உஹுத் போர்
குறைஷிகள் பழிவாங்கத் தயாராகுதல்
பத்ர் போரில் தோல்வியைத் தழுவியது ஒருபுறம் தங்களின் மாபெரும் தலைவர்கள் கொல்லப்பட்டது மறுபுறம் என கோபத்தில் கொதித்துப் போயிருந்த குறைஷிகள் பழிதீர்க்கும் வெறியோடு காத்திருந்தனர். எங்கே நாம் படும் இன்னல்களும் துன்பங்களும் முஸ்லிம்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அவமானத்தில், கொல்லப்பட்டவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுவதோ, அப்போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க முயற்சிப்பதோ கூடாது என தடையும் விதித்து இருந்தனர்.
கோபம் தணியும் அளவிற்கு, பழிவாங்கும் வெறியின் தாகத்தைத் தீர்த்துகொள்ள, பெரிய அளவில் ஒரு போரை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று குறைஷிகள் அனைவரும் ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில் இறங்கினர்.
இப்போரைச் சந்திப்பதற்கு மிகுந்த உற்சாகத்துடனும், ஆவேசத்துடனும் இருந்த குறைஷித் தலைவர்களில் இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதற்காக அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கை: அபூ ஸுஃப்யான் பத்திரமாக பாதுகாத்து அழைத்து வந்த வியாபார கூட்டத்தில் இருந்த பொருட்களை அப்படியே வைத்துக் கொண்டனர். இந்த வியாபார கூட்டம்தான் பத்ர் போருக்கான காரணமாக இருந்தது. எனவே, அந்த செல்வங்களுக்கு உரியவர்களிடம் சென்று ''குறைஷிகளே! நிச்சயமாக முஹம்மது உங்களுக்கு அநியாயம் செய்திருக்கிறார். உங்களில் சிறந்தவர்களைக் கொன்றிருக்கிறார். எனவே, அவரிடம் சண்டை செய்வதற்காக எங்களுக்கு இந்தப் பொருட்களை கொடுத்துதவுங்கள். அதன் மூலம் நாம் அவர்களிடத்தில் பழி தீர்த்துக் கொள்ளலாம்'' என்று கூறினர். அதற்கு அதன் உரிமையாளர்களும் இணங்கி அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றனர். அந்த வியாபார பொருட்களில் 1,000 ஒட்டகங்களும், 50,000 தங்க நாணயங்களுக்குரிய பொருட்களும் இருந்தன. இது குறித்து அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்:
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருட்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேன்மேலும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்.(அல்குர்ஆன் 8:36)
இதற்குப் பின் மக்காவைச் சுற்றியுள்ள பலதரப்பட்ட வமிசத்தைச் சேர்ந்த வாலிபர்கள், கினானா மற்றும் திஹாமாவாசிகள் ஆகியோரிடம், 'முஸ்லிம்களுடன் நடக்க இருக்கும் போரில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்'' என்று அறிவித்தனர். மக்களைப் போருக்குத் தூண்ட மேலும் பல வழிகளைக் கையாண்டனர். 'அபூ இஸ்ஸா' என்ற கவிஞனை ஸஃப்வான் இப்னு உமைய்யா இதற்காகத் தயார் செய்தான். இக்கவிஞன் பத்ர் போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவன். நபி (ஸல்) இவனை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்து, இஸ்லாமிற்கெதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று அவனிடம் வாக்குறுதி வாங்கினார்கள். ஆனால், ஸஃப்வானின் ஆசை வார்த்தைகளுக்கு அபூஇஸ்ஸா வசப்பட்டான். ''நீ போரிலிருந்து உயிருடன் திரும்பினால் உனக்கு பெரும் செல்வத்தைக் கொடுப்பேன். இல்லை நீ கொல்லப்பட்டால், உனது பெண் பிள்ளைகளை நான் என் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறேன் என்று ஸஃப்வான் வாக்குறுதி கொடுத்தான். அபூ இஸ்ஸா உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தனது கவியால் குறைஷியரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான்.
இதுபோல் மக்களைப் போருக்கு ஆர்வமூட்ட முஸாஃபிஃ இப்னு அப்து மனாஃப் என்ற மற்றொரு கவிஞனையும் நியமித்தார்கள்.
அபூ ஸுஃப்யானால் சென்றமுறை (ஸவீக் போரில்) தனது மனதிலுள்ள பழிவாங்கும் ஆசையை சரிவர நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் பொருட்களில் பெரும்பாலானவற்றையும் அவர் இழந்தார். ஆகவே, முஸ்லிம்கள் மீது மிகுந்த எரிச்சலுடன் இருந்தார்.
ஜைது இப்னு ஹாரிஸாவுடைய தாக்குதலால் ஏற்பட்ட நஷ்டம் குறைஷிகளது பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து அளவிட முடியாத கவலையை அவர்களுக்கு அளித்தது. ஏற்கனவே பத்ரில் தங்கள் தலைவர்களை இழந்து துக்கக் கடலில் மூழ்கியிருந்த இவர்களுக்கு இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது. எனவே, முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் மத்தியில் தீர்வாக அமையும் ஒரு போரைச் சந்திப்பதற்காக குறைஷிகள் முழு வேகத்துடன் செயல்பட்டனர்.
குறைஷிப் படையும் அதன் தளபதிகளும்
ஓர் ஆண்டுக்குள் மக்காவாசிகள் தங்களது முழு தயாரிப்பையும் செய்து முடித்தனர். குறைஷிகள், அவர்களின் நட்புடைய ஏனைய குலத்தவர்கள் மற்றும் பல கோத்திரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என 3000 கூட்டுப் படையினர் போருக்காக கைகோர்த்தனர். பெண்களும் படை பட்டாளங்களுடன் இணைந்து வந்தால், போர் வீரர்கள் பெண்களின் மானமும் கண்ணியமும் பங்கப்பட்டுவிடாமல் இருப்பதற்காக, ரோஷத்துடன் உயிருக்குத் துணிந்து போரிடுவார்கள் எனக் கருதி படைத்தளபதி தங்களுடன் 15 பெண்களையும் சேர்த்துக் கொண்டார். இப்படையில் 3000 ஒட்டகங்கள், 200 குதிரைகள் மற்றும் 700 கவச ஆடைகள் இருந்தன. (ஜாதுல் மஆது)
இப்படையின் பொது தளபதியாக அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இருந்தார். குதிரைப் படை வீரர்களுக்கு காலித் இப்னு வலீதும், அவருக்குத் துணையாக இக்ரிமா இப்னு அபூ ஜஹ்லும் பொறுப்பேற்றனர். அப்துத் தார் கிளையினரிடம் போர் கொடி கொடுக்கப்பட்டது.
மக்காவின் படை புறப்படுகிறது
இவ்வாறு முழு தயாரிப்புடன் மக்கா படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டது. பழைய பகைமையும், உள்ளத்தில் இருந்த குரோதமும், இதுவரை கண்ட தோல்வியும் அவர்களது உள்ளங்களில் மேலும் கோப நெருப்பை மூட்டியவாறே இருந்தது. வெகு விரைவில் நடக்க இருக்கும் பெரும் சண்டையை நினைத்து ஆறுதல் அடைந்தவர்களாக பயணத்தைத் தொடர்ந்தனர்.
முஸ்லிம்கள் எதிரிகளை உளவு பார்த்தல்
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) குறைஷிகளின் செயல்களையும் அதன் ராணுவத் தயாரிப்புகளையும் கண்காணித்து வந்தார். மக்காவிலிருந்து படை புறப்பட்டுச் சென்றவுடன் அவசர அவசரமாகப் படையின் முழு விவரங்களை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.
அப்பாஸின் தூதர் ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் உள்ள தூரத்தை மூன்றே நாட்களுக்குள் அதிவிரைவில் கடந்து நபி (ஸல்) அவர்களிடம் அக்கடிதத்தை ஒப்படைத்தார். அன்று நபி (ஸல்) அவர்கள் 'குபா' பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அக்கடிதத்தை உபை இப்னு கஅப் (ரழி) படித்துக் காண்பித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அச்செய்தியை வெளியில் கூறாமல் மறைத்து விடுங்கள் என்று கட்டளையிட்டு மதீனா விரைந்தார்கள். அங்கு அன்சாரி மற்றும் முஹாஜிர் தோழர்களிலுள்ள தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
அவசர நிலை
மதீனாவில் முஸ்லிம்கள் எந்நேரமும் ஆயுதமேந்தியவர்களாக இருந்தனர். எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க எந்நேரமும் தயாராக இருந்தனர். ஆயுதங்களைத் தொழுகையிலும் தங்களுடன் வைத்திருந்தனர்.
அன்சாரிகளின் ஒரு குழு நபி (ஸல்) அவர்களின் பாதுகாப்புக்காகத் தயாரானார்கள். அவர்களில் ஸஅது இப்னு முஆது, உஸைது இப்னு ஹுழைர், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகியோர் இருந்தனர். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாயிலில் ஆயுதம் ஏந்தி காவலில் ஈடுபட்டனர். மேலும், திடீர் தாக்குதலைத் தடுக்க மதீனாவின் நுழைவாயில்கள் மற்றும் சந்து பொந்துகள் அனைத்திலும் சிறுசிறு படைகளாக பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்த எதிரிகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் வர இயலுமோ அந்த அனைத்து வழிகளிலும் எதிரிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக ரோந்துப் பணியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
எதிரிகள் மதீனா எல்லையில்
மக்கா படை வழக்கமான மேற்குப் பாதையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அப்படை 'அப்வா' என்ற இடத்தை அடைந்ததும் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபி (ஸல்) அவர்களின் தாயாருடையக் கப்ரைத் தோண்டி அவரது உடலை வெளியே எடுக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், படையின் தளபதிகள் இக்கோரிக்கையை நிராகரித்ததுடன் இவ்வாறு செய்தால் ஆபத்தான முடிவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
குறைஷிப் படை தனது பயணத்தைத் தொடர்ந்தது. மதீனாவிற்குச் சமீபமாக உள்ள 'அல்அகீக்' என்ற பள்ளத்தாக்கைக் கடந்து, அங்கிருந்து வலப்புறமாகச் சென்று, உஹுத் மலைக்கருகில் உள்ள 'அய்னைன்' என்ற இடத்தில் தங்கியது. இந்த இடம் உஹுத் மலைக்கருகில் மதீனாவின் வடப் பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கின் மேற்புறத்தில் உள்ள 'பத்னு ஸப்கா' என்ற பகுதியில் உள்ளது. ஆக, மக்காவின் படை இவ்விடத்தில் ஹிஜ்ரி 3, ஷவ்வால் மாதம் பிறை 6, வெள்ளிக்கிழமை அன்று வந்திறங்கி தங்களது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டது.
தற்காப்புத் திட்டத்தை ஆலோசித்தல்
இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள், குறைஷி ராணுவத்தினரின் நிலைகளை அவ்வப்போது நபியவர்களுக்கு அனுப்பியவாறு இருந்தனர். இறுதியாக, எதிரிகள் எங்கு முகாம் அமைத்துள்ளனர் என்பது வரையுள்ள செய்திகள் ஒவ்வொன்றையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது மேல்மட்ட ராணுவ ஆலோசனை சபையை நபி (ஸல்) அவர்கள் ஒன்று கூட்டி, என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளைப் பரிமாறிக் கொண்டதுடன், தான் கண்ட ஒரு கனவையும் அவர்களுக்குக் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நல்ல கனவு ஒன்றைக் கண்டேன். சில மாடுகள் அறுக்கப்படுகின்றன. எனது வாளின் நுனியில் ஓர் ஓட்டை ஏற்படுவதைப் பார்த்தேன். உறுதிமிக்க பாதுகாப்புடைய கவச ஆடையில் எனது கையை நான் நுழைத்துக் கொள்வதாகவும் பார்த்தேன்'' என்று கூறி, ''மாடுகள் அறுக்கப்படுவதின் பொருள் தங்களது தோழர்களில் சிலர் கொல்லப்படுவார்கள். வாளில் ஏற்பட்ட ஓட்டையின் கருத்து தனது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்படுவார். உருக்குச் சட்டை என்பது மதீனாவாகும்'' என்று விளக்கம் கூறினார்கள்.
பின்பு நபி (ஸல்) அவர்கள் தங்களது அபிப்ராயத்தைத் தோழர்களிடத்தில் கூறினார்கள். அதாவது: ''மதீனாவை விட்டு நாம் வெளியேறாமல், மதீனாவுக்குள் இருந்து கொண்டே நம்மை பாதுகாத்துக் கொள்வோம். குறைஷிகள் தங்களின் ராணுவ முகாம்களிலேயே தங்கியிருந்தால் எவ்விதப் பலனையும் அடையமாட்டார்கள். அவர்கள் தங்குவது அவர்களுக்கே தீங்காக அமையும். அவர்கள் மதீனாவுக்குள் நுழைய முயன்றால் முஸ்லிம்கள் தெரு முனைகளிலிருந்து அவர்களை எதிர்க்க வேண்டும். பெண்கள் வீட்டுக்கு மேலிருந்து தாக்க வேண்டும்.''
நபி (ஸல்) அவர்கள் கூறிய இது உண்மையில் சரியான அபிப்ராயமாகவும் இருந்தது.
நயவஞ்சகர்களின் தலைவனான இப்னு உபை நபி (ஸல்) அவர்களின் இக்கருத்தையே ஆமோதித்தான். அவன் கஸ்ரஜ் வமிசத்தவர்களின் முக்கிய பிரமுகர்களில் ஒருவன் என்ற அடிப்படையில் இச்சபையில் கலந்திருந்தான். ராணுவ ரீதியாக நபி (ஸல்) அவர்களின் கருத்துதான் மிகச் சரியானது என்பதற்காக இப்னு உபை இக்கருத்துடன் ஒத்துப் போகவில்லை. மாறாக, அப்போதுதான் எவருக்கும் தெரியாமல் போரிலிருந்து நழுவிவிட இயலும் என்பதற்காகவே இந்த ஆலோசனையை அவன் ஆமோதித்தான்.
முஸ்லிம்கள் முன்னிலையில் முதல் முறையாக அவனும், அவனது தோழர்களும் இழிவடைய வேண்டும் அவர்களது நிராகரிப்பையும், நயவஞ்சகத்தனத்தையும் மறைத்திருந்த திரை அவர்களை விட்டு அகன்றிட வேண்டும் இது நாள் வரை தங்களது சட்டை பைக்குள் ஊடுருவி இருந்த விஷப் பாம்புகளை முஸ்லிம்கள் தங்களுக்கு சிரமமான இந்நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் முடிவை மாற்றி அமைத்தான்.
பத்ரில் கலக்காத நபித்தோழர்களிலும் மற்ற நபித்தோழர்களிலும் சிறப்புமிக்க ஒரு குழுவினர் 'மதீனாவை விட்டு வெளியேறி போர் புரிவதற்கு' நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசனைக் கூறி, அதை வலியுறுத்தவும் செய்தனர். அவர்களில் சிலர் இப்படியும் கூறினர்: ''அல்லாஹ்வின் தூதரே! இந்நாளுக்காக அல்லாஹ்விடம் நாங்கள் பிரார்த்தனை செய்து வந்ததுடன், இப்படி ஒரு நாளை சந்திக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தோம். அல்லாஹ் அந்நாளை எங்களுக்கு அருளி இருக்கிறான். புறப்படுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. எதிரியை நோக்கிப் புறப்படுங்கள். நாம் அவர்களைப் பார்த்து பயந்து கோழையாகி விட்டதால்தான் மதீனாவை விட்டு வெளியேறவில்லை என்று அவர்கள் எண்ணிவிடக் கூடாது!''
இவ்வாறு வீரமாக பேசிய நபித்தோழர்களில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிபும் ஒருவர். இவர் பத்ர் போரில் கலந்துகொண்டு போற்றத்தக்க அளவில் பங்காற்றினார். இவர் நபி (ஸல்) அவர்களிடம் ''உங்கள் மீது வேதத்தை இறக்கிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மதீனாவுக்கு வெளியில் அந்த எதிரிகளை எனது வாளால் வெட்டி வீழ்த்தாதவரை எந்த உணவும் சாப்பிட மாட்டேன்'' என்று சத்தியம் செய்தார். (ஸீரத்துல் ஹல்பிய்யா)
உணர்ச்சிமிக்க இந்த வீரர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் தங்களது எண்ணத்தை விட்டுக் கொடுத்தார்கள். மதீனாவை விட்டு வெளியேறி எதிரிகளைத் திறந்த மைதானத்தில் சந்திக்கலாம் என்ற முடிவு உறுதியானது.
படையை திரட்டுதல் - போர்க்களம் புறப்படுதல்
அன்று வெள்ளிக்கிழமை. ஜுமுஆ தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு நல்லுபதேசம் செய்து உறுதியாகவும் நிலையாகவும் இருக்கும்படி கட்டளையிட்டார்கள். உங்களது பொறுமைக்கு அல்லாஹ்வின் நல்லுதவி நிச்சயம் கிடைக்கும் என்று அறிவித்தார்கள். எதிரியைச் சந்திக்க தயாராகும்படி முஸ்லிம்களைப் பணித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டு முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ந்தனர். அன்று நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்ளுக்கு அஸர் தொழுகையையும் தொழ வைத்தார்கள். மதீனாவில் உள்ளவர்களும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உள்ளவர்களும் பெருமளவில் குழுமியிருந்தனர். தொழ வைத்ததற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தங்கள் இல்லத்திற்குச் சென்றார்கள். அவர்களுடன் அபூபக்ர், உமர் (ரழி) ஆகியோர் சென்று நபி (ஸல்) அவர்களுக்குத் தலைப்பாகை அணிவித்து மற்ற ஆடைகளையும் அணிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுமையான ஆயுதங்களுடனும் இரண்டு கவச ஆடைகளுடனும் வாளைக் கழுத்தில் தொங்கவிட்டவர்களாக முஸ்லிம்களுக்கு முன் தோன்றினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்த மக்களிடம் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களும், உஸைத் இப்னு ஹுழைர் (ரழி) அவர்களும் ''மதீனாவிலிருந்து வெளியேறி தான் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களை நீங்கள் நிர்பந்தித்து விட்டீர்கள். எனவே, உங்களது அபிப்ராயத்தை விட்டுவிட்டு அதிகாரத்தை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். இதனால் அந்த மக்கள் தங்களின் செயல்களுக்காக வருந்தினர். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு மாறு செய்வது எங்களுக்கு உசிதமல்ல. நீங்கள் விரும்பியதையே, அதாவது மதீனாவில் தங்குவதுதான் உங்களுக்கு விருப்பமானது என்றால் அதையே நீங்கள் செய்யுங்கள்'' என்று மக்கள் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்), ''ஓர் இறைத்தூதர் தனது கவச ஆடையை அணிந்தால், அதன் பிறகு அல்லாஹ் அவருக்கும் அவருடைய எதிரிகளுக்கும் மத்தியில் தீர்ப்பளிக்கும் வரை அதைக் கழற்றுவது அவருக்கு ஆகுமானதல்ல'' என்று கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி, முஸ்னது அஹ்மது, ஸுனன் நஸாயீ)
நபி (ஸல்) தனது படையை மூன்று பிரிவாக அமைத்தார்கள்:
1) முஹாஜிர்களின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை முஸ்அப் இப்னு உமைர் அல் அப்தரீயிடம் கொடுத்தார்கள். (முஹாஜிர்கள் - மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய முஸ்லிம்கள்)
2) அன்சாரிகளில் அவ்ஸ் கூட்டத்தினரின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை உஸைத் இப்னு ஹுளைரிடம் கொடுத்தார்கள். (அன்ஸாரிகள் - இஸ்லாமை ஏற்ற மதீனாவாசிகள்.)
