Wednesday, 25 May 2016

இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்த நபிகளார்




அல்லாஹ்வின் கிருபையால் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ஏகத்துவச் சிந்தனை நாளுக்கு நாள் துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. இறையருளால் இந்ந ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள் ஏகத்துவவாதிகள் தான். இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்கின்ற இந்த சத்தியக் கொள்கை அறியா மக்களிடமும், கொள்கை எதிரிகளிடமும் சென்றடைய வேண்டுமென்றால், மென்மேலும் வளர்ச்சி காண வேண்டுமென்றால் அல்குர்ஆனும், அண்ணல் நபிகளாரின் வாழ்வும் போதிக்கின்ற பண்புகளை கொள்கைச் சகோதரர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தான் பிரச்சாரப் பாதையில் சந்திக்கும் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு, மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. நமக்குத் துன்பம் விளைவித்தவர்களுக்கும் நாம் நன்மையை நாடும் போது நம்முடைய எதிரிகள் கூட உற்ற தோழராக மாறிவிடுவார். ஆனால் இந்தத் தன்மையை நாம் பெறுவதென்பது இறைவன் நமக்கு செய்யும் பெரும் பாக்கியம் தான்.

இதோ திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:34, 35

இறை நம்பிக்கையாளர்கள், தீங்கிழைப்போருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதையும், மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் திருமறைக் குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்துகிறது.

நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 23:96

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன் 3:134)

உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 24:22)

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!

(அல்குர்ஆன் 7:199)

யுக முடிவு நேரம் வந்தே தீரும். எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக!

(அல்குர்ஆன் 15:85)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதையும், அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து விட வேண்டும் என்பதையும் நமக்குப் போதிக்கின்றன. ஏகத்துவப் பிரச்சாரக் களத்தில் இந்தத் தன்மைகள் மிக மிக அவசியமான ஒன்றாகும். கொள்கை விரோதிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களிடமிருந்து ஏற்படக்கூடிய இடைஞ்சல்களையும், இன்னல்களையும் மறுமை வாழ்க்கைக்காகப் பொறுத்துக் கொள்ளும் தன்மை தான் சத்தியக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்.

மன்னிக்கும் தன்மை என்பது இரண்டு அடிப்படையிலாகும்.

ஒன்று: பிரச்சாரக்களத்தில் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்து இடர் ஏற்படுத்தியவர்களை மன்னித்தல்

இரண்டு: நாம் பலமிக்கவர்களாக, எதிரிகளைத் தண்டிப்பதற்கு வலிமையுடையவர்களாக இருக்கும் காலகட்டத்திலும் எதிரிகள் செய்த பாவங்களை மன்னித்து அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவதாகும்.

முஃமின்களின் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இதற்கு ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.

தாயிஃப் நகர் துயரச் சம்பவம்

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், (தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்த போது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான் என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்) என்று கூறினார். உடனே, (வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்) என்று சொன்னேன்.

நூல்: புகாரி 3231

நபியவர்களுக்கு கல்லடிகளாலும், சொல்லடிகளாலும் வேதனையளித்த தாஃயிப் நகர மக்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்திக்கவில்லை. அவர்கள் திருந்தாவிட்டாலும் அவர்களுடைய சந்ததிகளாவது திருந்துவார்கள் என்று கொள்கைக்காக அவர்கள் செய்த அநியாயங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டார்கள்.

அல்லாஹ் தாயிஃப் நகரத்தில் மிகப்பெரும் இஸ்லாமிய பேரெழுச்சியை ஏற்படுத்தினான். கொள்கைக்காக நாம் சந்திக்கும் இன்னல்களையும், இடறுகளையும் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் சத்தியக் கொள்கையை மேலோங்கச் செய்வான் என்பதற்கு தாயிஃப் நகரச் சம்பவம் மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது.

கொலை செய்ய வந்த கொடியவர்களுக்கும் மன்னிப்பு

சத்தியக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு குரைஷிக் காஃபிர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள். நபியவர்கள் மதீனாவிற்குச் சென்றடையவதற்கு முன்னால் அவர்களை எப்படியாவது கொலை செய்து விடவேண்டும் என்றும் சண்டாளர்கள் சதி செய்தார்கள்.

