Wednesday, 9 December 2015

முஹம்மது நபி வரலாறு [அர்ரஹீக்குல் மக்தூம் 012]

முதல் கால கட்டம் - அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்

இரகசிய அழைப்பு - மூன்று ஆண்டுகள்


'சூரா' முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள்முனை தான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.


முந்தியவர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் ''அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்'' (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உரியவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.

இவர்களையடுத்து இச்சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீன்) என்று பெயர் சூட்டப்பட்ட அபூ உபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ், அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத், அவரது மனைவி உம்மு ஸலமா, அர்கம் இப்னு அபுல் அர்கம், உஸ்மான் இப்னு மழ்வூன், அவரது இரு சகோதரர்கள் குதாமா, அப்துல்லாஹ், உபைதா இப்னு ஹாரிஸ், ஸயீது இப்னு ஜைது, அவரது மனைவி ஃபாத்திமா பின்த் கத்தாப் (உமர் அவர்களின் சகோதரி) கப்பாப் இப்னு அரத், ஜஃபர் இப்னு அபூதாலிப். அவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ், காலித் இப்னு ஸயீது இப்னு ஆஸ், அவரது மனைவி உமைனா பின்த் கலஃப், அம்ரு இப்னு ஸயீது இப்னு ஆஸ், ஹாதிப் இப்னு ஹாரிஸ், அவரது மனைவி ஃபாத்திமா பின்த் முஜல்லில், கத்தாப் இப்னு அல் ஹாரிஸ், அவரது மனைவி ஃபுகைஹா பின்த் யஸார், மஃமர் இப்னு அல்ஹாரிஸ், முத்தலிப் இப்னு அஜ்ஹர், ரமலா பின்த் அபூ அவ்ஃப், நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி அன்ஹும்) ஆகிய இவர்கள் அனைவரும் குறைஷி கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், மஸ்வூத் இப்னு ரபீஆ, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். அபூ அஹ்மத் இப்னு ஜஹ்ஷ், பிலால் இப்னு ரபாஹ் ஹபஷி, ஸுஹைப் இப்னு ஸினான், அம்மார் இப்னு யாஸிர், யாஸிர், அவரது மனைவி சுமைய்யா, ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.

பெண்களில் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்றும் பலர் இஸ்லாமை ஏற்றனர். அவர்கள்: உம்மு அய்மன் பரகா ஹபஷியா, அப்பாஸின் மனைவி உம்முல் ஃபழ்ல் லுபாபஹ், அஸ்மா பின்த் அபூபக்ர். (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் திருப்தி கொள்வானாக!) (இப்னு ஹிஷாம்)

''அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் - முந்தியவர்கள் முதலாமவர்கள்'' என்று குர்ஆனில் அல்லாஹ் இவர்களை போற்றுகின்றான்.

இஸ்லாமை ஆரம்பமாக ஏற்றுக் கொண்ட ஆண், பெண்களின் எண்ணிக்கை 130 ஆகும். எனினும், இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாக அழைப்பு விடுத்த காலத்தில் இஸ்லாமை ஏற்றார்களா? அல்லது அவர்களில் சிலர் அதற்குப்பின் இஸ்லாமை ஏற்றார்களா? என்று உறுதியாக கூறமுடியாது.

தொழுகை

இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் ''சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது'' என்று கூறுகின்றனர்.

இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது அபூதாலிப் பார்த்து அதுபற்றி விசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார்.

தொழுகை மட்டுமே முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு வணக்க வழிபாடுகளோ, ஏவல் விலக்கலோ இருந்ததாகத் தெரியவில்லை. அக்கால கட்டத்தில் அவர்களுக்கு ஏகத்துவ விளக்கங்களைக் கற்றுக் கொடுத்து, நற்பண்புகளில் ஆர்வமூட்டி, அவர்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தும் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், அவ்வசனங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் அவர்கள் கண்முன் காண்பதுபோல் வர்ணித்தன. எழுச்சிமிகு உபதேசங்களால் இதயங்களைத் திறந்து ஆன்மாவுக்கு வலுவூட்டி அக்கால மக்கள் அதுவரை அறிந்திராத ஒரு புதிய நாகரீக வாழ்வுக்கு இறைமறை அவர்களை அழைத்துச் சென்றது.

இவ்வாறே மூன்று ஆண்டுகள் கடந்தன. நபி (ஸல்) அவர்கள் அழைப்பை பகிரங்கப் படுத்தாமல் தனி நபர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள். குறைஷிகள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை அறிந்திருந்தனர். மக்காவில் இஸ்லாம் குறித்த சர்ச்சை எழுந்து மக்களும் அதுபற்றி பேசத் தொடங்கினர். இதைப் பிடிக்காத சிலர் முஸ்லிம்களை இம்சித்தனர். எனினும், நபி (ஸல்) அவர்கள் அம்மக்களின் மார்க்கத்தையும் சிலைகளையும் விமர்சிக்காததால் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை மக்காவாசிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 

No comments:

Post a Comment