Wednesday, 9 December 2015

முஹம்மது நபி வரலாறு [அர்ரஹீக்குல் மக்தூம் 015]

மதீனா வாழ்க்கை - அழைப்பு, போர், வெற்றி

மதீனா வாழ்க்கையில் அழைப்பு மற்றும் போரின் கட்டங்கள் 


மதீனா வாழ்க்கையை மூன்று கால கட்டங்களாக பிரிக்கலாம்:


1) இஸ்லாமிய சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தல், இஸ்லாமிய அழைப்புப் பணியை உறுதிபடுத்துதல்.

இக்கால கட்டத்தில் மதீனாவிற்குள் பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டன. மதீனாவிற்கு வெளியிலிருந்து முஸ்லிம்களை அழிப்பதற்காகவும் அழைப்புப் பணியை வேரறுப்பதற்காகவும் எதிரிகள் பெரும் போர்களை நடத்தினர். ஆனால், இக்காலகட்டம் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு துல்கஅதாவில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியையும், ஆதிக்கத்தையும் அருளினான்.

2) மிகப்பெரிய எதிரியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளுதல், அரசர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தல், சதித்திட்டங்களை முறியடித்தல்.

இக்காலகட்டம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமழான் மாதம் புனித மக்கா வெற்றியுடன் முடிவுற்றது.

3) குழுக்களை வரவேற்றல், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைதல்.

இக்காலகட்டம் மக்கா வெற்றியிலிருந்து 11 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை தொடர்ந்தது.

ஹிஜ்ரா சமயத்தில் மதீனாவில் வசித்தவர்களும், அவர்களின் நிலைமைகளும்

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்தார்கள். இந்த ஹிஜ்ராவிற்குக் காரணம் மக்காவில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களிருந்து தப்பித்துத் தங்களை விடுவித்துக் கொள்வது மட்டுமல்ல மாறாக, பாதுகாப்பான ஓர் ஊரில் புதிதொரு சமுதாயத்தை நிறுவுவதும் ஹிஜ்ராவின் நோக்கமாக இருந்தது. ஆகவே, ஹிஜ்ரா செய்ய ஆற்றல் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமும் ஹிஜ்ரா செய்து அந்தப் புதிய சமுதாயத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ள வேண்டும், அந்த ஊரைப் பாதுகாப்பதற்கும் அதன் தகுதியை உயர்த்துவதற்கும் முழு அளவில் முயற்சி செய்யவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

அந்த சமூகத்தை நிறுவுவதிலும் அதை அமைப்பதிலும் நபி (ஸல்) அவர்களே முன்னோடியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்கள். அனைத்து பொறுப்புகளுக்குரிய அதிகாரங்கள் முழுவதும் நபி (ஸல்) அவர்களிடமே இருந்தன. இதில் மற்ற எவருக்கும் எவ்வித மனக்கசப்பும் இருக்கவில்லை.

மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த மக்கள் மூன்று வகையினராக இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் நிலைமையும் பிறரின் நிலைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. ஒரு வகையினரிடம் நபி (ஸல்) அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றொரு வகையினரிடம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன.

அம்மூன்று வகையினர்:

1) முஸ்லிம்கள் அதாவது, சிறப்பிற்குரிய நபித்தோழர்கள்.

2) மதீனாவின் பூர்வீக குடிகளில் உள்ள முஷ்ரிக்குகள். அதாவது, அந்நேரம்வரை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த மதீனாவாசிகள்.

3) யூதர்கள்.

மக்காவில் நபித்தோழர்களுக்கு இருந்த நிலைமையும், இப்போது மதீனாவில் அவர்களுக்கு இருக்கும் நிலைமையும் முற்றிலும் மாறுபட்டவைகளாக இருந்தன. மக்காவில் முஸ்லிம்கள் இஸ்லாமின் மூலம் ஒருங்கிணைந்து ஒரே நோக்கமுடையவர்களாக இருந்தும் அவர்களால் ஒரு முழுமையான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். ஏனெனில், முஸ்லிம்கள் பல குடும்பங்களில் பிரிந்திருந்தனர். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டு பலவீனமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. முஸ்லிம்களின் எதிரிகளே, மக்காவில் முழு அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆகவேதான் மக்காவில் அருளப்பட்ட குர்ஆன் அத்தியாயங்களில் இஸ்லாமிய அடிப்படை விளக்கங்களும், ஒவ்வொரு தனி நபரும் மேற்கொள்ள வேண்டியக் கட்டளைகளும் குறிப்பாக கூறப்பட்டிருந்தன. மேலும் நன்மை, உபகாரம், நற்பண்புகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அதிகம் ஆர்வம் ஊட்டப்பட்டன. கெட்ட குணங்கள், இழி செயல்கள் பற்றி எச்சரிக்கப்பட்டன.

