வெளிவந்தது. அதனால் நான் அவனை இம்முறை நிச்சயமாக கொன்றுவிட்டேன் என்று தெரிந்து கொண்டேன். பின்பு ஒவ்வொரு கதவாக திறந்து கொண்டு ஓர் ஏணியின் வழியாக கீழே இறங்கும் போது ஏணிப்படிகள் முடிந்துவிட்டன என்று எண்ணிக் காலை வைக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டேன். அதில் எனது கெண்டைக் கால் உடைந்து விட்டது. தலைப்பாகையால் என் காலைக் கட்டிக் கொண்டு நடந்து வந்து வாசலருகில் உட்கார்ந்து கொண்டேன்.

அவனைக் கொன்று விட்டேன் என்று உறுதியாகத் தெரியும்வரை வெளியில் செல்லாமல் இன்றிரவை இங்கேயே கழிப்பது என்று முடிவு செய்தேன். காலையில் மரணச் செய்தி அறிவிப்பவன் ''ஜாஸ் மாநிலத்தின் மாபெரும் வியாபாரப் பிரமுகர் அபூ ராஃபி கொல்லப்பட்டு விட்டார்'' என்று அறிவித்தான். இதை நான் எனது தோழர்களிடம் வந்து கூறினேன். ''வெற்றி கிடைத்து விட்டது, அல்லாஹ் அபூ ராஃபியைக் கொன்று விட்டான்'' என்று கூறினேன். இதற்குப் பின் நான் நபியவர்களிடம் சென்று முழு விவரத்தையும் கூறினேன். அப்போது நபியவர்கள் உனது காலை நீட்டுவாயாக! என்று கூறினார்கள். நான் எனது காலை நீட்டியவுடன் நபியவர்கள் அதன் மீது தடவினார்கள். அது முற்றிலும் குணமடைந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி)

இதுவரை நாம் கூறிய இந்நிகழ்ச்சி இமாம் புகாரி (ரஹ்) அறிவித்ததாகும். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) இதற்கு சற்று மாற்றமாக அறிவிக்கிறார்: அதாவது, அனைத்து நபித்தோழர்களும் கோட்டைக்குள் சென்று அபூ ராஃபியைக் கொல்வதில் பங்கெடுத்தனர். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) என்ற தோழர்தான் அவனை வாளால் வெட்டினார். அப்துல்லாஹ் இப்னு அதீக்கின் கெண்டைக்கால் உடைந்து விட்டதால் மற்ற தோழர்கள் அவரைச் சுமந்து கொண்டு கோட்டைக்குள் தண்ணீர் வருவதற்காக இருந்த வழியின் உள் பகுதிக்குள் நுழைந்து கொண்டனர். கோட்டையில் இருந்த யூதர்கள் நெருப்பை மூட்டி விரைந்து சென்று பல இடங்களில் தேடியும் அவர்களால் நபித்தோழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்பு யூதர்கள் அனைவரும் தங்கள் தலைவன் நிலையை அறிய திரும்பினர். அதற்குப் பின் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அதீக்கை சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தனர். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் ஹிஜ்ரி 5 துல்கஅதா அல்லது துல்ஹஜ் மாதத்தில் நடைபெற்றது. (ரஹ்மதுல்லில் ஆலமீன்)

மேற்கூறப்பட்ட அகழ் மற்றும் குரைளா போர்களிலிருந்து ஓய்வு பெற்றபோது அமைதிக்கும், சமாதானத்திற்கும் பணியாமல் இருந்த கிராம அரபிகளையும் மற்ற அரபுக் குலத்தவர்களையும் கண்டித்து பாடம் கற்பிக்கும் விதமாக பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் கையாண்டார்கள். அவற்றின் விவரம் வருமாறு:

முஹம்மது இப்னு மஸ்லமா படைப் பிரிவு (ஹிஜ் 6, முஹர்ரம் 10)

இது அகழ் மற்றும் குரைளா போர்களுக்குப் பின் அனுப்பப்பட்ட முதல் படை. இப்படையில் முப்பது வீரர்கள் இருந்தனர்.

நஜ்து மாநிலத்திலுள்ள 'பகராத்' என்ற பகுதியில் 'ழய்யா' என்ற ஊர் வழியாக 'கர்தா' என்ற இடத்தை நோக்கி இப்படை புறப்பட்டது. ழய்யாவுக்கும் மதீனாவுக்கும் இடையில் உள்ள பயண தூரம் ஏழு இரவுகளாகும். இப்படையின் நோக்கம் அங்கு வசித்து வந்த பக்ர் இப்னு கிளாப் கிளையினரைத் தாக்குவதாகும். முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எதிரிகள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். முஸ்லிம்கள் அங்குள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு முஹர்ரம் பிறை இறுதியில் மதீனா வந்து சேர்ந்தனர்.

தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, சுமாமா இப்னு உஸால் என்பவரை நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து அனுப்பினான். இவர் ஹனீஃபா என்ற கிளையினரின் தலைவர் ஆவார். இவரை இப்படையினர் வழியில் கைது செய்து தங்களுடன் அழைத்து வந்தனர். (ஸீரத்துல் ஹல்பியா)

இவரை மதீனாவின் பள்ளியிலுள்ள ஒரு தூணில் முஸ்லிம்கள் கட்டிவிட்டனர். அவரை நபி (ஸல்) அவர்கள் சந்தித்து ''சுமாமா நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''முஹம்மதே! என்னிடத்தில் நன்மை இருக்கிறது. நீர் என்னைக் கொலை செய்ய நாடினால் அத்தண்டனைக்குத் தகுதியான ஒருவரைத்தான் கொலை செய்தவராவீர்! நீர் எனக்கு உதவி செய்து என்னை விட்டுவிட்டால் உங்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். உங்களுக்கு பொருள் வேண்டும் என்றால் என்னிடம் கேள். நீர் விரும்பிய அளவு நான் உங்களுக்குத் தருகிறேன்'' என்று கூறினார். நபியவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் சென்று விட்டார்கள்.

மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் அவருக்கருகில் சென்றபோது அவரிடம் முன்னர் கேட்டது போல் கேட்கவே அவரும் முன்பு சொன்ன பதிலையே கூறினார். நபியவர்கள் அவரை அப்படியே விட்டுச் சென்று விட்டார்கள். மூன்றாவது முறை நபியவர்கள் அவர் அருகில் சென்று அதேபோன்று கேட்க அவரும் தனது பழைய பதிலையே திரும்பக் கூறினார். அப்போது நபியவர்கள் சுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்று தனது தோழர்களுக்குக் கூறவே, தோழர்கள் அவரை அவிழ்த்து விட்டார்கள். அவர் பள்ளிக்கு அருகிலிருந்த பேரீச்சம் பழ தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு நபியவர்கள் முன்னிலையில் இஸ்லாமை ஏற்றார்.

பின்பு ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முன்போ இப்பூமியில் உங்களது முகத்தைவிட வெறுப்பான ஒரு முகம் எனக்கு இருந்ததில்லை. ஆனால், இன்று உங்களது முகமே முகங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாகி விட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்பூமியில் உங்களது மார்க்கத்தை விட வெறுப்பான மார்க்கம் எனக்கு வேறு ஒன்றும் இருக்கவில்லை. ஆனால், இப்போது உங்களது மார்க்கம் மார்க்கங்களில் எல்லாம் எனக்கு மிக விருப்பமானதாக மாறிவிட்டது. உங்களின் படை என்னை கைது செய்தபோது நான் உம்ராவிற்காக சென்று கொண்டிருந்தேன். நான் இப்போது என்ன செய்ய? என்று அவர் கேட்க, நபியவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி, அவர் நாடி வந்த உம்ராவை முடித்து வருமாறு கூறினார்கள்.

அவர் அங்கிருந்து புறப்பட்டு மக்கா வந்தவுடன் அவரைப் பார்த்த குறைஷிகள் ''சுமாமா நீர் என்ன மதம் மாறிவிட்டீரா?'' என்று கேட்டனர். அதற்கவர் ''இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் முஹம்மதுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக!'' கூறுகிறேன். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்காத வரை யமாமாவிலிருந்து உங்களுக்கு எந்த கோதுமை தானியங்களும் வராது. (யமாமாவிலிருந்துதான் மக்காவிற்கு கோதுமை வந்து கொண்டிருக்கிறது.) உம்ராவை முடித்துக் கொண்டு சுமாமா தனது ஊருக்குச் சென்றவுடன் அங்கிருந்து மக்காவிற்கு தானியங்கள் வருவதைத் தடுத்துவிட்டார். இதனால் குறைஷிகள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி நபியவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, சுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் அவருக்கு கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை நபியவர்கள் நிறைவேற்றினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது) 

லஹ்யான் போர் (ஹிஜ் 6, ரபீவுல் அவ்வல்)

லஹ்யான் கிளையினர்தான் 'ரஜிஃ' என்ற இடத்தில் பத்து நபித்தோழர்களை வஞ்சகமாகக் கொலை செய்தனர். இவர்களது இல்லங்களும் இருப்பிடங்களும் மக்காவிற்கு மிக அருகில்தான் இருந்தன. மக்காவிலோ இஸ்லாமிற்கு எதிரியாக இருக்கும் குறைஷி மற்றும் அரபு குலத்தவர்கள் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் மக்கா எல்லை வரை சென்று லஹ்யான் இனத்தவர் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றமாகக் கருதவில்லை.

அகழ்போரில் குறைஷி மற்றும் அரபு இனத்தவரின் இராணுவங்கள் வலுவிழந்து சிதறி சென்று விட்டதால் நிலைமை ஓரளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக இருந்தது. எனவே, ரஜீஃயில் கொல்லப்பட்ட தங்களது தோழர்களுக்காக லஹ்யானியரிடம் பழிதீர்க்க நாடி ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ஜமாதுல் அவ்வல் மாதத்தில் இருநூறு தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஷாம் நாட்டை நோக்கிப் பயணிப்பதாகக் கூறி வெகு விரைவாகப் பயணத்தை மேற்கொண்டு அமஜ், உஸ்ஃபான் என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள 'குரான்' என்ற பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்குதான் நபித்தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்காக அல்லாஹ்வின் கருணை வேண்டி பிரார்த்தித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட லஹ்யானியர் அங்கிருந்து தப்பித்துச் சென்று மலை உச்சியில் ஏறி பதுங்கிக் கொண்டனர். எவரும் முஸ்லிம்களின் கையில் அகப்படவில்லை. நபியவர்கள் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிறு சிறு குழுக்களை அனுப்பி தேடும்படி பணித்தார்கள். ஆனால், எவரையும் பிடிக்க முடியவில்லை. நபியவர்கள் அங்கிருந்து 'உஸ்ஃபான்' என்ற இடம் வரை சென்றார்கள். அங்கிருந்து 'குராவுல் கமீம்' என்ற இடத்திற்கு பத்து குதிரை வீரர்களை அனுப்பினார்கள். தான் வந்திருக்கும் செய்தி குறைஷிகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள். பின்பு அங்கிருந்து தனது தோழர்களை அழைத்துக் கொண்டு மதீனாவிற்குத் திரும்பினார்கள். இவ்வாறு நபியவர்கள் பதினான்கு நாட்கள் தங்களது படையுடன் சுற்றிவிட்டு திரும்பினார்கள்.

குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்

மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் அனுப்பினார்கள். அதன் சுருக்கம் வருமாறு:

1) உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை 'கம்ர்' என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6, ரபீஉல் அவ்வல் அல்லது ரபீஉல் ஆகில் நபியவர்கள் அனுப்பினார்கள். 'கம்ர்' என்பது அஸத் கிளையினருக்கு சொந்தமான கிணற்றுக்குரிய பெயராகும். அங்குதான் அவர்கள் வசித்து வந்தனர். முஸ்லிம்களின் வருகையை அறிந்த அக்கூட்டத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களின் இருநூறு ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.

2) முஹம்மதிப்னு மஸ்லமா (ரழி) அவர்களைப் பத்து தோழர்களுடன் ஸஅலபா கிளையினர் வசிக்கும் 'துல்கஸ்ஸா' என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரபிஉல் அவ்வல் அல்லது ரபிஉல் ஆகில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். முஸ்லிம்களின் வருகையை அறிந்த ஸஅலபாவினர் இரகசியமாக மறைந்து கொண்டனர். நபித்தோழர்கள் ஓர் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தாக்குதல் நடத்தி முஹம்மதிப்னு மஸ்லமாவைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று விட்டனர். இவர் மட்டும் காயத்துடன் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார்.

3) இந்நிகழ்ச்சிக்குப் பின் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களை நாற்பது தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகில் துல்கஸ்ஸாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இவர்கள் இரவெல்லாம் நடந்து சென்று காலையில் ஸஅலபாவினர் மீது படையெடுத்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தப்பித்து மலைகளுக்கு ஓடிவிட்டனர். அவர்களிலிருந்து ஒருவரை மட்டும் முஸ்லிம்களால் பிடிக்க முடிந்தது. பிறகு அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்கள் எதிரிகளின் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா திரும்பினர்.

4) ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகிர் மாதத்தில் ஜைதுப்னு ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஜமூம்' என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜமூம் என்பது 'மர்ருல் ளஹ்ரான்' என்ற இடத்திலுள்ள சுலைம் கிளையினருக்கு சொந்தமான கிணறாகும். ஜைத் அவர்கள் பனூ சுலைம் கிளையினரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது முஸைனா கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கைது செய்தார்கள். அவரது பெயர் ஹலீமாவாகும். அப்பெண் சுலைமினருக்கு சொந்தமான இடங்களைக் காண்பித்துக் கொடுத்தார். அங்கு சென்று முஸ்லிம்கள் அதிகமான கால்நடைகளையும், கைதிகளையும் பிடித்து வந்தனர். மதீனா திரும்பியவுடன் விஷயம் அறிந்து நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை உரிமையிட்டு திருமணமும் முடித்து வைத்தார்கள்.

5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் 'ஈஸ்' என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170 வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில் நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத் திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும் தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே, நபியவர்கள் பொருள்களை திரும்பத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.

நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித் தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள். இவ்வாறுதான் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் வந்துள்ளது. (ஸுனன் அபூதாவூது)

ஏனெனில், முஸ்லிமான பெண்களை இறைநிராகரிப்பாளர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கக் கூடாது என்ற அல்லாஹ்வுடைய கட்டளை அப்போது வரைக்கும் இறங்கவில்லை. ஆனால், சிலர் ''மறுபடியும் புதிய திருமணம் செய்துதான் நபியவர்கள் சேர்த்து வைத்தார்கள்'' என்று கூறுகின்றனர். இது தவறாகும். அவ்வாறே ஆறு வருடங்கள் கழித்து இருவரையும் சேர்த்து வைத்தார்கள் என்று கூறுவதும் சரியாகாது. ஏனெனில், அதற்குரிய ஆதாரம் வலுவில்லாதது.(துஹ்ஃபத்துல் அஹ்வதி)

6) மீண்டும் ஜைத் அவர்களைப் பதினைந்து தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஆகிர் மாதத்தில் ஸஃலபாவினர் வசிக்கும் 'தஃப்' அல்லது 'தக்' என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். நபியவர்கள்தான் தங்களின் படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று நினைத்து அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஜைத் அவர்கள் இருபது ஒட்டங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மதீனா வந்தார்கள்.