3) அன்சாரிகளில் கஸ்ரஜ் கூட்டத்தினரின் பிரிவு: இப்பிரிவுக்குரிய கொடியை ஹுபாப் இப்னு முன்திரியிடம் கொடுத்தார்கள்.
படையில் 1,000 வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் 100 நபர்கள் கவச ஆடை அணிந்திருந்தனர். அவர்களில் குதிரை வீரர் எவரும் இருக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்துவதற்கு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நியமித்தார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களின் ஆணைக்கிணங்க இஸ்லாமியப் படை மதீனாவின் வடக்கு நோக்கிப் புறப்பட்டது. ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு முஆத் ஆகியோர் கவச ஆடை அணிந்து, நபி (ஸல்) அவர்களுக்கு முன் நடந்து சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ராணுவம் 'ஸன்யத்துல் வதா' என்ற இடத்தைக் கடந்தபோது, தனது படையிலிருந்து சற்று விலகி வந்து கொண்டிருக்கும் நன்கு ஆயுதம் தரித்த ஒரு படையை நபியவர்கள் பார்த்தார்கள். நபியவர்கள் ''நம்முடன் வரும் இந்தப் படை யாருடையது?'' என்று வினவினார்கள். அதற்கு கஸ்ரஜ் இனத்தவர்களின் நண்பர்களான யூதர்கள் ''இணைவைப்பவர்களுக்கு எதிரான போரில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் நம்முடன் வந்துள்ளார்கள்'' என்று கூறப்பட்டது. ''அவர்கள் இஸ்லாமைத் தழுவியிருக்கிறார்களா?'' என்று நபி (ஸல்) கேட்க, தோழர்கள் ''இல்லை'' என்றனர். ஆனால், இணைவைப்போருக்கு எதிரான போரில் நிராகரிப்போரை தங்களின் உதவிக்கு அழைத்துச் செல்ல நபி (ஸல்) மறுத்துவிட்டார்கள்.
படையைப் பார்வையிடுதல்
'ஷைகான்' என்ற இடத்தை அடைந்தவுடன் நபி (ஸல்) தனது படையை நிறுத்தி பார்வையிட்டார்கள். அதில் வயது குறைந்தவர்களாகவும் போர் செய்வதற்கு வலிமையற்றவர்களாகவும் இருந்தவர்களை மதீனாவிற்குத் திருப்பி அனுப்பினார்கள். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்துல்லாஹ் இப்னு உமர், உஸாமா இப்னு ஜைது, உஸைது இப்னு ளுஹைர், ஜைது இப்னு ஸாபித், ஜைது இப்னு அர்கம், அராபா இப்னு அவ்ஸ், அம்ர் இப்னு ஹஸ்ம், அபூ ஸயீத் அல்குத்ரி, ஜைது இப்னு ஹாரிஸா அல்அன்சாரி, ஸஅத் இப்னு ஹப்பா ஆவர். மேலும், இவர்களில் பரா இப்னு ஆஜிபும் இருந்தார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், ஸஹீஹ் புகாரியில் வரும் இவர்களின் ஹதீஸை நாம் கவனிக்கும் போது இவர் போரில் கலந்தார் என தெரியவருகிறது.
ராஃபி இப்னு கதீஜ், ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) ஆகிய இருவரின் வயது குறைவாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். அதற்குக் காரணம் ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அம்பெறிவதில் மிகத் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். அதனால் அவரைப் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள். அப்போது ஸமுரா (ரழி) ''ராஃபியை விட நான் பலமிக்கவன். நான் அவரைச் சண்டையிட்டு வீழ்த்துமளவுக்கு ஆற்றலுள்ளவன்'' என்றார். நபியவர்கள் அவ்விருவரையும் தனக்கெதிரில் மல்யுத்தம் செய்யப் பணித்தார்கள். அவ்விருவரும் சண்டையிட்ட போது ஸமுரா, ராஃபியை வீழ்த்தினார். இதனால் நபியவர்கள் சமுராவும் போரில் கலந்து கொள்ள அனுமதித்தார்கள்.
உஹுதுக்கும் மதீனாவுக்குமிடையில்
மாலை நேரமாகவே நபி (ஸல்) அவர்கள் ஷைகானில் மஃரிப் தொழுதார்கள். பின்பு இஷாவும் தொழுது அங்கேயே இரவை கழித்திட ஏற்பாடு செய்தார்கள். தனது ராணுவத்தைப் பாதுகாப்பதற்காக ராணுவ முகாமைச் சுற்றிலும் ஐம்பது வீரர்களை நியமித்தார்கள். அவர்களுக்குத் தலைவராக கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலைச் செய்ய சென்ற குழுவுக்கு தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமாவை நியமித்தார்கள். தக்வான் இப்னு அப்து கைஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.
முரண்டு பிடிக்கிறான் இப்னு உபை
ஃபஜ்ர் (அதிகாலை) தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே அங்கிருந்து தனது படையை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். 'அஷ்ஷவ்த்' என்ற இடத்தை அடைந்து அங்கு ஃபஜ்ர் தொழுகை நடத்தினார்கள். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் அளவு எதிரிகளுக்கு நெருக்கமாக இஸ்லாமியப் படை இருந்தது. அந்நேரத்தில் நயவஞ்சகனான இப்னு உபை படையில் மூன்றில் ஒரு பகுதியினரான 300 வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாமல் திரும்ப முரண்டு பிடித்தான். ''நாங்கள் எதற்காக எங்கள் உயிர்களை மாய்த்துக் கொல்வோம்? நபியவர்களோ தனது கருத்தை விட்டுவிட்டு மற்றவன் கருத்தை ஏற்று இங்கு வந்திருக்கிறார்'' என்று காரணம் கூறி தனது வீரர்களுடன் படையிலிருந்து திரும்பினான்.
நபி (ஸல்) அவர்கள் தனது கருத்தை விட்டுவிட்டு பிறர் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பது இவன் விலகிச் சென்றதற்கான உண்மை காரணமல்ல. ஏனெனில், அவனது நோக்கம் இதுவாகவே இருந்திருந்தால் இந்த இடம் வரை நபியவர்களின் படையுடன் அவன் வந்திருக்க மாட்டான். இதையே காரணமாகக் கூறி முஸ்லிம்களுடன் புறப்படாமல் மதீனாவிலேயே தங்கியிருப்பான்.
மாறாக, இந்தச் சங்கடமான நேரத்தில் அவன் இவ்வாறு செய்ததற்கான முக்கிய நோக்கமாவது: எதிரிகள் பார்க்குமளவுக்கு அருகில் வந்துவிட்ட முஸ்லிம் படைகளுக்கு மத்தியில் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த வேண்டும். அதனால் நபி (ஸல்) அவர்களை விட்டு மற்ற பல முஸ்லிம்களும் விலகிக் கொள்வார்கள். நபியவர்களுடன் மீதம் இருப்பவர்களின் வீரம் குறைந்து விடும். அப்போது எதிரிகள் இக்காட்சியைப் பார்த்து துணிவு கொண்டு நபியவர்களின் மீது தாக்குதல் தொடுத்து, வெகு விரைவில் நபியவர்களையும் அவர்களது உற்ற உண்மை தோழர்களையும் அழித்து விடுவார்கள். இதற்குப் பின்பு தலைமைத்துவம் அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் திரும்ப கிடைத்து விடும் என்பதே அந்த நயவஞ்சகனின் நோக்கமாக இருந்தது.
உண்மையில் அந்த நயவஞ்சகன் தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டான். இந்நிலையில் அவ்ஸ் குலத்தவரில் 'ஹாஸா' என்ற குடும்பத்தினரும் கஸ்ரஜ் கூட்டத்தினல் 'ஸலமா' என்ற குடும்பத்தினரும் கோழைகளாகி போரிலிருந்து திரும்பிடலாம் என்று உறுதியாக எண்ணினர். ஆனால், அல்லாஹ் அவ்விரு குடும்பத்தினரையும் பாதுகாத்து அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சலசலப்பை அகற்றி அவர்களின் உள்ளங்களில் துணிவையும் வீரத்தையும் ஏற்படுத்தினான். இதை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
(அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (உஹுத்' போர்க் களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தை நினைத்துப் பாருங்கள்! (ஆனால், அல்லாஹ் அவர்களை அதிலிருந்து காத்துக் கொண்டான். ஏனெனில்,) அல்லாஹ்வே அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 3:122)
போரைப் புறக்கணித்து, புறமுதுகிட்டு போகும் நயவஞ்சகர்களை அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரழி) பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் ''இந்த இக்கட்டான சூழலில் உங்களின் கடமை என்ன? அதனை உணராமல் போகின்றீர்களே! வாருங்கள் போர்முனைக்கு! இறைவழியில் போரிடுங்கள்! அல்லது எதிரிகளிடமிருந்து எங்களைக் காக்கும் அரணாக நில்லுங்கள்'' என்று எவ்வளவோ எடுத்துக் கூறி புரிய வைக்க முயன்றார். ஆனால், அவர்கள் ''உண்மையில் நீங்கள் போருக்குத்தான் வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு உறுதியாக தெரிந்திருந்தால் நாங்கள் உங்களை விட்டு திரும்பியிருக்க மாட்டோம்'' (அதாவது நீங்கள் போருக்கு வரவில்லை. மாறாக, தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வந்திருக்கிறீர்கள்) என்று கூறினர். இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரழி), ''அல்லாஹ்வின் எதிரிகளே! அல்லாஹ் உங்களை அவனது கருணையிலிருந்து தூரமாக்கட்டும்! உங்களை விட்டும் அல்லாஹ் தனது நபியை முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான்'' என்று கூறி அவர்களை விட்டு திரும்பிவிட்டார்கள்.
இந்த நயவஞ்சகர்கள் குறித்துதான் அல்லாஹ் கூறுகிறான்:
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப) வர்களை (எங்களை விட்டும்) தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ''(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கியிருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.(அல்குர்ஆன் 3:167)
மீதமுள்ள இஸ்லாமியப் படை உஹுதை நோக்கி...
அப்துல்லாஹ் இப்னு உபை இஸ்லாமியப் படையிலிருந்து அத்துமீறி விலகிச் சென்றபின், மீதமுள்ள 700 வீரர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் எதிரியை நோக்கிப் புறப்பட்டார்கள். எதிரிகளின் படை நபியவர்கள் சென்றடைய வேண்டிய உஹுதுக்கு மத்தியில் தடையாக இருந்தது. எனவே, நபியவர்கள் ''எதிரிகளுக்கு அருகில் செல்லாமல் வேறு சுருக்கமான வழியில் யார் நம்மை உஹுத் வரையிலும் அழைத்துச் செல்வார்கள்?'' என்று கேட்டார்கள்.
அப்போது அபூ கைஸமா (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! நான் இருக்கிறேன்'' என்று கூறி, ஹாஸா கிளையினருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் வழியாகவும் அவர்களின் களத்து மேடுகளின் வழியாகவும் அழைத்துச் சென்றார். இப்போது எதிரிகளின் படை மேற்குத் திசையில் இருந்தது.
வழியில் மிர்பா இப்னு கைழிக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக முஸ்லிம்களின் படை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவன் குருடனாகவும் நயவஞ்சகனாகவும் இருந்தான். முஸ்லிம்களின் படை தனது தோட்டத்தைக் கடந்து செல்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மண்ணை வாரி முஸ்லிம்களின் முகத்தில் எறிந்தான். மேலும், ''நீ அல்லாஹ்வின் தூதராக இருந்தால் எனது தோட்டத்தில் நுழைய உனக்கு அனுமதியளிக்க மாட்டேன்'' என்று கத்தினான். இதனால் கோபமடைந்த முஸ்லிம்கள் அவனைக் கொல்ல விரைந்தனர். நபி (ஸல்) அவர்களை அதிலிருந்து தடுத்து, ''இவன் குருடன் இவனது உள்ளமும் குருடு இவனது பார்வையும் குருடு'' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) இறுதியாக 'உத்வத்துல் வாதி'யில் உஹுத் மலைக்கு அருகிலுள்ள கணவாயில் தனது படையுடன் இறங்கினார்கள். பிறகு மதீனாவை முன்னோக்கியவாறு தங்களது கூடாரங்களை அமைத்தார்கள். படையின் பிற்பகுதி உஹுத் மலையை நோக்கி இருந்தது. இந்த அமைப்பின்படி முஸ்லிம்களின் படைக்கும் மதீனா நகரத்துக்கும் மத்தியில் எதிரிகளின் படை தங்கியிருந்தது.
தற்காப்புத் திட்டம்
நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் இப்னு நுஃமான் அல் அன்ஸாரியை (ரழி) நியமித்தார்கள். பின்பு அவர்களை 'கனாத்' என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்று பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தது.
நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்து இப்படையினரை அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள் தளபதிக்குக் கூறிய உபதேசம் வருமாறு: ''எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.''(இப்னு ஹிஷாம்)
இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்) பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்: ''நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள், நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து விடாதீர்கள்.'' (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)
இதே அறிவுரை ஸஹீஹுல் புகாரியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது: ''எங்களைப் பறவைகள் கொத்தித் தின்பதைப் நீங்கள் பார்த்தாலும், நான் உங்களுக்கு கூறியனுப்பும் வரை உங்களது இடத்தை விட்டு நீங்கள் அகன்றிட வேண்டாம். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து அவர்களின் சடலங்களை மிதித்து செல்வதைப் பார்த்தாலும் நான் கூறியனுப்பும் வரை நீங்கள் அகன்றிட வேண்டாம்.''
நபியவர்கள் இவ்வாறு கடுமையான ராணுவச் சட்டங்களைக் கூறி இந்த சிறிய குழுவை மலையில் நிறுத்தியதின் மூலம், முஸ்லிம்களின் பின்புறமாக எதிரிகள் ஊடுருவி அவர்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஒரு முக்கிய வழியை அடைத்து விட்டார்கள்.
படையின் வலப்பக்கத்தில் முன்திர் இப்னு அம்ர் (ரழி) அவர்களையும், இடப்பக்கத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களையும், ஜுபைருக்கு உதவியாக மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்களையும் நியமித்தார்கள். காலித் இப்னு வலீதின் தலைமையிலுள்ள எதிரிகளின் குதிரைப் படைகளை எதிர்க்கும் பொறுப்பை இடப்பக்கத்தில் நிறுத்தியிருந்த ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். மேலும், முஸ்லிம்களுடைய அணிகளின் முன் பகுதியில் வீரத்திலும் துணிவிலும் பிரபல்யமான, மேலும் ஒருவரே ஆயிரம் நபருக்கு சமமானவர் என்று புகழ்பெற்ற சிறந்த வீரர்களின் ஒரு குழுவை தேர்வு செய்து நிறுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இத்திட்டமும் ராணுவ அமைப்பும் மிக்க நுட்பமானதாகவும் ஞானமிக்கதாகவும் இருந்தது. இதன் மூலம் நபியவர்களின் போர் நிபுணத்துவத்தின் தனிச்சிறப்பு தெளிவாகிறது. மேலும், ஒரு தளபதி அவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் நபியவர்கள் வகுத்த இத்திட்டத்தை விட சிறந்ததை நுணுக்கமானதை அவரால் ஏற்படுத்திட இயலாது. எதிரிகளின் போர்க்களம் வந்த பின்புதான் நபியவர்கள் தனது படையுடன் வந்தார்கள். இருப்பினும், மிகச் சிறந்த இடத்தை அங்கு தேர்வு செய்தார்கள். படையின் பின் பக்கத்தையும் வலப்பக்கத்தையும் உயரமான மலைகளைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள். போர் கடுமையாக மூழும்போது இஸ்லாமியப் படையை எதிரிகள் வந்து தாக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விட்டதால் படையின் பின்பக்கத்தையும் இடப்பக்கத்தையும் நபியவர்கள் பாதுகாத்தார்கள். முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டால் பின்வாங்கும் போது விரட்டி வரும் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது படைக்கு உயரமான இடத்தை நபியவர்கள் தேர்வு செய்தார்கள்.
மேலும், எதிரிகள் தங்களை நோக்கி முன்னேறி தங்களையும் தங்களது ராணுவ முகாம்களையும் கைப்பற்றிட நினைக்கும் போது அவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இது வசதியாக இருக்கும். எதிரிகளை மைதானத்தின் மிகத் தாழ்ந்த பகுதியில் நபியவர்கள் ஒதுக்கி விட்டதில் மிகப் பெரிய நன்மை இருந்தது. அதாவது, ஒருக்கால் எதிரிகளுக்கு வெற்றி ஏற்பட்டால் எதிரிகள் வெற்றியின் பலனை முழுமையாக அடைந்துகொள்ள முடியாது. வெற்றி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் முஸ்லிம்கள் எதிரிகளை விரட்டிப் பிடிக்கும் போது முஸ்லிம்களின் கையிலிருந்து அவர்களால் தப்பித்துக் கொள்ளவும் முடியாது. இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்களது தோழர்களில் வீரத்தால் புகழ் பெற்றவர்களை தேர்வு செய்து படையின் முன் நிறுத்தி அந்தக் குறையை நிறைவு செய்தார்கள்.
ஆக, ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை காலையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது படையை இவ்வாறு அமைத்து போருக்கு ஆயத்தமானார்கள்.
நபியவர்கள் படையினருக்கு வீரமூட்டுகிறார்கள்
தான் கட்டளையிடும் வரை போரை ஆரம்பிக்கக் கூடாது என்று வீரர்களுக்குத் தடை விதித்தார்கள். நபியவர்கள் இரண்டு கவச ஆடை அணிந்திருந்தார்கள். தங்களது தோழர்களுக்குப் போர் புரிவதற்கு ஆர்வமூட்டியதுடன், எதிரிகளைச் சந்திக்கும் போது சகிப்புடன் இருந்து வீரத்தை வெளிப்படுத்தத் தூண்டினார்கள். தங்களின் தோழர்களுக்கு வீரத்தை ஊட்டும் வகையில் ஒரு கூர்மையான வாளை உருவி தங்களது தோழர்களிடம் ''இவ்வாளை என்னிடம் வாங்கி அதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது நபியவர்களிடமிருந்து அதை வாங்குவதற்கு பலர் முன் வந்தனர். அவர்களில் அலீ இப்னு அபூதாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம், உமர் இப்னு கத்தாப் (ரழி) ஆகியோரும் அடங்குவர்.