நபியவர்களையும், அவர்களின் அருமைத் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களையும் உயிருடனோ அல்லது கொலை செய்தோ கொண்டு வருபவர்களுக்கு நூறு, நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்புச் செய்தார்கள். நபியவர்களையும், அவர்களது அருமைத் தோழரையும் கொலை செய்து எப்படியாவது இருநூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெறவேண்டும் என்று வெறிபிடித்து வந்தார் சுராகா பின் ஜூஃசும் (ரலி) அவர்கள். அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. இறையருளால் சுராகாவின் வஞ்சக எண்ணம் ஈடேறவில்லை. நபியவர்களையும், அவர்களது அருமைத் தோழரையும் அல்லாஹ் தனது வல்லமையால் காப்பாற்றினான்.

அத்தகைய கொடியவரான சுராகாவைக் கூட நபியவர்கள் மன்னித்தார்கள். இந்த மன்னிக்கும் தன்மை தான் கொடியவர்களிடம் கூட சத்திய மார்க்கத்தைக் கொண்டு சேர்த்தது. சுராக்கா (ரலி) அவர்களை இஸ்லாத்தில் இணைய வைத்தது. இதோ ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப் பெற்ற சுராகாவின் சம்பவத்தை சுருக்கமாகக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்ற போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரது குதிரை அவருடனேயே பூமியில் அழுந்தி விட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ (ரலி), நூல்: புகாரி 3908, 5607

இந்த சம்பவம் புகாரி 3615வது ஹதீஸிலே விரிவாக இடம் பெற்றுள்ளது.

நஞ்சூட்டியவருக்கும் நன்மை செய்த நபிகள் நாயகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டின் மிகப்பெரும் அதிபராகவும் இருந்தார்கள். இறைத்தூதருக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் இன்னுயிரைக் கொடுப்பதற்கும் இலட்சக்கணக்காண தோழர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகத்தின் ஆட்சியில் சிறுபான்மைச் சமுதாயமாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகத்திற்கு இறைச்சியில் விஷம் சேர்த்து உண்ணக் கொடுத்தாள். உயிரைப் பறிக்க நினைத்தாள். அல்லாஹ் தன்னுடைய அற்புதத்தால் தன்னுடைய தூதரைப் பாதுகாத்தான்.

இலட்சகணக்கான தோழர்கள் தம் உயிரினும் மேலாய் மதித்த இறைத்தூதருக்கு நஞ்சூட்டிய சிறுபான்மைச் சமுதாயமான யூத சமுதாயத்திற்கு எந்தப் பாதிப்பையும் இறைத்தூதர் ஏற்படுத்தவில்லை. இஸ்லாம் அவர்களைத் தடுத்தது. நஞ்சூட்டிய பெண்ணையும் மன்னித்து மாமனிதராக வாழ்ந்து காட்டினார்கள். மன்னிக்கும் தன்மைக்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி 2617

மரணத்தை வேண்டியவர்களுக்கு மறுப்பளித்த நபிகள் நாயகம்

மாபெரும் அதிபராக, மக்கள் நேசிக்கும் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் சிறுபான்மைச் சமுதாயமாக இருந்த யூதர்கள், மாமன்னர் நபிகள் நாயகத்தை வார்த்தையால் கேலி செய்தார்கள். பொங்கி எழுந்தார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். ஆனால் நபியவர்களோ மென்மையைக் கடைபிடிக்குமாறு முஃமின்களின் அன்னைக்கு போதித்தார்கள். அழகிய முறையில் தீமைக்குப் பதிலடி கொடுத்தார்கள். இமாமின் புகாரியின் வார்த்தைகளிலே அந்த அழகிய வரலாற்றைக் காண்போம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், (அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும் என்று (அவர்களுக்கு பதில்) சொன்னேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன் என்று சொன்னார்கள். அப்போது நான், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (அவர்களுக்கு அளித்த பதிலை) நீ கேட்கவில்லையா? (அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து வ அலைக்கும்’- அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்துவிட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது என்று சொன்னார்கள்