7) பன்னிரெண்டு நபர்களுடன் 'வாதில் குரா' என்ற இடத்திற்கு ஹிஜ்ரி 6, ரஜப் மாதத்தில் அங்கு எதிரிகளின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்து வருவதற்காக நபியவர்கள் ஜைதை அனுப்பி வைத்தார்கள். ஆனால், அங்கிருந்தோர் நபித்தோழர்களைத் தாக்கி ஒன்பது தோழர்களைக் கொன்று விட்டனர். மூவர் மட்டும் தப்பித்து மதீனா திரும்பினர். அதில் ஜைது இப்னு ஹாரிஸாவும் ஒருவர். (ரஹ்மதுல்லில் ஆலமீன், ஜாதுல் மஆது)

8) 'ஸயத்துல் கபத்' எனப்படும் இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடரை நாம் பார்க்கும்போது இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு சற்று முன் நடைபெற்றது என்று தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதில் கலந்து கொண்ட ஜாபிர் (ரழி) அறிவிப்பதாவது: ''300 வாகன வீரர்களை அபூ உபைதாவின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து பதுங்கி இருந்தோம். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டதால் காய்ந்த இலைகளைத் தின்றோம். எனவே, இப்படைக்கு 'ஜய்ஷுல் கபத்' -இலை படை- என்று பெயர் வந்தது. எங்களில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை ஒரே நாளில் அறுப்பார். மற்றொரு நாள் மீண்டும் மூன்று ஒட்டகங்களை அறுப்பார். பின்பு தளபதி அபூ உபைதா (ரழி) அதனைத் தடை செய்துவிட்டார். அதற்குப் பின் கடலிலிருந்து 'அம்பர்' என்ற மிகப்பெரிய மீன் ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் பதினைந்து நாட்கள் சாப்பிட்டோம். அதனுடைய கொழுப்பை எண்ணையாக பயன்படுத்தி தடவிக் கொண்டோம். அதன் மூலம் எங்களுடைய உடல்கள் நல்ல ஆரோக்கியமடைந்தன.

அபூ உபைதா (ரழி) அதனுடைய விலா எலும்பில் ஓர் எலும்பை எடுத்தார். பின்பு அதை நிறுத்தி, படையில் மிக உயரமாக உள்ள ஒருவரை மிக உயரமான ஒட்டகத்தில் உட்கார வைத்து அதற்குக் கீழ் செல்லும்படி கூறினார்கள். அந்த எலும்பு அவ்வளவு பெரியதாக இருந்தது. அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவு நாங்கள் சேகரித்து வைத்துக் கொண்டோம். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறியபோது இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில் மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள் என்றார்கள். நாங்கள் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்று நாம் கூறியதற்குக் காரணம், முஸ்லிம்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தவொரு வியாபாரக் கூட்டத்தையும் கைப்பற்றுவதற்காக செல்லவில்லை.

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

இப்போர் ஒரு விரிவாகக் கூறப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இதனால் பல குழப்பங்களும் பிரச்சனைகளும் இஸ்லாமியச் சமுதாயத்தில் ஏற்பட்டன. இக்குழப்பத்தின் இறுதியில் நயவஞ்சகர்களுக்குக் கேவலம் ஏற்பட்டது. இஸ்லாமியச் சமூகத்திற்குப் பல மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தது. முதலில் நாம் இப்போரைப் பற்றி கூறியதற்குப் பின்பு அப்பிரச்னைக்குரிய நிகழ்ச்சியைப் பற்றி கூறுவோம்.

இப்போர் ஹிஜ்ரி 5, ஷஅபான் மாதத்தில் நடைபெற்றதென்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஹிஜ்ரி 6ல் நடைபெற்றது என்று கூறுகின்றார்.

இப்போருக்கான காரணமாவது: முஸ்தலக் எனும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் தனது கூட்டத்தினரையும் மற்றும் பல அரபிகளையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர் புரிவதற்காக வருகிறார் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதை உறுதியாகத் தெரிந்து வர, புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமி (ரழி) என்பவரை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் ஹாரிஸ் இப்னு அபூ ழிராரை வழியில் சந்தித்து விபரமறிந்து நபியவர்களிடம் திரும்பி செய்தியைக் கூறினார்.

செய்தி உண்மைதான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டவுடன் நபியவர்கள் தோழர்களைப் புறப்படுவதற்கு ஆயத்தமாக்கினார்கள். ஷஅபான் பிறை 2ல் மதீனாவிலிருந்து நபியவர்கள் கிளம்பினார்கள். இதுவரை எப்போதும் கலந்துகொள்ளாத நயவஞ்சகர்களின் ஒரு கூட்டம் நபியவர்களுடன் புறப்பட்டது. நபி (ஸல்) இப்போருக்குச் செல்லும்போது மதீனாவில் ஜைதுப்னு ஹாரிஸாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். சிலர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது அபூதர் என்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் நுமைலா இப்னு அப்துல்லாஹ் என்றும் கூறுகின்றனர்.

ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் இஸ்லாமியப் படையின் செய்தியை அறிந்து வருவதற்காக ஓர் ஒற்றனை அனுப்பினான். முஸ்லிம்கள் அவனைக் கைது செய்து கொன்று விட்டனர். ஹாரிஸ் இப்னு ழிராருக்கும் அவனுடன் இருந்தவர்களுக்கும் ''நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒற்றர்களைக் கொன்று விட்டார்கள். மேலும், தங்களை நோக்கி விரைந்து வருகிறார்கள்'' என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்களுக்குக் கடுமையான அச்சம் ஏற்பட்டது. இதனால் பல அரபுக் கிளையினர் அவர்களின் படையிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் 'முரைஸீ' என்ற இடத்தை வந்தடைந்தார்கள். இங்குதான் எதிரிகள் தங்கியிருந்தனர். இது கடற்கரைக்கு அருகில் 'குதைத்' என்ற ஊர் ஓரத்தில் உள்ள கிணறாகும். அங்கு நபியவர்கள் தங்களது தோழர்களை வரிசையாக நிற்கவைத்து முஹாஜிர்களுக்குரிய கொடியை அபூபக்ர் (ரழி) அவர்களிடமும், அன்சாரிகளுக்குரிய கொடியை ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களிடமும் கொடுத்தார்கள். பின்பு இரு படையினரும் சிறிது நேரம் அம்பெறிந்து சண்டை செய்து கொண்டனர். அதற்குப் பின் நபியவர்கள் கட்டளையிடவே தோழர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக எதிரிகள் மீது பாய்ந்தனர். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்களுக்கு வெற்றியும் இணைவைப்பவர்களுக்குத் தோல்வியும் கிடைத்தது. போருக்கு வந்திருந்த எதிரிகளின் பெண்களையும், பிள்ளைகளையும், ஆடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். இப்போரில் எதிரிகளால் முஸ்லிம்களில் எவரும் கொலை செய்யப்படவில்லை. ஆனால், அன்சாரி ஒருவர் ஒரு முஸ்லிமை எதிரிப் படையில் உள்ளவர் என்று எண்ணி தவறாகக் கொலை செய்து விட்டார்.

இப்போரைப் பற்றி இவ்வாறுதான் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அறிஞர் இப்னுல் கய்யூம்' (ரஹ்) இதற்கு மாற்றமாகக் கூறுகிறார். அவர் கூறுவதாவது: இப்படையெடுப்பில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் கிளையினர் மீது தாக்குதல் நடத்த வந்தார்கள். முஸ்தலக் கிளையினர் கொல்லையிடுவதற்காக தங்கள் ஊரை விட்டு வெளியில் சென்றிருந்தனர். நபியவர்கள் அவர்களின் குடும்பங்களையும் பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினார்கள். இவ்வாறுதான்ஸஹீஹுல் புகாரியிலும் வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இக்கூட்டத்தின் தலைவர் ஹாரிஸின் மகள் ஜுவைரியாவும் இருந்தார். இவரை ஸாபித் இப்னு கைஸ் (ரழி) தனது பங்கில் பெற்றார். இவரை உரிமை விடுவதற்காக இவரிடம் ஓர் ஈட்டுத் தொகை பேசி ஸாபித் (ரழி) ஒப்பந்தம் செய்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவின் சார்பாக அத்தொகையைக் கொடுத்து விட்டார்கள். பின்பு ஜுவைரியாவைப் பெண் பேசி திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்களின் திருமணத்தின் காரணமாக முஸ்தலக் கிளையைச் சேர்ந்த நூறு குடும்பத்தினரை முஸ்லிம்கள் உரிமையிட்டனர். ஏனெனில், இப்போது இந்த கைதிகளெல்லாம் நபியவர்களின் மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே! அவர்களை எப்படி நாம் அடிமைகளாக வைத்திருப்பது என்று நபித்தோழர்கள் காரணம் கூறினார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்போரில் ஏற்பட்ட ஏனைய சம்பவங்களின் தலையாய காரணமாக இருந்தவன் நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையும் அவனது கூட்டாளிகளுமே. ஆகவே, இஸ்லாமியச் சமுதாயத்தில் இந்நயவஞ்சகர்களின் செயல்பாடுகள் பற்றி முதலில் சற்று தெரிந்து கொள்வது அவசியமாகும்.

நயவஞ்சகர்களின் நடவடிக்கைகள்

அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமின் மீதும் முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நபி (ஸல்) அவர்களின் மீதும் எல்லையற்ற எரிச்சல் கொண்டிருந்தான். அதற்குக் காரணம் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் இவனைத் தலைவனாக்கி மணிமகுடம் சூட்டுவதற்குத் தயாராக இருந்த சமயத்தில் நபி (ஸல்) வருகை தர, அவர்கள் அனைவரும் இவனைப் புறக்கணித்து விட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் நபியவர்கள்தான் தனது ஆட்சியை பறித்துக் கொண்டார்கள் என்று இவன் மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் முன்பும், ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த பகைமையையும் கசப்பையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டிருந்தான். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு உபாதா (ரழி) அவர்களை நலம் விசாரிப்பதற்காக கழுதையின் மீது சென்று கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் ஒரு சபையில் அப்துல்லாஹ் இப்னு உபை அமர்ந்திருந்தான். அவனைக் கடந்து செல்லும்போது ''முஹம்மதே! எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்'' என்று கூறினான். நபி (ஸல்) அவர்கள் அச்சபையில் நின்று குர்ஆன் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவன் ''நீ உனது வீட்டில் உட்கார்ந்து கொள்! எங்களது சபையில் வந்து எங்களைத் தொந்தரவு செய்யாதே'' என்று நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கூறினான். இது அவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம்)

பத்ர் போருக்குப் பின் இவன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாயளவில் தான் ஏற்றுக்கொண்டான் மனப்பூர்மாக அல்ல. ஆகவே, இவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரியாகவே இருந்து வந்தான். இஸ்லாமியச் சமுதாயத்தை பிரிப்பதற்கும், இஸ்லாமை பலவீனப்படுத்துவதற்கும் எப்போதும் சிந்தனை செய்து வந்தான். இஸ்லாமின் எதிரிகளுடன் தோழமை கொண்டிருந்தான். கைனுகா யூதர்களின் விஷயத்தில் இவன் குறுக்கிட்டது போன்றே உஹுத் போரில் இவன் செய்த மோசடி, முஸ்லிம்களைப் பிரிப்பதற்காக செய்த சூழ்ச்சி, முஸ்லிம்களின் அணிகளுக்கு மத்தியில் அவன் ஏற்படுத்திய குழப்பங்கள், சலசலப்புகள் பற்றி இதற்கு முன்பு நாம் கூறியிருக்கின்றோம்.

இவன் இஸ்லாமை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டபின் முஸ்லிம்களை மிக அதிகமாக ஏமாற்றி, அவர்களுக்கு வஞ்சகம் செய்து வந்தான். நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜுமுஆ பேருரைக்காக மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் இவன் எழுந்து ''இவர்தான் அல்லாஹ்வின் தூதர்! இதோ... இவர் உங்களுக்கு மத்தியில் இருக்கிறார், இவர் மூலம் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் வழங்கியிருக்கின்றான், இவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள், இவருக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள், இவரின் பேச்சை செவி தாழ்த்தி கேளுங்கள், இவருக்கு கீழ்ப்படியுங்கள்'' என்று கூறிவிட்டு அமர்ந்து கொள்வான். அதற்குப் பின் நபி (ஸல்) எழுந்து பிரசங்கம் செய்வார்கள்.

இந்த நயவஞ்சகனின் வெட்கங்கெட்ட தன்மைக்கு இதை உதாரணமாகக் கூறலாம்: இவன் உஹுத் போரில் செய்த மோசடிகள் அனைவருக்கும் தெரிந்ததே. நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியப் பின் ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று பிரசங்கத்திற்காக எழுந்தார்கள். அப்போது அவன், தான் வழக்கமாக சொல்லி வந்ததைச் சொல்வதற்காக எழுந்தான். ஆனால், முஸ்லிம்கள் அவனது ஆடையைப் பிடித்திழுத்து ''அல்லாஹ்வின் எதிரியே! உட்காரடா... உனக்கு இதைக் கூறுவதற்கு எந்த தகுதியுமில்லை. நீ செய்ய வேண்டிய அழிச்சாட்டியங்களை எல்லாம் செய்து விட்டாய்'' என்று கூறினார்கள். அதற்கவன் ''நான் என்ன கெட்டதையா கூறினேன்! அவரது காரியத்தில் அவரைப் பலப்படுத்தவே நான் எழுந்தேன்'' என்று கூறியவனாக மக்களின் பிடரிகளை தாண்டிக் கொண்டு பள்ளியைவிட்டு வெளியேறினான். பள்ளியின் வாயிலில் அன்சாரி ஒருவர் அவனைப் பார்த்து ''உனக்கு நாசம் உண்டாகட்டும்! நீ நபியவர்களிடம் திரும்பிச் செல். அவர்கள் உனக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவார்கள்'' என்றார். அதற்கவன் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனக்காக பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்று எனக்கு எவ்வித ஆசையுமில்லை'' என்றான். (இப்னு ஹிஷாம்)

மேலும், நளீர் இன யூதர்களுடன் அவன் தொடர்பு வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக எப்போதும் சதித்திட்டம் தீட்டி வந்தான். இவன் நளீர் இன யூதர்களுக்கு கூறியதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு விவரிக்கிறான்:

(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களிலுள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி ''நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறி விடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு எதிராக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் வழிப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்'' என்றும் கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான்.(அல்குர்ஆன் 59:11)

மேலும், இவனும் இவனது தோழர்களும் அகழ் போரில் இறைநம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பல குழப்பங்களையும், திடுக்கங்களையும், சஞ்சலங்களையும் ஏற்படுத்தினர். இதைப் பற்றி அத்தியாயம் அஹ்ஸாபில் 12லிருந்து 20 வரையிலுள்ள வசனங்களில் அல்லாஹ் தெளிவாக கூறுகின்றான்.

இஸ்லாமின் எதிரிகளான யூதர்கள், நயவஞ்சகர்கள், இணைவைப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் இஸ்லாமின் வெற்றிக்கு என்ன காரணமென்பது நன்கு தெரிந்திருந்தது. அதாவது, இஸ்லாமின் வெற்றி பொருளாதாரப் பெருக்கத்தினாலோ, ஆயுதங்கள், படைகள் மற்றும் போர் சாதனங்கள் ஆகியவை அதிகமாக இருந்ததினாலோ அல்ல. மாறாக, இஸ்லாமியச் சமுதாயத்திடமும் மற்றும் இஸ்லாமில் இணைந்த ஒவ்வொருவரிடமும் இருக்கும் உயர்ந்த பண்புகளும், நற்குணங்களும், முன்மாதிரியான தன்மைகளும்தான் இஸ்லாமின் வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் இந்த அனைத்து தன்மைகளுக்கும் காரணமாகவும் ஊற்றாகவும் விளங்கக்கூடியவர் நபி (ஸல்) அவர்கள்தான் என்பதும் இவர்களுக்குத் தெரியும். அதுபோன்றே இந்த மார்க்கத்தை ஆயுதங்களாலும் ஆற்றலாலும் அழிக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டதால் நேரடிப் போருக்குத் துணிவின்றி மறைமுகச் சூழ்ச்சிப் போருக்கு வித்திட்டனர். இம்மார்க்கத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியாக இம்மார்க்கத்திற்கு எதிராகப் பொய் பிரச்சாரங்களை பரப்ப வேண்டும் இந்த பொய் பிரச்சாரத்திற்கு முதல் இலக்காக நபி (ஸல்) அவர்களை ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். முஸ்லிம்களின் அணியில் நயவஞ்சகர்களும் கலந்திருந்துடன் அந்த நயவஞ்சகர்கள் மதீனாவாசிகளாகவும் இருந்ததால் முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிட்டு விளையாடுவது எதிரிகளுக்குச் சாத்தியமாக இருந்தது. எனவே, இந்தப் பொய் பிரச்சாரத்தைப் பரப்புவதற்குரிய பொறுப்பை நயவஞ்சகர்களே ஏற்றுக் கொண்டனர். இதில் இவர்களின் தலைவனாக இருந்த இப்னு உபை முக்கியப் பங்கு வகித்தான்.