இறுதியாக, அபூ துஜானா என்று அழைக்கப்படும் சிமாக் இப்னு கரஷா (ரழி) அவர்கள் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய கடமை என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''இந்த வாள் வளையும் வரை இதன் மூலம் எதிரிகளின் முகங்களை நீ வெட்ட வேண்டும்'' என்றார்கள். ''இறைத்தூதரே! இதன் கடமையை நான் நிறைவேற்றுவேன்'' என்று அபூ துஜானா (ரழி) கூறினார்கள். நபியவர்கள் அவருக்கு அந்த வாளைக் கொடுத்தார்கள். அபூ துஜானா (ரழி) மாபெரும் போர் வீரராக இருந்தார். போர் சமயத்தில் மிகுந்த பெருமையுடன் நடந்து செல்வார். அவரிடம் ஒரு சிவப்பு நிற தலைப்பாகை இருந்தது. அத்தலைப்பாகையை அவர் அணிந்து கொண்டால் மரணிக்கும் வரை போர் புரிவார் என்று மக்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். நபியவர்களின் கரத்திலிருந்து வாளை அபூ துஜானா (ரழி) வாங்கியவுடன், தான் வைத்திருந்த சிவப்பு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு இரு அணிகளுக்கிடையில் பெருமையுடன் நடந்தார். இதைப் பார்த்த நபியவர்கள் ''இவ்வாறு நடப்பதை அல்லாஹ் வெறுக்கிறான். ஆனால், இதுபோன்ற இடங்களிலேயே தவிர!'' என்று கூறினார்கள்.
மக்கா படையின் அமைப்பு
இணைவைப்பவர்கள் தங்களது படையைப் பல அணிகளாக அமைத்தனர். படையினரின் உள்ளத்தில் இடம் பிடித்திருந்த அபூ ஸுஃப்யான் ஸக்ர் இப்னு ஹர்ப் போரின் பொதுத் தளபதியாக இருந்தார். படையின் வலப்பக்கத்திற்குக் காலித் இப்னு வலீத் தலைமையேற்றார். இடப்பக்கத்திற்கு இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் தலைமையேற்றார். காலாட்படை வீரர்களுக்கு ஸஃப்வான் இப்னு உமய்யாவும் அம்பெறியும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபூ ரபீஆவும் தலைமை வகித்தனர்.
'அப்து தார்' என்ற குடும்பத்தினர் இப்படையின் கொடியை வைத்திருந்தனர். குஸை இப்னு கிலாபிடமிருந்து அப்து மனாஃப் குடும்பத்தினர் பதவிகளையும் தகுதிகளையும் பங்கு வைத்துக் கொண்டபோது அப்து தார் குடும்பத்தினருக்கு போரில் கொடி பிடிக்கும் பதவி கிடைத்தது. இதன் விவரத்தை இந்நூலின் தொடக்கத்தில் நாம் கூறியிருக்கின்றோம். இப்பதவியில் அவர்களிடம் வேறு யாரும் போட்டி போட்டு அதை பறித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக இந்தச் சடங்குகளை அவர்கள் பின்பற்றி வந்தனர். எனினும், படையின் பொதுத் தளபதியான அபூ ஸுஃப்யான் பத்ர் போரில் கொடியை ஏந்தியிருந்த நழ்ர் இப்னு ஹாரிஸ் கைது செய்யப்பட்டதால் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியை நினைவூட்டினார். மேலும், இவர்களின் கோபத்தையும் வெறியையும் கிளறுவதற்காக பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:
''அப்து தார் குடும்பத்தினரே! பத்ர் போரில் எங்களின் கொடிக்கு நீங்கள்தான் பொறுப்பு வகித்தீர்கள். போரில் எங்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். படைக்கு ஏற்படக்கூடிய நிலைக்கு அவற்றின் கொடிகளே காரணமாக இருக்கிறது. கொடி வீழ்ந்துவிட்டால் படையினரின் பாதங்களும் ஆட்டம் கண்டுவிடுகின்றன. படைகள் தோல்வியைத் தழுவி விடுகின்றன. நீங்கள் எங்களது கொடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் எங்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்து விடுங்கள். நாங்கள் அதை பாதுகாத்துக் கொள்கிறோம்.''
அபூ ஸுஃப்யான் தனது இந்த சிற்றுரையின் மூலம் தனது நோக்கத்தில் வெற்றி கொண்டார். அபூ ஸுஃப்யானின் உரையைக் கேட்ட அப்து தார் குடும்பத்தினர் கடும் சினம்கொண்டு அவரை எச்சரித்தனர். ''எங்களது கொடியை நாங்கள் உமக்குக் கொடுக்க வேண்டுமா? நாளை நாங்கள் போர் புரியும் போது எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று நீ பார்க்கத்தான் போகிறாய்'' என்று கர்ஜித்தனர்.
இவர்கள் சூளுரைத்தது போன்றே போரில் கொடியைக் காப்பதில் பெரும் தியாகம் செய்தனர். இந்தக் குடும்பம் முழுவதுமே கொடியைக் காப்பதிலே தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்
போர் தொடங்குவதற்கு முன்பு முஸ்லிம்களின் அணியில் பிணக்கையும் பிரிவினையையும் ஏற்படுத்த குறைஷிகள் முயன்றனர். மதீனா முஸ்லிம்களிடம் அபூ ஸுஃப்யான் தூதனுப்பினார். ''நீங்கள் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரரை விட்டு விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு இடையில் குறுக்கிடாதீர்கள். நாங்கள் உங்களை விட்டு விடுகிறோம் உங்களிடம் போர் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை. நாங்கள் உங்களிடம் போர் செய்ய வரவில்லை. எங்களது நோக்கம் எங்களது ஒன்றுவிட்ட சகோதரன்தான்.'' இவ்வாறு அபூ ஸுஃப்யான் தூதரிடம் கூறி அனுப்பினார்.
மலைகளைவிட உறுதியும் வலுவும் நிறைந்த இறைநம்பிக்கையின் ஆற்றலுக்கு முன் இந்த முயற்சி என்ன பலனளிக்கும்? அபூ ஸுஃப்யானின் இந்தப் பேரத்திற்கு மிகக் கடுமையாக பதிலளித்ததுடன், அவருக்கு வெறுப்பூட்டும் வார்த்தைகளையும் மதீனா முஸ்லிம்கள் கூறினர்.
நேரம் நெருங்கியது. இரு கூட்டத்தினரும் ஒருவரை ஒருவர் நெருங்கினர். இந்நேரத்திலும் மேற்கூறப்பட்ட அதே நோக்கத்திற்காக குறைஷிகள் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தனர். அதாவது, 'அபூ ஆமிர்' என்று அழைக்கப்படும் ஒருவன் இருந்தான். இவனது இயற்பெயர் 'அப்து அம்ர் இப்னு ஸைஃபி'. இவனை மக்கள் 'ராப்' துறவி என்று புகழ்ந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களோ இவனை 'அல் ஃபாஸிக்' (பெரும்பாவி) என்று இகழ்ந்தார்கள். இவன் அறியாமைக் காலத்தில் மதீனாவில் அவ்ஸ் கிளையினரின் தலைவனாக இருந்தவன். இஸ்லாமிய மார்க்கம் வந்தவுடன் அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நபியவர்களுடன் வெளிப்படையாக பகைமைக் கொண்டான்.
இவன் மதீனாவில் இருந்து வெளியேறி மக்காவிற்குச் சென்றான். அங்கு நபியவர்களுக்கு எதிராக போர் புரிய குறைஷிகளைத் தூண்டினான். இப்போரில் முதல் அணிகளில் பலதரப்பட்ட வமிசத்தைச் சேர்ந்த வாலிபர்களும் மக்கா நகர அடிமைகளும் இருந்தனர். இவனும் அவர்களுடன் இணைந்து கொண்டு அணியின் முதல் வரிசைக்கு வந்தான். மதீனாவாசிகள் தன்னைப் பார்த்தால் தனக்குத்தான் கட்டுப்படுவார்கள். நபியவர்களை விட்டு விலகிக் கொள்வார்கள் என்று குறைஷிகளுக்கு வாக்களித்தான். பிறகு முஸ்லிம்களை முன்னோக்கி அவர்களில் தனது கூட்டத்தினரைக் கூவி அழைத்து, ''அவ்ஸ் கிளையினரே! நான்தான் அபூ ஆமிர்!'' என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்தினான். அதற்கு முஸ்லிம்கள் ''பாவியே! அல்லாஹ் உனக்கு அருள்புரிய மாட்டான் உன்னிடம் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை!'' என்று பதில் கூறினார்கள். அதற்கவன் ''எனது கூட்டத்தினருக்கு நான் வந்த பின்பு ஏதோ தீங்கு நிகழ்ந்துவிட்டது'' என்று கூறி தொடர்ந்து பேசுவதை நிறுத்திக் கொண்டான். (இவன் போரில் கடுமையாக முஸ்லிம்களிடம் சண்டையிட்டான். அவர்களைக் கல்லால் எறிந்து தாக்கினான்.)
இறைநம்பிக்கையாளர்களின் அணிகளில் பிரிவினையை ஏற்படுத்த குறைஷிகள் மேற்கொண்ட இரண்டாவது முயற்சியும் தோல்வியைத் தழுவியது. எதிரிகளிடம் போர் வீரர்களும் அதிகம் இருந்தனர். போர் சாதனங்களும் அதிகமாக இருந்தன. எனினும், முஸ்லிம்களைப் பற்றிய பயமும் அச்சமும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்த காரணத்தினால்தான் இவ்வாறு குறுக்கு வழியை அவர்கள் கையாண்டனர். ஆனால், அதுவும் அவர்களுக்குப் பலனைத் தரவில்லை.
குறைஷிப் பெண்கள் வெறியூட்டுகின்றனர்
குறைஷிப் பெண்களும் போரில் தங்களால் முடிந்த பங்காற்றினர். இப்பெண்களுக்கு ஹிந்த் பின்த் உத்பா (அபூ ஸுஃப்யானின் மனைவி) தலைமையேற்று வழி நடத்தினார். தமது படை வீரர்களிடையே சென்று மேளங்களை அடித்து பாட்டுப் பாடி உணர்வுகளைத் தூண்டினர். அம்பெறியும் வீரர்கள், ஈட்டியால் தாக்கும் வீரர்கள், வாள் வீசும் வீரர்கள், கொடியேந்தியிருந்த வீரர்கள் என படையினர் அனைவரையும் கவர்ந்து அவர்களை ஆவேசப்படுத்தினர்.
கொடியேந்தியிருந்த வீரர்களைப் பார்த்து பின்வருமாறு கவிபாடினர்.
''அப்துத் தார் வமிசத்தினரே பாருங்கள்!
படையின் பிற்பகுதி பாதுகாவலர்களே பாருங்கள்!
வாளை வீசி நன்றாகப் போரிடுங்கள்!''
அடுத்து, தங்களது சமூகத்தினரைப் பார்த்து பின்வருமாறு கவிபாடி அவர்கள் போரில் ஆர்வத்துடனும் வெறியுடனும் ஈடுபடத் தூண்டினர்.
''நீங்கள் எதிரிகளைப் பிளந்து சென்று வெற்றி கண்டால்
பட்டுக் கம்பளம் விரித்து ஆரத் தழுவி உங்களை வரவேற்போம்.
போரில் புறமுதுகிட்டால் அன்பிலார் பிரிவதைப் போல்
காதலின்றி உங்களைப் பிரிந்து விடுவோம்.''
போரின் முதல் தீ பிழம்பு
இரு படைகளும் சமீபமாயின. சண்டையிட நேரம் நெருங்கியது. இணைவைப்பவர்களின் கொடியை ஏந்தியிருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா போரின் முதல் தீப்பிழம்பை மூட்டினான். தன்னுடன் நேருக்குநேர் மோத முஸ்லிம்களை அழைத்தவனாக படைக்கு முன் வந்தான். இவன் குறைஷிகளில் மிகப்பெரிய வீரனாக இருந்தான். முஸ்லிம்கள் இவனை 'கபிஷுல் கதீபா' (படையின் முரட்டுக் கடா) என்று அழைத்தனர். இவன் வீரம் மிகைத்தவன் என்பதால் முஸ்லிம்கள் இவனுக்கு முன் வரத்தயங்கினர். ஆனால், நபித்தோழர் ஜுபைர் (ரழி) சிங்கம் பாய்வது போல் ஓரே பாய்ச்சலாக இவன் மீது பாய்ந்து ஒட்டகத்தின் மீது அவனுடன் ஏறிக் கொண்டார்கள். அவனுடன் சண்டை செய்து அவனைப் பூமியில் தள்ளி வாளால் வெட்டிக் கொன்றார்கள்.
ஜுபைரின் வீரதீரத் தாக்குதலைப் பார்த்த நபியவர்கள் தக்பீர் முழங்க முஸ்லிம்கள் அனைவரும் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்கள் ஜுபைரைப் புகழ்ந்து ''ஒவ்வொரு நபிக்கும் ஒரு விசேஷமான தோழர் இருப்பார். எனது விசேஷத் தோழர் ஜுபைராவார்'' என்று கூறினார்கள்.(ஸீரத்துல் ஹல்பிய்யா)
கொடியை சுற்றிக் கடும் போர்
இதைத் தொடர்ந்து போரின் தீ இரு தரப்பிலும் கடுமையாக மூண்டு போர்க்களத்தின் பல பகுதிகளிலும் போர் வெடித்தது. குறிப்பாக, போரின் கடுமை இணைவைப்போரின் கொடியைச் சுற்றியே இருந்தது. கொடியைச் சுமந்திருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா கொலை செய்யப்பட்ட பின் அவனது சகோதரன் உஸ்மான் இப்னு அபூ தல்ஹா அக்கொடியைப் பிடித்து போர் செய்ய முன்வந்தான். பெருமையுடன் பின்வருமாறு ஒரு கவிதையைப் பாடினான்:
''கொடி பிடித்தோன் கடமையாவது
ஈட்டி குருதியால் நிறம் மாற வேண்டும்
அல்லது அது உடைய வேண்டும்.''
அவனுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்காமல் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவன் மீது பாய்ந்து, அவனது புஜத்தில் கடுமையாக வெட்டினார்கள். அந்த வெட்டு அவனது கையை அவனது உடலிலிருந்து தனியாக்கியதுடன், அவனது தொப்புள் வரை சென்றடைந்து அவனது குடல்கள் வெளியேறின. பின்பு மற்றொரு சகோதரன் அபூ ஸஅது இப்னு அபூ தல்ஹா கொடியைச் சுமந்தான். அவனை நோக்கி ஸஅது இப்னு அபூ வக்காஸ் (ரழி) அம்பெறிந்தார்கள். அந்த அம்பு அவனது தாடையின் கீழாகக் குத்திக் கிழித்து வெளியேறியது. இதனால் அவனது நாவு வெளியேறியது. அடுத்த வினாடியே அவனும் செத்து விழுந்தான்.
பின்பு முஸாஃபிஉ இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா என்பவன் கொடியைத் தாங்கினான். அவனை ஆஸிம் இப்னு ஸாமித் இப்னு அபுல் அஃப்லஹ் (ரழி) அம்பெறிந்துக் கொன்றார். அதற்குப் பின் அவனது சகோதரன் கிலாஃப் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவன் மீது ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) பாய்ந்து அவனை வெட்டி வீழ்த்தினார்கள். அதற்குப் பின் இவ்விருவர்களின் சகோதரன் ஜுலாஸ் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா கொடியை ஏந்தினான். இவனை தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) ஈட்டியால் குத்திக் கொன்றார்கள்.
இவ்வாறு அபூதல்ஹா எனப்படும் அப்துல்லாஹ் இப்னு உஸ்மான் இப்னு அப்து தார் குடும்பத்திலிருந்து ஆறு நபர்கள் கொடிக்காகக் கொல்லப்பட்டனர். பின்பு, கொடியை அப்து தார் கிளையினரிடமிருந்து அர்தா இப்னு ஷுரஹ்பீல் சுமந்தான். இவனை அலீ இப்னு அபூதாலிப் (ரழி) கொன்றார்கள். பின்பு, அக்கொடியை ஷுரைஹ் இப்னு காள் அதை சுமந்து கொள்ள அவனைக் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார். இந்த குஸ்மான் உண்மையில் நயவஞ்சகராக இருந்தார். அவர் மார்க்கத்திற்காகப் போர் செய்ய வரவில்லை. மாறாக, தனது இனத்திற்கு உதவ வேண்டும் என்ற வெறியில்தான் வந்திருந்தார். பின்பு கொடியை அம்ர் இப்னு அப்து மனாஃப் அல் அப்த சுமந்து கொள்ளவே அவரையும் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார். பின்பு, கொடியை ஷுரஹ்பீல் இப்னு ஹாஷிம் அல் அப்தயின் மகன் ஒருவன் சுமந்து கொள்ள அவனையும் குஸ்மான் வெட்டி வீழ்த்தினார்.
இவ்வாறு கொடியை சுமந்த அப்து தார் குடும்பத்தினர் பத்து நபர்களும் அழிக்கப்பட்டனர். இதற்குப் பின்பு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் கொடியைத் தாங்கிக் கொள்ள எவரும் இல்லாததால் அவர்களின் ஹபஷி அடிமை ஸுஆப் என்பவன் முன்வந்து கொடியைத் தாங்கிப் பிடித்து தனது எஜமானர்களை விட வீரத்துடன் போரிட்டான். போரில் அவனது இரு கரங்களும் துண்டிக்கப்படவே கொடியின் மீது மண்டியிட்டு அமர்ந்து கீழே விழுந்து விடாமல் பாதுகாக்க, அதைத் தனது நெஞ்சோடும் கழுத்தோடும் அணைத்துக் கொண்டான். இறுதியில், அவன் கொல்லப்பட்டபோது ''அல்லாஹ்வே! நான் முடிந்தவரை முயற்சி செய்தேன். என்மீது இனி குற்றமில்லை அல்லவா!'' என்று கூறியவனாகவே செத்தான்.
இவ்வடிமை ஸுஆப் கொல்லப்பட்டதற்குப் பின் எதிரிகளின் கொடி பூமியில் சாய்ந்தது. அதைச் சுமப்பதற்கு யாரும் இல்லாததால் இறுதி வரை அது கீழேயே கிடந்தது.
மற்ற பகுதிகளில் சண்டை
இணைவைப்பவர்களின் கொடியைச் சுற்றி போர் கடினமாக நடந்ததைப் போன்று போர்க் களத்தின் மற்ற பகுதிகளிலும் உக்கிரமான போர் நடந்தது. முஸ்லிம்கள் எதிரிகளின் படையை ,இறைநம்பிக்கை எனும் பலத்துடன் மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு அவர்களைத் திக்குமுக்காட வைத்தனர். தங்களுக்கு மத்தியில் 'அம்த் அம்த்' என்ற இரகசிய அடையாள வார்த்தையை கூறிக்கொண்டே எதிரிகளின் படையைப் பிளந்துச் சென்றனர்.