ஆனால், மதீனாவில் முஸ்லிம்கள் வசமே முழு உரிமையும், ஆதிக்கமும் இருந்தன. மாற்றார் யாரும் அவர்களை ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு வலுவாக, பெரும்பான்மையாக இருந்தனர். ஆகவே, இப்போது முஸ்லிம்கள் தங்கள் சமூகத்துக்குத் தேவையான சட்டங்களையும் அடிப்படைகளையும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொருளாதாரம், வாழ்வியல், அரசியல், போர், சமாதானம், ஆகுமானவை, ஆகாதவை, வணக்க வழிபாடுகள் என்று சமூகத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்பட வேண்டிய தக்க நேரம் இதுவாகவே இருந்தது.

ஆம்! பத்து ஆண்டுகளாக பல துன்பங்களையும் வேதனைகளையும் எதற்காக முஸ்லிம்கள் அனுபவித்து வந்தார்களோ, அந்த அழைப்புப் பணிக்கு வழிகாட்டியாக, ஏனைய மனித சமுதாயத்திலிருந்தும் அறியாமைக்கால சமூகத்திலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிறந்த சமுதாயத்தை முஸ்லிம்கள் அமைக்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

இதுபோன்ற சமுதாயத்தை அமைப்பது ஒரே நாளில் அல்லது ஒரே மாதத்தில் அல்லது ஒரே ஆண்டில் சாத்தியமல்ல மாறாக, சட்டம் அமைத்தல், ஒழுங்குபடுத்துதல், பயிற்சியளித்தல், கல்வி புகட்டுதல், சட்டங்களை செயல்படுத்துதல் என அனைத்தும் முழுமை பெறுவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்பட்டது. அல்லாஹ் இம்மார்க்கத்தை அமைப்பதற்கு முழுப் பொறுப்பாளியாக இருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனது சட்டங்களைச் செயல்படுத்தினார்கள், அதன் பக்கம் வழிகாட்டினார்கள். முஸ்லிம்களைச் சீர்ப்படுத்தித் தூய்மைபடுத்தினார்கள்.

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல்குர்ஆன் 62:2)

நபித்தோழர்கள் தங்களது உள்ளங்களால் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனின் வசனங்கள் மூலம் தங்களுக்கு இடப்படும் சட்டங்களை முழுமையாக பின்பற்றியதுடன் அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மேன்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)
இங்கு இதுபோன்ற விஷயங்களை ஆராய்வது நமது நோக்கல்ல. எனவே, நாம் இங்கு தேவையான அளவிற்கு மட்டும் கூறுகிறோம்.

இஸ்லாமியச் சமுதாயத்தை உருவாக்குவதுதான் இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் குறிக்கோளுமாகும். இதுதான் முஸ்லிம்களுக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த மிக மகத்தான பணியாகும். இது அவசரமாக செய்து முடிக்க வேண்டிய தற்காலிக பணியல்ல மாறாக, இது அடிப்படை பிரச்சனையாகும். இதை முடிப்பதற்குப் பல காலங்கள் தேவைப்படும். ஆனால், அங்கு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பல அவசர பிரச்சனைகளும் இருந்தன.

அதில் மிக முக்கியமானது அப்போதைய முஸ்லிம்களின் நிலைமை. அவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

ஒரு சாரார் தங்களது சொந்த பூமியில் சொந்த வீட்டில் சொத்து, சுகங்களுடன் இருந்தனர். இவர்களுக்கு ஒரு சராசரி மனிதனுக்குரிய கவலையைத் தவிர வேறு கவலை இருக்கவில்லை. இவர்கள்தான் மதீனாவாசிகளான அன்சாரிகள்! இந்த மதீனாவாசிகளுக்கிடையில் கடுமையான பகைமையும், சண்டையும் இருந்து வந்தது.