இவர்களது இந்தத் திட்டம் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது. அதாவது, நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைதுப்னு ஹாரிஸா (ரழி) தன் மனைவி ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களைத் தலாக் விட்டதற்குப் பின் அவரை நபி (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். அரபுகள் தங்களின் கலாச்சாரப்படி வளர்ப்பு மகனைப் பெற்ற மகனைப் போல் கருதினர். மகனின் மனைவியைத் தலாக்கிற்குப் பின் தந்தை மணம் முடிப்பது எவ்வாறு குற்றமான செயலாக கருதப்பட்டு வந்ததோ அதேபோல் வளர்ப்பு மகனின் மனைவியையும் வளர்ப்புத் தந்தை திருமணம் முடிப்பதை குற்றமாகவே கருதினர். ஆகவே, நபி (ஸல்) ஜைனபை திருமணம் முடித்துக் கொண்டதும் நயவஞ்சகர்கள் நபியவர்களுக்கெதிராக சர்ச்சையைக் கிளப்புவதற்கு இரண்டு வழிகளைக் கையாண்டனர்.

முதலாவது: நபி (ஸல்) அவர்களின் இத்திருமணம் ஐந்தாவது திருமணமாக இருந்தது. குர்ஆன் நான்கு பெண்களை மட்டும் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்று அனுமதித்திருக்க நபி (ஸல்) எப்படி ஐந்தாவது திருமணம் செய்தார்கள்?

இரண்டாவது: ஜைனப் (ரழி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனின் மனைவியாக இருந்தார். எனவே அரபுகளின் கலாச்சாரப்படி ஜைனபைத் திருமணம் முடித்தது மாபெரும் குற்றமாகும்.

இது விஷயத்தில் பெரும் பொய்க் கதைகளையும் கற்பனைகளையும் நயவஞ்சகர்கள் புனைந்தனர். அதாவது, முஹம்மது ஒருமுறை திடீரென ஜைனபைப் பார்த்து விட்டார். அப்போது ஜைனபின் அழகில் மயங்கி ஜைனபின் மீது காதல் கொண்டார். இதை அறிந்த அவரது வளர்ப்பு மகன் முஹம்மதுக்காகத் தனது மனைவியை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறினர். இந்தக் கட்டுக்கதையை அவர்கள் எந்தளவு பரப்பினார்கள் என்றால், இன்று வரை அதன் தாக்கம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் நூற்களில் காணக் கிடைக்கிறது. இந்த பொய்ப் பிரச்சாரம் இறை நம்பிக்கையில் குறையுள்ளவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆகவே, உள்ளங்களில் ஏற்பட்ட சந்தேக நோய்களைக் குணப்படுத்தும் விதமாக பல தெளிவான வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் இறக்கி வைத்தான். இது பொய்ப் பிரச்சாரம் என்று அல்லாஹ் அத்தியாயம் அஹ்ஜாபின் தொடக்கத்திலேயே இவ்வாறு கூறுகின்றான்:

நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் (பயந்து அவர்களுக்கு) வழிப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:1)

இதுவரை நாம் கூறியது முஸ்தலக் போருக்கு முன்னர் நயவஞ்சகர்கள் புரிந்த தில்லு முல்லுகளின் சுருக்கமான ஒரு கண்ணோட்டமாகும். இவை அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் மிகப் பொறுமையுடனும், நளினத்துடனும், நுட்பத்துடனும் எதிர்கொண்டு சகித்து வந்தார்கள். மற்ற முஸ்லிம்கள் அந்நயவஞ்சகர்களின் தீங்கிலிருந்து தங்களைத் தற்காத்து வந்தனர் அல்லது அவர்களின் தீங்குகளைச் சகித்து வந்தனர். ஏனெனில், இந்நயவஞ்சகர்கள் ஒவ்வோர் ஆண்டும் பலமுறை இழிவுக்குள்ளாகிறார்கள். அவர்களது உள்ளத்தின் இரகசியங்களைக் குர்ஆனில் வெளிப்படுத்தப்பட்டு கேவலத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ அவர்கள் கஷ்டத்திற்குள்ளாகி சோதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் பாவத்தை விடுவதுமில்லை, நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல்குர்ஆன் 9:126)

முஸ்தலக் போரில் நயவஞ்சகர்கள்...

முஸ்தலக் போரில் நயவஞ்சகர்களும் முஸ்லிம்களுடன் கிளம்பி இருந்ததால் அல்லாஹ் திருமறையிலே சுட்டிக்காட்டும்...

அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:47)

இக்கூற்றுக்கு ஒப்பாகவே அவர்கள் நடந்து கொண்டனர். தீங்கு செய்வதையே குறிக்கோளாக கொண்ட இவர்கள் முஸ்லிம்களின் அணியில் பெரும் பிணக்கையும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக மிக இழிவான பழியையும் உருவாக்கினர். அதன் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.

1) நயவஞ்சகர்களின் கூற்று:

நாம் மதீனாவிற்குத் திரும்பினால் இழிவானவர்களைக் கண்ணியமானவர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் போர் முடித்துத் திரும்பும் போது 'உரைஸிஃ' என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள். அப்போது தண்ணீர் நிரப்பிக் கொள்ளும் ஓர் இடத்தில் முஹாஜிர்களில் ஜஹ்ஜாஹ் அல் கிஃபா என்பவரும், அன்சாரிகளில் கினான் இப்னு வபர் அல் ஜுஹ்னி என்பவரும் சண்டை செய்து கொண்டனர். அப்போது ஜுஹ்னி ''அன்சாரிகளின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்'' என்றார். ஜஹ்ஜாஹ் ''முஹாஜிர்களின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்'' என்றார். இக்கூச்சலைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது இவ்வாறு அறியாமைக்கால வார்த்தைகளையா பயன்படுத்துகிறீர்கள்? இதை விட்டு விடுங்கள். அது மிக அசுத்தமானது!'' என்று எச்சரித்தார்கள்.

இந்தச் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலுக்கு எட்டியது. இதனால் அவன் கோபமடைந்தான். அவனுடன் அவனது இனத்தவரில் சிலர் இருந்தனர். அவர்களில் மிகச் சிறிய வயதுடைய ஜைதுப்னு அர்கம் என்பவரும் இருந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை ''இப்படியா அவர்கள் செய்தார்கள்! நமக்கு வெறுப்பூட்டி விட்டார்கள். நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமக்கும் அவர்களுக்குமுள்ள உதாரணம்: 'உனது நாயை நல்ல கொழுக்க வளர்ப்பாயாக! அது இறுதியில் உன்னையே தின்றுவிடும்' (வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது) என்பதுதான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியமானவர்கள் இழிவானவர்களை அங்கிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும்'' என்று கூறினான். மேலும், தனக்கு முன் இருந்தவர்களை (அன்சாரிகளை) நோக்கி, ''பார்த்தீர்களா! இது நீங்கள் உங்களுக்கே தேடிக் கொண்டது. அவர்களை உங்கள் ஊரில் தங்க வைத்து உங்களது பொருட்களை பங்கு வைத்துக் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்'' என்று கூறினான்.

ஜைது இப்னு அர்கம் தனது தந்தையின் சகோதரரிடம் இச்செய்தியைக் கூற, அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அங்கு உமரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இதைக் கேட்ட உமர் (ரழி) அவர்கள் ''நபியே! அப்பாத் இப்னு பிஷ்ருக்குக் கட்டளையிடுங்கள். அவர் அவனைக் கொன்று விடட்டும்'' என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உமரே! அப்படி எவ்வாறு செய்ய முடியும்? முஹம்மது தமது தோழர்களைக் கொல்கிறார் என்று மக்கள் பேசுவார்கள். எனவே, அவ்வாறு செய்யக் கூடாது. நீர் அனைவரையும் இங்கிருந்து புறப்படுவதற்கு அறிவிப்புச் செய்!'' என்று கூறினார்கள்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் பயணிக்க மாட்டார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பயணத்தைத் தொடங்கினர். அப்போது உஸைது இப்னு ஹுழைர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி, ''நபியே! நீங்கள் வழக்கத்துக்கு மாற்றமான நேரத்தில் பயணிக்கிறீர்களே!'' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''இப்னு உபை கூறிய செய்தி உமக்கு தெரியாதா?'' என்று கேட்டார்கள். அதற்கு உஸைது (ரழி), ''அவன் என்ன கூறினான்?'' என்று கேட்டார். ''அவன் மதீனாவிற்குத் திரும்பினால் அதிலுள்ள கண்ணியவான்கள் இழிவானவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறினான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உஸைது (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பினால் அவனை மதீனாவிலிருந்து வெளியேற்றலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இழிவானவன். நீங்கள்தான் கண்ணியமானவர்கள்'' என்று கூறிவிட்டு ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனுடன் சற்று மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். அவனது கூட்டத்தினர் அவனைத் தங்களது தலைவராக்க நினைத்தபோது அல்லாஹ் உங்களை எங்களிடம் கொண்டு வந்தான். எனவே, நீங்கள்தான் அவனது பதவியைப் பறித்துக் கொண்டீர்கள் என்று அவன் எண்ணுகிறான்'' என்று ஆறுதல் கூறினார்கள்.

அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக் கொண்டு மாலைவரை பயணித்தார்கள். பயணத்தில் எங்கும் ஓய்வெடுக்காமல் அன்று இரவிலிருந்து மறுநாள் முற்பகல் வரை தொடர்ந்து பயணம் செய்தார்கள். அதற்குப் பின் மக்களுக்கு ஓய்வெடுக்க அனுமதி கொடுத்தார்கள். கடுமையான களைப்பின் காரணமாக மக்கள் இறங்கியவுடன் அயர்ந்து தூங்கி விட்டார்கள். இவ்வாறு நபி (ஸல்) செய்ததற்குக் காரணம், மக்கள் வேறு எந்த பேச்சிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இருக்கலாம்.

நபி (ஸல்) அவர்களிடம் ஜைதுப்னு அர்கம் இச்செய்தியைக் கூறிவிட்டார் என்ற விவரம் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு தெரியவந்தது. உடனே அவன் நபியவர்களைச் சந்தித்து தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த சில அன்சாரிகள், ''அல்லாஹ்வின் தூதரே! ஜைது சிறுவர். அவர் சரியாக விளங்கி இருக்கமாட்டார். இப்னு உபை கூறிய சொல்லை அச்சிறுவர் சரியாக நினைவில் வைக்கத் தெரியாது. எனவே, இப்னு உபை கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றனர்.

இது தொடர்பாக ஜைது இப்னு அர்கம் அவர்களே கூறுகிறார்கள்: ''மக்கள் என்னை பொய்யர் என்று கூறியதால் எனக்கு இதுவரை ஏற்பட்டிராத பெரும் கவலை ஏற்பட்டு நான் எனது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டேன். அந்நிலையில் எனது கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆனில் அத்தியாயம் 63ல் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.

ஜைது இப்னு அர்கம் (ரழி) கூறுகிறார்கள்: ''இந்த வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவுடன் அவர்கள் என்னை அழைத்து இவற்றைக் ஓதிக்காண்பித்து அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நயவஞ்சகனான அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஒரு மகன் இருந்தார். அவரது பெயரும் அப்துல்லாஹ்தான். இவர் சிறப்புமிக்க நபித்தோழர்களில் ஒருவராக விளங்கினார். இவர் தனது தந்தையின் செயல்களைப் பற்றி தெரிந்தவுடன் அவனிடமிருந்து விலகிக் கொண்டார். முஸ்லிம்கள் மதீனாவுக்குத் திரும்பியபோது மதீனாவின் நுழைவாயிலில் தனது வாளை உருவியவராக இவர் நின்று கொண்டார். அவரது தந்தை இப்னு உபை அங்கு வந்தபோது தனது தந்தை என்று கூட பார்க்காமல் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) உன்னை அனுமதிக்காதவரை நீ இங்கிருந்து செல்ல முடியாது. நிச்சயமாக நபியவர்கள்தான் கண்ணியமிக்கவர், நீதான் இழிவானவன்'' என்று கூறி அவனைத் தடுத்து விட்டார். நபி (ஸல்) அங்கு வந்து அவனுக்கு மதீனாவிற்குள் செல்ல அனுமதி அளிக்கவே அப்துல்லாஹ் (ரழி) அவனுக்கு வழிவிட்டார்கள். மேலும், அவர் இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட போதே ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்ய எனக்குக் கட்டளையிடுங்கள்! நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவனது தலையை உங்களிடம் கொண்டு வருகிறேன்.'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறியிருந்தார். (இப்னு ஹிஷாம்)
2) அவதூறு சம்பவம்:

இப்போரில்தான் இட்டுக்கட்டப்பட்ட அச்சம்பவம் நடைபெற்றது. அதன் சுருக்கமாவது:

நபி (ஸல்), பயணத்தில் மனைவிமார்களில் யாரை உடன் அழைத்துச் செல்வது என சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவ்வாறே இப்பயணத்தில் ஆயிஷா (ரழி) அவர்களின் பெயர் வரவே, அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்கள். போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது படைகளுடன் ஓர் இடத்தில் தங்கினார்கள். அங்கு ஆயிஷா (ரழி) தங்களது சுய தேவைக்காக வெளியே சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். அவர்கள் பயணத்தில் வரும்போது தனது சகோதரி ஒருவரிடமிருந்து கழுத்து மாலை ஒன்றை இரவல் வாங்கி வந்திருந்தார். அவர்கள் சென்ற இடத்தில் அந்த மாலை விழுந்து விட்டது. அது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தங்களின் கூடாரத்திற்கு வந்த பிறகு அது தவறியது தெரிய வரவே, அதைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் சென்றதை யாரும் பார்க்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க நபியவர்கள் தங்கள் தோழர்களுக்குப் பயணத்தைத் தொடர கட்டளையிட்டார்கள்.

ஆயிஷா (ரழி) அமர்ந்து வந்த தொட்டியை ஒட்டகத்தின் மீது ஏற்றுவதற்காக வந்தவர்கள் ஆயிஷா (ரழி) அதில் இருக்கிறார் என்றெண்ணி அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிவிட்டார்கள். ஏற்றி வைத்தவர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்களாக இருந்ததால் தொட்டி எடை குறைந்திருந்ததை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், ஆயிஷா (ரழி) வாலிபப் பெண்ணாக இருந்ததால் உடல் பருமன் இல்லாமல் மெலிந்தவராக இருந்தார். ஒருவர் அல்லது இருவர் கஜாவா பெட்டியைத் தூக்கியிருந்தால் ஆயிஷா (ரழி) அதில் இல்லாததை உணர்ந்திருக்க முடியும்.

இதற்குப் பின் அனைவருமே அங்கிருந்து பயணித்து விட்டனர்.