சிவப்புத் தலைப்பாகை அணிந்து, நபி (ஸல்) அவர்களின் வாளை ஏந்தி, அதன் கடமையை நிறைவேற்ற வேண்டுமென உறுதி கொண்டிருந்த அபூ துஜானா (ரழி) எதிரிகளின் படைக்குள் புகுந்து தனக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியையும் வெட்டி வீழ்த்தினார்.
இதைப் பற்றி ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்:
நபியவர்களிடம் வாளை நான் கேட்டபோது அதை எனக்கு அளிக்காமல் அபூ துஜானாவுக்கு கொடுத்ததைப் பற்றி எனக்குக் கவலையாக இருந்தது. நான் நபியவர்களின் மாமி ஸஃபிய்யாவின் மகன் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவன். அவரை விட முந்தி அந்த வாளை நபியவர்களிடம் நான்தான் கேட்டேன். ஆனால் என்னை விட்டுவிட்டு நபியவர்கள் அவருக்கு அந்த வாளை கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி என்னதான் அபூதுஜானா செய்துவிடப் போகிறார் என்று பார்ப்போம்?! என்று எனக்குள் கூறிக்கொண்டு அவரைத் தொடர்ந்து கவனித்தேன். அவர் சிவப்பு தலைப்பாகையை எடுத்து அணிந்தார். இதைப் பார்த்த மதீனாவாசிகள் ''அபூ துஜானா மரணத்தின் தலைப்பாகையை எடுத்துவிட்டார்'' என்று கூறினார்கள்.
அதை அணிந்துகொண்ட அபூதுஜானா பின்வருமாறு கவிதையைப் பாடி, போரில் குதிக்கலானார்:
''பேரீச்சந்தோட்டத்திலே நண்பர் என்னிடம் ஒப்பந்தம் செய்தார்.
அல்லாஹ் மற்றும் தூதருடைய வாளால் நான் போரிடுவேன்.
ஒருபோதும் படையின் பிற்பகுதியில் நில்லேன்.''
அவர் சண்டையிட்ட எவரையும் கொல்லாமல் விடவில்லை. போர்க்களத்தில் இணை வைப்பவர்களில் ஒருவன் எங்களில் காயமடைந்தவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தொல்லை செய்து கொண்டிருந்தான். அபூ துஜானா (ரழி) அவனுக்கு அருகில் சென்றபோது ''அல்லாஹ்வே! அவ்விருவரையும் சந்திக்க வை'' என்று நான் பிரார்த்தித்தேன். அவ்வாறே அபூ துஜானாவும் அந்த எதிரியும் சந்தித்து சண்டையிட்டனர். எதிரி அபூ துஜானாவை வெட்ட வந்தபோது அபூ துஜானா (ரழி) தனது கேடயத்தால் அதைத் தடுத்தார். அவனது வாள் அபூ துஜானாவுடைய கேடயத்துக்குள் சிக்கிக் கொண்டது. உடனே அபூ துஜானா (ரழி) தனது வாளால் அவனை வெட்டி வீழ்த்தினார். (இப்னு ஹிஷாம்)
பின்பு அபூதுஜானா (ரழி) எதிரிகளின் அணியைக் கிழித்துக் கொண்டு செல்லுகையில் குறைஷிப் பெண்களின் தளபதி ஹிந்து'க்கருகில் செல்ல நேர்ந்தது. ஆனால், அவருக்கு அவர் யார் என்று தெரியாது. இதைப் பற்றி அபூ துஜானாவே கூறுகிறார்:
போருக்கு மக்களை பயங்கரமாகத் தூண்டிக் கொண்டிருக்கும் ஒருவரை நான் பார்த்தேன். நான் அவரை முன்னோக்கிச் சென்று அவர் மீது என் வாளை வீச எண்ணிய போது அவர் என் பக்கம் திரும்பினார். அவரைப் பெண் என்று அறிந்து கொண்ட நான் ஒரு பெண்ணைக் கொலை செய்து நபியவர்கள் கொடுத்த வாளின் கண்ணியத்தைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காக அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.
அந்தப் பெண் ஹிந்த் பின்த் உத்பாவாகும். இதைப் பற்றி ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கூறுகிறார்கள்: அபூதுஜானா ஹிந்துடைய தலையின் நடுப் பகுதிக்கு வாளை கொண்டு சென்று விட்டு திருப்பிவிட்டார். இதைக் கண்ட நான் ''அபூதுஜானா ஏன் இவ்வாறு செய்தார்? அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் நன்கறிந்தவர்கள் என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.''(இப்னு ஹிஷாம்)
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) சிங்கம் பாய்ந்து தாக்குவதைப் போரில் எதிரிகளைப் பாய்ந்து தாக்கியவராக எதிரிப்படையின் நடுப்பகுதிக்குள் சென்றுவிட்டார். அவருக்கு முன் எதிர்த்து நின்ற வீரமற்ற எதிரிகள் புயல் காற்றில் இலைகள் பறப்பது போன்று அவரைப் பார்த்து விரண்டனர். இணைவைப்பாளர்களின் கொடியை சுமந்திருந்தவர்களை அழிப்பதில் ஹம்ஜா (ரழி) எடுத்துக் கொண்ட பங்கைப் பற்றி இதற்கு முன்பே நாம் கூறியிருக்கின்றோம். இறுதியாக, முன்னணி வீரர்களில் இருந்த இவர் கொல்லப்பட்டார். போர் மைதானத்தில் இவருடன் நேருக்கு நேர் போரிட்டு கொல்ல சக்தியற்ற எதிரிகள் கோழைத்தனமானத் தாக்குதல் நடத்தி இவரை வஞ்சகமாகக் கொன்றனர்.
அல்லாஹ்வின் சிங்கம் வீர மரணம்
அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி இப்னு ஹர்ப் அது குறித்து கூறுகிறார்: நான் ஜுபைர் இப்னு முத்யீமின் அடிமையாக இருந்தேன். அவனது தந்தையின் சகோதரன் துஅய்மா இப்னு அதீ பத்ர் போரில் கொல்லப்பட்டான். குறைஷிகள் உஹுத் போருக்குப் புறப்பட ஆயத்தமான போது ஜுபைர் என்னிடம் ''முஹம்மதுடைய சிறிய தந்தை ஹம்ஜாவை நீ கொன்றுவிட்டால் உன்னை நான் உரிமையிட்டு விடுகிறேன்'' என்று கூறினான். நான் மக்களுடன் சேர்ந்து புறப்பட்டேன். ஹபஷிகள் திறமையாக ஈட்டி எறிவது போரில் நானும் ஈட்டி எறிவதில் திறமையானவன். நான் எறியும் ஈட்டி மிகக் குறைவாகவே இலக்கைத் தவறும். போர் மூண்டபோது நான் ஹம்ஜாவைத் தேடி அலைந்தேன். வீரர்களுக்கு மத்தியில் அவரைச் சாம்பல் நிற ஒட்டகத்தைப் போன்று பார்த்தேன். அவர் படை வீரர்களைப் பிளந்து கொண்டிருந்தார். அவருக்கு முன் நிற்பதற்கு எவருக்கும் துணிவு வரவில்லை. நான் அவரைக் கொல்ல நாடி அதற்காக ஆயத்தமானேன். அவர் எனக்கருகில் வரும் வரை ஒரு மரம் அல்லது ஒரு பாறைக்குப் பின் மறைந்து கொள்ள நாடினேன். ஆனால், திடீரென ஸிபா இப்னு அப்துல் உஜ்ஜா ஹம்ஜாவுக்கு முன் வந்தான். அவனைப் பார்த்த ஹம்ஜா (ரழி) அவனுக்குக் கோபமூட்டுவதற்காக ''ஓ ஆணுறுப்பின் தோலை வெட்டுபவளின் மகனே! என்னருகில் வா!'' என்றழைத்தார்கள். (அவனது தாய் கத்னா செய்யும் தொழில் செய்து வந்தாள்.) அவன் அருகில் வந்தவுடன் ஹம்ஜா (ரழி) அவனது தலையை உடம்பிலிருந்து தனியாக்கினார்.
தொடர்ந்து வஹ்ஷி கூறுகிறார்: நான் நல்ல தருணம் பார்த்து எனது சிறிய ஈட்டியால் அவரை நோக்கி எறிந்தேன். அது அவரது தொப்புளுக்கு அருகில் குத்திக் குடலைக் கிழித்து அவரது மர்மஸ்தானத்தின் பக்கமாக வெளியாகியது. அவர் என்னை நோக்கி வர முயற்சி செய்தார். ஆனால் அவரால் வர முடியவில்லை. நான் அவரை அதே நிலையில் விட்டுவிட அவர் இறந்துவிட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து அவரிடம் வந்து எனது ஈட்டியை எடுத்துக் கொண்டு கூடாரத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். இவரைத் தவிர மற்றவர்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. இவரை நான் கொன்றது எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது போல் போர் முடிந்து மக்கா திரும்பியதும் எனக்கு விடுதலை கிடைத்தது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
நிலைமையைக் கட்டுப்படுத்துவது
அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சிங்கம் என்று பெயர் பெற்ற மாவீரர் ஹம்ஜா (ரழி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தாலும் முஸ்லிம்கள் நிலைமைகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
அன்றைய தினம் அபூபக்ர், உமர், அலீ, ஜுபைர் இப்னு அவ்வாம், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், ஸஅதுப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு ரபீஃ, அனஸ் இப்னு நள்ர் (ரழி) இன்னும் இவர்களைப் போன்ற நபித் தோழர்களில் பலர் போரில் காட்டிய வீரம் இணைவைப்பவர்களின் உறுதியைக் குலைத்து அவர்களது தோள் வலிமையைத் தளர்வடையச் செய்தது.
மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி...
அன்றைய தினத்தில் ஆபத்துகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் களத்தில் துணிச்சலுடன் போர் புரிந்த வீரர்களில் 'அல்கஸீல்' என்று அழைக்கப்படும் ஹன்ளலா (ரழி) அவர்களும் ஒருவர். இவர் முஸ்லிமல்லாதவர்களால் 'துறவி' என்றும் நபி (ஸல்) அவர்களால் 'பாவி' என்றும் அழைக்கப்பட்ட அபூ ஆமிரின் மகனாவார். ஹன்ளலா (ரழி) அன்றுதான் திருமணம் முடித்திருந்தார்கள். தனது மனைவியுடன் தனித்திருந்த இவர்கள், போர்க்களத்தில் இருந்து பலத்த சப்தத்தைக் கேட்டவுடன் அதே நிலையில் போர்க்களத்தை நோக்கி ஓடோடி வந்து இணைவைப்பாளர்களின் அணிக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கிய வண்ணம் முன்னேறி சென்றார்கள். இணை வைப்பாளர்களின் தளபதியான 'அபூ ஸுஃப்யான்' என்ற ஸக்ர் இப்னு ஹர்பை நெருங்கி அவருடன் கடுமையான போர் புரிந்து அவரைக் கீழே வீழ்த்திக் கொல்வதற்கு நெருங்கிவிட்டார். அல்லாஹ் அவருக்கு வீர மரணத்தை முடிவு செய்யாமல் இருந்திருந்தால் இவர் அபூ ஸுஃப்யானை கொன்றிருப்பார். ஆனால், ஷத்தாத் இப்னு அஸ்வத் என்பவன் முதுகுப் புறத்திலிருந்து ஹன்ளலா (ரழி) அவர்களைத் தாக்கியதால் அவர்கள் வீர மரணமடைந்தார்கள்.
போரில் அம்பெறியும் வீரர்களின் பங்கு
நபி (ஸல்) அவர்கள் மலையின் மீது நிறுத்திய வீரர்கள் இஸ்லாமியப் படைக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர். காலித் இப்னு வலீதின் தலைமையின் கீழ், பாவி அபூ ஆமிரின் உதவியுடன் எதிரிகள் மூன்று முறை இஸ்லாமியப் படையின் இடது பாகத்தை முறியடிக்க முயன்றனர். முஸ்லிம்களின் பின்புறமாகத் தாக்குதல் தொடுத்து அணியில் சேதங்களையும் குழப்பங்களையும் உண்டுபண்ணி, அதைத் தொடர்ந்து பெரும் தோல்வியை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிடலாம் என்று மூன்று முறை இம்மலைப் பகுதியின்மீது எதிரிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால், மலை மீதிருந்து அம்பெறியும் வீரர்கள் இவர்களின் மீது அம்பு மழை பொழிந்து இவர்களின் மூன்று தாக்குதல்களையும் முறியடித்தனர். (ஃபத்ஹுல் பாரி)
இணைவைப்பவர்களுக்குத் தோல்வி
இவ்வாறுதான் போர் எனும் திருகை சுழன்றது. சிறியதாக இருந்த இஸ்லாமியப் படை நிலைமை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் இணைவைப்பவர்களின் நம்பிக்கை தளர்ந்தது. அவர்களின் படை வலது, இடது, முன், பின் என நாலா பாகங்களிலும் சிதறி ஓடின. அந்நிலைமை எவ்வாறு இருந்ததென்றால், மூவாயிரம் இணைவைப்பவர்கள் சில நூறு முஸ்லிம்களுடன் அல்ல முப்பதினாயிரம் முஸ்லிம்களுடன் போர் புரிகிறார்கள் என்பதைப் போல் இருந்தது. முஸ்லிம்கள் தமது வீரதீரங்களை, திறமைகளை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தினர்.
முஸ்லிம்களின் தாக்குதலை தடுக்க இணைவைப்பவர்கள் முழு முயற்சி செய்தும் அது முடியாமல் போனதால், தங்களின் தோல்வியையும் இயலாமையையும் உணர்ந்தனர். துணிவை இழந்தனர். கொடி ஏந்தியிருந்த 'சூஆப்' என்பவர் இறுதியாகக் கொல்லப்பட்ட பிறகு அவர்களின் கொடியை எடுத்து நிமிர்த்தி அதைச் சுற்றிலும் தொடர்ந்து போர் புரிவதற்கு யாரும் துணியவில்லை. இதனால் பழிவாங்க வேண்டும் தங்களது கண்ணியத்தையும் மதிப்பையும் நிலைநாட்ட வேண்டும் என்று தங்களுக்குள் பேசி வந்ததையெல்லாம் மறந்துவிட்டு, உயிர் பிழைத்தால் போதுமென்று தலைதெறிக்க தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.
''இவ்வாறு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை அருளினான். தனது வாக்கை அவர்களுக்கு உண்மைப்படுத்தினான். முஸ்லிம்கள் தங்களது வாட்களால் எதிரிகளை வெட்டி வீழ்த்தினர். போர்க்களத்தை விட்டு தப்பி ஓடிய எதிரிகளை வெருண்டோட வைத்தனர். உண்மையில் இணைவைப்பவர்கள் பெரும் தோல்வி கண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) தனது தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஹிந்த் பின்த் உத்பா மற்றும் அவளின் தோழிகள் தங்களின் ஆடைகளை உயர்த்திக் கொண்டு ஓடினர். நான் அவர்களின் கெண்டைக் கால்களைப் பார்த்தேன். அவர்களை நாங்கள் பிடிக்க நாடியிருந்தால் பிடித்திருப்போம். காரணம், அதற்கு எந்தத் தடையும் எங்களுக்கு இருக்கவில்லை.'' (இப்னு ஹிஷாம்)
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள பரா இப்னு ஆஸிஃப் (ரழி) அறிவிப்பில் வருவதாவது: ''நாங்கள் எதிரிகளை எதிர்த்து போரிட்டபோது பெண்களைப் பார்த்தோம். அவர்கள் தோல்வியுற்று விரண்டோடினர். தங்களது கெண்டைக் கால்களில் அணிந்திருந்த சலங்கைகள் தெரியும் அளவுக்கு ஆடைகளை உயர்த்திக் கொண்டு மலைகளின் மேல் ஓடினர். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைப் பின்தொடர்ந்துச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தி, அவர்களின் பொருட்களையும் கைப்பற்றினர்.
அம்பெறி வீரர்களின் மாபெரும் தவறு
சிறியதாக இருந்த இஸ்லாமியப் படை வரலாற்றில் மற்றொரு முறை மக்காவாசிகளுக்கு எதிராய் மாபெரும் வெற்றி முத்திரையைப் பதித்தனர். இவ்வெற்றி பத்ரில் அவர்களுக்குக் கிடைத்த வெற்றியை விட சற்றும் குறைவானது அல்ல. இந்நேரத்தில் மலை மீது நிறுத்தப்பட்டிருந்த அம்பெறியும் வீரர்களின் பிரிவில் பெரும்பாலோர் மாபெரும் தவறு ஒன்றைச் செய்தனர். இத்தவறினால் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது. முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய சேதமும் நஷ்டமும் ஏற்பட்டது. நபியவர்களை எதிரிகள் கொன்றுவிட இது ஒரு வாய்ப்பாக இருந்தது. அப்பெறியும் வீரர்களின் இந்தத் தவறினால் ஏற்பட்ட பின்விளைவு, முஸ்லிம்களின் வீரத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. பத்ர் போரின் வெற்றிக்குப் பின் நிராகரிப்பாளர்களுக்கு முஸ்லிம்களின் மீதிருந்த அச்சத்தையும் அம்பெறியும் வீரர்களின் இந்தத் தவறு போக்கிவிட்டது.
வெற்றி அல்லது தோல்வி எது ஏற்பட்டாலும் அம்மலையைவிட்டு நகரக் கூடாது என்று இந்த அம்பெறியும் வீரர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையின் வாசகங்களை நாம் முன்பு கூறியிருந்தோம். இவ்வளவு ஆணித்தரமாக நபியவர்கள் கட்டளையிட்டிருந்தும் வெற்றி கிடைத்து எதிரிகளின் பொருட்களை முஸ்லிம்கள் ஒன்று திரட்டுவதைப் பார்த்த அத்தோழர்களில் சிலருக்கு உலக ஆசை ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள் ''இதோ வெற்றிப் பொருள்! இதோ வெற்றிப் பொருள்! உங்களது தோழர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இதற்குப் பின்பும் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கூறினர்.
அச்சமயம் அவர்களின் தளபதி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) நபி (ஸல்) அவர்களிட்ட கட்டளையை அவர்களுக்கு நினைவூட்டினார். மேலும் ''அல்லாஹ்வின் தூதர் உங்களுக்கு கூறியதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?'' என்று தோழர்களை எச்சரித்தார். என்றாலும் அந்தக் கூட்டத்தின் பெரும்பாலானோர் இந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாமும் மக்களுடன் வெற்றிப் பொருளைச் சேகப்போம்''என்று கூறி அப்பிரிவினரின் நாற்பது அல்லது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து இறங்கி படையுடன் சேர்ந்து பொருளை சேகரித்தார்கள். இதனால் முஸ்லிம் படையினரின் பின்பகுதி பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களும் அவரின் தோழர்களில் ஒன்பது அல்லது அதைவிடக் குறைவானவர்கள் மட்டுமே தங்களுக்கு அனுமதி அல்லது மரணம் வரும் வரை அவ்விடத்திலேயே நிலையாக இருந்துவிட வேண்டுமென்று அங்கேயே தங்கிவிட்டனர்.