நூல்: புகாரி 6030

பகைவரையும் நேசராக்கிய மன்னிக்கும் தன்மை

உலகத்தில் முதல் எதிரியாக நபிகள் நாயகத்தையும், வெறுக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும், பகை நாடாக மதீனாவையும் கருதினார் ஸுமாமா பின் உஸால். அன்பு மார்க்கமாம் இஸ்லாத்தையும், அதைப் போதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அம்மார்க்கத்தைப் பின்பற்றும் அருமைத் தோழர்களையும் சில நாட்கள் பார்த்த ஸுமாமாவின் உள்ளம் இஸ்லாத்திற்கு முன்னால் அடிபணிந்தது. இந்த சுமாமாவை மாற்றியது நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் குணம். இதோ வரலாற்றில் என்றும் மங்காத பிரகாசமாய் ஒளிவீசும் சுமாமாவின் வரலாற்றைப் பாருங்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, (உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே? என்று கேட்டார்கள். அவர், நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்த போது அவரிடம், ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போது, நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன் என்று மொழிந்துவிட்டு, முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டு, மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், நீ மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின்•தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4372

வஞ்சகமாய் கொன்ற வஹ்ஷியை வாஞ்சையாய் மன்னிக்கும் தன்மை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேசத்திற்குரியவரான அன்னாரின் சிறிய தந்தையார் ஹம்சா (ரலி) அவர்களை உஹது யுத்தத்திலே வஞ்சகமாய்க் கொன்றார் வஹ்ஷி அவர்கள். ஹம்சா (ரலி) அவர்களின் உடல் எதிரிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டது. உடலைக் கண்டதும், அதன் நிலையைப் பார்த்ததும் கண்ணீர் வடித்தது நாயகத்தின் கண்கள். சிறிய தந்தையைக் கொன்றதற்காக எதிரிகளில் எழுபது பேரைப் பழிவாங்குவேன் என்று சீற்றம் கொண்டார்கள். மன்னிக்கும் மார்க்கத்தைப் போதிக்க வந்த நாயகமே சீற்றம் கொள்ளலமா? வரம்பை மீறலாமா? பொறுமையின் வடிவம் நிதானம் தவறலாமா?

மன்னிப்பாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மன்னிப்பாளனான அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான். அதில் பொறுமையைப் போதித்தான். வரம்பு மீறுவதை எச்சரித்தான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்.

அல்குர்ஆன் 16:126, 127

நபிகள் நாயகத்தின் நேசத்திற்குரிய ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷியையும் இஸ்லாம் கவர்ந்தது. அவரைச் சத்தியத்தின் போராளியாக்கியது. வஹ்ஷியையும் மன்னித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். வஹ்ஷியின் வரலாற்றை அவரின் வாய்மொழியாகக் கேட்போம்.

நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்) என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, நீ வஹ்ஷி தானே? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்? என்று கேட்டார்கள். நான், உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான் என்று கூறினேன். அப்போது அவர்கள், (உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), நிச்சயம் நான் முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம் என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர் அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்) போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன்தான் முஸைலமா.)

நூல்: புகாரி 4072

நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் தன்மைக்கு இன்னும் ஏராளமான சான்றுகளைக் கூறலாம். மக்கா வெற்றியின் போது எதிரிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னைப் பைத்தியம் என்றும், சூனியக்காரர் என்றும், சந்ததியற்றவர் என்றும் பழித்தவர்களையெல்லாம் மன்னித்தார்கள். அத்தன்மை தான் 23 ஆண்டுகளில் காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் உலகிலேயே கியாமத் நாள் வரை தோன்ற முடியாத சிறந்த தலைமுறையாக உருவாக்கியது.

சத்தியவாதிகளை வார்த்தெடுத்தது. அமைதி உலகத்தை அமைத்து. இத்தன்மையை நாமும் பெற்றால் நம்முடைய தலைமுறையும் சத்தியத்திற்கு சாட்சியாளர்களாய் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை, இன்ஷா அல்லாஹ்.

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்பவர்களாய், உண்மையான முஃமின்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!


[][][]

Saturday, 14 May 2016

நபி(சல்) ஜைனப்(ரலி) திருமணம் பொருந்தா திருமணமா?