மாலையைத் தேடிச் சென்ற ஆயிஷா (ரழி) அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடம் திரும்பியபோது அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தன்னைக் காணவில்லை என்று தெரிந்தவுடன் தேடி வருவார்கள் என்று எண்ணி ஆயிஷா (ரழி) அங்கேயே தங்கி விட்டார்கள். அல்லாஹ் தனது காரியத்தில் மிகைத்தவன். அர்ஷுக்கு மேலிருந்து கொண்டு தான் நாடியபடி அனைத்தையும் நிர்வகிக்கின்றான். ஆயிஷா (ரழி) கண்ணயர்ந்து தூங்கி விட்டார்கள். அப்போது அங்கு வந்த ஸஃப்வான் இப்னு முஅத்தல் (ரழி) ''இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிவூன். அல்லாஹ்வின் தூதரின் மனைவியாயிற்றே!'' என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட ஆயிஷா (ரழி) விழித்தெழுந்தார்கள். ஸஃப்வான் (ரழி) படையின் பிற்பகுதியில் தங்கியிருந்தார். அவர் அதிகம் தூங்குபவராக இருந்தார். ஆயிஷா (ரழி) அவர்களை 'ஜாப்ம் (பர்தா) உடைய சட்டம் வருவதற்கு முன் பார்த்திருந்ததால் இப்போது பார்த்தவுடன் அறிந்து கொண்டார். தனது ஒட்டகத்தை இழுத்து வந்து அவர்களுக்கருகில் உட்கார வைத்தவுடன் அதன்மீது ஆயிஷா (ரழி) ஏறிக் கொண்டார்கள். அன்னை ஆயிஷாவிடம் வேறு எவ்வித பேச்சும் ஸஃப்வான் (ரழி) பேசவில்லை. ஆயிஷா (ரழி) 'இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்' என்பதைத் தவிர ஸஃப்வானிடமிருந்து வேறு எந்த சொல்லையும் கேட்கவில்லை.

ஸஃப்வான் (ரழி) அவர்கள் ஒட்டகத்தை இழுத்தவராக நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து சேர்ந்தார். அப்போது முஸ்லிம்களின் படை மதிய நேரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாணியில் தங்களின் பண்பிற்கேற்ப பேசினார்கள். அப்போதுதான் அல்லாஹ்வின் எதிரியான தீயவன் இப்னு உபை தனது குரோதத்தையும், நயவஞ்சகத்தையும் வெளிப்படுத்தினான். ஓர் அவதூறான கதையைப் புனைந்து, அதை மக்களுக்கு மத்தியில் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பரப்பினான். அவனது நண்பர்களும் அவனுடன் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் மதீனா திரும்பியதற்குப் பின் கதையை புனைவதில் பாவிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர். நபியவர்களோ எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பு வருவது தாமதமாகிவிடவே, ஆயிஷாவைப் பிரிந்து விடும் விஷயத்தில் தங்களது தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள். ஆயிஷா (ரழி) பிரிந்து விட்டு வேறொருவரை மணந்து கொள்ள அலீ (ரழி) மறைமுகமாக ஆலோசனை சொன்னார்கள். உஸாமா இப்னு ஜைதும் (ரழி) மற்ற தோழர்களும் ''எதிரிகளின் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம். ஆயிஷாவைப் பிரிந்து விடாதீர்கள்'' என்று ஆலோசனைக் கூறினார்கள்.

நபி (ஸல்) மிம்பரின் மீது ஏறி அப்துல்லாஹ் இப்னு உபையிடம் தங்களது மன வருத்தத்தைத் தெரிவித்தார்கள். இது அவ்ஸ் கிளையினரின் தலைவர் உஸைது இப்னு ஹுளைருக்குக் கோபத்தை மூட்டியது. அவர் அப்துல்லாஹ் இப்னு உபையைக் கொல்ல வேண்டும் என்ற தனது கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால், இப்னு உபையின் கிளையைச் சேர்ந்த கஸ்ரஜினரின் தலைவர் ஸஅது இப்னு உபாதாவிற்கு தனது இனத்தவரை இவ்வாறு கூறியது வெறுப்பை மூட்டியது. இதனால் இரு கிளையினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவ்விரு கிளையினரையும் சமாதானப்படுத்தினார்கள்.

போரிலிருந்து திரும்பியவுடன் ஒரு மாத காலமாக ஆயிஷா (ரழி) உடல் நலம் குன்றியிருந்தார். தன்னைப் பற்றி பேசப்பட்டு வந்த பொய்யான கதையை ஆயிஷா (ரழி) அறிந்திருக்கவில்லை. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எந்தளவு நபியவர்கள் பரிவு காட்டுவார்களோ அந்தப் பரிவை நபி (ஸல்) அவர்களிடம் இப்போது அன்னை ஆயிஷா (ரழி) பார்க்கவில்லை.

சற்று உடல் நலம் தேறியது. ஓர் இரவு 'உம்மு மிஸ்தஹ்' என்ற தோழியுடன் சுயதேவையை நிறைவேற்றுவதற்காக இரவில் வெளியில் சென்றார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி மதீனாவில் உலா வரும் வதந்திகளில் உம்மு மிஸ்தஹுடைய மகனும் பங்கு பெற்றுள்ளார். இந்தக் கவலையும் சிந்தனையும் உம்மு மிஸ்தஹை அதிகம் பாதிப்படைய வைத்தது. ஆயிஷா (ரழி) அவர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது தனது மகனுக்கு அவதூறு விஷயத்தில் தொடர்புள்ளது என்று எவ்வாறு அவர்களிடம் கூறுவது? இதே குழப்பத்தில் மனம் உழன்று கொண்டிருக்கும் போது உம்மு மிஸ்தஹ் (ரழி) தன்னுடைய ஆடையால் தடுக்கிக் கீழே விழுந்தார், அப்போது தன்னை அறியாமலேயே அவர்கள் தனது மகனைத் திட்டினார்கள். ''நீ கீழே விழுந்ததற்கு உன் மகனை ஏன் திட்டுகிறாய்?'' என்று ஆயிஷா (ரழி) வினவியபோது, உம்மு மிஸ்தஹ் (ரழி) ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றி மக்களிடையே பரப்பப்பட்ட அவதூறுகளைக் கூறினார்.

உம்மு மிஸ்தஹ் (ரழி) செய்தியைக் கூறிய உடனேயே, ஆயிஷா (ரழி) வீட்டிற்குத் திரும்பினார்கள். தனது பெற்றோர்களிடம் சென்று செய்தியை உறுதியாக தெரிந்துவர நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அனுமதி பெற்று, பெற்றோர்களைச் சந்தித்து உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொண்டவுடன் ஆயிஷா (ரழி) வேதனை பொறுக்க முடியாமல் அழுதார்கள். இரண்டு இரவும் ஒரு பகலும் தூங்காமல் அழுது கொண்டேயிருந்தார்கள். அவர்களது இந்த அழுகை அன்னாரின் ஈரலைப் பிளந்துவிடுமளவுக்கு இருந்தது.

அப்போதுதான் நபி (ஸல்) அங்கு வந்து இறைவனைப் புகழ்ந்து துதித்துவிட்டு ''ஆயிஷாவே! உன்னைப் பற்றி எனக்கு இவ்வாறெல்லாம் செய்தி கிடைத்தது. நீ குற்றமற்றவளாக இருந்தால் அல்லாஹ் உன்னை அப்பழியிலிருந்து நிரபராதியாக ஆக்குவான். உண்மையில் நீ பாவம் செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள். அவனிடம் பாவமீட்சி பெற்றுக்கொள். ஏனெனில், நிச்சயமாக அடியாரின் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் பாவமீட்சிக் கோரினால் நிச்சயமாக அல்லாஹ் அவனது பாவங்களை மன்னித்து விடுவான்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் தனது அழுகையை நிறுத்தி, பெற்றோர் ஒவ்வொருவரிடமும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு கூறினார்கள். ஆனால், அவர்களுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியவில்லை. அப்போது ஆயிஷா (ரழி) ''நான் நிலைமை என்னவென்று நன்கு தெரிந்து கொண்டேன். இந்தச் செய்தியை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டதால் அது உங்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விட்டது. அது உண்மை என்று நீங்கள் நம்பியும் விட்டீர்கள்! அல்லாஹ்வுக்குத் தெரியும் நான் குற்றமற்றவள் என்று! நான் உங்களுக்கு என்னைப் பற்றி குற்றமற்றவள் என்று கூறினால் நீங்கள் அது விஷயத்தில் என்னை நம்ப மாட்டீர்கள்! நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், நான் இவ்விஷயத்தை ஒப்புக் கொண்டால் மட்டும் நீங்கள் என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கும் உங்களுக்கும் யூஸுஃப் நபியின் தந்தை யஅகூப் (அலை) கூறிய,

ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்''. (அல்குர்ஆன் 12:18)

என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையைக் கூற எனக்குத் தெரியவில்லை.

பின்பு தன் முகத்தைத் திருப்பி சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்பட்டது. அது முடிந்தவுடன் நபி (ஸல்) சிரித்தவர்களாக ''ஆயிஷாவே! அல்லாஹ் உன்னை நிரபராதி ஆக்கிவிட்டான்'' என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்களின் தாயார் ''ஆயிஷாவே! நபியிடம் எழுந்து செல்'' என்று கூறினார்கள். அதற்கு ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களிடம் எழுந்து செல்ல மாட்டேன். மேலும் நான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழவுமாட்டேன்'' என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரழி), தான் நிரபராதி என்பதாலும், தன்னை நபி (ஸல்) நேசிக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததாலும் இவ்வாறு கூறினார்கள்.

இந்தப் பொய்யான சம்பவம் தொடர்பாக அல்லாஹ் குர்ஆனின் 24 ஆம் அத்தியாயத்தில் 11லிருந்து 20 வரை உள்ள வசனங்களை இறக்கினான்.

இந்த சம்பவத்தை இட்டுகட்டியவர்களில் - மிஸ்தஹ், ஹஸ்ஸான், ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்த அப்துல்லாஹ் இப்னு உபையை அடிக்கவில்லை. இவன்தான் இதற்கு மூல காரணமாவான். இவனைத் தண்டிக்காமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில், உலகத்தில் யார் மீது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு விடுகிறதோ அவர்கள் மறுமையில் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால், மறுமையில் மகத்தான தண்டனை இவனுக்கு உண்டென அல்லாஹ் குர்ஆனில் இவனைப் பற்றி எச்சரிக்கை செய்து விட்டான். எனவே, இவ்வுலகில் இவனுக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை அல்லது எந்த நலனைக் கருதி நபி (ஸல்) இவனை முன்பு கொலை செய்யாமல் விட்டுவிட்டார்களோ அதே நலனைக் கருதி இந்த தண்டனையையும் நிறைவேற்றாமல் விட்டிருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

ஒரு மாதத்திற்குப் பின் இந்தப் பிரச்சனையால் உண்டான சந்தேகம் மற்றும் குழப்பங்கள் மதீனாவை விட்டு முற்றிலுமாக அகன்றன. நயவஞ்சகர்களின் தலைவன் இப்னு உபை பெரும் கேவலமடைந்தான். இந்த இழிவுக்குப் பின் சமூகத்தில் அவன் தலையை நிமிர்த்த முடியவில்லை.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: இச்சம்பவத்திற்குப் பின் இப்னு உபை ஏதாவது பேசினால் அவனது கூட்டத்தினரே அவனைக் கண்டித்து அடக்கி விடுவார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் ''உமரே நீர் என்ன கருதுகிறீர்? நீர் என்னிடம் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அன்றே நான் இவனைக் கொலை செய்திருந்தால் அவனது கூட்டத்தினர் என் மீது மிகுந்த கோபம் அடைந்திருப்பார்கள். ஆனால், இன்று அவனது கூட்டத்தினரிடம் அவனைக் கொலை செய்து விடுங்கள் என்று நான் கூறினால் அவர்கள் அவனைக் கொலை செய்து விடுவார்கள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இவ்வார்த்தையைக் கேட்ட உமர் (ரழி) ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதருடைய செயல் எனது செயலைவிட நேர்த்திமிக்கது என்பதை இப்போது நான் உறுதியாக தெரிந்து கொண்டேன்'' என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

குழுக்களும் படைப்பிரிவுகளும்

சற்று முன் கூறப்பட்ட முரைஸீ போருக்குப் பின் அனுப்பப்பட்ட குழுக்கள் மற்றும் படைப் பிரிவுகளைப் பற்றி இங்கு நாம் கூறயிருக்கிறோம்:

1) 'அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்' படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் 'தவ்மதுல் ஜன்தல்' எனும் பகுதியில் இருக்கும் கல்பு கிளையினரின் ஊர்களுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுடன் ஒரு படைப்பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அனுப்பும் போது அவரை நபி (ஸல்) தனக்கு முன் அமர வைத்து, தனது கரத்தால் அவருக்குத் தலைப்பாகை கட்டிவிட்டார்கள். மேலும், போரில் மிக அழகிய முறைகளைக் கையாள வேண்டும் என்று உபதேசம் செய்ததுடன் ''அவர்கள் உமக்கு கீழ்ப்படிந்து விட்டால் அவர்களுடைய தலைவரின் மகளை நீர் திருமணம் செய்துகொள்!'' என்றும் கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கி அந்தக் கூட்டத்தினருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் 'துமாழிர் பின்த் அஸ்பக்' என்ற பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) திருமணம் செய்து கொண்டார்கள். இப்பெண்மணி பிரபல்யமான நபித்தோழர் அபூஸலமாவின் தாயாராவார். இப்பெண்மணியின் தந்தைதான் கல்பு இனத்தவரின் தலைவராக இருந்தார்.

2) 'அலீ இப்னு அபூதாலிப்' படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் 'ஃபதக்' எனும் ஊரில் உள்ள ஸஅது இப்னு பக்ரு கிளையினரிடம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை 200 வீரர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். இக்கிளையினரில் ஒரு பிரிவினர் கைபரிலுள்ள யூதர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதால் அவர்கள் இப்படையை அனுப்பினார்கள். அலீ (ரழி) இரவில் பயணம் செய்வதும், பகலில் பதுங்கிக் கொள்வதுமாக தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு நாள் அலீ (ரழி) அக்கூட்டத்தைச் சேர்ந்த ஒற்றன் ஒருவனைப் பிடித்தார்கள். யூதப் பகுதியான கைபரில் விளையும் பேரீத்தம் பழங்களில் ஒரு பெரும் பங்கை யூதர்கள் ஸஅது இப்னு பக்ர் கிளையினருக்கு வழங்கினால், அக்கிளையினர் யூதர்களுக்கு உதவிடுவார்கள்'' என்பதைத் தெரிவிப்பதற்காகத் தன்னை அனுப்பினர் என்பதை, பிடிப்பட்ட ஒற்றன் ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, அக்கிளையினர் குழுமியிருந்த இடத்தையும் காட்டிக் கொடுத்தான். அவர்கள் மீது அலீ (ரழி) போர் தொடுத்து 500 ஒட்டகைகளையும், 2000 ஆடுகளையும் கைப்பற்றினார். அக்கிளையினர் அங்கிருந்து தப்பித்து 'ளுவுன்' என்ற இடத்திற்கு ஓடிவிட்டனர். வபர் இப்னு உலைம் என்பவன் இக்கிளையினருக்குத் தலைமை தாங்கி வந்திருந்தான்.

3) 'அபூபக்ர் (அ) ஜைது' படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ரமழான் மாதத்தில் 'வாதில் குரா' என்ற இடத்திற்கு அபூபக்ர் (ரழி) அல்லது ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அங்கு வசிக்கும் ஃபஜாரா கிளையினரின் ஒரு பிரிவினர் நபியவர்களைக் கொலை செய்ய வஞ்சகமாகத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததை முன்னிட்டு இப்படையை அனுப்பப்பட்டது.