காலித் முஸ்லிம்களைச் சுற்றி வளைக்கிறார்
இந்தச் சூழ்நிலையைக் காலித் இப்னு வலீத் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம்களை பின்புறம் தாக்குவதற்காக அம்பெறியும் வீரர்கள் இருந்த மலையை நோக்கி அதிவேகமாகச் சென்றார். அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்களையும் அவரது தோழர்களையும் அதிவிரைவிலேயே கொன்று விட்டு முஸ்லிம்களின் படையின் பின்புறமாகச் சென்று தாக்கினார். காலிதின் குதிரை வீரர்கள் இதை உணர்த்தும் பொருட்டு பெரும் சப்தமிட்டவுடன், தோல்வியுற்று புறமுதுகுக் காட்டி ஓடிக்கொண்டிருந்த இணைவைப்பவர்கள் தங்களுக்கு ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்து விட்டதை அறிந்து முஸ்லிம்களை நோக்கித் திரும்பினர். 'அம்ரா பின்த் அல்கமா' என்ற பெண் மண்ணில் வீசப்பட்டிருந்த இணைவைப்பவர்களின் கொடியை உயர்த்திப் பிடித்தாள். இணைவைப்பவர்கள் தங்களது கொடியைச் சுழற்றியவர்களாக சிலர் சிலரைக் கூவி அழைத்தனர். பிறகு ஒன்று சேர்ந்து முஸ்லிம்கள் மீது பாய்ந்தனர். இதனால் முஸ்லிம்கள் முன்னும் பின்னும் தாக்கப்பட்டனர்.
நபியவர்களின் நிலை
நபி (ஸல்) அவர்கள் ஒன்பது நபர்கள் கொண்ட தங்கள் தோழர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இருந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) முஸ்லிம்களின் வீரத்தையும், அவர்கள் இணைவைப்பவர்களை விரட்டுவதையும் படையின் பின்பகுதியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நபியவர்கள் திடீரென காலிதின் குதிரை வீரர்களால் சூழப்பட்டார்கள். இப்போது நபியவர்களுக்கு முன் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று, உடனடியாக தங்களையும் தங்களுடைய ஒன்பது தோழர்களையும் பாதுகாத்துக் கொண்டு ஒரு ஆபத்தில்லாத இடத்தில் ஒதுங்கி விடுவது. மேலும், எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட தங்களது படையை 'அதற்கு விதிக்கப்பட்ட விதியை அது சந்திக்கட்டும்' என்று விட்டு விடுவது. இரண்டாவது, தனக்கேற்படும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் தனது தோழர்களைத் தன்னை நோக்கி வருமாறு கூவி அழைப்பது. அவ்வாறு ஒன்று சேரும் அந்த தோழர்களைக் கொண்டே எதிரிகளால் சூழப்பட்ட தனது படையைக் காப்பாற்றி உஹுத் மலைக் குன்றுகளின் உச்சிக்கு அழைத்து செல்ல முயற்சி செய்வது.
இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. தனது சப்தத்தை உயர்த்தி தனது தோழர்களை ''அல்லாஹ்வின் அடியார்களே! என் பக்கம் வாருங்கள்'' என்று அழைத்தார்கள். தனது குரல் ஒலியை முஸ்லிம்களை விட எதிரிகள்தான் முதலில் கேட்பார்கள். அவ்வாறு கேட்டால், தான் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகுவோம் என்றிருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தன் தோழர்களைக் கூவி அழைத்தார்கள்.
ஆம்! அவ்வாறே எதிரிகள் நபி (ஸல்) அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்கள் நபியவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக அவர்கள் வந்து சேர்ந்தனர்.
முஸ்லிம்கள் சிதறுதல்
எதிரிகள் முஸ்லிம்களை சுற்றி வளைத்துக் கொண்டபோது முஸ்லிம்களின் ஒரு சாரார் நிலை தடுமாறினர். அதாவது, இவர்கள் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று போர் மைதானத்திலிருந்து ஓடினார்கள். இவர்களில் ஒரு சாரார் ஓடிய ஓட்டத்தில் மதீனாவிற்குள் நுழைந்தனர். மற்றும் சிலர் மலை உச்சிகளுக்கு மேலே ஏறிக்கொண்டனர்.
மற்றும் ஒரு சாரார் போர்க் களத்தில் இணைவைப்பவர்களோடு ஒன்றோடு ஒன்று கலந்து விட்டனர். யார் எந்தப் படையை சேர்ந்தவர் என்று பிரித்து அறிய முடியவில்லை. இதனால் முஸ்லிம்கள் தங்களுக்குள் சிலர் சிலரை தவறுதலாக தாக்க நேர்ந்தது.
இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஒரு சம்பவம்ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ளதாவது:
உஹுத் போர் முடிவுறும் தறுவாயில் இணைவைப்பவர்ளுக்குக் கடும் தோல்வி ஏற்பட்டது. அப்போது இப்லீஸ் முஸ்லிம்களைத் தடுமாற வைப்பதற்காக அவர்களைச் சப்தமிட்டு அழைத்து ''அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் வருபவர்களை பாருங்கள்'' என்று கூறினான். இவனது சப்தத்தைக் கேட்ட முஸ்லிம் படையின் முன்பகுதியில் இருந்தவர்கள் தங்களில் ஒருவர்தான் அழைக்கிறார் தங்களுக்கு பின்பகுதியில் எதிரிகள் வந்துவிட்டதாகக் கருதி விரைவாக திரும்பி தங்களுக்கு பின்பகுதியில் இருந்த முஸ்லிம்களுடன் சண்டையிட்டனர். இவ்வாறு முஸ்லிம்களுக்குள்ளாகவே தாக்குதல் நிகழ்ந்துவிட்டது. அந்நேரத்தில் ஹுதைஃபா (ரழி) அவர்களின் தந்தையை முஸ்லிம்கள் எதிரி என்று நினைத்து அவரைக் கொல்ல பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்த ஹுதைஃபா (ரழி) ''அவர் எனது தந்தை! அவர் எனது தந்தை! அவரை விட்டுவிடுங்கள்'' என்று கத்தினார். ஆனால், அவரது சப்தம் எவர் காதிலும் விழவில்லை. எனவே, அவரை விரட்டிச் சென்று கொன்றே விட்டனர். ஆனால், ஹுதைஃபா (ரழி) தங்களது தோழர்களைக் கோபிப்பதற்குப் பதிலாக ''அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும்'' என்று கூறினார்.
மேற்கூறப்பட்ட சம்பவத்தை அன்னை ஆயிஷாவிடமிருந்து அறிவிக்கும் 'உர்வா' கூறுகிறார்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹுதைஃபா மிக நல்லவராக இருந்தார். அதே நிலையில் அல்லாஹ்விடம் சேர்ந்துவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு அவர்கள் கூறியதற்குக் காரணம், இவரின் தந்தை முஸ்லிமாக இருந்தும் தவறுதலாக படுகொலை செய்யப்பட்டார், அதற்குப் பிணையத் தொகையாக நூறு ஒட்டகங்களைத் தருவதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்வந்தார்கள். ஆனால், ஹுதைஃபா (ரழி) அவர்கள் பெருந்தன்மையாக அதை முஸ்லிம்களுக்கே தானம் செய்து விட்டார்கள். இச்செயல் நபியவர்களின் உள்ளத்தில் ஹுதைஃபா (ரழி) அவர்களைப் பற்றிய சிறந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. ஹுதைஃபா (ரழி) அவர்கள் பிற்காலத்திலும் இதே பெருந்தன்மையுடனே திகழ்ந்தார்கள். இதையே உர்வா மேற்கூறியவாறு சுட்டிக் காட்டினார்கள்.
இந்தக் கூட்டத்தின் அணிகளுக்கிடையில் பெரும் குழப்பமும் தடுமாற்றமும் நிலவியது. அதிகமானவர்கள் என்ன செய்வது, எங்கே செல்வது என்று தெரியாமல் குழப்பத்திற்குள்ளாகினர். இந்நிலையில் இருக்கும்பொழுது ''முஹம்மது கொல்லப்பட்டு விட்டார்'' என்று ஒருவன் ஓலமிடுவதைக் கேட்ட அவர்கள், மிச்சமீதமிருந்த தன்னம்பிக்கையையும் இழந்தார்கள் அவர்களது மனபலமும் குன்றியது சிலர் போரை நிறுத்திக்கொண்டு சோர்வுற்று ஆயுதங்களைக் கீழே போட்டனர். மற்றும் சிலர் நயவஞ்கர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் சேர்ந்து கொள்ளலாம். அவர் நமக்காக அபூ ஸுஃப்யானிடம் பாதுகாப்பு வாங்கித் தருவார் என்று எண்ணினர். தங்களது கையிலுள்ள ஆயுதங்களைப் போட்டுவிட்டு நிராயுதபாணியாய் இருந்த இத்தகைய கூட்டத்தை அனஸ் இப்னு நள்ர் (ரழி) பார்த்தபோது, அவர்களிடம் ''நீங்கள் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே கொல்லப்பட்டு விட்டார்கள்'' என பதிலளித்தனர். அதற்கு அனஸ் (ரழி) ''நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வாழ்ந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நபியவர்கள் எக்காரியத்திற்காக உயிர் நீத்தார்களோ அதற்காக நீங்களும் உங்கள் உயிரைத் தியாகம் செய்யுங்கள்!'' என்று கூறியபின் அல்லாஹ்விடம் பின்வருமாறு முறையிட்டார்கள்:
''அல்லாஹ்வே! (முஸ்லிம்களாகிய) இவர்கள் செய்த காரியத்திலிருந்து உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இணைவைப்பவர்களாகிய அவர்கள் செய்த காரியத்திலிருந்து விலகி உன்னளவில் மீளுகிறேன்.'' இவ்வாறு முறையிட்டப் பின் எதிரிகளை நோக்கி முன்னேறினார். அப்போது அவரை ஸஅது இப்னு முஆத் (ரழி) சந்தித்து ''அபூ உமரே! எங்கே செல்கிறீர்?'' என வினவினார். அதற்கு அனஸ் (ரழி) ''ஹா... சொர்க்கத்தின் நறுமணம் எவ்வளவு அருமையானது. உஹுதுக்கருகில் அதை நான் நுகர்கிறேன்'' என்று கூறி எதிரிகளிடம் போர் செய்து உயிர் நீத்தார். இறுதியில் அவரை எவராலும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உடல் சிதைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்ததற்குப் பின் அவரது நுனிவிரலைப் பார்த்துதான் அவரது சகோதரி அவரை அடையாளம் காட்டினார். அப்போது அவரது உடலில் ஈட்டி, அம்பு, வாள் ஆகியவற்றால் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)
ஸாபித் இப்னு தஹ்தாஹ் என்ற நபித்தோழர் தனது கூட்டத்தை அழைத்து ''அன்சாரி சமூகமே! முஹம்மது (ஸல்) திட்டமாக கொல்லப்பட்டு விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் உயிருடன் இருக்கின்றான் அவன் மரணிக்க மாட்டான் உங்களது மார்க்கத்திற்காக நீங்கள் போர் புரியுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை வழங்குவான். உங்களுக்கு உதவி செய்வான்'' என்று கூற அன்சாரிகளின் ஒரு கூட்டம் அவருடன் புறப்பட்டார்கள். அவர்கள் காலிதின் குதிரைப் படை வீரர்களைத் தாக்கினர். ஆனால், காலித் இவரையும் இவரது தோழர்களையும் கொன்றுவிட்டார்.(அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)
ஒரு முஹாஜிர், அன்சாரி ஒருவருக்கு அருகில் சென்றார். அந்த அன்சாரி வெட்டப்பட்டு இரத்தத்தில் உழன்று கொண்டிருந்தார். அப்போது அந்த முஹாஜிர், அன்சாரியிடம் ''முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டு விட்டார்கள் என்பது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். அதற்கு அந்த அன்சாரி முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டுவிட்டாலும் அவர்கள் மார்க்கத்தை எடுத்து வைத்து விட்டார்கள். நீங்கள் உங்களது மார்க்கத்திற்காகப் போரிடுங்கள்'' என்று கூறினார். (ஜாதுல் மஆது)
இதுபோன்ற வீர உரைகளாலும் உணர்ச்சிமிக்க வார்த்தைகளாலும் முஸ்லிம்களுக்கு ஆன்மீக பலம் திரும்பியது. நிலை தடுமாறி நின்ற அவர்கள் சகஜநிலைக்குத் திரும்பினர். பணிவது அல்லது அப்துல்லாஹ் இப்னு உபையுடன் சேர்ந்துகொள்வது என்ற குழம்பிய சிந்தனையிலிருந்து விடுபட்டு தங்களது ஆயுதங்களைக் கையிலெடுத்துக் கொண்டு எதிரிகளுடன் சண்டையிட ஆரம்பித்தார்கள். கூட்டத்தைப் பிளந்து கொண்டு நபியவர்களை நோக்கி முன்னேறினர். நபியவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெறும் பொய்யென அவர்களுக்குத் தெரிந்து விட்டது. இதனால் அவர்களின் பலம் மேலும் கூடியது. எனவே, எதிரிகளின் கூட்டத்துடன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டே முன்னேறி நபியவர்களுக்கருகில் ஒன்று கூடினர்.
இதே நேரத்தில் மூன்றாவது ஒரு பிரிவினரும் இருந்தனர். அவர்களது கவலை நபியவர்களைப் பற்றியே இருந்தது. இவர்களில் அபூபக்ர், உமர், அலீ (ரழி) முதலிடம் வகித்தனர். நபியவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தவுடன் முன்னேற்பாடாக நபியவர்களைச் சுற்றி இவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
நபியவர்களைச் சுற்றி கடும் சண்டை
முஸ்லிம்களில் இதற்கு முன் கூறப்பட்ட பிரிவினர்கள் எதிரிகளால் சூழப்பட்டு கடுமையான தாக்குதலைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களையும் குறைஷிகள் தாக்கினர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது நபர்கள் மட்டுமே இருந்தனர். இப்போதுதான் நாம் முன்னால் கண்டவாறு நபியவர்கள் ''முஸ்லிம்களே என்னிடம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர்'' என்று அழைத்தார்கள். அப்போது நபியவர்களின் சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த மற்ற எதிரிகளும் நபியவர்கள் இருந்த திசை நோக்கிப் பாய்ந்தனர். அதனால் நபியவர்களுடன் இருந்த ஒன்பது நபித்தோழர்களுக்கும் தாக்க வந்த எதிரிகளுக்குமிடையில் கடுமையான சண்டை நடந்தது. அச்சண்டையில் அந்தத் தோழர்கள் நபியவர்கள் மீது வைத்திருந்த அன்பும் அவர்களுக்காக தங்களையே அர்ப்பணிக்கும் தியாக உணர்வும் நன்கு வெளிப்பட்டது.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) இது தொடர்பாக அறிவிக்கும் ஒரு செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் ஏழு அன்சாரி தோழர்களுடனும் இரண்டு குறைஷித் தோழர்களுடனும் தனித்து விட்டார்கள். இணைவைப்பவர்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டபோது ''இவர்களை நம்மிடமிருந்து யார் விரட்டுவாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு. (அல்லது) அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்'' என்று நபியவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அன்சாரி ஒருவர் அந்த எதிரிகளை நோக்கிப் பாய்ந்து சண்டையிட்டு வீரமரணம் எய்தினார். மீண்டும் இணைவைப்பவர்கள் நபியவர்களைத் தாக்க சூழ்ந்தபோது முன்பு கூறியது போலவே கூறினார்கள். மீண்டும் அன்சாரிகளில் ஒருவர் முன்சென்று போரிட்டு வீரமரணம் எய்தினார். இவ்வாறே ஏழு அன்சாரித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நபியவர்கள் தனது இரு குறைஷித் தோழர்களிடம் ''நமது தோழர்களுக்கு நாம் நீதம் செலுத்தவில்லை'' என்று கூறினார்கள். (முஹாஜிர்கள் அன்றி அன்சாரிகள் கொல்லப்பட்டதைப் பற்றி நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்.) (ஸஹீஹ் முஸ்லிம்)
நபியவர்களின் வாழ்க்கையில் மிக இக்கட்டான நேரம்
மேற்கூறப்பட்ட ஏழு அன்சாரித் தோழர்களில் இறுதியாக எதிரிகளிடம் சண்டையிட்டவர் உமாரா இப்னு யஜீத் (ரழி) என்பவராவார். இவர் சண்டையில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அப்போது இரு குறைஷித் தோழர்கள் (தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் மற்றும் ஸஅது இப்னு அபீ வக்காஸ்) மட்டும்தான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தனர். அல்லாஹ்வின் அருளால் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சில முஸ்லிம்கள் உமாராவை எதிரிகளிடமிருந்துக் காப்பற்றினர். கீழே விழுந்த அன்சாரித் தோழர் நபியவர்களின் பாதத்தை தன் தலைக்குத் தலையனையாக்கிக் கொண்டார். சற்று நேரத்தில் அவர் உயிர் பிந்த போது அவரது கன்னம் நபியவர்களின் பாதத்தின் மீது இருந்தது. (இப்னு ஹிஷாம்)
மேற்கூறப்பட்ட அந்த தருணம் நபியவர்களின் வாழ்க்கையிலேயே அவர்களுக்கு ஏற்பட்ட மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆனால், எதிரிகளைப் பொறுத்தவரையில் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்கு அவர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. அதை பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் தாமதிக்கவில்லை. உடனடியாக நபியவர்களை நோக்கி தங்களது தாக்குதலைத் தொடுத்தனர். நபியவர்களின் கதையை முடிக்க வேண்டும் என்று வெறி கொண்டனர். உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து விட்டார்கள். நபியவர்களின் வலது கீழ் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது. நபியவர்களை நோக்கி ஓடிவந்த அப்துல்லாஹ் இப்னு ஷிஹாப் ஜுஹ் என்பவன் நபியவர்களின் முகத்தைக் காயப்படுத்தினான். அப்துல்லாஹ் இப்னு கமிஆ நபியவர்களின் புஜத்தின் மீது வாளால் ஓங்கி வெட்டினான். நபியவர்கள் இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்ததால் அந்த வெட்டு நபி (ஸல்) அவர்களின் உடலில் படவில்லை. ஆனால், தாக்கிய வேகத்தின் வலி ஒரு மாதம் வரை நீடித்திருந்தது. பின்பு நபியவர்களின் முகத்தை நோக்கி வாளை வீசினான். அதனால், நபியவர்கள் அணிந்திருந்த இரும்பு கவசத்தின் இரண்டு ஆணிகள் முகத்தில் குத்தின. அவன் ''இதை வாங்கிக்கொள். நான்தான் இப்னு கமிஆ'' என்று கூறினான். அப்போது நபியவர்கள் தனது முகத்தில் இருந்து இரத்தத்தை துடைத்தவர்களாக 'அக்மஅகல்லாஹு' (அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக) என்று கூறினார்கள். (ஃபத்ஹுல் பாரி)
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். இப்போருக்குப் பின் ஒரு நாள் தனது ஆட்டு மந்தையைத் தேடி இப்னு கமிஆ புறப்பட்டான். அவனது ஆட்டு மந்தை மலை உச்சியின் மீது இருப்பது தெரியவே அவன் அங்கு சென்ற போது, கொம்புள்ள ஒரு முரட்டு ஆடு அவனை இடைவிடாமல் தாக்கி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளியது. (ஃபத்ஹுல் பாரி)
உஹுத் போரின் இந்த இக்கட்டான தருணத்தில் நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுடைய தூதரின் முகத்தைக் காயப்படுத்திய கூட்டத்தினர் மீது அல்லாஹ்வின் கோபம் கடினமாகட்டும்'' என்று பிரார்த்தித்தார்கள். சிறிது நேரம் கழித்து ''அல்லாஹ்வே! எனது கூட்டத்தினரை மன்னித்து விடு. நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்'' என்று வேண்டினார்கள். (ஃபத்ஹுல் பாரி, முஃஜமுத் தப்ரானி)
காஜி இயாழ் அவர்களின் 'ஷிஃபா' என்ற நூலில் இவ்வாறு வந்துள்ளது: ''அல்லாஹ்வே! எனது கூட்டத்தினரை நேர்வழியில் நடத்து! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்கள்'' என பிரார்தித்ததாக வந்துள்ளது.