எது பொருந்தா உறவு - ஒரு சிறிய அறிமுகம்:


இந்த கட்டுரை எனக்கு இந்த கட்டுரை ஆசிரியரின் குணங்களை வெளிகொணார ஒரு அரிய வாய்ப்பு. கதைசொல்லிகள்( story fabricators) எப்படி பட்ட வர்கள் என்பதை தோலுரிக்க இந்த கட்டுரை மிகச் சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன். கதை சொல்லிகள் உன்மையான செய்தி உடன் பல பொய்யான செய்திகளை கலந்து தன்னுடைய கருத்தை நிலை நிறுத்த முற்படுவர். இதை மனதில் வைத்துகொண்டு இந்த கட்டுரையை ஆராய்வோம்.[refer:Source]. நபி(ஸல்) அவர்களின் மதிப்பை குறைக்க ஒரு மிக சிறந்த வாய்ப்பாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திவரும் ஒரு ஆயுதம் தனது வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தது. இது குறித்து மாண்ட்கொமெரி வாட் அவர்களின் கருத்தை பதிவு செய்துவிட்டு என்னுடைய ஆய்வை தொடர்கிறேன். 


The marriage with Zaynab seemed incestuous, but this conception of incest was bound up withold practices belonging to a lower, communalistic level of familial institutions where a child's paternity was not definitely known ; and this lower level was in process of being eliminated by Islam. From the standpoint of Muhammad's time, then, the allegations of treachery and sensuality cannot be maintained. His contemporaries did not find him morally defective in any way. On the contrary, some of the acts criticized by the modern Westerner show that Muhammad's standards were higher than those of his time. In his day and generation he was a social reformer, even a reformer in the sphere of morals. He created a new system of social security and a new familystructure, both of which were a vast improvement on what went before. By taking what was best in the morality of the nomad and adapting it for settled communities, he established a religious and social frame work for the life of many races of men. That is not the work of a traitor or ‘an old lecher '. - P.No 233-234 ,Prophet and Statesman by W.Montgomery Watt



இந்த கருத்தானது அந்த காலத்தின் சமுக அவலம் ஒன்றை நாசுக்காக சுட்டுகிறது. அனாதைகளின் மூல ஊற்றான விபச்சாரத்தை தகர்த்தெரிந்துவிட்டுதான் அனாதைகளை தங்களது மகன்/மகள் என்று கொள்வதை இஸ்லாம் தடைசெய்கிறது என்பதை சுட்டவே இந்த சமுக பழக்கத்தை கீழானது என்று வாட் கூறுகிறார். மேலும் அன்றைய அரபிய சமுகத்தில் தனக்கு பிறந்த குழந்தையை விற்கும் அவல சூழலே காணப்பட்டது. இது குறித்து இந்த கட்டுரையின் முகவுரையில் காண்போம்.
அல் குர்ஆன் 33:5 வசனமும் அதன் விளக்கமும்: 


அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன் 33:5

தத்தெடுத்தலை தடை செய்ய்யும் இந்த சட்டதின் தேவை என்ன என்பதை நாம் சிந்திக்கும் போது அல் அஹ்சாப் அத்தியாயம் இறங்கிய பிறகு இறங்கிய அத்தியாயம் அந்நிஸா ( 4 அத்தியாயம் ) ஆகும். இந்த அத்தியாயம் திருமணச் சட்டம் மற்றும் சொத்துரிமை குறித்து விளக்ககூடியவை. குடும்ப உறவுகளின் வரைமுறைகளை சரியாக வகுக்கப்படாத நிலையில் சொத்துரிமை மற்றும் குடும்பவியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியாது. உதரணமாக பின்வரும் வசனத்தை எடுத்து கொள்வோம்: 

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள்,உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை.உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 
அல் குர்ஆன் 4:23

இந்த வசனத்தில் இடம்பெரும் وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ என்ற அரபிய சொல்லாடலுக்கு உங்களது முதுகுகளில் இருந்து பிறந்த உங்களது புதல்வர்களின் மனைவியர் என்று பொருள். 