ஸலமா இப்னு அக்வஉ (ரழி) கூறுகிறார்: நானும் இப்படையில் சென்றிருந்தேன். நாங்கள் ஸுப்ஹு தொழுகையை முடித்த பின் அவர்களைத் தாக்கினோம். பிறகு அவர்களின் கிணற்றுக்கு அருகில் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். இந்தத் தாக்குதலில் எதிரிகளில் பலர் கொல்லப்பட்டனர். சிலர் தங்கள் பிள்ளைகளுடன் மலையை நோக்கி ஓடுவதைப் பார்த்தேன். அவர்கள் தப்பித்து மலையில் ஏறிவிடக் கூடாது என்பதற்காக வேகமாக ஓர் அம்பை எடுத்து அவர்களுக்கும் மலைக்கும் நடுவில் எறிந்தேன் அம்பைப் பார்த்த அவர்கள் நின்று விட்டனர். அக்கூட்டத்தில் பெண் ஒருத்தி இருந்தாள் அவளது பெயர் உம்மு கிர்ஃபர் அவள் தோல் ஆடை அணிந்திருந்தாள் அவளுக்கு மிக அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். நான் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரழி) எனக்கு அவளின் மகளைப் பரிசாக அளித்தார்கள். ஆனால், நான் அவளைத் தொடவில்லை. பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற பின் நபியவர்கள் அவளை என்னிடமிருந்து பெற்று மக்காவிற்கு அனுப்பினார்கள். அவளை குறைஷிகளிடம் கொடுத்து, அங்கு கைதிகளாக இருந்த முஸ்லிம்களை விடுதலை செய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உம்மு கிர்ஃபா என்ற இப்பெண் ஒரு பெரும் தீயவளாக இருந்தாள். இவள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக தனது குடும்பத்திலிருந்து முப்பது குதிரை வீரர்களைத் தயார் செய்திருந்தாள். அந்த முப்பது நபர்களும் கொல்லப்பட்டனர். அவளும் உரிய தண்டனையைப் பெற்றாள்.

4) 'குர்ஸ்' படைப் பிரிவு: உகல் மற்றும் உரைனாவைச் சேர்ந்த ஒரு கூட்டம் மதீனாவுக்கு வந்து தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்திக் கொண்டனர். மதீனாவில் தங்கிய அவர்களுக்கு அங்குள்ள தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளாததின் காரணமாக நோயுற்றார்கள். நபி (ஸல்) இக்கூட்டத்தினரை முஸ்லிம்களின் ஒட்டகங்கள் மேயும் இடங்களுக்குச் சென்று அங்கு தங்கி அதன் பாலையும், சிறுநீரையும் குடிக்கும்படி கூறினார்கள். அவ்வாறு செய்து அவர்கள் உடல் சுகமடைந்தனர். பிறகு அந்தக் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களின் இடையரைக் கொலை செய்துவிட்டு அங்குள்ள ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றதுடன் இஸ்லாமிய மார்க்கத்தையும் புறக்கணித்தனர். இவர்களைத் தேடிப் பிடித்துவர நபி (ஸல்) 20 தோழர்களை குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபஹ் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் அனுப்பினார்கள்.

இந்த நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதத்தில் நடந்தது. அப்போது நபி (ஸல்) அந்த உரைனாவினர் மீது சாபமிட்டார்கள். ''அல்லாஹ்வே! அவர்களின் பாதையை அவர்களுக்கு மறைத்துவிடு, தண்ணீர் துருத்தியின் வாயை விட அவர்களுக்குப் பாதையை மிக நெருக்கடியாக ஆக்கிவிடு!'' என்று பிரார்த்தித்தார்கள். பாதையை அல்லாஹ் அவர்களுக்கு மறைத்து விட்டான். எனவே, அவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் இலகுவாகப் பிடித்தனர். அவர்களின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு, கண்களுக்குச் சூடு வைக்கப்பட்டது. அவர்கள் எவ்வாறு ஒட்டக இடையர்களைக் கொலை செய்தார்களோ அவ்வாறே அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு இத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின் அவர்களை மதீனாவின் வெளியில் விவசாயக் களத்தில் இதே நிலையில் விடப்பட்டது. அனைவரும் செத்து மடிந்தனர். (ஜாதுல் மஆது)

இந்நிகழ்ச்சி ஸஹீஹுல் புகாரியில் விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட சம்பவங்களுடன் வரலாற்று ஆசிரியர்கள் மற்றொரு படைப் பிரிவின் நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றனர். அதாவது: அபூஸுஃப்யான் தன்னை கொலை செய்ய ஒரு கிராம அரபியை அனுப்பியிருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் நபியவர்கள் அம்ரு இப்னு உமைய்யா ழம் மற்றும் ஸலமா இப்னு அபூஸலமா ஆகிய இருத்தோழர்களையும் அபூ ஸுஃப்யானைக் கொலை செய்ய அனுப்பினார்கள். ஆனால், இந்த நோக்கத்தில் எவரும் வெற்றியடையவில்லை. இந்நிகழ்ச்சி ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் நடந்தது.

மேற்கூறப்பட்ட அனைத்து சிறிய பெரிய சம்பவங்கள், அகழ் மற்றும் குறைளா போர்களுக்குப் பின் நடைபெற்றவையாகும். இவற்றுள் எதிலும் கடுமையானச் சண்டை ஏதும் ஏற்படவில்லை. சில சம்பவங்களில் சிறிய மோதல்கள் மட்டும் ஏற்பட்டன. சுற்று வட்டார நிலைமைகளை அறிந்து வருவது அல்லது அடங்காமல் இருந்த கிராம அரபிகளையும் எதிரிகளையும் அச்சுறுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவது ஆகியவையே அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளின் நோக்கமாக இருந்தது.

நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் பொழுது நமக்குத் தெரியவருவது என்னவெனில், அகழ் போருக்குப் பின்பு முஸ்லிம்களின் நிலைமை முன்னேற்றம் கண்டது. இஸ்லாமுடைய எதிரிகளின் நிலைமைகளும் அவர்களின் ஆற்றல்களும் சரியத் தொடங்கின. இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க வேண்டும், அதன் பலத்தைக் குறைக்க வேண்டும் என்ற கொஞ்ச நஞ்ச ஆசையும் இறைமறுப்பாளர்களுக்கு எஞ்சியிருக்கவில்லை. ஆகவே, இஸ்லாமின் ஆற்றலை ஏற்று அதற்குப் பணிந்து, அரபு தீபகற்பத்தில் இஸ்லாம் நிலைபெறுவதை ஏற்றுக் கொள்வது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இஸ்லாமின் இந்த முன்னேற்றத்தை 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ஹுதைபிய்யா (ஹஜ் 6, துல்கஅதா)

உம்ரா

அரபு தீபகற்பத்தில் நிலைமைகள் பெருமளவு முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறின. சிறிது சிறிதாக மாபெரும் வெற்றிக்கான முன் அறிவிப்புகளும், இஸ்லாமிய அழைப்புப் பணி முழுமையாக வெற்றியடைவதற்கான அடையாளங்களும் தோன்றின. மக்காவிலுள்ள கண்ணியமிக்க பள்ளி வாசலில் (அல் மஸ்ஜிதுல் ஹராமில்) கடந்த ஆறு ஆண்டுகளாக இறைவணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் இணைவைப்பவர்களால் முஸ்லிம்கள் தடுக்கப்பட்டு வந்தனர் என்பது தெரிந்ததே. இப்போது அப்பள்ளியில் வணக்க வழிபாடுகள் நிறைவேற்றுவதற்குரிய உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை இணைவைப்பவர்கள ஏற்றுக் கொள்ள வைப்பதற்குரிய முன்னேற்பாடுகள் தொடங்கின.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதாவது, ''நபியவர்களும் அவர்களது தோழர்களும் புனித பள்ளிக்குள் நுழைகிறார்கள். கஅபாவின் சாவியை நபி (ஸல்) பெறுகிறார்கள். அனைவரும் கஅபாவை வலம் வந்த பின் தங்களது உம்ராவை நிறைவு செய்கிறார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்கின்றனர். சிலர் முடியைக் குறைத்துக் கொள்கின்றனர்.'' தான் கண்ட இந்தக் கனவை நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கூறியபோது அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதே ஆண்டு அனைவரும் மக்காவிற்குச் செல்வோம் என எண்ணினர். இதற்குப் பின் நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் தான் உம்ராவிற்குச் செல்ல இருப்பதாகவும், நீங்களும் அதற்குத் தயாராக வேண்டுமென்றும் கூறினார்கள்.

முஸ்லிம்களே புறப்படுங்கள்

நபி (ஸல்) மதீனாவில் உள்ள முஸ்லிம்களையும், சுற்று வட்டார முஸ்லிம் கிராமவாசிகளையும் தன்னுடன் புறப்படுமாறு கூறினார்கள். ஆனால், பெரும்பாலான கிராமவாசிகள் புறப்படுவதில் தயக்கம் காட்டினார்கள். நபி (ஸல்) தங்களது ஆடைகளைக் கழுவி சுத்தம் செய்து கொண்டதுடன் பயணத்திற்காகக் 'கஸ்வா' என்ற தங்களது ஒட்டகத்தையும் தயார் செய்து கொண்டார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் அல்லது நுமைலா லைஸி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் திங்கட்கிழமை நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள். நபியவர்களுடன் அவர்களின் மனைவி உம்மு ஸலமாவும் 1400 அல்லது 1500 தோழர்களும் புறப்பட்டனர். ஒரு பயணிக்கு அவசியமான ஆயுதத்தைத் தவிர வேறு எந்த ஆயுதங்களையும் நபியவர்கள் தங்களுடன் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், எடுத்துக் கொண்ட ஆயுதங்களையும் வெளியில் தெரியாமல் அவைகளின் உறைக்குள் மறைத்து வைத்திருந்தார்கள்.

மக்காவை நோக்கி

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் 'துல் ஹுலைஃபா' என்ற இடத்தில் தாங்கள் அழைத்து வந்த குர்பானி பிராணிகளுக்கு மாலையிட்டு அடையாளமிட்டார்கள். தாங்களும் உம்ராவிற்காக ஆடை அணிந்து கொண்டார்கள். எவரும் தங்களிடம் போர் செய்யக் கூடாது, தானும் போருக்காகப் புறப்படவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்து அவர்களை அச்சமற்றவர்களாக ஆக்கினார்கள்.

மக்கா குறைஷிகளின் நிலையை அறிந்து, தன்னிடம் தெரிவிப்பதற்காக குஜாஆ கிளையைச் சேர்ந்த ஒற்றர் ஒருவரை நபி (ஸல்) நியமித்து, தனக்கு முன் அவரை அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) 'உஸ்ஃபான்' என்ற இடத்தில் இருக்கும்போது அங்கு நபியவர்களின் ஒற்றர் வந்து ''கஅப் இப்னு லுவை என்பவன் உங்களை எதிர்ப்பதற்காகவும், அல்லாஹ்வின் இல்லத்தை விட்டும் உங்களைத் தடுப்பதற்காகவும் கினானா குடும்பத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறான்'' என்ற அதிர்ச்சி தரும் தகவலைக் கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள் தங்களது தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

''ஒன்று, நம்மை எதிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் குறைஷிகளுக்கு உதவியாக இருக்கும் கினானாவினரின் குடும்பத்தார்களை நாம் சிறை பிடிப்போம். அதனால் அவர்கள் போருக்கு வராமல் பின்வாங்கி, குடும்பத்தை இழந்த துக்கத்தில் மூழ்கலாம். அல்லது அவர்கள் தப்பித்து வேறு எங்காவது சென்றாலும் நம்மை எதிர்க்க வந்தவர்களை அல்லாஹ் முறியடித்ததாக ஆகிவிடும். இரண்டாவது, நாம் அல்லாஹ்வின் வீட்டை நோக்கிப் புறப்படுவோம். யார் நம்மை தடுக்க வருகிறார்களோ அவர்களிடத்தில் நாம் சண்டையிடுவோம்.''

''இவ்விரண்டில் உங்களது கருத்து என்ன?'' என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் கேட்டார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ''அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள். நாம் உம்ரா செய்வதற்காக வந்திருக்கிறோம். எவரிடத்திலும் போர் செய்வதற்காக வரவில்லை. அல்லாஹ்வின் இல்லத்திலிருந்து எவராவது நம்மைத் தடுத்தால் நாம் அவர்களிடத்தில் சண்டையிடுவோம்'' என்று கூறினார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) புறப்படுங்கள் என்று கட்டளையிட, முஸ்லிம்கள் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள்.

தடுக்க முயற்சித்தல்

நபி (ஸல்) அவர்களின் வருகையைக் கேள்விப்பட்ட குறைஷிகள் அவசர ஆலோசனை சபையைக் கூட்டி, எப்படியாவது முஸ்லிம்களை கஅபத்துல்லாஹ்விற்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். கினானா கிளையினரை புறக்கணித்து விட்டு நபியவர்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கஅப் கிளையைச் சேர்ந்த ஒருவர் ''குறைஷிகள் 'தூ துவா' என்ற இடத்தில் வந்து தங்கியிருக்கின்றனர். மேலும், காலித் இப்னு வலீத் 200 குதிரை வீரர்களுடன் 'குராவு கமீம்' என்ற இடத்தில் மக்காவை நோக்கி செல்லும் முக்கிய வழியில் போர் புரிவதற்காகத் தயாராக இருக்கிறார்'' என்று அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். முஸ்லிம்களைத் தடுக்க வேண்டுமென்று காலித் பெரும் முயற்சி செய்தார். தனது குதிரைப் படையை முஸ்லிம்கள் பார்க்கும் தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது முஸ்லிம்கள் ளுஹர் தொழுகையைத் தொழுதார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த காலித், ''தொழுகையில் ருகூவு ஸுஜூதில் இருக்கும்போது நம்மை இவர்கள் கவனிக்கவில்லை அந்த நேரத்தில் நாம் தாக்கியிருந்தால் இவர்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்திருக்கலாம். எனவே, இவர்கள் அஸர் தொழும் போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி காத்திருந்தார். ஆனால், அஸ்ர் தொழுகைக்கு முன் 'ஸலாத்துல் கவ்ஃப்' அச்சமுள்ள நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கி விட்டான். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் தொழுது கொள்ளவே காலிதின் நோக்கம் நிறைவேறாமல் போனது.

மாற்று நடவடிக்கை

தங்களுடைய வழியில் காலித் படையுடன் நிற்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் தன்யீம் வழியாக மக்கா செல்லும் முக்கிய நேரான பாதையை விட்டுவிட்டு வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். மலைகளுக்கிடையில் கற்களும், பாறைகளும் நிறைந்த கரடு முரடான பாதை வழியே, அதாவது வலப்பக்கம் 'ஹம்ஸ்' என்ற ஊரின் புறவழியான 'ஸனிய்யத்துல் முரார்' வழியாக ஹுதைபிய்யா செல்லும் வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். இவ்வழி கீழ்ப்புறமாக மக்கா செல்லும் வழியாகும். தான் நின்று கொண்டிருந்த வழியை புறக்கணித்து விட்டு இஸ்லாமியப் படை வேறு வழியில் செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காலித் குறைஷிகளை எச்சரிப்பதற்காக மக்காவிற்கு விரைந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து 'ஸனிய்யத்துல் முரார்' என்ற இடத்தை அடைந்தவுடன் அவர்களது வாகனம் அங்கு மண்டியிட்டு உட்கார்ந்து விட்டது. மக்கள் அதை மிரட்டியும் அது எழுந்திருக்காமல் பிடிவாதம் பிடித்தது. அப்போது நபி (ஸல்) ''எனது ஒட்டகம் 'கஸ்வா' முரண்டு பிடிப்பதில்லை! அது அத்தகைய குணமுடையதுமல்ல! என்றாலும் யானைப் படைகளைத் தடுத்த அல்லாஹ் இதையும் தடுத்து விட்டான் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ் மேன்மைபடுத்தியவற்றைக் கண்ணியப்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தை குறைஷிகள் என்னிடம் கேட்டாலும் நான் அவர்களுக்கு அத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்'' என்று கூறிவிட்டு தனது ஒட்டகத்தை அதட்டவே அது குதித்தெழுந்தது. நபியவர்கள் தனது பாதையைத் திருப்பி ஹுதைபிய்யாவின் இறுதியிலுள்ள 'ஸமது' என்ற கிணற்றுக்கு அருகில் தங்கினார்கள். அங்கு மக்களின் தேவையை விட குறைவாகவே தண்ணீர் இருந்தது. ஆனால், மக்கள் அங்கு வந்து இறங்கியவுடனேயே தண்ணீரை எல்லாம் இறைத்து காலி செய்து விட்டார்கள். தங்களின் தாகத்தை நபியவர்களிடம் முறையிட்டனர். நபியவர்கள் தங்களது அம்பு கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அந்தக் கிணற்றில் வைக்கும்படி கூறினார்கள். அவ்வாறே வைக்கப்பட்டவுடன் மக்களின் தாகம் தீரும் அளவுக்கு அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்தது.