''உஹுத் போரில் நபி (ஸல்) அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டது. நபியவர்களின் தலையிலும் பலமான காயம் ஏற்பட்டது. அப்போது நபியவர்கள் தன் மீது வழிந்தோடிய இரத்தத்தை அகற்றியவர்களாக ''அல்லாஹ்வின் தூதராகிய நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க, அவர்களோ எனது முகத்தையும் முன் பல்லையும் உடைத்து விட எவ்வாறு அவர்கள் வெற்றிபெற முடியும்?'' என்று கூறினார்கள். அல்லாஹ் இது தொடர்பாகவே இந்த வசனத்தை இறக்கினான்.
(நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்து விடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம். (அல்குர்ஆன் 3:128) (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கொன்று தீர்த்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இருந்தனர். ஆனால், அவர்களை எதிர்த்து ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) ஆகிய இருவரும் மிக வீரத்துடனும் துணிவுடனும் போட்டனர். எனவே, எதிரிகள் தங்களது நோக்கத்தை அடைய முடியவில்லை.. மேலும், இவ்விரு தோழர்களும் அம்பெய்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததால் நபியவர்களைத் தாக்க வந்த எதிரிகளின் கூட்டத்தை நபியவர்களுக்கு அருகே நெருங்கவிடாமல் தடுத்தனர்.
ஸஅது இப்னு அபீ வக்காஸுக்கு நபி (ஸல்) தங்களின் அம்புக் கூட்டைக் கொடுத்து ''ஸஅதே! நீ அம்பெறிவாயாக! எனது தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணமாகட்டும்!'' என்று கூறினார்கள். நபியவர்கள் ஸஅதை தவிர வேறு எவருக்கும் இவ்வார்த்தையைக் கூறியதில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களை ஸஅது (ரழி) பாதுகாத்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். (ஸஹீஹுல் புகாரி)
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வின் வீரத்தைப் பற்றி ஜாபிர் (ரழி) அறிவிப்பதை இமாம் நஸயீ (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். அஃதாவது: உஹுத் போரில் எதிரிகள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். நபியவர்களுடன் சில அன்சாரி தோழர்களும் இருந்தனர். அப்போது நபியவர்கள் ''யார் இந்த எதிரிகளை எதிர்த்துப் போரிடுவார்?'' என்று கேட்டார்கள். தல்ஹா (ரழி) ''நான்'' என்று முந்திக் கொண்டு பதில் கூறினார்கள். ஆனால், உடன் இருந்த அன்சாரிகளும் அதற்குத் தயாராகவே நபி (ஸல்) அன்சாரிகளுக்கு அனுமதியளித்தார்கள் ஒவ்வொரு அன்சாரியாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் எய்தினார்கள். அதற்குப் பின் தல்ஹா (ரழி) எதிரிகளுடன் சண்டையிட்டார்கள். அவர்களது சண்டை 11 நபர்களின் சண்டைக்குச் சமமாக இருந்தது. அவரது கையில் பல வெட்டுகள் விழுந்தன. சில விரல்கள் துண்டிக்கப்பட்டன. அப்போது 'ஹஸ்'!! (வேதனையில் கூறும் வார்த்தை) என்றார்கள். அதற்கு நபியவர்கள் ''நீ 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்லியிருந்தால் மக்கள் பார்க்கும் அளவுக்கு வானவர்கள் உன்னை உயர்த்திருப்பார்கள்'' என்றார்கள். இறுதியாக அல்லாஹ் எதிரிகளை விட்டும் நபியவர்களை பாதுகாத்தான். (ஃபத்ஹுல் பாரி)
''39 அல்லது 35 காயங்கள் தல்ஹா (ரழி) அவர்களுக்கு இப்போரில் ஏற்பட்டன. அவர்களது ஆட்காட்டி விரலும் அதை அடுத்துள்ள பெரிய விரலும் வெட்டப்பட்டன.'' (ஃபத்ஹுல் பாரி)
கைஸ் இப்னு அபூ ஹாஸிம் கூறியதாக ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது: ''உஹுத் போர்க் களத்தில் நபி (ஸல்) அவர்களை நோக்கி சீறி வந்த அம்புகளை எந்தக் கையால் தல்ஹா (ரழி) தடுத்துக் காத்தாரோ அந்தக் கை உஹுத் போருக்குப் பின் செயலிழந்து போனதை நான் பார்த்தேன்.''
நபி (ஸல்) அவர்கள் தல்ஹாவைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: ''யார் பூமிக்கு மேல் நடமாடும் ஷஹீதை (உயிர் நீத்த தியாகியை) பார்க்க விரும்புகிறார்களோ அவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வைப் பார்க்கட்டும்.'' (ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)
ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: உஹுதுப் போரைப் பற்றி அபூபக்ருக்கு முன் பேசப்பட்டால் அன்றைய தினம் முழுவதும் (அதாவது அன்றைய தினத்தில் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்த நன்மையெல்லாம்) தல்ஹாவையே சாரும் என்று கூறுவார்கள். (ஃபத்ஹுல் பாரி)
மேலும், தல்ஹாவைப் பற்றி அபூபக்ர் (ரழி) இவ்வாறு ஒரு கவிதை கூறுவார்கள்:
''தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வே!!
உனக்காக பல சொர்க்கங்கள் உண்டு.
இன்னும் பல கண்ணழகிகளும் உண்டு.''
இந்த சிரமமான நெருக்கடியான நிலையில், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குத் தனது மறைமுகமான உதவியை இறக்கினான்.
இதைப் பற்றி ஸஅது (ரழி) அறிவிக்கும் ஒரு செய்தி ஸஹீஹுல் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஸஅது (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் நான் நபியவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைச் சுற்றி இருவர் கடுமையாக சண்டை செய்து கொண்டிருந்தனர் அவர்கள் வெண்மையான ஆடை அணிந்திருந்தனர் இந்நாளுக்கு முன்போ, பின்போ அவர்களை நான் பார்த்ததில்லை அவர்கள் ஜிப்ரீல், மீக்காயில் ஆவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபியவர்கள் அருகே தோழர்கள் திரளுதல்
மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் கண் சிமிட்டும் சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமான பல தோழர்கள் போரில் முதல் அணியில் நின்று எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென போரின் நிலை இவ்வாறு மாறும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை அல்லது நபியவர்களின் சப்தத்தை அவர்கள் உடனடியாகக் கேட்டிருந்தால் நபியவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரைந்துச் சென்று நபியவர்களைப் பாதுகாத்திருப்பார்கள். ஆனால், இவர்கள் நபியவர்களிடம் வருதற்கு முன்னதாகவே நபியவர்களுக்கு அத்தனை காயங்களும் ஏற்பட்டு விட்டன் ஆறு அன்சாரிகள் கொல்லப்பட்டு விட்டனர். ஏழாவதாக ஓர் அன்சாரி தோழர் காயமடைந்து, குற்றுயிராக பூமியில் விழுந்து கிடந்தார் அவரும் சிறிது நேரத்தில் மரணித்தார். ஸஅது, தல்ஹா (ரழி) ஆகிய இருவர் மட்டும் எதிரிகளை நபி (ஸல்) அவர்களை நெருங்கவிடமால் எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
படையின் முன்அணியில் இருந்து சண்டை செய்து கொண்டிருந்த சிறப்புமிக்க நபித்தோழர்கள் நிலைமையறிந்து நபியவர்களிடம் விரைந்து வந்து, அவர்களைச் சுற்றி வலையாகப் பின்னி நின்று, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கடும் போர் புரிந்தனர். இவ்வாறு திரும்பிய தோழர்களில் முதலாமவர் நபியவர்களின் குகைத் தோழரான அபூபக்ர் (ரழி) ஆவார்கள்.
இதோ... அந்த தோழரின் அருமை மகளார் நமது அன்னை ஆயிஷா (ரழி) தனது தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரழி) கூறியதாக அறிவிக்கிறார்கள்:
''உஹுத் போரன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டும் பல திசைகளில் சிதறிவிட்டார்கள். பின்பு நான்தான் முதலில் நபியவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்களுக்கு முன் ஒருவர் அவர்களைப் பாதுகாத்தவராக எதிரிகளிடம் சண்டை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் என் மனதிற்குள் ''நீ தல்ஹாதானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். நீ தல்ஹாதானே! எனது தந்தையும் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும். எனக்குத்தான் வாய்ப்பு தவறிவிட்டது. எனது இனத்தை சேர்ந்த உனக்காவது நபியவர்களைப் பாதுகாக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறிக்கொண்டேன். அதற்குள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரழி) பறவையைப் போன்று விரைந்து வந்து என்னை அடைந்தார். நாங்கள் இருவரும் நபியவர்களை நோக்கி விரைந்தோம். அங்கு நாங்கள் சென்றடையும் போது தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு முன் மயங்கி விழுகிறார்.
நபி (ஸல்) அவர்கள் ''உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள்! அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்'' என்று கூறினார்கள். நபியவர்களின் முகம் தாக்கப்பட்டிருந்ததால் அவர்களது முகக்கவசத்தின் இரண்டு ஆணிகள் கண்ணுக்குக் கீழ் பகுதியில் புகுந்து விட்டன. நான் அதை எடுக்க விரும்பினேன். அப்போது அபூ உபைதா (ரழி) ''அபூபக்ரே! அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். அதை நான்தான் செய்வேன்'' என்று கூறினார். பின்பு அபூ உபைதா (ரழி) நபியவர்களுக்கு வலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வாயால் அதை மிக மென்மையாக எடுக்க முயற்சித்தார். பிறகு, அதை நபியவர்களின் முகத்திலிருந்து பல்லால் கடித்து எடுத்தார். அதனால் அவரது முன் பல் விழுந்து விட்டது. இரண்டாவது ஆணியை அகற்ற நான் விரும்பினேன். அப்போதும் அபூ உபைதா (ரழி) ''அல்லாஹ்வுக்காக கேட்கிறேன். நான்தான் அதையும் எடுப்பேன்'' என்று கூறி, முன்பு செய்தது போன்றே மிக மெதுவாக எடுத்தபோது அபூ உபைதாவின் இன்னொரு பல்லும் விழுந்துவிட்டது. மீண்டும் நபியவர்கள் ''உங்களது சகோதரரைக் காப்பாற்றுங்கள். அவர் தனக்கு சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொண்டார்'' என்று கூறினார்கள். நாங்கள் தல்ஹா (ரழி) அவர்களைத் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தோம். அவருக்கு பத்து வாள் வெட்டுகள் விழுந்திருந்தன. சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் மீண்டும் தல்ஹா (ரழி) நபியவர்களிடம் வந்துவிட்டார்கள்.''(ஜாதுல் மஆது, இப்னு ஹிப்பான்)
இந்த சிரமமான வினாடிகளில் முஸ்லிம் மாவீரர்களின் ஒரு கூட்டம் நபி (ஸல்) அவர்களைச் சுற்றி குழுமியது. அவர்களில் அபூ துஜானா, முஸ்அப் இப்னு உமைர், அலீ இப்னு அபூதாலிப், ஸஹ்ல் இப்னு ஹுனைஃப், அபூ ஸயீத் குத்ரியின் தகப்பனாரான மாலிக் இப்னு சினான், உம்மு அமாரா பின்த் கஅப் அல் மாஜினியா என்ற பெண்மணி, கதாதா இப்னு நுஃமான், உமர் இப்னுல் கத்தாப், ஹாத்திப் இப்னு அபூபல்தஆ, அபூ தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் அதில் அடங்குவர். முஸ்னது அபீ யஃலா)
எதிரிகளின் தாக்குதல் வேகமாகுதல்
நபி (ஸல்) அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நேரமும் அதிகரித்தவாறே இருந்தது. அவ்வாறே படையின் மற்ற பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீதும் எதிரிகளின் தாக்குதல் கடுமையானது. 'அபூ ஆமிர்' என்ற எதிரி, போர் மைதானத்தின் பல இடங்களில் தோண்டி வைத்திருந்த பள்ளங்கள் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் விழுந்து விட்டார்கள். அதில் அவர்களது மூட்டுக்கால் காயமடைந்தது. பிறகு அலீ (ரழி) அவர்களின் உதவியால் நபியவர்கள் பள்ளத்திலிருந்து மேலே எழுந்தார்கள்.
இப்போரில் கலந்த முஹாஜிர்களில் ஒருவர் போரின் நிலைமை குறித்து விவரிக்கிறார்: ''நான் உஹுத் போரில் கலந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களை நோக்கி அம்புகள் ஒவ்வொரு திசையிலிருந்தும் எறியப்பட்டன. ஆனால், அவை நபியவர்களைத் தாக்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்தான். எதிரிகளில் ஒருவனான இப்னு ஷிஹாப் ஜுஹ் என்பவன் ''எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள். அவர் உயிருடன் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது'' என்று கத்திக் கொண்டிருந்தான். அப்போது நபியவர்கள் அவனுக்கு அருகில்தான் இருந்தார்கள். எனினும், அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்திற்குப் பின் நபியவர்கள் வேறு பக்கம் சென்றுவிட்ட போது, ''உனக்கு அருகில்தானே முஹம்மது இருந்தார். அவரை நீ கொன்று இருக்கலாமே'' என்று எதிரிப் படையின் தளபதிகளில் ஒருவரான ஸஃப்வான் இப்னு ஷிஹாப் இடம் கூறினார். அதற்கு ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரைப் பார்க்கவில்லையே! அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான் சொல்கிறேன். அவர் நம்மிடமிருந்து காப்பாற்றப்பட்டு விட்டார். நாங்கள் நான்கு நபர்கள் அவரைக் கொல்ல வேண்டும் என்ற உறுதியுடன் அவரைத் தேடி அலைந்தோம். ஆனால், எங்களால் அவரருகில் செல்ல முடியவில்லை'' என்று இப்னு ஷிஹாப் கூறினான். (ஜாதுல் மஆது)
செயற்கரிய வீரதீரச் செயல்கள்
முஸ்லிம்கள் இந்நாளில் வரலாறு காணாத அற்புதமான வீரதீரச் செயல்களையும் தியாகங்களையும் புரிந்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:
நபி (ஸல்) அவர்களுக்கு முன் அபூ தல்ஹா (ரழி) தன்னையே தடுப்பாக ஆக்கி நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபியவர்களைப் பாதுகாத்தார்கள்.
இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போர் அன்று அபூ தல்ஹா (ரழி) நபியவர்களுக்கு முன்பாக நின்று தனது கேடயத்தால் நபியவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருந்தார்கள். அபூ தல்ஹா (ரழி) மிக வேகமாக அம்பெறியும் திறமை பெற்றவர்கள். அன்றைய தினத்தில் மட்டும் அவரது கரத்தில் இரண்டு அல்லது மூன்று வில்கள் உடைந்தன. ஒருவர் அபூ தல்ஹாவுக்கு அருகில் அம்புக்கூட்டுடன் சென்ற போது ''அதை அபூ தல்ஹாவுக்குக் கொடு!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும். நபியவர்கள் எதிரிகளின் நிலையை அறிந்து கொள்ள அவ்வப்போது தங்களது தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ தல்ஹா (ரழி) ''எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் எட்டிப் பார்க்காதீர்கள் எதிரிகளின் அம்பு உங்களைத் தாக்கிவிடலாம் உங்களது நெஞ்சுக்கு முன் எனது நெஞ்சு இருக்கட்டும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அபூதல்ஹா (ரழி) ஒரு கேடயத்தால் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார். அவர் திறமையாக அம்பெறிபவராக இருந்தார். அவர் அம்பெறியும் போது அந்த அம்பு எங்கே விழுகிறது என்று நபியவர்கள் தலையை உயர்த்திப் பார்ப்பார்கள்.(ஸஹீஹுல் புகாரி)
அபூ துஜானா பலமிக்க இரும்பு கவச ஆடை அணிந்திருந்தார். நபி (ஸல்) அவர்களை நோக்கி வரும் அம்புகளைத் தன் முதுகை கேடயமாக்கி தடுத்துக் கொள்வார்.
நபி (ஸல்) அவர்களின் பல்லை உடைத்து விட்டு குதிரைமேல் வேகமாகச் சென்றுக் கொண்டிருந்தான் உத்பா இப்னு அபீ வக்காஸ். இவனை ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ (ரழி) பின்தொடர்ந்துச் சென்று அவனது தலையை வெட்டி வீசினார். பிறகு அவனது குதிரையையும் வாளையும் எடுத்து வந்தார். இவன் நபியவர்களின் பாதுகாவலரான ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களின் சகோதரனாவான். இவனைத் தீர்த்து கட்ட ஸஅது (ரழி) ஆர்வமாக இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஹாத்திப் (ரழி) அந்த வாய்ப்பைத் தட்டிச் சென்றார்.
அம்பெறிவதில் திறமை பெற்ற வீரர்களில் ஒருவரான ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) மரணம் வரை போர் புரிவேன் என்று நபி (ஸல்) அவர்களிடம் இப்போருக்கிடையில் வாக்குப் பிரமானம் செய்தார். இவர் இப்போரில் எதிரிகளை விரட்டி அடிப்பதில் பெரும் பங்காற்றினார்.
அன்றைய தினம் நபி (ஸல்) அவர்களும் அம்பெறிந்தார்கள். இது குறித்து கதாதா இப்னு நுஃமான் (ரழி) அறிவிக்கின்றார்கள்: வில்லின் நரம்பு அறுபடும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்பெறிந்தார்கள். அறுந்துவிட்ட அந்த வில்லை கதாதா இப்னு நுஃமான் (ரழி) தன்னிடம் வைத்திருந்தார்கள்.
கதாதாவின் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் அது பிதுங்கிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அதை தனது கையால் அவரது கண்குழியில் வைத்து பிரார்த்தித்தார்கள். அது மிக அழகியதாகவும் கூர்ந்த பார்வை உடையதாகவும் அமைந்து விட்டது.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மிக மும்முரமாகப் போர் செய்தார். அவரது வாயில் பலத்த காயம் ஏற்பட்டு பல் உடைந்தது. இருபதுக்கும் அதிகமான காயங்கள் அவருக்கு ஏற்பட்டன. அவற்றில் சில காலில் ஏற்பட்டதால் அவரால் சில காலம் வரை நடக்க முடியவில்லை.
முஸ்லிம்களிடம் சண்டை செய்து கொண்டிருந்த இப்னு கமிஆவிடம் நபித்தோழியரான உம்மு அமாரா (ரழி) மோதினார். அவன் இவரது புஜத்தில் வெட்டியதால் இவருக்கு பெரும் காயம் ஏற்பட்டது. இவரும் அவனைப் பலமுறை வாளால் தாக்கினார்கள். ஆனால், அவன் மீது இரண்டு கவச ஆடைகள் இருந்ததால் அவன் தப்பித்துக் கொண்டான். இப்போரில் உம்மு அமாராவுக்கு 12 பலத்த காயங்கள் ஏற்பட்டன.
முஸ்அப் இப்னு உமைரும் போரில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி எதிரிகளுடன் சளைக்காமல் சண்டையிட்டார். தனது கையில் கொடியை ஏந்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களைத் தாக்கச் சென்று கொண்டிருந்த இப்னு கமிஆ மற்றும் அவனது நண்பர்களை எதிர்த்து சண்டையிட்டார். அவர்கள் முஸ்அபின் வலக்கரத்தை வெட்டிவிடவே கொடியை தனது இடக்கரத்தால் பற்றிக் கொண்டார். பின்பு, இடது கையையும் வெட்டிவிடவே மண்டியிட்டு தனது கழுத்தாலும் நெஞ்சாலும் அதை அணைத்துக் கொண்டார். முஸ்அப் தோற்றத்தில் நபியவர்களைப் போன்று இருந்தார். எனவே, எதிரி இப்னு கமிஆ முஸ்அபைக் கொன்றுவிட்டு, தான் நபியவர்களைக் கொன்றதாக எண்ணி, இணைவைப்பவர்களிடம் சென்று ''நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார்'' என்று கூச்சலிட்டான். (இப்னு ஹிஷாம்)
நபியவர்கள் கொல்லப்பட்ட வதந்தி - அதன் விளைவு!
இவன் கூச்சலிட்ட சில நிமிடங்களிலேயே நபி (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவியது. இந்நேரத்தில் எதிரிகளால் சூழப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்களின் உறுதி குலைந்தது. அவர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது. எனினும், இந்த வதந்தியால் எதிரிகளின் தாக்குதல் சற்றே தணிந்தது. அதற்குக் காரணம், நபியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற தங்களது நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டோம் என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, தாக்குதலைக் குறைத்துக் கொண்டு போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்களைச் சிதைப்பதில் ஈடுபட்டனர்.
நபியவர்கள் போரை தொடர்கிறார்கள்
முஸ்அப் கொல்லப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கொடியை அலீ இப்னு அபூதாலிபிடம் வழங்கினார்கள். நபியவர்களிடமிருந்து கொடியை வாங்கிய அலீ (ரழி) கடுமையாக எதிரிகளை தாக்கி கதிகலங்க வைத்தார்கள். அங்கிருந்த மற்ற நபித்தோழர்களும் எதிரிகளை எதிர்த்து சண்டையிடுவதிலும், முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் தீவிரமாயினர்.
எதிரிகளால் சூழப்பட்டிருந்த முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக தன்னுடன் இருந்த சிறு படையை அழைத்துக் கொண்டு எதிரிகளின் படையை நபி (ஸல்) அவர்கள் பிளந்தார்கள். அப்போது நபியவர்களை முஸ்லிம்களில் கஅப் இப்னு மாலிக் (ரழி) முதன் முதலாக பார்த்து விட்டு மிக உயர்ந்த சப்தத்தில் ''முஸ்லிம்களே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். இதோ... அல்லாஹ்வின் தூதர் வந்து விட்டார்கள்'' என்று உரக்கக் கூறினார். தன்னை எதிரிகள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக கஅபிடம் அமைதியாக இரு! என்று நபியவர்கள் சைகை செய்தார்கள். எனினும், முஸ்லிம்களின் காதுகளுக்குக் கஅபின் குரல் எட்டிவிடவே நபியவர்களை நோக்கி முப்பது தோழர்கள் ஒன்று கூடினர்.
இவ்வாறு தோழர்களின் பெரும் கூட்டம் ஒன்று சேர்ந்த பின், தாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளை விளக்கியவர்களாக தங்களது படையை மலை கணவாய்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சென்றார்கள். நபியவர்களின் இத்திட்டத்தைத் தடுக்க எதிரிகள் பல வழிகளிலும் போராடினர். இருந்தும் இஸ்லாமியச் சிங்கங்களின் வீரத்திற்கு முன் அவர்கள் அனைவரும் தோல்வியையே கண்டனர்.
இணைவைப்பவர்களின் குதிரை வீரர்களில் ஒருவனான உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா என்பவன் நபி (ஸல்) அவர்களை நோக்கி ''இவர் தப்பித்தால் நான் தப்பிக்க முடியாது'' என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான். நபியவர்கள் அவனை எதிர்ப்பதற்குத் ஆயத்தமானார்கள். ஆனால் வழியிலிருந்த பள்ளத்தில் அவனது குதிரை தடுமாறி விழுந்தது. ஹாரிஸ் இப்னு சிம்மா (ரழி) அவனை எதிர்கொண்டு அவனது காலில் வெட்டினார்கள். அதனால் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. பின்பு அவன் மீது பாய்ந்து அவனது கதையை முடித்துவிட்டு, அவனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் வந்தார்கள்.
இக்காட்சியைப் பார்த்த மக்காவின் குதிரை வீரர்களில் மற்றொருவனான அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் என்பவன் ஹாரிஸ் இப்னு சிம்மாவிடம் சண்டையிட்டான். அவரது புஜத்தை வெட்டிக் காயப்படுத்தினான். அவரை அவன் கொல்வதற்கு முன் முஸ்லிம்கள் அவரைப் பாதுகாத்துக் கொண்டார்கள். ஹாரிஸ் தாக்கப்பட்டதை பார்த்து கொதித்தெழுந்த அஞ்சா நெஞ்சன், வீராதி வீரர் அபூ துஜானா (ரழி) எதிரி அப்துல்லாஹ் இப்னு ஜாபிரின் தலையைக் கண் சிமிட்டும் நொடியில் வெட்டி வீசினார்.
போர் இவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்த வேளையில் அல்லாஹுத் தஆலா முஸ்லிம்களுக்கு நிம்மதியளிக்கும் பொருட்டு சிறு தூக்கத்தை இறக்கினான். இதைப் பற்றி திருமறையிலும் கூறப்பட்டுள்ளது. இதோ... அபூதல்ஹா (ரழி) அது பற்றி கூறுகிறார்:
''உஹுத் போரில் சிறு தூக்கம் பீடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எனது கையிலிருந்து பலமுறை வாள் வீழ்ந்தது நான் அதை எடுக்கிறேன் அது கீழே விழுகிறது நான் அதை எடுக்கிறேன் அது கீழே விழுகிறது.'' (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு அல்லாஹ் பெரிய துன்பமான சமயத்திலும் முஸ்லிம்களுக்கு மன நிம்மதியை வழங்கினான்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு வழியாக எதிரிகளுடன் போராடி தன்னுடன் இருந்த முஸ்லிம்களை மலைக் கணவாய்க்கு அருகில் திட்டமிட்டவாறு ஒதுக்கிக் கொண்டார்கள். மேலும், மற்ற இஸ்லாமியப் படைகளும் இந்தப் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் போர்த் திறமைக்கு முன் காலிதின் போர்த் திறமை தோற்றது.
சண்டாளன் 'உபை' கொல்லப்படுதல்
நபி (ஸல்) அவர்கள் மலைக் கணவாயில் தங்களையும் தோழர்களையும் பாதுகாத்துக் கொண்ட போது உபை இப்னு கலஃப் ''முஹம்மது எங்கே! அவர் தப்பித்துக் கொண்டால் நான் தப்பிக்க முடியாது'' என்று அலறியவனாக நபியவர்களைத் தேடி அலைந்தான். அப்பொழுது அவன் நபியவர்களைப் பார்த்துவிட கொலை வெறியுடன் அவர்களை நோக்கி விரைந்தான். தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் சென்று அவனைத் தாக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ''அவனை விட்டு விடுங்கள். அவன் என்னருகில் வரட்டும்'' என்றார்கள். அவன் நபியவர்களுக்கு அருகில் நெருங்கிய போது ஹாரிஸ் இப்னு சிம்மாவிடமிருந்து ஒரு சிறிய ஈட்டியை வாங்கி நபியவர்கள் தனது உடலைச் சிலிர்த்தார்கள். எப்படி ஒட்டகம் சிலிர்க்கும் போது அதனுடைய முதுகிலிருந்து முடி பறக்குமோ, அதுபோன்று மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு பறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனை முன்னோக்கி அவன் அணிந்திருந்த கவச ஆடைக்கும் தலைக் கவசத்திற்குமிடையே தெரிந்த அவனது கழுத்தைக் குறி பார்த்து ஈட்டியை எறிந்தார்கள். அந்த ஈட்டி அவனது கழுத்தை உராய்ந்து சென்று சிறிய காயத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனால் ஏற்பட்ட வலியோ மிகக் கடுமையாக இருந்தது, அவன் ஒட்டகத்தில் அமர முடியாமல் பலமுறை கீழே விழுந்து எழுந்தான். அந்த சிறிய காயத்துடன் குறைஷிகளிடம் திரும்பி ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது என்னைக் கொன்று விட்டார்'' என்று சப்தமிட்டான். அதற்கு குறைஷிகள் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ பயந்துவிட்டாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் இந்த சிறிய காயத்திற்குப்போய் இப்படி கூச்சல் போடுவாயா? என்று கூறி நகைத்தார்கள். அதற்கு அவன் ''முஹம்மது மக்காவில் இருக்கும்போதே நான் உன்னைக் கொல்வேன்! என்று கூறியிருந்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது அவர் துப்பியிருந்தாலும் நான் செத்திருப்பேன்'' என்று கூறினான். மாடு அலறுவது போன்று அவன் அலறினான். ''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! எனக்கு இருக்கும் வேதனையை இந்த 'தில்மஜாஸிலுள்ள' அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தால் அவர்கள் அனைவரும் இறந்துவிடுவார்கள்'' என்றான். மக்கா செல்லும் வழியில் 'ஸஃப்' என்ற இடத்தில் இவன் இறந்தான். (இப்னு ஹிஷாம்)
நபியவர்களுக்கு தல்ஹா தோள் கொடுக்கிறார்
நபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்றபோது வழியில் ஒரு பாறை குறுக்கிட்டது. அதன் மீது ஏறிதான் செல்ல வேண்டும் ஆனால், அவர்களால் ஏற முடியவில்லை. காரணம், அவர்களின் உடல் கனமாக இருந்தது. இரண்டு கவச ஆடைகள் அணிந்திருந்தார்கள் அத்துடன் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்தன. எனவே, தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) பாறைக்குக் கீழ் உட்கார்ந்து கொள்ள, நபியவர்கள் அவர் உதவியால் மேலே ஏறினார்கள். பிறகு, ''தல்ஹா (சொர்க்கத்தை) தனக்கு கடமையாக்கிக் கொண்டார்'' என்று நபி (ஸல்) அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இணைவைப்பவர்களின் இறுதி தாக்குதல்
நபி (ஸல்) அவர்கள் கணவாயின் மையப்பகுதியில் நன்கு நிலை கொண்டபோது இணை வைப்பவர்கள் மீண்டும் தாக்கினர். இது முஸ்லிம்களுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டுமென்று அவர்கள் செய்த இறுதித் தாக்குதலாகும்.
நபியவர்கள் மலைக் கணவாயில் இருந்தபோது குறைஷிகளின் ஒரு கூட்டம் மலையின் மீது ஏறி வந்து தாக்க முயற்சி செய்தது. அவர்களுக்கு அபூ ஸுஃப்யானும் காலித் இப்னு வலீதும் தலைமை தாங்கினர். அப்போது நபியவர்கள் அல்லாஹ்விடம் ''அல்லாஹ்வே! அவர்கள் எங்களுக்கு மேல் உயரே ஏறிவிடக் கூடாது'' என்று பிரார்தித்தார்கள். அப்போது உமர் இப்னு கத்தாபும் (ரழி) அவருடன் முஹாஜிர்களின் ஒரு சிறு கூட்டமும் சென்று அவர்களிடம் சண்டையிட்டு கீழே இறக்கியது. (இப்னு ஹிஷாம்)
ஸஅது (ரழி) கூறுகிறார்கள்: ''(மற்றொருமுறை) எதிரிகள் மலைக்கு மேல் ஏறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''அவர்களை நீ விரட்டு!'' என்றார்கள். அதற்கு ''நான் எப்படி தனியாக அவர்களை விரட்ட முடியும்?'' என்றேன். நபியவர்கள் ''அவர்களை நீ விரட்டு!'' என்று மூன்று முறை கூறவே, எனது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை எடுத்து அக்கூட்டத்தில் முந்தி வந்து கொண்டிருந்தவனைக் குறிபார்த்து எய்தேன் அவன் செத்து மடிந்தான். நான் சென்று அந்த அம்பை எடுத்துக் கொண்டேன். பின்பு இன்னொருவரின் அருகில் வரவே அதே அம்பைக் கொண்டு எய்தேன் அவனும் செத்து மடிந்தான். நான் சென்று அம்பை எடுத்துக் கொண்டேன். அடுத்து ஒருவன் வர, அவனையும் அதே அம்பால் கொன்றேன். மூவர் இறந்தவுடன் மற்றவர்கள் ஏற அஞ்சி இறங்கி விட்டனர். அப்போது நான் ''இந்த அம்பு அல்லாஹ்வின் அருள் பெற்றது'' என்று கூறி அதை என் அம்புக் கூட்டில் பாதுகாத்துக் கொண்டேன்.''
இப்படி பல எதிரிகளின் உயிர்களை குடித்த அம்பை ஸஅது (ரழி) தங்களிடம் மரணம் வரை பாதுகாத்தார்கள். அவர்கள் மரணித்த பின்பு அவர்களது பிள்ளைகள் அதை பாதுகாத்து வைத்திருந்தனர். (ஜாதுல் மஆது)
போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்
நபி (ஸல்) அவர்களைத் தாக்க வேண்டுமென பலமுறை எதிரிகள் முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் நபியவர்களுக்கு அரணாக விளங்கியதால் எதிரிகளால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இருப்பினும் நபியவர்கள் தங்களின் தாக்குதலில் இறந்திருக்கலாம் என்றும் சற்றே உறுதியாக எண்ணினர். அதனால் போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட தங்களுடைய முகாம்களுக்குத் திரும்பினர். அவ்வாறு திரும்பும் போது சில ஆண்களும் பெண்களும் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் காது, மூக்கு, மர்ம உறுப்புகள் போன்றவற்றை அறுத்தனர். வயிறுகளைக் கிழித்தனர் ஹிந்த் பின்த் உத்பா என்பவள் ஹம்ஜா (ரழி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்தாள். அவளால் முடியாமல் போகவே அதைத் துப்பிவிட்டாள். பின்பு, தியாகிகளின் காதுகளையும் மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து கொண்டாள்.(இப்னு ஹிஷாம்)
இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்
இந்தக் கடைசி நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் மூலம் முஸ்லிம்களின் துணிவையும், அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை சந்திக்க வேண்டும் என்ற அவர்களுக்கு இருந்த அலாதியான ஆர்வத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
1) கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: ''உஹுத் போரில் நானும் கலந்து கொண்டேன். அப்போது கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களை எதிரிகள் சிதைப்பதைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டேன். அங்கே ஒருவன் உறுதியான உருக்குச் சட்டை அணிந்தவனாக கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து ''அறுக்கப்பட்ட ஆடுகளைப் போன்று வீழ்ந்து கிடக்கிறார்கள்'' என்று கூறியவனாக முஸ்லிம்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது கவச ஆடை அணிந்த முஸ்லிம் ஒருவர் அவன் தனக்கருகில் வருவதை எதிர்பார்த்தார். நான் அந்த முஸ்லிமுக்கு பின்புறமாய் நின்றவனாக எனது பார்வையால் அந்த முஸ்லிமையும் எதிரியையும் கவனித்தேன். எதிரி நல்ல ஆயுதமுள்ளவனாகவும் வலிமை மிக்கவனாகவும் தெரிந்தான். அவ்விருவரும் சந்திப்பார்களா? என்று நான் எதிர்பார்த்தேன். அதே போரில் இருவரும் சந்தித்து சண்டையிட்டனர். முஸ்லிம் அந்த எதிரியை ஒரு வெட்டுதான் வெட்டினார். அந்த வெட்டு அவனது பிரித்தட்டு வழியாக சென்று, அவனை இரண்டாக பிளந்தது. பின்பு அவர் தனது முகத் திரையை விலக்கி என்னைப் பார்த்து ''கஅபே! என்ன பார்க்கிறாய். நான்தான் அபூ துஜானா!'' என்று கூறினார்.(அல்பிதாயா)
2) பல முஸ்லிம் பெண்மணிகளும் போர் முடியும் தருவாயில் மைதானத்துக்கு வந்து போரில் தங்களால் முடிந்த பங்காற்றினார்கள்.