மேலும் அரபிய மக்களிடம் காணப்பட்ட வளர்ப்பு குழந்தை முறையானது தங்களுக்கு குழந்தைகள் இருக்கும் போதே ஒருவரை வளர்ப்பு குழந்தை என்று அறிவித்து தன்னுடைய குழந்தையாக ஆக்கிக் கொள்வர். அப்படி ஆக்கப்பட்ட குழந்தைகள் ரத்த குழந்தைகளின் முழு உரிமையையும் கடமையையும் பெற்று கொண்டனர். தங்களது உன்மை பெற்றொரின் அடையாளத்தை மாற்றி கொள்வர். இது ரத்த உறவுகளை தகர்ப்பதாய் அமைந்தது. இது ஆண் குழந்தைகளை பெரும் சொத்தாக கருதப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தத்தெடுத்தல் முறைக்கு துணையாக இருந்த இரண்டு சமுக அவலங்களை இஸ்லாம் துரத்தியடித்தது 




1. எதிரி கோத்திரத்தாரின் குழந்தைகள் கடத்தப்பட்டு சந்தைகளில் விற்கப்பட்டனர். ஜைத்(ரலி) அவர்களும் இவ்வாறு உக்காழ் சந்தையில் விற்க்கப்பட்டவர்தான்.இது இனக்குழுக்களை ஒன்றினைத்தலின் மூலம் ஒழிக்கப்பட்டது. 
2.குழந்தைகளை கொலை செய்வது .இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் இவ்வாறு கொல்லப்பட்டதில் ஆண் குழந்தைகளும் அடக்கம் என்று திருக்குர்ஆனும் வரலாற்று நூல்களும் கைகாட்டுகின்றன. இந்த கொலைகள் வறுமைக்கு பயந்தும் அபசகுணமாக கருதியும் நடை பெற்றன.




இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக. 
அல் குர்ஆன் 6:137 


"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்;பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான் .
அல் குர்ஆன் 6:151 


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், "நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன். "உன் மகன் உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணுவான் என அஞ்சி அவனை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்க,அவர்கள், "உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 141


சிலர் தங்களது குழந்தைகள் பிறக்கும் போது நீல நிறமாகவோ, புள்ளிகள் உடையனவாகவோ, அதிக முடி உடையனவாகவோ அல்லது ஊனமுற்றோ இருந்தால் தீய சகுணமாக கருதி உயிருடன் புதைத்தனர்
நூல்: புலூஹ் அல் அரப் (3/43) 









இவ்வாறு குழந்தைகளை கொலை செய்வதை தடுக்க சில நல்ல உள்ளம் கொண்ட அரபிய வள்ளல்களால் தத்தெடுத்தல் ஊக்கப்படுத்தப் பட்டது. எடுத்து காட்டாக ஜைது பின் அமர்(ரலி), அவர்கள் இத்தகைய குழந்தைகளை செல்வத்தை ஈடாக கொடுத்து பெற்று கொண்டார். 



அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.


ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, 'குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தின் படி நடக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தேன். மேலும், அவர் உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், 'அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), 'நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளுடைய செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க் கொள்கிறேன்" என்று சொல்வார்.

நூல் : புஹாரி 3828 


இஸ்லாம் இது போன்ற குழந்தைகளை அனாதையாக்கும் சமுக அவலங்களை தடை செய்துவிட்டுதான் தத்தெடுத்தலை தடை செய்கிறது .


அல் குர்ஆன் 33:37, 38, 39 வசனமும் அதன் விளக்கமும்:




யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.




அல்லாஹ் அவருக்காகச் செய்த ஏற்பாட்டில் நபியின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன். 





1. இந்த வசனம் வளர்ப்பு மகன் ஜைது(ரலி) அவர்களால் விவாகரத்து செய்யப்பட்ட ஜைனப்(ரலி)அவர்களை நபி(சல்) அவர்கள் திருமணம் செய்ய அனுமதி வழங்குகிறது.




2. அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மனதில் மறைத்ததாக இந்த வசனம் கூறுகிறது. மாறாக நபி(ஸல்) அவர்கள் எந்த தீய எண்ணத்தையும் மனதில் மறைத்ததாக இந்த வசனம் கூறவில்லை.இதை அடுத்த வசனம் தெளிவு படுத்துகிறது.




3. நபி(ஸல்) அவர்கள் மற்றும் ஜைனப்(ரலி) அவர்களது திருமணம் தத்து பிள்ளைகள் சொந்த பிள்ளைகள் அல்ல என்ற குர்ஆன் வசனம் இறங்கிய பிறகு நடைப்பெற்றதே




ஆக நபியவர்கள் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற இப்படி தத்து எடுப்பதை தடுத்ததாக ஆசிரியரின் கற்பனையை என்னவென்பது. ஆக நபி(ஸல்) அவர்கள் தீய எண்ணத்தில் வசனங்களை கூறினார் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஆனால் நபி(சல்) அவர்கள் எதை மனதில் மறைதார்கள் என்பதை கூற பல இட்டுகட்டப்பட்ட செய்திகள் இஸ்லாமிய நூல்களில் காணப்படுகிறது. அதை தான் இவரும் தனது கருத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கிறார். அவற்றை பார்த்து விட்டு இவர் எப்படியான கதைசொல்லி என்பதை நிறுவ உள்ளேன்.