நடுவர் வருகிறார்

நபியவர்கள் அங்கு தங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் 'புதைல் இப்னு வர்கா அல் குஜாயீ' என்ற முக்கியப் பிரமுகர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். திஹாமா மாநிலத்தைச் சேர்ந்த மக்களில் குஜாஆ கிளையினர்தான் நபி (ஸல்) அவர்களின் இரகசியத்திற்கு உரித்தான மக்களாகவும், நன்மையை நாடுபவர்களாகவும் இருந்தனர். ''கஅப் இப்னு லுவை ஹுதைபிய்யாவின் கிணறுகள் உள்ள ஓர் இடத்தில் வாலிப ஒட்டகங்களுடன் தங்கியிருக்கிறார். அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உங்களுடன் போர் புரிய வேண்டும் நீங்கள் கஅபாவிற்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கின்றனர். நான் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்று புதைல் கூறினார்.

நபியவர்கள் அவரிடம்: ''நாங்கள் எவரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். நிச்சயமாகக் குறைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து தருவேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்குமிடையில் குறுக்கிடக் கூடாது. (அதாவது, நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது). விரும்பினால் மற்ற மக்களைப் போல அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல், 'போர்தான் புரிவோம்!' என்று பிடிவாதம் பிடித்தால், எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இம்மார்க்கத்திற்காக எனது கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இம்மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களிடம் போர் புரிவேன்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இப்பதிலைக் கேட்ட புதைல் ''நீங்கள் கூறியதை நான் குறைஷிகள் முன் வைக்கிறேன்'' என்று கூறி குறைஷிகளை சந்தித்தார். ''குறைஷிகளே! நான் அந்த மனிதரிடம் இருந்து உங்களிடம் வந்திருக்கிறேன். அவர் கூறும் விஷயத்தையும் கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நான் அதை உங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கிறேன்'' என்றார். ஆனால், அவர்களில் சில அறிவீனர்கள், ''அவர் சார்பாக நீ எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டாம். அது எங்களுக்குத் தேவையுமில்லை'' என்று பேசினார்கள். ஆனால், சில அறிவாளிகள் ''நீர் கேட்டு வந்ததை எங்களிடம் சொல்'' என்றனர். நபியவர்களிடம் கேட்டு வந்ததை அவர் கூறவே, குறைஷிகள் 'மிக்ரஸ் இப்னு ஹப்ஸ்' என்பவனை நபியவர்களிடம் பேசிவர அனுப்பினர். அவன் வருவதைப் பார்த்த நபியவர்கள், ''அவன் ஒரு மோசடிக்காரன்'' என்று கூறினார்கள். அவன் நபியவர்களிடம் பேசியபோது புதைலுக்குக் கூறிய விஷயத்தையே அவனிடமும் கூறினார்கள். அவன் குறைஷிகளிடம் திரும்பி, தான் கேட்டு வந்த செய்தியைக் கூறினான்.

குறைஷிகளின் தூதர்கள்

கினானா கிளையைச் சேர்ந்த ஹுளைஸ் இப்னு அல்கமா என்பவர் ''நான் அவரைச் சந்தித்து வருகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்'' என்று குறைஷிகளிடம் கூறினார். அவர்கள் அனுமதி தரவே அவர் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரைப் பார்த்து நபியவர்கள் ''இவர் இன்னவர், இவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட மற்றும் ஹஜ், உம்ராவுக்காக அழைத்து வரப்பட்ட கால்நடைகளைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு முன் குர்பானி பிராணிகளை நிறுத்துங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே முஸ்லிம்கள் குர்பானி பிராணிகளை வரிசையாக நிறுத்தி தல்பியா' கூறியவர்களாக அவரை வரவேற்றனர். இதைப் பார்த்த அவர் ''சுப்ஹானல்லாஹ்! இவர்களை அல்லாஹ்வின் வீட்டிலிருந்து தடுப்பது முறையல்ல'' என்று கூறிவிட்டு தனது தோழர்களிடம் திரும்பி ''நான் மாலையிடப்பட்டு அடையாளமிடப்பட்ட குர்பானிக்கான ஒட்டகங்களைப் பார்த்தேன். அவர்களைத் தடுப்பது எனக்கு சரியானதாகத் தெரியவில்லை'' என்று கூறினார். இதற்குப் பின் அவருக்கும் குறைஷிகளுக்குமிடையில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

அங்கு வீற்றிருக்த உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி என்பவர், ''இவர் உங்களுக்கு நல்ல கருத்தைக் கூறினார். அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அனுமதி தாருங்கள். நானும் அவரிடம் சென்று பேசி வருகிறேன்'' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். அப்போது நபி (ஸல்) புதைலுக்கு கூறியதையே அவருக்கும் கூறினார்கள். அப்போது ''முஹம்மதே! போர்தொடுத்து உனது இனத்தாரை வேரோடு அழிக்க வேண்டுமென்று நீ விரும்புகின்றாயா? உனது குடும்பத்தாருடன் போர் புரிவது நல்ல பழக்கமாகுமா? அரபிகளில் எவராவது தனது இனத்தாரை உனக்கு முன்பு வேரோடு வெட்டிச் சாய்த்தார் என்று நீ கேள்விப்பட்டதுண்டா? நீ விரும்பியபடி உனக்கு போரில் வெற்றி கிடைக்காமல் அதற்கு மாற்றமாக நீ தோல்வியடைந்தால், உன்னுடன் இருக்கும் இந்த வீணர்களான அற்பர்கள் உன்னை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுதான் நான் எண்ணுகிறேன்'' என்று உர்வா கூறினார்.

உர்வாவின் பேச்சு அபூபக்ர் (ரழி) அவர்களுக்குச் சினமூட்டியது. ''நீ லாத்தின் மர்மஸ்தானத்தைச் சப்பு! நாங்களா இவரை விட்டுவிட்டு ஓடி விடுவோம்?'' என்று கர்ஜித்தார்கள். அதற்கு உர்வா ''இவர் யார்?'' என்றார். ''அபூபக்ர்'' என கூடியிருந்தோர் கூறினர். அதற்கு உர்வா ''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீ எனக்கு ஓர் உதவி செய்திருக்கிறாய். நான் அதற்கு எந்தப் பகரமும் செய்யவில்லை. அப்படி மட்டும் இல்லையென்றால் நான் உனக்கு நல்ல பதில் கூறியிருப்பேன்'' என்றார். மேலும், நபியவர்களிடம் உர்வா பேசும்போது ஒவ்வொரு பேச்சுக்கும் நபியவர்களின் தாடியைப் பிடித்துப் பிடித்து பேசினார். நபி (ஸல்) அவர்களின் அருகில் முகீரா இப்னு ஷுஃபா (ரழி) நின்றிருந்தார்கள். அவரது கையில் உறையிடப்பட்ட வாள் ஒன்று இருந்தது. நபியவர்களின் தாடியை உர்வா பிடிக்கும் போதெல்லாம் அந்த உறையிடப்பட்ட வாளைக் கொண்டு உர்வாவின் கையில் அடித்து ''நபியவர்களின் தாடியை விட்டு உனது கையை அகற்றிக் கொள்'' என்று கூறினார்.

உர்வா தனது தலையை உயர்த்தி ''இவர் யார்'' என்றார். மக்கள் ''முகீரா இப்னு ஷுஃபா'' என்றனர். ''ஓ வாக்குத் தவறியவனே! நீ செய்த மோசடிக் குற்றத்திற்கு நான்தானே பரிகாரம் செய்தேன்'' என்று முகீராவை உர்வா பழித்தார். இவ்வாறு உர்வா கூறக் காரணம்: முகீரா இஸ்லாமை ஏற்பதற்கு முன் ஒரு கூட்டத்தினருடன் நட்பு வைத்திருந்தார். சமயம் பார்த்து அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்து விட்டார். அதற்கு சிறிது காலத்திற்குப் பின்பு நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ''நீர் முஸ்லிமாவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நீ கொள்ளை அடித்த பொருட்களுக்கு நான் பொறுப்பல்ல'' என்று கூறிவிட்டார்கள். இக்குற்றத்திற்குரிய பரிகாரத்தை உர்வாதான் நிறைவேற்றினார் ஏனெனில் முகீராவுடைய தந்தை, உர்வாவின் சகோதரராவார்.

பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் நபித்தோழர்களையும் அவர்கள் நபியவர்களுக்குச் செய்யும் கண்ணியத்தையும் நன்கு கவனித்து உர்வா பிரமிப்படைந்தார். அங்கிருந்து தனது நண்பர்களிடம் வந்த பின் இது குறித்து அவர் தனது இனத்தவர்களிடம் விமர்சித்தார். ''எனது கூட்டத்தினரே! நான் பல அரசர்களிடம் சென்றிருக்கின்றேன். கைஸர், கிஸ்ரா, நஜ்ஜாஷி என பல மன்னர்களை பார்த்திருக்கின்றேன். ஆனால், முஹம்மதின் தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவது போன்று எந்த ஓர் அரசனின் தோழர்களும் தங்கள் அரசரைக் கண்ணியப்படுத்துவதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் ஏதாவது ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக அவர்கள் செய்கிறார்கள். அவர் 'உழு' செய்யும் தண்ணீரைப் பிடிப்பதற்குக் கூட போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர் பேசினால் அனைவரும் அமைதியாகி விடுகின்றனர். அவர் மீதுள்ள கண்ணியத்தால் அவரை அவர்கள் நேருக்கு நேர் கூர்ந்து பார்ப்பதில்லை. ஆக, நான் உங்களுக்கு முன் நேரான ஒரு திட்டத்தை சமர்ப்பித்து விட்டேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறி உர்வா தனது பேச்சை முடித்தார்.

அல்லாஹ்வின் ஏற்பாடு

போர் வெறிபிடித்த குறைஷி வாலிபர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே, அதைத் தடுக்க வேண்டுமென ஆலோசித்தனர். அதன்படி இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து போரைத் தூண்டும் சதி செயல்களைச் செய்ய முடிவுவெடுத்தனர். இம்முடிவை நிறைவேற்றுவதற்கு எழுபது அல்லது எண்பது நபர்கள் புறப்பட்டு 'தன்யீம்' மலை வழியாக முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினர். ஆனால், நபியவர்கள் நியமித்த பாதுகாப்புப் படையின் தளபதியான முஹம்மது இப்னு மஸ்லமா, வந்த எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். எனினும், நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தில் ஆர்வம் கொண்டு அனைவரையும் மன்னித்து விடுதலை செய்து விட்டார்கள். இது குறித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளையும் அவர்களை விட்டும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:24)

குறைஷிகளை சந்திக்க முஸ்லிம் தூதர்...

இந்நேரத்தில் நபி (ஸல்) தனது நிலையையும், தனது நோக்கத்தையும் உறுதியாகத் தெளிவுபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமரை அழைத்தார்கள். ஆனால், ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு துன்பம் ஏற்பட்டால் எனக்காக கோபப்படும் அதீ இப்னு கஅப் கிளையைச் சேர்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் இப்னு அஃப்ஃபானை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்'' என்றார் உமர் (ரழி). நபியவர்கள் உஸ்மானை அழைத்து ''நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை உம்ராவிற்காகத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். மேலும், மக்காவிலிருக்கும் முஸ்லிம்களை சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மக்காவில் ஓங்கச் செய்வான். ஆகவே, யாரும் இறை நம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியமேற்படாது என்றும் அவர்களுக்கு சொல்லுங்கள்!'' என்றார்கள்.

உஸ்மான் (ரழி) அங்கிருந்து புறப்பட்டு 'பல்தஹ்' என்ற இடத்தை அடைந்தபோது, அங்கிருந்த குறைஷிகள் ''உஸ்மானே! நீர் எங்கு செல்கின்றீர்!'' என்றனர். அதற்கு உஸ்மான் (ரழி) சில விஷயங்களைக் கூறி அதை சொல்வதற்காகத்தான் நபியவர்கள் என்னை அனுப்பினார்கள் என்றார். அதற்கு குறைஷிகள், ''நீர் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற செல்லலாம்'' என்றனர். அவையில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல்ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரழி) அவர்களை வரவேற்றார். மேலும், தனது குதிரைக்குக் கடிவாளமிட்டு, அதில் தனக்குப் பின்னால் உஸ்மானை அமரச் செய்து, அவருக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்குள் அழைத்து வந்தார். மக்கா வந்தவுடன் நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் குறைஷித் தலைவர்களிடம் உஸ்மான் (ரழி) விவரித்தார். உஸ்மான் பேசி முடித்தவுடன் குறைஷிகள் ''நீங்கள் கஅபாவை வலம் வந்து கொள்ளுங்கள்'' என்றனர். ஆனால், ''நபி (ஸல்) கஅபாவை வலம் வரும் வரை நான் வரமாட்டேன்'' என்று உஸ்மான் மறுத்துவிட்டார்.

கொலை செய்தி பரவுதல், உடன்படிக்கை வாங்குதல்

உஸ்மானைக் குறைஷிகள் மக்காவில் தடுத்து வைத்துக் கொண்டனர். இச்சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்த பின் உஸ்மானை அனுப்பலாம் என்ற எண்ணத்தில் குறைஷிகள் தடுத்து வைத்திருக்கலாம். ஆனால், உஸ்மான் (ரழி) கொலை செய்யப்பட்டு விட்டார் என்று மக்காவிற்கு வெளியில் செய்தி பரவியது. அவ்வாறே முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பரவியது. இந்தச் செய்தி கிடைத்தவுடன் ''குறைஷிகளிடம் போர் புரியாமல் நாம் இவ்விடத்தை விட்டு நகரமாட்டோம்'' என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். உத்தமத் தோழர்கள் உயிர் கொடுக்கவும் காத்திருந்தனர். ''போரிலிருந்து பின்வாங்க மாட்டோம்'' என்று மிக உற்சாகத்துடன் உடன்படிக்கை செய்யலானார்கள். தோழர்களின் ஒரு கூட்டம் ''மரணம் வரை போர் புரிவோம்'' என்று நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.

அஸத் குடும்பத்தைச் சேர்ந்த அபூஸினான் என்பவர்தான் நபி (ஸல்) அவர்களிடம் முதன் முதலில் உடன்படிக்கை செய்தார். ''மரணிக்கும் வரை போர் புரிவேன்'' என்று மூன்று முறை ஸலமா இப்னு அக்வா ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்பு இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார். அந்த அளவு அறப்போர் புரியவும், அதில் உயிர் நீக்கவும் பேராவல் கொண்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி ''இந்த கை உஸ்மான் சார்பாக'' என்றார்கள். அதாவது, உஸ்மான் உயிருடன் இருந்தால் அவரும் இதில் கலந்து கொள்வார் என்பதை அறிவிக்கும் விதமாக நபியவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற செய்தி குறைஷிகளுக்குத் தெரிய வரவே, இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது உசிதமல்ல தாமதப்படுத்தாமல் உடனடியாக அவரை முஸ்லிம்களிடம் அனுப்பிட வேண்டும் நமது முடிவைப் பிறகு தூதுவர் மூலம் சொல்லி அனுப்பிக் கொள்ளலாம் என்று ஆலோசனை செய்து உஸ்மானை அனுப்பி விட்டனர். உடன்படிக்கை செய்யும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. உஸ்மானும் எவ்வித ஆபத்துமின்றி அங்கு வந்து சேர்ந்தார். உஸ்மான் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். ஜத்துப்னு கைஸ் என்ற நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் இவ்வுடன்படிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.