மற்றொரு சாரார் முஹாஜிர்கள் (நாடு துறந்தவர்கள்). அவர்களுக்குச் சொந்த நாடும் இல்லை சொந்த வீடும் இல்லை. வாழ்வதற்குண்டான எந்த வாழ்வாதாரமும் அவர்களுக்கில்லை. தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்தவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் இவர்களது எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அல்லாஹ்வையும், ரஸூலையும் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் மக்காவை விட்டு மதீனாவில் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு நாளும் முஹாஜிர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. மதீனாவில் செல்வ வளங்களும் அதிகம் இல்லாததால் மதீனாவின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்படைந்தது.

இந்த சிரமமான நெருக்கடியான நேரத்தில் இஸ்லாமிற்கு விரோதமான சில சக்திகள் முஸ்லிம்களுக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தின. இதனால் மதீனாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களும் வருவாய்களும் குறைந்தன. நெருக்கடி மிகுந்த சிரமமான சூழ்நிலைகள் உருவாயின.

இரண்டாவது வகையினர், மதீனாவின் பூர்வீகக் குடிமக்களில் உள்ள முஷ்ரிக்குகள்! (இணைவைப்பவர்கள்). இவர்களிடம் முஸ்லிம்களை ஆதிக்கம் செலுத்துவதற்கான எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அவர்களது உள்ளங்களில் இஸ்லாமைப் பற்றி பல சந்தேகங்கள் இருந்தன. தங்களது மூதாதையர்களின் மதத்தை விட்டுவிடுவது தங்களுக்கு உகந்ததா? என்று யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எந்தவிதமான விரோதத்தையும், குரோதத்தையும், சூழ்ச்சியையும் தங்களது உள்ளங்களில் மறைத்திருக்கவில்லை. சில காலங்கள்தான் இவ்வாறு கழிந்திருக்கும். அதற்குள் இவர்களும் இஸ்லாமைத் தழுவி தங்களது வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கே ஆக்கிக் கொண்டார்கள்.

இவர்களில் சிலர் மட்டும் நபி (ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக விரோதம் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் முஸ்லிம்களை எதிர்க்கும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை. சூழ்நிலைகளைக் கருதி முஸ்லிம்கள் மீது தங்களுக்கு அன்பு இருப்பதாக காட்டிக் கொண்டனர். இவர்களில் மிக முக்கியமானவன் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவனாவான். 'புஆஸ்' என்ற யுத்தம் நடந்ததற்குப் பின் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு கிளையினரும் சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவரை நியமித்துக் கொள்ள ஆலோசனை செய்தனர். அதன்படி அப்துல்லாஹ் இப்னு உபைய்யை தங்களது தலைவராக ஆக்கலாம் என்று முடிவு செய்திருந்த சமயத்தில், நபி (ஸல்) மதீனாவிற்கு வந்துவிட்டதால் மதீனாவாசிகள் இவனைக் கைவிட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பி விட்டனர்.

எனவே, நபி (ஸல்) அவர்கள்தான் தனது தலைமைத்துவத்தை பறித்துக் கொண்டார் என்று அவர்களின் மீது மிகவும் கோபமாக இருந்தான். இருந்தாலும் சூழ்நிலைகளைக் கருதியும் எஞ்சியிருக்கும் கண்ணியத்தையும் இழந்துவிடுவோம் என்ற பயத்திலும் பத்ர் போருக்குப் பின்பு, தான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டதாக அறிமுகப்படுத்தினான்.