நாம் இப்பொழுது ஆய்விற்குள் நுழைவோம். இந்த கட்டுரை ஆசிரியர் நபி(ஸல்) அவர்கள் ஜைனப்(ரலி) மீது கொண்ட மோகத்தால்தான் இந்த செயலை செய்ததாக கூறுகிறார். ஆனால் இதற்காக அவர் கூறும் ஆதாரம் ஒவ்வொன்றும் அவரது நிலைபாடு தவறானது அல்லது காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்டது என்பதை உணர்த்த போதுமானது. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

ஆதாரம் 1:



நமது மறுப்பு:

இவர் மேலே குறிப்பிடும் தஃப்சிர் தபரியில் இடம்பெறும் செய்தியானது கீழ் காணும் அறிவிப்பாளர் தொடரை கொண்டது.


Ibn Zayd --> Ibn Wahab --> Yunis


இதில் இடம் பெறும் இப்னு ஜைத் என்பவர் அப்துர் ரஹ்மான் இப்னு ஜைத் இப்னு அஸ்லம்என்பவர் ஆவார். இவர் தபாஃ தாபியி ஆவார். இவரது காலம் 180 ஹிஜ்ரி. இவர் நபி(சல்) அவர்கள்குறித்த கருத்தை தாபியீ போன்ற எந்த அறிவிப்பாளரும் இன்றி கூறுவது என்பது சாத்தியம் இல்லாதஒன்று ஆகும். மேலும் இவர் பலவீனமானவர் என்று இப்னு ஜவ்ஸி, இப்னு ஹஜர் போன்றவர்களால்முத்திரை குத்தப்பட்டவர். ஆக இந்த அறிவிப்பு பலவீனமானது. இட்டுகட்டப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 


சரி இந்த செய்தியே பலவீனமானது என்றால் இதில் அதிக்கப்படுத்தி சில வற்றை சேர்த்து கூறுபவரைஎன்ன வென்பது. வாசிப்பவரின் முடிவிற்கே விடுகிறேன். ஆம் இவர் கூறும் தபரியின் அறிவிப்பில்இல்லாத கருத்துகளையும் இந்த கட்டுரை ஆசிரியர் சேர்த்து கூறுகிறார்,



ஆம் இது தபரியின் தஃப்சீரில் இல்லாத தன்னுடைய சொந்த புனைவு. என்ன செய்வது இவர் காப்பிஅடித்த ROBERT SPENCERன் புத்தகத்தில் அப்படிதான் உள்ளது. ஆக இது காழ்ப்புணர்ச்சியால் மற்றுமே தோன்றிய ஆய்வு.


நமது மறுப்பு:


ஏன் அந்த வசனத்தின் முழு விளக்கத்தையும் குர்துபி அவர்களின் விளக்கவுரையில் இருந்து கூற முடியவில்லை. இதோ மீதி பாதி


அலி இப்னு ஹுஸைன் அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் ஜைத்(ரலி) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை விவாகரத்து செய்வார்கள் என்றும் அல்லாஹ் ஜைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்விப்பான் என்பது அல்லாஹ்விடம் இருந்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜைத்(ரலி) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்கள் குறித்து குற்றம்சுமத்தி, அவரது குணத்தை குறைகூறி தனக்கு கீழ்படிவதில்லை என்று கூறி ஜைனப்(ரலி) அவர்களை விவாகரத்து செய்யப்போவதாகவும் நபி(சல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(சல்) அவர்கள் “அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள். உன்மனைவியை உன்னிடமே வைத்துகொள்” என்று ஜைத்(ரலி( அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் ஜைத்(ரலி) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களை விவாகரத்து செய்வார்கள் என்றும் நபி(ஸ்ல) அவர்கள் ஜைனப்(ரலி)அவர்களை திருமணாம் செய்வார்கள் என்பதையும் நபி(சல்) அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.இதைத்தான் நபி(சல்) அவர்கள் மறைத்தார்கள். அவர்கள் ஜைத்(ரலி) அவர்களிடம் ஜைனப்(ரலி)அவர்களை விவாகரத்து செய்ய சொல்லவில்லை. ஏன் என்றால் ஜைத்(ரலி) அவர்களுக்கு பிறகு ஜைனப்(ரலி) அவர்களை நபி(சல்) அவர்கள் திருமணம் செய்யும் பட்சத்தில் மக்கள் “ தனது அடிமையை விவாகரத்து செய்ய வற்புறுத்தி நபி(சல்) அவர்கள் அவரது மனைவியை திருமணம் செய்துகொண்டார்”என்று கூறுவார்கள் என்று அஞ்சினார்கள். ஆகவே அல்லாஹ், நபி(சல்) அவர்கள் மக்கள் கூறுவதற்கு அஞ்சியதையும், விவாகரத்து நடைபெறும் என்பதை அறிந்தும் ஜைத்(ரலி) அவர்களை மனைவியை தன்னுடனே வைத்துக்கொள்ளுமாறு நபி(சல்) அவர்கள் கூறியதை கண்டித்தும். “மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.” என்று இவ்வசனத்தில் கூறினான்.

நம்முடைய அறிஞர்கள் கூறினார்கள்: இது தான் இந்த வசனத்திற்கான சரியான விளக்கம் ஆகும். மேலும் அறிஞர்களான அல் ஜுஹ்ரி, அல் காதி பக்ர் இப்ன் அல் அஃலா அல் குஷைரி, அல் காதி அபு பக்ர் இப்ன் அல் அரபி அவர்களது விளக்கமும் இதுதான்.

(தஃப்ஸீர் அல் குர்துபி 14/190, 191)

குர்துபி அவர்கள் தனது நிலையை கூறிய பிறகும் ஏன் இந்த தவறான கருத்தை ஆசிரியர் விதைக்க முற்படுகிறார். இன்னும் ஏனைய ஆதாரங்களுடன் மேற்கூறிய விளக்கம் எப்படி பொருந்துகிறது என்பதை காண்போம். இதே கட்டுரையில் இவர் குறிப்பிடும் ஹதிஸை பதிவு செய்கிறேன்.

அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும்33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

'(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது' என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நூல்: புஹாரி 7420.

மேலே உள்ள அறிவிப்பை சற்று கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். 33:37 வசனத்தை அடிப்படையாக கொண்டு ஜைனப்(ரலி) பெருமை பேசிக்கொள்வார்களாம். “என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்களாம். இதன் அடிப்படையில் அந்த வசனத்தின் விளக்கம் என்னவாக இருக்கும். அல்லாஹ் வெளிப்படுத்த இருந்தது ஜைனப்(ரலி) அவர்களை நபி(சல்) அவர்களுக்கு மண்முடிக்க நாடியதைதான் குறிக்கும். அல்லாஹ்வின் அந்த நாட்டத்தை நபி(சல்) அவர்கள் மறைத்தார்கள் என்பதுதான் சரியான விளக்கமாக இருக்கும். நபி(சல்) அவர்கள் ஏனைய மனைவியர் போல் திருமணம் செய்தார்கள் என்றால் மற்ற மனைவியரிடம் அல்லாஹ் என திருமணத்தை ஏழு வானங்களுக்கு (இறைவசனங்களினால்) மேல் இருந்து செய்வித்தான் என்று எப்படி பெருமை பேச முடியும். நபி(சல்)அவர்கள் தன்னுடைய தீய எண்ணத்தை நிறைவேற்றி கொள்ள எண்ணினார்கள் என்றால் ஏன் இப்படி ஒரு வசனத்தை கூற வேண்டும். தன் தீய எண்ணதை தானே மறைத்தேன் என்று நபி(சல்) அவர்கள் மக்களிடம் பரப்ப என்ன தேவை வந்தது. தன்னுடைய சுயலாபத்திற்காக பாடுபடும் எவரும் தன்னுடைய தவறான எண்ணங்களை வெளிப்படுத்துவாரா?......இத்தகைய logic ஆன கேள்விகளுக்கு இந்த கட்டுரை ஆசிரியர் என்ன விளக்கம் கொடுப்பார்?

SOURCE: 



[][][]
.