அனஸ் (ரழி) இதைப் பற்றி கூறுகிறார்கள்: நபியவர்களின் மனைவியான ஆயிஷா பின்த் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உம்மு சுலைம் (ரழி) அவர்களையும் பார்த்தேன். அவர்கள் தங்களது கெண்டைக் கால்கள் தெரியுமளவு ஆடையை உயர்த்தியவர்களாகத் தோல் துருத்திகளில் தண்ணீர் நிரப்பி, அதை முதுகில் சுமந்து வந்து முஸ்லிம்களுக்குப் புகட்டினார்கள். தண்ணீர் தீர்ந்துவிடவே மீண்டும் நிரப்பி வந்து புகட்டினார்கள். இவ்வாறு இறுதி வரை சிரமம் பாராது பல முறை நிரப்பி வந்து காயமடைந்த முஸ்லிம்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
மேலும் உமர் (ரழி) கூறுகிறார்கள்: உஹுத் போரில் உம்மு ஸலீத் என்ற அன்சாரிப் பெண்ணும் தோல் துருத்தியில் தண்ணீர் நிரப்பி வந்து எங்களது தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
உம்மு அய்மன் (ரழி) என்ற பெண்மணியும் போர் மைதானத்திற்கு வந்தார்கள். முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின் முகத்தில் மண்ணை வாரி இறைத்தார். மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து ''இந்தா! ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!'' என்று ரோஷமூட்டினார். பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார். அது சமயம் 'ப்பான் இப்னு அரக்கா' எனும் அரக்கன் ஒருவன் அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான். அவர்கள் கீழே விழுவே ஆடை விலகியது. அந்த மூடன் இதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். இக்காட்சி நபி (ஸல்) அவர்களை சிரமத்திற்குள்ளாக்கியது. எனவே, கூர்மையற்ற ஓர் அம்பை ஸஅது இப்னு அபீவக்காஸிடம் கொடுத்து ''ஸஅதே! இந்த அம்பை அவனை நோக்கி எறி!'' என்றார்கள். ஸஅது (ரழி) அவர்கள் அந்த அம்பை அவனை நோக்கி எறிய, அது அவனது கழுத்தைத் தாக்கியது. அவன் மல்லாந்து விழ, அவனது ஆடையும் அகன்றது. அதைப் பார்த்து நபியவர்கள் கடைவாய் பல் தெரியுமளவுக்கு சித்துவிட்டு, ''அப்பெண்மணிக்காக ஸஅது பழி தீர்த்து விட்டார். அல்லாஹ் ஸஅதின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்'' என்று கூறினார்கள்.(அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)
மலைக் கணவாயில்
நபி (ஸல்) அவர்கள் கணவாயில் நல்ல அமைப்பான இடத்தை அடைந்தபோது அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தங்களது கேடயத்தை எடுத்துச் சென்று அதில் தண்ணீர் நிரப்பி வந்தார்கள். அத்தண்ணீர் பெரிய குழியுடைய பாறையில் நிரம்பியிருந்த தண்ணீர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் ''அது ஒரு கிணற்றிலிருந்து எடுத்து வந்த நீர்'' என்கின்றனர். எது எப்படியோ அந்த தண்ணீலிருந்து நபியவர்களுக்கு விருப்பமற்ற வாடை வீசவே, நபியவர்கள் அதை குடிக்கவில்லை. தனது முகத்திலிருந்த இரத்தக் கரையைக் மட்டும் கழுவிக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் கோபம் அவனது நபியின் முகத்தை காயப்படுத்தியவன் மீது கடினமாகட்டும்'' என்று கூறியவர்களாக தனது தலையின் மீதும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)
இந்நிகழ்ச்சி குறித்து நபித்தோழர் 'ஸஹ்ல்' (ரழி) நமக்குக் கூடுதல் விவரம் அளிக்கிறார்: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் காயத்தை யார் கழுவியது யார் தண்ணீர் ஊற்றியது எதைக் கொண்டு அவர்களுக்கு மருந்திடப்பட்டது என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். அதாவது, நபியவர்களின் மகளார் ஃபாத்திமா (ரழி) கழுவினார்கள். அலீ (ரழி) அவர்கள் கேடயத்திலிருந்து தண்ணீரை ஊற்றினார்கள். தண்ணீர் ஊற்றுவதால் இரத்தம் நிற்காமல் அதிகமாகிறது என்பதைப் பார்த்தவுடன் ஃபாத்திமா (ரழி) பாயின் ஒரு பகுதியை கிழித்து அதை எரித்து அந்த சாம்பலை அக்காயத்தில் வைத்தார்கள். உடனே, இரத்தம் நின்றுவிட்டது. (ஸஹீஹுல் புகாரி)
அதற்குள்ளாக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) மதுரமான நீர் எடுத்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பருகி, அவருக்காக நல்ல பிரார்த்தனையும் செய்தார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)
இவ்வாறு காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. இப்போரில் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர் (மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே தொழுதார்கள். (இப்னு ஹிஷாம்)
அபூ ஸுஃப்யானின் மகிழ்ச்சி
எதிரிகள் மக்காவிற்கு திரும்ப முழுமையாக ஆயத்தமாயினர். அதற்குள் முஸ்லிம்களின் உண்மை நிலைமையை அறிவதற்காக அபூ ஸுஃப்யான் மலையின் மீது ஏறி ''உங்களில் முஹம்மது இருக்கிறாரா?'' என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்கவில்லை. பின்பு உங்களில் ''அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?'' என்று கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் ''உமர் இப்னு கத்தாப் இருக்கிறாரா?'' என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள். ''இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்'' என்று அபூ ஸுஃப்யானுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும் விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் ''என் மக்களே! அறிந்து கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்!'' என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் ''ஏய்! அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான். எனவே, நீ மகிழத் தேவையில்லை'' என்று பதிலளித்தார்கள். சிறிது அமைதிக்குப் பிறகு அபூ ஸுஃப்யான் மீண்டும் பேசினார். ''உங்களில் கொல்லப்பட்டோரின் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அப்படி செய்ய வேண்டுமென நான் கட்டளையிடவில்லை. ஆனாலும், அது எனக்கு எந்த வருத்தமும் அளிக்கவில்லை'' என்றார். பின்பு ''ஹுபுல் எனும் சிலையே! உயர்வு உனக்குத்தான்'' என்று கூறினார்.
அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''இப்போது நீங்கள் அவருக்கு பதிலளிக்க மாட்டீர்களா?'' என்று கேட்க, ''நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்?'' என்று முஸ்லிம்கள் கேட்டார்கள். அதற்கு ''அல்லாஹ்தான் உயர்ந்தவன் அவனே கண்ணியமிக்கவன் என்று பதிலளியுங்கள்'' என்று நபியவர்கள் கூறினார்கள் அவர்களும் அவ்வாறே பதிலளித்தார்கள்.
பின்பு ''எங்களுக்கு உஜ்ஜா இருக்கிறது. உங்களுக்கு உஜ்ஜா இல்லையே!'' என்றார் அபூ ஸுஃப்யான்.
நபி (ஸல்) அவர்கள் ''அவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?'' என்று கேட்க ''நாங்கள் என்ன பதிலளிப்பது?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர், ''அல்லாஹ் எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே!'' என பதிலளியுங்கள் என்றார்கள். நபித்தோழர்களும் அவ்வாறே கூறினார்கள்.
அதன் பிறகு, ''எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது'' என்றார் அபூஸுஃப்யான். அதற்கு உமர் (ரழி) ''ஒருக்காலும் சமமாக முடியாது. எங்களில் கொல்லப்பட்டவர் சுவனத்தில் இருக்கிறார். உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில் இருக்கிறார்'' என்று பதிலடி தந்தார்கள். பின்பு அபூஸுஃப்யான் ''உமரே! என்னிடம் வா'' என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் ''உமரே! நீ அவரிடம் சென்று அவர் என்ன கூறுகிறார் என்று கேட்டு வாருங்கள்'' என்றார்கள். உமர் (ரழி) அபூஸுஃப்யானிடம் வந்தவுடன் ''உமரே! அல்லாஹ்வுக்காக நான் உன்னிடம் கேட்கிறேன். உண்மையில் நாங்கள் முஹம்மதைக் கொன்று விட்டோமா? இல்லையா?'' என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி) ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களை நீங்கள் கொல்லவில்லை, அவர்கள் உமது பேச்சை இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றார்கள். அதற்கு ''இப்னு கமிஆவை விடவும் நல்லவராகவும் உண்மை சொல்பவராகவும் நான் உன்னை கருதுகிறேன்'' என்று அபூ ஸுஃப்யான் கூறினார். (இந்த இப்னு கமிஆ என்பவனே நபி (ஸல்) அவர்களை தான் கொன்றுவிட்டதாக ஊளையிட்டவன்.)(ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
பத்ரில் சந்திக்க அழைத்தல்
மேற்கூறிய உரையாடலுக்குப் பிறகு உமர் (ரழி) திரும்பிவிட்டார்கள். அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மைதானத்தை விட்டு புறப்படும் போது ''அடுத்த ஆண்டு பத்ர் மைதானத்தில் ஷஅபான் மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்'' என்று முஸ்லிம்களுக்கு அறிக்கை விடுத்தார். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் ஒருவருக்கு ''ஆம்! அவ்வாறே ஆகட்டும் என்று சொல்'' என்றார்கள். இவ்வாறு முடிவு செய்யப்பட்டப் பிறகு அபூ ஸுஃப்யான் படையுடன் மக்கா நோக்கிப் பயணமானார். (இப்னு ஹிஷாம்)
எதிரிகளின் நிலை அறிதல்
பின்பு நபி (ஸல்) அவர்கள் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களை அனுப்பி ''நீ இவர்களைப் பின்தொடர்ந்து செல் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன? என்று பார்த்து வா. அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்து குதிரைகளை இழுத்துச் சென்றால் அவர்கள் மக்காவிற்கு செல்கிறார்கள் என்று பொருள் அவர்கள் குதிரையில் வாகனித்து ஒட்டகத்தை இழுத்துச் சென்றால் அவர்கள் மதீனாவை நோக்கிச் செல்கிறார்கள் என்று பொருள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் மதீனா சென்றால் நான் அங்கு சென்று அவர்களுடன் போர் செய்வேன்'' என்றார்கள்.
அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ''நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்துக் குதிரைகளை இழுத்துச் சென்றார்கள். அவர்களது பயணம் மக்கா நோக்கியே இருந்தது.'' (இப்னு ஹிஷாம்)
தியாகிகளை கண்டெடுத்தல்
எதிரிகள் சென்றதற்குப் பின் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் தேடுவதில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதைப் பற்றி ஜைது இப்னு ஸாபித் (ரழி) இவ்வாறு கூறுகிறார்:
போர் முடிந்த பின் ஸஅது இப்னு ரபீஆவைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை அனுப்பினார்கள். ''நீ அவரைப் பார்த்து விட்டால் அவருக்கு எனது ஸலாம் கூறி, உனது நிலை என்னவென்று அல்லாஹ்வின் தூதர் விசாரிக்கிறார்கள்'' என்று சொல்லுமாறு என்னைப் பணித்தார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர்களைத் தேடி அலைந்தேன். நான் அவரைப் பார்த்தபோது அவர் இறுதி மூச்சுகளை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய உடலில் அம்பு, ஈட்டி, வாள் ஆகிய ஆயுதங்களால் ஏற்பட்ட எழுபது காயங்கள் இருந்தன. நான் அவரிடம் ''ஸஅதே! அல்லாஹ்வின் தூதர் உனக்கு ஸலாம் கூறுகிறார்கள். மேலும், உமது நிலையை விசாரித்து வர என்னை அனுப்பினார்கள்'' எனக் கூறினேன். அதற்கு ''அல்லாஹ்வின் தூதர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக் அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனத்தின் நறுமணத்தை உணர்கிறேன் என நீர் நபியவர்களிடம் சொல் மேலும், உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று என் நண்பர்களாகிய அன்சாரிகளிடம் நீ சொல்'' என்று தனது இறுதி வார்த்தைகளை கூறிய பின் உயிர் நீத்தார். (ஜாதுல் மஆது)
காயமடைந்தவர்களில் உஸைம் என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரழி) என்பவரும் ஒருவர். அவர் உயிர் பிரியும் நிலையில் இருந்தார். இதற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள் பலமுறை இஸ்லாமை எடுத்துக் கூறியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்தார். இவரை இந்நிலையில் பார்த்த முஸ்லிம்கள் இந்த உஸைம் ஏன் இங்கு வந்தார்! நாம் போருக்கு வரும்போது அவருக்கு நமது மார்க்கம் பிடிக்காமல் இருந்ததே! என்று கூறியவர்களாக அவரிடம் ''உமது இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வந்தீரா? அல்லது இஸ்லாமை ஏற்று அதற்காக போர் புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தீரா?'' என விசாரித்தனர். அதற்கவர் ''இல்லை! இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால்தான் போரில் கலந்து கொண்டேன். நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புரிந்தேன். இப்போது எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கிறீர்கள்'' என்று தனது பேச்சை முடிக்க மரணம் அவரை ஆரத் தழுவியது.
இவரது நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கூறியதற்கு நபியவர்கள் அவர் சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள்.
அபூஹுரைரா (ரழி) கூறுகிறார்: உஸைம் அல்லாஹ்விற்காக ஒரு நேரத் தொழுகை கூட தொழவில்லை (இருந்தும் நபியவர்களின் நாவினால் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.) (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
காயமடைந்தவர்களில் 'குஜ்மான்' என்பவரும் ஒருவர். அவர் மிகப்பெரும் வீரராய் போரில் சண்டையிட்டார். இவர் மட்டும் தனியாக ஏழு அல்லது எட்டு எதிரிகளைக் கொன்றார். இவருக்கு ஆழமான காயம் ஏற்படவே, பூமியில் விழுந்து கிடந்தார். இவரை முஸ்லிம்கள் ளஃபர் கிளையினரின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அவருக்கு முஸ்லிம்கள் நற்செய்தி கூறினர். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இன வெறிக்காகத்தான் போரிட்டேன். இனவெறி மட்டும் இருக்கவில்லையெனில் நான் போரில் கலந்திருக்க மாட்டேன்'' என்றார். பின்பு காயத்தின் வேதனை கடுமையாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் ''இவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்றார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
'நஜ்து' போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (அ) ஜுமாதா அல்ஊலா)
சண்டையும், உயிர்ப் பலியுமின்றி நழீர் போல் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி முஸ்லிம்களின் வலிமையை மீண்டும் மதீனாவில் நிலைநாட்டியது. நயவஞ்சகர்கள் தங்களது சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் கைவிட்டனர். அதனால் முஸ்லிம்களுக்கு உள்நாட்டுக் குழப்பம் குறைந்தது. ஆகவே, இப்போது மதீனாவிற்கு வெளியில் விஷமம் செய்து வந்த கிராம அரபிகளின் அக்கிரமத்தை அடக்க நபி (ஸல்) அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இந்த கிராம அரபிகள்தான் உஹுத் போருக்குப் பின் முஸ்லிம்களுக்கு பெரும் இன்னல்கள் விளைவித்து வந்தனர். அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இவ்வாறு செய்து வந்த இவர்களுக்கு, அடுத்தபடியாக மதீனாவில் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிவும் பிறந்தது.
முஸ்லிம் குழுக்களுக்கு மோசடி செய்து வந்த அந்தக் கிராம அரபிகளைத் தண்டிப்பதற்கு முன் கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த 'பனூ ஸஅலபா' என்ற பிரிவினரும், 'பனூ முஹாப்' என்ற பிரிவினரும் மதீனாவின் மீது படையெடுக்க ஒன்று சேருகின்றனர் எனும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. இந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக நபியவர்கள் படையை திரட்டிக்கொண்டு நஜ்து பகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். அங்குள்ள அனைத்து இடங்களையும், கிராமங்களையும் படையுடன் சுற்றி வந்தார்கள்.
முஸ்லிம்களின் வருகையை அறிந்த அந்த ஊர்வாசிகள், தங்களின் இல்லங்களிலிருந்து வெளியேறி மலை உச்சிக்குச் சென்று தப்பித்துக் கொண்டனர். இவ்வாறு அழிச்சாட்டியம் செய்யும் இந்தக் கூட்டங்களையெல்லாம் முஸ்லிம்கள் பதிலுக்கு மிரட்டி அவர்களது உள்ளங்களில் தங்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டு பாதுகாப்புடன் மதீனா திரும்பினர்.
மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக நடந்த குறிப்பிட்ட ஒரு போரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருப்பதின் விவரமாவது: ஹிஜ்ரி 4, ரபீஉல் ஆகிர் அல்லது ஜுமாதா அல்ஊலா மாதம் ஒரு போர் நடைபெற்றது. அதற்கு 'தாதுர் ரிகாஃ' என்று கூறப்படும். இந்தப் போர் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், உஹுதிலிருந்து திரும்பச் செல்லும் போது அபூஸுஃப்யான் அடுத்த வருடம் (ஹிஜ் 4ல்) பத்ரு மைதானத்தில் சந்திப்போம் என்று கூறி சென்றிருந்தார். அந்த நாளும் மிக நெருக்கமாக இருந்தது. இந்நேரத்தில் மதீனாவை முற்றிலுமாக காலி செய்துவிட்டு செல்வதும் உசிதமானதல்ல. ஏனெனில், கிராமவாசிகளின் அட்டகாசம் அத்துமீறி இருந்தது. இவர்களின் கொடுக்கை நறுக்காமல், இவர்களின் விஷமத்தனத்திற்கு முடிவு கட்டாமல் மதீனாவை காலியாக விட்டுச் செல்வது நல்லதல்ல. இவர்கள் மதீனா காலியாகி விட்டதை தங்களுக்கு வாய்ப்பாகக் கருதி மதீனாவின் மீது கொள்ளையிட அல்லது தாக்குதல் நடத்த வரலாம். எனவே, அபூஸுஃப்யானின் படையைப் பத்ரில் சந்திக்க செல்லும் முன் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்டி இவர்களை அடக்க வேண்டும் என நபியவர்கள் முடிவெடுத்தார்கள். அதற்குப் பின் கிராமவாசிகளை அவர்களது கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திவிட்டு நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். இப்பயணத்தில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. ஆக, இந்தப் போருக்கு வரலாற்று ஆசிரியர்கள் 'தாதுர் ரிகாஃ' என்று கூறுகின்றனர்.
ஆனால், இக்கூற்று சரியல்ல! இப்போருக்கு 'தாதுர் ரிகாஃ' என்று சொல்வது தவறாகும். ஏனெனில் 'தாதுர் ரிகாஃ' போரில் அபூஹுரைராவும் அபூமூஸாவும் (ரழி) கலந்து கொண்டனர். அபூஹுரைரா (ரழி) கைபர் போருக்கு சில நாட்கள் முன்புதான் முஸ்லிமானார்கள். அவ்வாறே அபூமூஸாவும் நபி (ஸல்) அவர்களை கைபர் போரில்தான் சந்தித்தார்கள்.
கைபர் போருக்கு பின்புதான் 'தாதுர் ரிகாஃ' நடைபெற்றது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. கைபர் போர் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் நடைபெற்றது. எனவே, ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற யுத்தத்தை 'தாதுர் ரிகாஃ' என்று சொல்வது தவறாகும். இதற்கு மேலும் ஓர் ஆதாரத்தைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தாதுர் ரிகாஃ போரில்தான் 'ஸலாத்துல் கவ்ஃப்' (அச்சம் ஏற்படும்போது தொழுதல்) முறைப்படி தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகை அஸ்ஃபான் போரில்தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டது. அஸ்ஃபான் போர் அகழ்ப் போருக்குப் பின் நடைப்பெற்றது. அகழ்ப் போர் ஹிஜ்ரி 5ன் இறுதியில் நடைபெற்றது. இதிலிருந்து ஹிஜ்ரி 4ல் நடந்த போரை தாதுர் ரிகாஃ என்று குறிப்பிடுவது தவறாகும். தாதுர் ரிகாஃ போர் வேறு, ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற போர் வேறு.
assalamu alaikkum
ReplyDeleteWa alaikum salam
ReplyDelete