ஆனால், உள்ளத்தில் நிராகரிப்பையே மறைத்து வைத்திருந்தான். நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான். இவன் தலைவனானால் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கலாம் என்று நப்பாசை கொண்டிருந்த இவனது தோழர்களும் இவனின் தீய திட்டங்கள் நிறைவேற இவனுக்கு உறுதுணையாக நின்றனர். சில நேரங்களில் சில வாலிபர்களையும், சில அப்பாவி முஸ்லிம்களையும் தங்களது தீய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக யாரும் அறிந்து கொள்ளாத வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

மூன்றாம் வகையினர் யூதர்கள். உண்மையில் இவர்கள் இதற்கு முன் நாம் கூறியவாறு அஷ்வர் மற்றும் ரோமர்கள் காலத்தில் தங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளால் ஹிஜாஸில் குடியேறினர். இவர்கள் இப்ரானி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரபு பிரதேசத்திற்கு வந்ததால் தங்களது உடை, மொழி, கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டார்கள். தங்களது பெயர்களையும், தங்களது குலத்தின் பெயர்களையும் அரபியப் பெயர்களைப் போன்று மாற்றிக் கொண்டனர். தங்களுக்கும் அரபியர்களுக்கும் இடையில் திருமண உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், தங்களது இனவெறியை மட்டும் தக்க வைத்துக் கொண்டனர். முழுமையாக அரபியர்களுடன் ஒன்றிவிடவில்லை. தாங்கள் இஸ்ரவேலர்கள், யூதர்கள் என்று பெருமை பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அரபியர்களை மிகக் கேவலமாகக் கருதினர். அரபியர்களின் சொத்துகள் தங்களுக்கு ஆகுமானது என்றும், தாங்கள் நாடியபடி அவற்றை அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் கருதினர்.

(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (எந்தவித குறைவுமின்றி அதை) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) ''பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்த போதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால் அவர்கள் அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:75)

யூதர்கள் தங்களது மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதில் தீவிரம் காட்டவில்லை. மாறாக, ஜோசியம் பார்ப்பது, சூனியம் செய்வது, மந்திரிப்பது, பஞ்சாங்கம் பார்ப்பது போன்றவற்றையே தங்களது குலத்தொழிலாகவும் மதச் சடங்காகவும் செய்தனர். இந்தச் செயல்களின் மூலம் தாங்களே கல்விமான்கள், ஆன்மீகத் தலைவர்கள், சிறப்பிற்குரியவர்கள் என்று கருதினர்.

பொருளீட்டும் வழிகளில் மிகுந்த திறமை பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள் தானியங்கள், பேரீத்தங்கனி, மது வகைகள், துணிமணிகள் என அனைத்து வியாபாரங்களையும் தங்களது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஆடைகளையும், வித்துக்களையும், மது வகைகளையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, மதீனாவிலிருந்து பேரீத்தம் பழங்களை ஏற்றுமதி செய்தனர். மேலும் பல தொழில்களும், வியாபாரங்களும் அவர்கள் கைவசம் இருந்தன.

பொதுவாக அரபியர்கள் மூலம் பெரும் இலாபங்களை அடைந்தனர். வட்டி அவர்களின் குலத் தொழிலாக இருந்தது. கவிஞர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவும், மக்களிடம் பெயர் பெற வேண்டும் என்பதற்காகவும் பெரும் கடன்களை வாரி வழங்கினர். இதற்குப் பகரமாக அரபுத் தலைவர்களின் தோட்டங்களையும், விவசாய நிலங்களையும் அடைமானமாக வைத்துக் கொண்டனர். பின்பு, அரபுத் தலைவர்களால் அந்தக் கடன்களை அடைக்க முடியாமல் போனபோது அவர்களே அந்தத் தோட்டங்களுக்கும், நிலங்களுக்கும் உரிமையாளர்களாகி விட்டனர்.

யூதர்கள் சதித் திட்டம் தீட்டுவதிலும், அரபுகளின் ஒற்றுமையை குலைப்பதிலும், குழப்பங்களை உண்டு பண்ணுவதிலும் தீவிரம் காட்டினர். தங்களைச் சுற்றியுள்ள அரபு கோத்திரங்களுக் கிடையில் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் சூழ்ச்சிகளைச் செய்து, சண்டைகளையும் போர்களையும் தூண்டி விட்டனர். இவர்களின் இந்தச் சதியால் அரபியர்களுக்கு மத்தியில் எப்போதும் போர் நடந்துகொண்டே இருந்தது. சில சமயம் போர் அணையும் நிலை ஏற்பட்டால் அந்த யூதர்களின் விரல்கள் மீண்டும் புதிதாகப் போரின் நெருப்பை தூண்டுவதற்கு அசையத் தொடங்கும். போர் சூடுபிடித்துக் கொண்டால் ஓர் ஓரத்தில் உட்கார்ந்துக் கொண்டு அந்த அப்பாவி அரபியர்களுக்கு ஏற்படும் அழிவையும், நாசத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். போருக்குத் தேவையான பொருளாதார வசதி குறைந்து அரபியர்கள் போரை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் கடன் கொடுப்பார்கள். இதுபோன்ற சூழ்ச்சிகளால் யூதர்கள் இரண்டு விதமான பயன்களை அடைந்தனர்.

1) யூதர்கள் தங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டனர்.

2) வட்டியைப் பரவலாக்கி தங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தினர்.

மதீனாவில் யூதர்களின் மூன்று கோத்திரத்தினர் இருந்தனர்.

1) கைனுகாஃ கோத்திரத்தினர்: இவர்கள் கஸ்ரஜ் கிளையினரின் நண்பர்கள். இவர்களது வீடுகள் மதீனாவிற்குள் இருந்தன.

2) நளீர் கோத்திரத்தினர்: இவர்களும் கஸ்ரஜ்களுக்கு நண்பர்களாக இருந்தனர். இவர்களது வீடுகள் மதீனாவின் சுற்றுப்புறங்களில் இருந்தன.

3) குரைளா கோத்திரத்தினர்: இவர்கள் அவ்ஸ் கிளையினரின் நண்பர்கள். இவர்களது வீடுகள் மதீனாவின் சுற்றுப்புறங்களில் இருந்தன.

இந்த யூதர்கள்தான் அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினருக்கிடையில் போரை மூட்டிக் கொண்டிருந்தனர். 'புஆஸ்' யுத்தத்தில் இந்த யூதர்களும் கலந்து கொண்டனர். அதாவது ஒவ்வொரு யூதக் கோத்திரத்தினரும் அவ்ஸ், கஸ்ரஜ்களில் தங்களது நண்பர்களுக்கு உதவ போரில் கலந்து கொண்டனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது இனத்தில் அனுப்பப்படவில்லை என்பதால் யூதர்கள் இஸ்லாமின் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். இவர்களது இனவெறி இவர்களது அறிவையும், சிந்தனையையும் மழுங்கச் செய்தது. எனவே, அரபியர்களில் இறைத்தூதர் அனுப்பப்பட்டதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், இஸ்லாமிய அழைப்புப்பணி இனவெறிகளுக்கும், அற்ப உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டதாகும். இஸ்லாமிய அழைப்புப்பணி என்பது ஒரு சீர்திருத்தமும், தூய்மையும், ஒழுக்கமும் நிறைந்த பணியாகும். இப்பணி பல இனத்தவர்களின் உள்ளங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. விரோதம் மற்றும் கோபத்தின் நெருப்பை அணைக்கிறது. எல்லா நிலைகளிலும், எல்லா செயல்களிலும் நம்பகத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் ஹலாலான' தூய்மையானதையே உண்ண வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எனவே, யூதர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

அரபியர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடும். தங்களது சதித்திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். தங்களது வியாபாரங்கள் நலிந்துவிடும். தங்களின் பொருளாதாரத்தின் மூலதனமாகிய வட்டித் தொழிலை இழந்து விடுவோம் என்று யோசித்தனர். மேலும், இந்த அரபியர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் வட்டியின் மூலம் அவர்களிடமிருந்து நாம் அபகரித்த சொத்துகளையும், தோட்டங்களையும், நிலங்களையும் மீட்டுக் கொள்வார்கள் என்று அஞ்சினர்.

இதைப் பற்றி ஒரு சம்பவத்தை உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரழி) அறிவிக்கிறார்கள்:

ஸஃபியா (ரழி) கூறுகிறார்கள்: நான் எனது தந்தைக்கும் தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பும்பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல் உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன். ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை:''இவர் அவர்தானா?'' (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்றாத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)

எனது தந்தை:''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம்!''

சிறிய தந்தை:''அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''

எனது தந்தை:''ஆம்!''

சிறிய தந்தை:''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''

எனது தந்தை:''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உயிரோடு இருக்கும் காலம்வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்.'' இவ்வாறு ஸஃபிய்யா (ரழி) யஹூதியாக இருந்தத் தனது தந்தையின் மன நிலையைப் பற்றி விவரிக்கிறார்கள். (இப்னு ஹிஷாம்)

இதற்கு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோது நடந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் பெரிய யூதப் பாதிரியாராக இருந்தார். நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரிடம் வந்து தங்கியிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்தவுடன், நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். அந்தக் கேள்விகளின் பதிலை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய பதில்களைச் சரியாகக் கூறியதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அதே இடத்தில், அதே சமயத்தில் நபி (ஸல்) அவர்களை ஏற்று இஸ்லாமைத் தழுவினார். பின்பு அவர் நபி (ஸல்) அவர்களிடம் ''யூதர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசக்கூடியவர்கள். நான் இஸ்லாமைத் தழுவியது அவர்களுக்குத் தெரிந்தால் என்னைப் பற்றி அவதூறு கூறுவார்கள். எனவே, நான் மறைந்து கொள்கிறேன், என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் விசாரியுங்கள்'' என்றார்.

நபி (ஸல்) யூதர்களை வரவழைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அறைக்குள் மறைந்து கொண்டார். யூதர்கள் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் ''அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''எங்களில் மிக அறிந்த மார்க்க மேதை. மேலும், எங்களில் மிக அறிந்த மார்க்க மேதையின் மகனாவார். அவர் எங்களில் மிகச் சிறந்தவர் எங்களில் மிகச் சிறந்தவரின் மகனாவார். (அவர் எங்களின் தலைவர், எங்களின் தலைவரின் மகனாவார். அவர் எங்களில் மிக மேலானவர் மிக மேலானவரின் மகனாவார். அவர் எங்களில் மிக உயர்ந்தவர் மிக உயர்ந்தவரின் மகனாவார்)'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) ''அப்துல்லாஹ் இப்னு ஸலாம் முஸ்லிமாகிவிட்டால் நீங்கள் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்'' என்றார்கள். அதற்கு யூதர்கள் ''அல்லாஹ் அதிலிருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும்'' என்று இரண்டு அல்லது மூன்று முறைக் கூறினார்கள். அப்போது அறையிலிருந்து வெளியேறி 'அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறினார். இதனைக் கேட்ட யூதர்கள் ''இவன் எங்களில் மிகக் கெட்டவன், மேலும், கெட்டவனின் மகன்'' என்றனர். மற்றொரு அறிவிப்பில் வருவதாவது: அறையில் இருந்து வெளியேறிய அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) யூதர்களைப் பார்த்து ''ஓ! யூத சமூகமே! வணக்கத்திற்குரிய ஏக இறைவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர் என்று உங்களுக்கு நன்கு தெரியும். அவர் உண்மையான மார்க்கத்தையே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியும்'' என்று கூறினார். அதற்கு அந்த யூதர்கள் ''இல்லை நீ பொய் கூறுகிறாய்'' என்று கூறினர். (ஸஹீஹுல் புகாரி)

இது நபி (ஸல்) மதீனாவில் நுழைந்த முதல் நாளிலேயே யூதர்களிடம் பார்த்த முதல் அனுபவமாகும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த உள்நாட்டு விவகாரங்களும், நிலைமைகளும் ஆகும்.

முஸ்லிம்களின் வெளி விவகார பிரச்சனைகளாவன: மதீனாவைச் சுற்றி குறைஷிகளின் மதத்தை பின்பற்றுபவர்கள்தான் இருந்தனர். குறைஷிகள்தான் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தனர். முஸ்லிம்கள் மக்கா குறைஷிகளின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்தபோது ஏறக்குறைய பத்து ஆண்டுகள் முஸ்லிம்களை மிகக் கடுமையாக துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் வந்தனர். மிகுந்த நெருக்கடியையும், தடைகளையும் ஏற்படுத்தினர். மனரீதியான போராட்டத்தை அவர்கள் மீது திணித்தனர். பல பழிகளையும் பொய் பிரச்சாரங்களையும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தனர். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்தவுடன் அவர்களின் சொத்துகளையும், வீடுகளையும், நிலங்களையும் பறிமுதல் செய்தனர். ஹிஜ்ரா சென்றுவிட்ட முஸ்லிம்களின் குடும்பத்தினரை மதீனாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர். மற்றும் பலரை வேதனை செய்தனர். இதனால் இஸ்லாமிய அழைப்புப் பணியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டனர். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சியையும் குறைவின்றி செய்தனர். ஆனால், முஸ்லிம்கள் தங்களைவிட்டு தப்பித்து 500 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு வளமிக்க பகுதிக்குச் சென்றுவிட்டனர் என்றவுடன் அதை சகித்துக்கொள்ள முடியாத குறைஷிகள், முஸ்லிம்களுக்கு எதிராக தங்களின் அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களைத் தீட்டினர்.