நபியவர்கள் ஒரு மரத்திற்குக் கீழ் இவ்வுடன்படிக்கையை வாங்கினார்கள். அப்போது உமர் (ரழி) நபியின் கையைத் தாங்கிப் பிடித்திருந்தார்கள். மஅகில் இப்னு யஸார் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபியவர்களுக்கு நிழல் தருமாறு பிடித்திருந்தார்கள். இவ்வுடன்படிக்கையைத் தான் 'பைஅத்துர் ரிழ்வான்' (அங்கீகரிக்கப்பட்ட இறை பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படுகிறது. இது குறித்தே அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.

அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து உடன்படிக்கை செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். (அல்குர்ஆன் 48:18)

சமாதான ஒப்பந்தம்

நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட குறைஷிகள், சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ர் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஒப்பந்தத்தில் கீழ்காணும் முக்கிய அம்சத்தை இடம்பெறச் செய்தனர். அதாவது, உம்ரா செய்ய மக்காவிற்குள் வராமல் முஸ்லிம்கள் கண்டிப்பாக திரும்பிவிட வேண்டும். காரணம், முஹம்மது மக்காவுக்குள் எங்களை பலவந்தப்படுத்தி நுழைந்து விட்டார் என்று அரபிகள் நாளை ஏளனமாகப் பேசிவிடக் கூடாது.

குறைஷிகளின் இறுதி தூதராக சுஹைல், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார். சுஹைலைப் பார்த்ததும் நபியவர்கள் (சுஹைல் என்பதின் பொருள் இலகுவானது. ஆகவே) ''உங்களது காரியம் உங்களுக்கு இலகுவாகி விட்டது. குறைஷிகள் இவரை அனுப்பியதிலிருந்து அவர்கள் சமாதானத்தை நாடிவிட்டனர் என தெரிந்து கொள்ளலாம்'' என்று முஸ்லிம்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் சமாதானத்திற்கான அம்சங்களை முடிவு செய்தனர்.

அந்த அம்சங்களாவன:

1) நபியவர்கள் இந்த ஆண்டு திரும்பிச் செல்ல வேண்டும். மக்காவிற்குள் நுழையக் கூடாது. அடுத்த வருடம் முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால், அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித தொந்தரவும் கொடுக்கப்பட மாட்டாது.

2) பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்வித தீங்கும் செய்யக் கூடாது.

3) யாரொருவர் முஹம்மதுடைய ஒப்பந்தத்திலும் உடன்படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். குறைஷிகளின் ஒப்பந்தத்திலும் உடன் படிக்கையிலும் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். எந்த ஒரு கிளையினரும் இந்த இரு வகுப்பாரில் ஒருவருடன் சேர்ந்து கொள்கிறாரோ அவர் அந்த வகுப்பாரையே சேர்ந்தவராவார். அதற்குப் பின் அந்தக் கிளையினருடன் யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அது அந்த வகுப்பினர் அனைவர் மீதும் அத்துமீறியதாகும்.

4) குறைஷிகளில் யாராவது தனது பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவரை முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

இவற்றை எழுதுவதற்காக நபியவர்கள் அலீயை அழைத்து வாசகங்களைக் கூற அலீ (ரழி) எழுத ஆரம்பித்தார்கள். முதலாவதாக ''பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம் -அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்-'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட சுஹைல் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ரஹ்மான் என்றால் யார்? என்று எங்களுக்குத் தெரியாது. எனவே, பிஸ்மிக்கல்லாஹும்ம -அல்லாஹ்வே உனது பெயரால்-'' என்று எழுதும்படி கூறினார். அதை ஏற்று நபியவர்கள் அலீயிடம் அவ்வாறே எழுதச் சொன்னார்கள். பின்பு ''இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்'' என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ''நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம் உம்மை அவனது வீட்டிலிருந்து தடுத்திருக்க மாட்டோம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்'' என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள், ''நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும் சரியே! நான் உண்மையில் அல்லாஹ்வின் தூதர்தான் என்று கூறிவிட்டு அலீயிடம் 'ரஸூலுல்லாஹ்' என்ற சொல்லை அழித்துவிட்டு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார்கள். ஆனால், அலீ (ரழி) அவர்கள் இந்தச் சொல்லை அழிப்பதற்கு மறுத்துவிடவே நபி (ஸல்) அவர்களே தங்களது கையால் அதை அழித்தார்கள். பின்பு ஒப்பந்தப் பத்திரம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டது. சமாதான உடன்படிக்கை முடிந்தவுடன் குஜாஆ கிளையினர் நபி (ஸல்) அவர்களின் ஒப்பந்தத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அப்துல் முத்தலிபின் காலத்திலிருந்தே ஹாஷிம் கிளையினரின் ஒப்பந்தத் தோழர்களாகவே விளங்கினர். இதை நாம் இந்நூலின் ஆரம்பத்திலும் கூறியிருக்கிறோம். பக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொண்டனர்.

அபூஜந்தல் மீது கொடுமை

இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருக்கும் போது சுஹைல் இப்னு அயின் மகன் அபூ ஜந்தல் (ரழி) மக்காவின் கீழ்புறமாக வெளியேறி கையில் விலங்குகளுடன் முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து விழுந்தார். அவரைப் பார்த்த சுஹைல் ''இது நான் உம்மிடம் நிறைவேற்றக் கோரும் முதல் விஷயமாகும். இவனை நீ திருப்பி அனுப்பிவிட வேண்டும்'' என்று கூறினார். நபியவர்கள் ''நாம் இன்னும் இப்பத்திரத்தை எழுதி முடிக்கவில்லையே'' என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், ''நீர் அப்படி செய்யவில்லை என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எவ்விஷயத்திலும் உம்மிடம் உடன்படிக்கை செய்து கொள்ள மாட்டேன்'' என்று பிடிவாதம் பிடித்தான். அதற்கு நபியவர்கள், ''இக்கோரிக்கையை நீ எனக்கு நிறைவேற்றிக் கொடு'' என்று கூறினார்கள். ஆனால், அவன் ''நான் ஒருக்காலும் நிறைவேற்றித் தரமாட்டேன்'' என்று முரண்டு பிடித்தான். நபியவர்கள் ''இல்லை நீ எனக்கு நிறைவேற்றியே ஆகவேண்டும்'' என்று கூறினார்கள். ஆனால், அவன் ''அது என்னால் முடியாது'' என்று முற்றிலுமாக மறுத்து விட்டான். பிறகு அபூ ஜந்தலின் முகத்தில் அறைந்து அவரது கழுத்தைப் பிடித்து இணைவைப்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க சுஹைல் இழுத்துச் சென்றான்.

முஸ்லிம்களை விட்டு பிரியும் போது அபூஜந்தல் மிக உரத்தக் குரலில் ''முஸ்லிம்களே! நான் இணைவைப்பவர்களிடமா திரும்ப கொண்டு போகப்படுகிறேன்? எனது மார்க்கத்தில் என்னை அவர்கள் சோதிக்கின்றனரே!'' என்று கதறினார். ''அபூ ஜந்தலே! சகித்துக் கொள். நன்மையை நாடிக்கொள். உனக்கும் உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும் மகிழ்ச்சியையும் நிச்சயமாக அல்லாஹ் தருவான். நாங்கள் இக்கூட்டத்தினருடன் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் மீது கடமை. அவர்களும் அல்லாஹ்வின் பெயர் கூறி இந்த உடன்படிக்கையைச் செய்திருக்கிறார்கள். எனவே, நாங்கள் மோசடி செய்ய முடியாது'' என்று நபியவர்கள் கூறினார்கள்.

உமர் (ரழி) அபூ ஜந்தலுக்கு அருகில் சென்று ''அபூ ஜந்தலே! இவர்கள் இணைவைப்பவர்கள்! இவர்களின் உயிர் நாயின் உயிருக்கு சமமானது'' என்று கூறியவராக தனது வாளின் கைப்பிடியை அபூ ஜந்தலுக்கு அருகில் கொண்டு சென்றார்கள்.

உமர் (ரழி) கூறுகிறார்கள்: அவர் எனது வாளை எடுத்து தனது தந்தையைக் கொன்று விடுவார் என நான் ஆதரவு வைத்தேன். ஆனால், அவர் தந்தையின் மீதுள்ள பாசத்தால் கொல்லாமல் விட்டுவிட்டார். இதே நிலையில் ஒப்பந்தப் பத்திரமும் எழுதி முடிக்கப்பட்டது.

உம்ராவை முடித்துக் கொள்வது

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை முடித்தவுடன் தங்களது தோழர்களிடம் எழுந்து சென்று ''குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள்'' என்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபி (ஸல்) மூன்று முறை கூறியும் எவரும் எழுந்து செல்லவில்லை. ஆகவே, நபி (ஸல்) தனது மனைவி உம்மு ஸலமாவிடம் சென்று மக்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்'' என்றார்கள். நபியவர்கள் தனது மனைவி கூறியவாறே எழுந்து சென்று யாரிடமும் பேசாமல் தனது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள்.

இதைப் பார்த்த மக்கள் எழுந்து தங்களது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டு ஒருவர் மற்றவருக்கு மொட்டையிட ஆரம்பித்தார்கள். ஏழு பேர்களுக்கு ஓர் ஒட்டகம், ஏழு பேர்களுக்கு ஒரு மாடு என்பதாக அறுத்தார்கள். நபியவர்கள் அபூ ஜஹ்லுக்கு சொந்தமாக இருந்த ஓர் ஆண் ஒட்டகத்தை அறுத்தார்கள். அதன் மூக்கில் வெள்ளியினாலான ஒரு வளையம் இருந்தது. இணைவைப்பவர்களுக்குக் கோபமூட்டுவதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் மொட்டையடித்துக் கொண்டவர்களுக்கு மூன்று முறை பாவமன்னிப்புடைய பிரார்த்தனை செய்தார்கள். தலை முடியை குறைத்துக் கொண்டவர்களுக்கு ஒருமுறை பிரார்த்தித்தார்கள். நோயின் காரணமாக தலைமுடியை முன்கூட்டியே சிரைத்துக் கொண்டவர்கள் அதற்குப் பரிகாரமாக நோன்பு வைத்துக் கொள்ளலாம் அல்லது தர்மம் அல்லது குர்பானி கொடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கூறப்பட்ட இறைவசனம் இந்த பிரயாணத்தின் போது கஅப் இப்னு உஜ்ரா (ரழி) என்ற நபித்தோழரின் விஷயத்தில் இறக்கப்பட்டது.

பெண்களைத் திரும்ப அனுப்ப மறுத்தல்

முஸ்லிமான சில பெண்கள் ஹிஜ்ரா செய்து முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்களின் உறவினர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி அவர்களைத் தங்களிடம் திரும்ப அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். ''ஒப்பந்தத்தில் ஆண் என்ற சொல்லையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பெண்கள் இதில் கட்டுப்படமாட்டார்கள்'' என்று காரணம் காட்டி நபியவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இது விஷயமாகத்தான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்தப் பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பி விடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல, அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்களுடைய பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்காமல்) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம் கேட்கலாம்.) இது அல்லாஹ்வினுடைய கட்டளை. உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:10)

மேலும்,

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ''அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவதில்லை'' என்றும், உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனுமாயிருக்கின்றான். (அல்குர்ஆன் 60:12)

என்ற வசனத்தின் மூலம் ஹிஜ்ரா செய்து வந்த பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்தார்கள். ''யார் திருமறையில் கூறப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களிடம் நான் உங்களது ஹிஜ்ராவை ஏற்றுக் கொண்டேன்'' என்று கூறுவார்கள். அவர்களைத் திரும்ப அனுப்ப மாட்டார்கள்.

இந்த வசனத்தில் இறக்கப்பட்ட சட்டத்தின்படி முஸ்லிம்கள் மக்காவிலிருந்த தங்களது இணைவைக்கும் மனைவிகளை விவாகரத்து செய்தனர். அன்றைய தினத்தில் உமர் (ரழி) இணைவைக்கும் தனது இரு மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியாவும் இன்னொருவரை ஸஃப்வானும் மணம் முடித்துக் கொண்டனர். (அதுவரை முஆவியாவும் ஸஃப்வானும் இஸ்லாமைத் தழுவவில்லை.)

ஒப்பந்த அம்சங்களின் விளைவுகள்

இதுவரை ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையை நாம் பார்த்தோம். எவர் ஒருவர் இந்த அம்சங்களையும் அதன் பின்விளைவுகளையும் நன்கு ஆழமாக சிந்தித்துப் பார்ப்பாரோ அவர் இந்த உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றிதான் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வார். அதாவது, குறைஷிகள் முஸ்லிம்களின் எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எப்படியாவது வேரோடு அழித்து விட வேண்டுமென்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர். என்றாவது ஒரு நாள் அந்நோக்கம் நிறைவேறும் என்று எதிர் பார்த்திருந்தனர். முடிந்தளவு தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி இஸ்லாமிய அழைப்புப் பணி மக்களை சென்றடையாமல் தடுத்தனர். அரபு தீபகற்பத்தில் அனைத்து அரபுகளின் உலக விஷயங்களுக்கும், மதக் காரியங்களுக்கும் தலைமை பீடமாக இருந்தனர்.

இறுதியாக, இவர்கள் சமாதான ஒப்பந்தத்திற்குப் பணிந்து வந்ததே முஸ்லிம்களின் ஆற்றலை அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கும், இனி முஸ்லிம்களை எதிர்க்க குறைஷிகளிடம் ஆற்றல் இல்லை என்பதற்கும் தெளிவான ஆதாரமாகிவிட்டது. ஒப்பந்தத்தின் மூன்றாவது அம்சத்தின் மூலம் குறைஷிகள் தங்களது உலக ரீதியான மற்றும் மத ரீதியான தலைமைத்துவத்தை மறந்து விட்டனர். இனி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் சுமையாகி விட்டது என்பதையும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம். ஏனைய மக்கள் மற்றும் அரபு தீபகற்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டாலும் அதைப் பற்றி குறைஷிகள் இனி கவலைப்பட மாட்டார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார்கள். அது விஷயத்தில் எத்தகைய தலையீடும் செய்யமாட்டார்கள் என்ற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இது குறைஷிகளைக் கவனித்துப் பார்க்கும்போது மிகப்பெரிய தோல்வியும், முஸ்லிம்களைக் கவனித்துப் பார்க்கும்போது மிகப் பெரும் வெற்றியாகவும் அமைந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்!

முஸ்லிம்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்குமிடையே நடந்த போர்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொருட்களைச் சூறையாடுவதோ, உயிர்களை அழிப்பதோ, மக்களைக் கொன்று குவிப்பதோ அல்லது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும்படி எதிரியை நிர்ப்பந்திப்பதோ அல்ல. மாறாக, இப்போர்களின் மூலம் முஸ்லிம்களின் ஒரே குறிக்கோள் என்னவெனில், மார்க்கம் மற்றும் கொள்கை விஷயத்தில் மக்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

(நபியே!) உங்கள் இறைவனால் அருளப்பட்ட இ(ந்த வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம் விரும்பியவர் நிராகரித்து விடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை.) (அல்குர்ஆன் 18:29)

தாங்கள் நாடும் நோக்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் எந்த சக்தியும் குறுக்கிடக் கூடாது என்பதுவே ஆகும். ஆம்! முழுமையாக அந்நோக்கம் இந்த எளிமையான சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்தது. ஒருவேளை மாபெரும் போர் நடந்து அதில் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நோக்கம் இந்தளவு நிறைவேறுமா என்பது சந்தேகமே. அல்லாஹ்வின் அருளால் இச்சுதந்திரத்தால் முஸ்லிம்களுக்கு அழைப்புப் பணியில் பெரும் முன்னேற்றமும் வெற்றியும் கிடைத்தது. இந்த ஒப்பந்தத்திற்கு முன் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரமாக இருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது, முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரமாக ஆகியது.

இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சம் (பத்து ஆண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்வது) முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் இரண்டாவது பகுதியாகும். அதாவது, முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாக போரைத் தொடங்கியதில்லை. மாறாக, எப்போதும் குறைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினர். அல்லாஹ் தனது திருமறையில்:

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரை விட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். (அல்குர்ஆன் 9:13) என்று குறிப்பிடுகின்றான்.

முஸ்லிம்கள் எடுத்த இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் என்னவெனில், குறைஷிகள் தங்களது வம்புத்தனத்தை விட்டும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் அனைவருடனும் சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும் ஒவ்வொருவரும் தங்களது வழியில் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒருவர் மற்றவர் விஷயத்தில் குறுக்கிடக் கூடாது என்பதுதான்.

பத்து ஆண்டுகள் போர் நிறுத்தம் என சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதால் குறைஷிகளின் வம்புத்தனம், அகம்பாவம், அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுத்தல் ஆகிய அனைத்திற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டது. மேலும், போரை இதுநாள் வரை முதலாவதாக ஆரம்பித்து வந்தவர்கள் இப்போது தோற்று விட்டனர், கோழையாகி விட்டனர், வலுவிழந்து விட்டனர், பின்வாங்கி விட்டனர், என்பதற்கு ஒப்பந்தத்தின் இவ்வம்சம் தெளிவான ஆதாரமாகி விட்டது.

ஒப்பந்தத்தின் முதல் அம்சம் (வரும் ஆண்டு மக்காவிற்கு வந்து மூன்று நாட்கள் தங்கலாம், இந்த ஆண்டு திரும்பி செல்ல வேண்டும்) இந்த அம்சம் இதுநாள் வரை முஸ்லிம்களைக் குறைஷிகள் சங்கைமிக்க அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுத்து வந்ததற்கு ஒரு முடிவாக அமைந்தது. ஆகவே, இதுவும் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியே ஆகும். இந்த அம்சத்தில் குறைஷிகளுக்கு சாதகமான, ஆறுதலான எதுவும் இருக்கவில்லை. ஆம்! அந்த ஆண்டு மட்டும் முஸ்லிம்களை மக்காவிற்கு வரவிடாமல் தடுக்க முடிந்ததைத் தவிர வேறெந்த சாதகமும் அவர்களுக்கு இருக்கவில்லை.

இவ்வாறு மூன்று அம்சங்களைக் குறைஷிகள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகக் கொடுத்தனர். இதற்கு மாற்றமாக நான்காவது அம்சத்தில் இடம்பெற்ற, அதாவது மக்காவிலிருந்து யாராவது தப்பித்து மதீனா வந்தால் அவர்களைத் திரும்ப மக்காவிற்கு அனுப்பி விடவேண்டும். ஆனால், மதீனாவிலிருந்து யாராவது தப்பித்து மக்கா வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் என்ற ஒரே ஒரு அம்சத்தைத்தான் அவர்கள் தங்களுக்கு சாதகமாக பெற்றுக் கொண்டனர். ஆனால், இதுவும் அவர்களுக்கு உண்மையில் சாதகமானதோ, பயன் தருவதோ கிடையாது. இது ஒரு அற்பமான விஷயம். ஏனெனில், எந்த ஓர் உண்மை முஸ்லிமும் அல்லாஹ்வை விட்டோ, அவனது தூதரை விட்டோ, மதீனாவை விட்டோ விலகிச் செல்ல மாட்டார். அப்படி சென்றாலும் அதில் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இடையூறும் இல்லை.

இஸ்லாமை விட்டு உள்ரங்கமாகவோ, வெளிரங்கமாகவோ வெளியேறியவன் மட்டுமே முஸ்லிம்களை விட்டும் விலகிச் சென்று நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்து கொள்வான். அப்படி ஒருவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி விட்டால் முஸ்லிம்களுக்கு அவனிடம் எந்தத் தேவையும் இல்லை. அவன் இஸ்லாமிய சமூகத்தை விட்டு பிரிந்து சென்று விடுவது, அதிலிருப்பதை விட மிகச் சிறந்ததே. இதைத்தான் நபியவர்கள் ''யாரொருவர் நம்மிடமிருந்து விலகி அவர்களிடம் சென்று விடுவாரோ அல்லாஹ் அவரைத் தூரமாக்கி விடுவானாக'' என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மக்காவில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒருவரால் மதீனாவிற்கு வர இயலாது என்றாலும் அல்லாஹ்வின் பூமி விசாலமானது என்பதால் அவர் வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மதீனாவாசிகள் இஸ்லாமைப் பற்றி தெரியாமல் இருந்த போதே முஸ்லிம்கள் ஹபஷா சென்று தங்கவில்லையா? இதைத்தான் நபியவர்கள் ''யார் அவர்களிலிருந்து நம்மிடம் வருகிறாரோ, அதாவது இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் வெகு விரைவில் நல்ல சூழ்நிலையையும் கஷ்டத்திலிருந்து விடுதலையும் தருவான்'' என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இதுபோன்ற தற்காப்பு உடன்படிக்கையைக் குறைஷிகள் ஏற்படுத்திக் கொண்டது (மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்தவரை திருப்பி அனுப்பிவிட வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்தவர் திரும்பி அனுப்பப்பட மாட்டார் என்பது) வெளிப்படையாக பார்க்கும் போது குறைஷிகளுக்கு இது கண்ணியமானதாகத் தெரிந்தாலும், உண்மையில் குறைஷிகள் எவ்வளவு நடுக்கத்திலும், சோர்விலும் தங்களது சிலை வணக்கத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சத்திலும் இருக்கின்றனர் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

தங்களின் மதக் கட்டமைப்பு அழியும் அபாயத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவேதான், இதுபோன்ற ஒரு தற்காப்பு அம்சத்தை தங்கள் உடன்படிக்கையில் இடம்பெறச் செய்தனர். முஸ்லிம்களிடமிருந்து குறைஷிகளிடம் சேர்ந்து கொண்டவரை திருப்பி கேட்க மாட்டோம் என்று நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையாக கூறியது தனது மார்க்கத்தின் மீதும், அதை பின்பற்றியவர்கள் மீதும் தான் வைத்திருந்த முழுமையான நம்பிக்கைக்கு ஆதாரமாகும். எனவே, இதுபோன்ற நிபந்தனைகளைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் சிறிதளவும் அஞ்சவில்லை.

முஸ்லிம்களின் துக்கமும், உமரின் தர்க்கமும்

மேற்கூறப்பட்ட இவைதான் இந்த சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்களாகும். எனினும், வெளிப்படையான இரு காரணங்களால் அனைத்து முஸ்லிம்களையும் துக்கமும், கவலையும் கடுமையாக ஆட்கொண்டது. நபியவர்கள் ''அல்லாஹ்வின் இல்லத்திற்குச் செல்வோம். அங்கு சென்று தவாஃப் செய்வோம்'' என்று கூறினார்கள். ஆனால், அங்கு சென்று தவாஃப் செய்யாமலேயே எப்படி நம்மைத் திருப்பி அழைத்துச் செல்லலாம் என்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம்: இவர்கள் (முஹம்மது) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். மேலும் சத்தியத்தில் இருக்கிறார்கள். அல்லாஹ் தனது மார்க்கத்தை உயர்வாக்குவான் என்று வாக்கும் அளித்துள்ளான். அப்படியிருக்க ஏன் குறைஷிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பணிய வேண்டும்? ஏன் சமாதானத்தில் தாழ்மையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்?

இந்த இரண்டு வெளிப்படையான காரணங்கள் பல சந்தேகங்களையும், பல எண்ணங்களையும், பல குழப்பங்களையும் கிளப்பின. இதனால் முஸ்லிம்களின் உணர்வுகள் காயமடைந்தன. சமாதான ஒப்பந்தத்தின் அம்சங்களைச் சிந்திக்க விடாமல் கவலையும் துக்கமும்தான் முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்தது. ஏனைய மக்களைக் காட்டிலும் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள்தான் அதிகக் கவலை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து பேசினார்கள். இதோ... அவர்களது உரையாடல்:

உமர் (ரழி): அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இருப்பது உண்மைதானே?

நபி (ஸல்): ஆம்! (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றார்கள்.)

உமர் (ரழி): நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்திலும், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள். சரிதானே?

நபி (ஸல்): ஆம்! (நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்தில் இருக்கின்றனர், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் இருக்கின்றனர்).

உமர் (ரழி): அப்படியிருக்க நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் விட்டுக்கொடுத்து தாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் நடுவில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் இந்நிலையில் நாம் திரும்பிச் செல்வது எவ்வாறு நியாயமாகும்?

நபி (ஸல்): கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர். என்னால் அவனுக்கு மாறு செய்ய முடியாது. அவன் எனக்கு உதவி செய்வான், ஒருக்காலும் அவன் என்னைக் கைவிட மாட்டான்.

உமர் (ரழி): அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருவோம் அதைத் தவாஃப் செய்வோம் என்று நீங்கள் எங்களுக்குக் கூறவில்லையா?

நபி (ஸல்): ஆம்! நான் கூறினேன். ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று கூறினேனா?

உமர் (ரழி): இல்லை! அவ்வாறு கூறவில்லை.

நபி (ஸல்): நிச்சயமாக நீ கஅபாவிற்குச் சென்று அதை தவாஃப் செய்வாய்.

பின்பு உமர் (ரழி) கோபத்துடன் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விகளைக் கேட்க, அபூபக்ர் (ரழி) அவர்களும் நபியவர்கள் கூறியவாறே உமருக்குப் பதில் கூறினார்கள். மேலும் ''உமரே! நீ மரணிக்கும் வரை நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பிடித்துக்கொள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் உண்மையில்தான் இருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு,

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!) (அல்குர்ஆன் 48: 1,2)

என்ற வசனம் அருளப்பட்டது. உடன் நபியவர்கள் ஒருவரை அனுப்பி அவ்வசனத்தை உமர் (ரழி) அவர்களிடம் ஓதிக்காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்த உமர் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?'' என்று கேட்டார்கள். நபியவர்கள் ''ஆம்!'' என்றவுடன் உமர் (ரழி) மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.

பின்பு, தான் செய்த காரியத்தை எண்ணி உமர் (ரழி) மிகவும் கவலையடைந்தார்கள். இதைப் பற்றி உமரே இவ்வாறு கூறினார்கள்: ''நான் எனது செயலை எண்ணி வருந்தி அதற்கு பரிகாரமாக பல நற்செயல்களைச் செய்தேன். அன்றைய தினம் நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்காக எப்போதும் தர்மம் செய்து வந்தேன். நோன்பு வைத்து வந்தேன். தொழுது வந்தேன். அடிமைகளை உரிமையிட்டு வந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் பேசிய பேச்சை எண்ணி பயந்து பல நன்மைகளைச் செய்தேன், நான் பேசிய பேச்சு நன்மையாக மாற வேண்டும் என்பதே என் ஆதரவாக இருந்தது.''(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம்)

ஒடுக்கப்பட்டோர் துயர் தீர்ந்தது

நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பிச் சென்று விட்டார்கள். சில நாட்களுக்குப் பின் மக்காவில் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரான அபூ பஸீர் (ரழி) என்பவர் காஃபிர்களிடமிருந்து தப்பித்து மதீனா வந்து சேர்ந்தார். இவர் குறைஷிகளின் தோழர்களான ஸகீப் கிளையைச் சேர்ந்தவர். இவரைப் பிடித்து வர குறைஷிகள் இருவரை மதீனாவிற்கு அனுப்பி வைத்தனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''நீங்கள் எங்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்'' என்றனர். நபியவர்கள் அபூபசீரை அவ்விருவரிடமும் ஒப்படைத்து விட்டார்கள். அவ்விருவரும் அபூபசீரை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபா வந்து சேர்ந்தனர். தங்களது வாகனத்தை விட்டு இறங்கி தங்களுடன் கொண்டு வந்திருந்த பேரீத்தம் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அபூபஸீர் (ரழி) அவ்விருவரில் ஒருவரிடம் ''உனது வாள் மிக நன்றாக உள்ளதே!'' என்றார். அதைக் கேட்ட அவன் அவ்வாளை உருவி ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது மிகச் சிறந்த வாள். இதை நான் பலமுறை சோதித்துப் பார்த்திருக்கின்றேன்'' என்றான். அதற்கு அபூ பஸீர் (ரழி) ''நான் அதைப் பார்க்க வேண்டும். காண்பி!'' என்றார். அவன் அவரிடம் அந்த வாளைக் கொடுக்கவே அதை வாங்கி ஒரே வெட்டில் அவனது கதையை அவர் முடித்துவிட்டார்.

இதைப் பார்த்த மற்றவன் வெருண்டோடி மதீனா வந்து சேர்ந்தான். பயந்த நிலையில் பள்ளிக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்து நபியவர்கள் இவன் ஏதோ ஒரு திடுக்கமான காட்சியைப் பார்த்து விட்டான் என்று கூறினார்கள். நபியவர்களுக்கருகில் வந்த அவன் ''எனது நண்பன் கொலை செய்யப்பட்டு விட்டான். நானும் கொலை செய்யப்பட்டு விடுவேன்'' என்று பதறினான். அந்நேரத்தில் அபூபசீரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து ''அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உங்களது பொறுப்பை நிறைவேற்றி விட்டான். நீங்கள் என்னை அவர்களிடம் அனுப்பி விட்டீர்கள். பின்பு அல்லாஹ்தான் அவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தான்'' என்று கூறினார். அதைக் கேட்ட நபியவர்கள், ''இவரது தாய்க்கு ஏற்பட்ட நாசமே! இவர் போரை மூட்டி விடுவார் போலிருக்கிறதே! இவரை யாராவது பிடிக்க வேண்டுமே'' என்றார்கள். நபியவர்களின் இப்பேச்சை கேட்டு அவர்கள் தன்னை மீண்டும் காஃபிர்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று அறிந்து கொண்ட அபூபஸீர் அங்கிருந்து வெளியேறி கடற்கரை ஓரமாக வந்து தங்கிக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பின் மக்காவில் இவரைப் போல் துன்பம் அனுபவித்து வந்த அபூஜந்தல் இப்னு சுஹைல் (ரழி) மக்காவிலிருந்து தப்பித்து இவருடன் வந்து சேர்ந்து கொண்டார். இவ்வாறே மக்காவில் முஸ்லிமானவர் ஒவ்வொருவராக பலர் அபூபஸீர் (ரழி) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். இவர்கள் ஷாம் நாட்டை நோக்கிச் செல்லும் குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவ்வழியாக வருவதைத் தெரிந்து கொண்டால் உடனடியாக அதைத் தாக்கி, பொருட்களைக் கொள்ளையிட்டு அதில் உள்ளவர்களைக் கொலை செய்து விடுவார்கள். இதனால் பெரும் துன்பத்திற்குள்ளான குறைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் தூதனுப்பி அல்லாஹ்விற்காகவும் இரத்த உறவுக்காகவும் நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். யார் இஸ்லாமை ஏற்று உங்களிடம் வந்து விட்டார்களோ அவர் அபயம் பெற்றவராவார். (அவரைத் திரும்ப கேட்க மாட்டோம்) என்று கூறினர். அவர்களின் இக்கோரிக்கைக்கிணங்க நபியவர்கள் அந்த முஸ்லிம்களை மதீனாவிற்கு வரவழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

குறைஷி மாவீரர்கள் இஸ்லாமைத் தழுவுதல்

இந்த ஒப்பந்தத்திற்குப் பின் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு குறைஷிகளின் முக்கிய வீரர்களும் பிரமுகர்களுமான அம்ர் இப்னு ஆஸ், காலித் இப்னு வலீத், உஸ்மான் இப்னு தல்ஹா போன்றவர்கள் இஸ்லாமைத் தழுவினர். இவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது ''மக்கா தனது ஈரக் குலைகளை நம்மிடம் ஒப்படைத்து விட்டது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment