அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும்
வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை.
அதே போல ஈமான் கொண்ட நல்லடியார்களும்
வெளித் தோற்றங்களை பார்ப்பதில்லை.
அருமை சஹாபி ஜுலைபிப் (ரலி) அவர்களின் வரலாறு, இதற்கு பெரும் சான்று. ஜுலைப் என்கிற பெயரில் அர்த்தமே 'சின்ன சட்டை' என்பது தான் போர்க்களத்தில் நின்று அவர் இஸ்லாத்திற்காக போரிட்ட போது, வாளின் உயரம் கூட அவர் இல்லையாம்.(சுபுஹானல்லாஹ்)
குட்டையான மனிதர் மட்டுமல்ல, முகம் கோணலான மனிதரும் கூட ஆனால் நபியவர்கள் "ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" என்று சொல்கிற அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். இதுபோன்ற குட்டையர்களை கேலி பண்ணுவதுதான் உலக வழக்கம், 'மூஞ்சியையும் உயரத்தையும் பாரு..!' என்று.
நபி (ஸல்) அவர்கள் ஜுலைபிற்காக பெண் கேட்க போனார்கள். அதுவும் மதீனத்து பிரமுகர்கள் திருமணம் செய்ய போட்டி போடும் அழகான பெண்ணை. முதலில் நபியவர்கள் பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னதை நபிகளார் தமக்காகவே கேட்டு வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்ட பெண்ணின் தந்தை முகம் மலர்ந்தார். ஆனால் ஜுலைபிப்புக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று பெருமானார் சொன்னவுடன் அதிர்ந்து போன அந்தத் தந்தை தம் மனைவியிடம் ஆலோசனை செய்வதாக சொல்லி நழுவினார்.
அப்பெண்ணின் தாயாரிடம் விஷயத்தை சொன்ன போது, ஜுலைபிப்புக்கு தன் மகளை கொடுப்பது பற்றி தாம் நினைத்து கூட பார்க்க முடியாது என்று சொன்னார். மனைவியின் கருத்தை நபிகளாரிடம் சொல்ல
அந்தத் தந்தை
முன் சென்ற போது அவரது மகள், தந்தையை இடைமறித்து விபரம் கேட்க, பெற்றோர் முழு விபரத்தையும் சொன்னார்.
ஊரே வெறுத்து ஒதுக்கும் ஜுலைபிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தான் தம்மை நபியவர்கள் பெண் கேட்டு வந்துள்ளார்கள் என்று தெரிந்தும் அப்பெண் தெளிவாக சொன்னார் "இறைதூதரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் என் கடமை. நான் ஜுலைபிப்பை மணமகனாக ஏற்கிறேன்" என்று கூறி அப்பெண் கீழ்க்காணும் குரானின் வசனத்தை ஓதி காண்பித்தார்.
"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை (அல்குர்ஆன்33:36).
அப்பெண்ணின் முடிவை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தித்தார்கள்.
தாம் திருமணம் முடிக்க நினைக்கும் ஆடவனிடத்தில் அவன் தலைமுடியையும், நிறத்தையும், செல்வத்தையும், அழகையும் பார்க்கும் அளவு கூட மார்க்கத்தை பார்க்காத நமக்கு மத்தியில் திருத்தூதரின் தேர்வு என்பதால் தம் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி ஜுலைபிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணமகனாக ஏற்ற அப்பெண்ணின் தியாகம் உண்மையில் அர்ப்பணிப்பின் உச்சகட்டம்.
ஒரு போர்களத்தில் நபியவர்கள் படையினரை பார்த்து அவர்கள் யாரையாவது போரில் இழந்து விட்டனரா என்று விசாரிக்க தாங்கள் யாரையும் இழக்கவில்லை என்று தோழர்கள் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் ஜுலைபிப்பை இழந்து விட்டேன். அவரை களத்தில் தேடுங்கள்" என்றார்கள். தோழர்கள் சென்று தேடிய போது ஜுலைபிப் உதிரம் சொட்ட இறந்து கிடந்தார். அவரை சுற்றிலும் ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். ஏழு எதிரிகளை கொன்று ஜுலைபிப் ரளியல்லாஹு அன்ஹு ஷஹீதாகி கிடந்தார்.
பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர
ReplyDeleteMasha allah
ReplyDelete