அதன் ஒரு கட்டமாக, குறைஷிகள் தாங்கள் புனிதமிக்க எல்லையில் குடியிருப்பவர்கள் கஅபாவின் அண்டை வீட்டார்கள் கஅபாவின் நிர்வாகிகள் என்பதால் அரபியர்களுக்கு மத்தியில் தங்களுக்கு இருந்த உலக ரீதியான, மேலும், மார்க்க ரீதியான தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி முழு அரபுலகில் உள்ள அனைத்து அரபியர்களையும் மதீனாவாசிகளுக்கு எதிராகத் தூண்டி விட்டனர். இதனால் மதீனா ஆபத்துகளால் சூழப்பட்டது. அவர்கள் ஏற்படுத்திய பொருளாதார தடைகளால் மதீனாவின் வருமானங்களும், இறக்குமதிகளும் குறைந்தன. ஒவ்வொரு நாளும் மதீனாவில் குடியேறும் முஹாஜிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் இணைவைக்கும் மக்காவாசிகளுடன் அவர்களைப் பின்பற்றுபவர்களும் சேர்ந்து கொண்டு இப்புதிய ஊரில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அபாயமும் உருவானது.

மக்காவின் வம்பர்கள் முஸ்லிம்களின் சொத்துகளை பறிமுதல் செய்தவாறே முஸ்லிம்களும் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது, அந்த நிராகரிப்பவர்கள் முஸ்லிம்களின் மீது பல வேதனைகளைக் கட்டவிழ்த்து விட்டவாறே முஸ்லிம்களும் அந்த நிராகரிப்பவர்களின் மீது வேதனைகளை கட்டவிழ்த்து விடுவது, நிராகரிப்பவர்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையில் பல தடைகளை ஏற்படுத்தியவாறே அவர்களின் வாழ்க்கையிலும் பல தடைகளை ஏற்படுத்துவது, சுருங்கக்கூறின் எக்காலத்திலும் இஸ்லாமையோ முஸ்லிம்களையோ நிராகரிப்பவர்கள் அழிக்க முடியாத அளவுக்கு அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பது முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்தது.

மதீனா வந்ததற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த வெளிவிவகார பிரச்சனைகள் இவைதான். இந்த அனைத்துப் பிரச்னைகளையும் முழுமையாக வெற்றி கொள்ள இவற்றை மிக நுட்பமான முறையில் கையாள்வது நபி (ஸல்) அவர்களுக்கு மிக அவசியமாக இருந்தது.

அல்லாஹ்வின் அருளாலும், உதவியாலும் நபி (ஸல்) அவர்கள் எல்லாவற்றிற்கும் அழகிய முறையில் தீர்வு கண்டார்கள். ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதையே செய்தார்கள். அது அன்பு காட்டுவதோ தண்டிப்பதோ எதுவாயினும் சரியே. மேலும், மனிதர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி அல்லாஹ்வின் வேதத்தையும், ஞானங்களையும் கற்றுக் கொடுப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். கண்டிப்புக் காட்டுவதை விட அன்புகாட்டி கருணையுடன் மார்க்கத்தை கற்றுக்கொடுத்து உள்ளங்களை தூய்மைபடுத்துவதற்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தார்கள். இதனால் சில ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து அதிகாரங்களும் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் கிட்டின. இதன் விவரங்களை பின்வரும் பக்கங்களில் மிகத் தெளிவாகக் காணலாம். 

No comments:

Post a Comment